Featureஇலக்கியச்சோலை
விருதுக்கு விருது!…. சங்கர சுப்பிரமணியன்.
விருது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதைக் கொடுப்பவரையும் வாங்குபவரையும் சமுதாயம் உற்றுநோக்குகிறது. விருது சமுதாயத்தில் கௌரவமானவர்களுக்கு அவர்களது செயற்கரிய செயலை கௌரவப்படுத்தி அக்கௌரவமான செயலை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுவதாகும். ஒருவர் சமுதாயத்திற்கு நற்பணியாற்றுகிறார் என்றால் அதனைப்பாராட்டலாம். அப்பாராட்டினை அவரின் சிறந்த பணிக்காக நற்சான்றிதழாக
வழங்கலாம். தவறில்லை. பாராட்டுவதையும் கௌரவப்படுத்தலையும் தவறென்று சொல்லமுடியாது. அது சமுதாயத்துடன் சம்பந்தப்பட்டது. சமுதாயம் தீர்மானிக்க வேண்டியதை தனிமனிதனாக செய்தால் தவறென்று சொல்லிவிடமுடியாது. தனிப்பட்ட மனிதருக்கும் அமைப்புகளுக்கும் பாராட்ட உரிமை இருக்கிறதா? என்றால் இருக்கிறது என்றே சொல்லலாம். அப்படியான தனிப்பட்ட நபர்கள் சமுதாயத்தால் நன்கறியப்பட்ட கௌரவமானவராக இருக்க வேண்டும். இதுவே அமைப்புக்கும் பொருந்தும். இதை ஒரு சாதாரண குப்பனும் சுப்பனும் அல்லது நான்குபேருக்கு தெரியாத புகழும் பாரம்பரியமுமற்ற அமைப்பும் செய்யமுடியாது. அப்படிச் செய்யும்போது அதை வழங்குபவர்களுக்கும் அதனைப் பெறுபவர்களுக்கும் எந்தவிதப் பெருமையும் வந்துவிடப் போவதில்லை. பாராட்டுவது விருதுவழங்கி கௌரவப்படத்துவது தொல்தமிழர் பண்பாடு. தொல்தமிழர் பண்பாட்டை மதியாமல் உதாசீனம் செய்பவர்கள் இந்த வழக்கத்தை ஆதரிக்காமல் இருக்கலாம். மக்களே வித்தையானவர்கள்தானே. சிலர் பாராட்டுவதையும் பாராட்டப்படுவதையும் விரும்பாதவர்களாயிருப்பர். ஒரு சமுதாய வழக்கத்தை தனிமனிதர் விருப்பு வெறுப்பு என்ற கண்கொண்டு பாராமல் சமதாயத்தின் ஒட்டுமொத்த பார்வையுன் ஊடாக காணவேண்டும். பொற்கிழி கொடுப்பதும் பொன்னாடை போர்த்துவதும் தமிழர் பண்பாடு. பொன்னாடை போர்த்துவமும் தவறல்ல. யாரோ ஒருவர் பொன்னாடைக்குப் பதில் பணம் கொடுங்கள் என்றால் அவர் பொன்னாடையின் பெருமையறியாதவராய் இருப்பார். அவரை சான்றாகக் கொண்டு பொன்னாடை போர்த்தலை இழிவு படுத்துவது குளத்தைக் கோபித்துக் கொண்டு சுத்தம் செய்யாமல் போனது போன்ற பழமொழிக்கு ஒப்பாகும். பொன்னாடை வேண்டாம் என்று தவிர்ப்பது வேறு. அது தனிப்பட்ட நபரின் கருத்துரிமை. உண்மையோ கற்பனையோ? மயில் குளிரைத் தாங்குமா தாங்காதா? அதுவும் நமக்குத் தெரியாது. இயற்கை சூழலுக்கேற்ப பாதுகாப்பை வழங்கிவிடும். பனிப்பிரதேசத்தில் வாழும் ஆடுகளுக்கு உடலில் இருக்கும் மயிரினைப்போல. ஆனாலும் போகன் ஏன் மயிலுக்கு குளிருமென்று போர்வையைப் போர்த்தினான்? அது அவன் உயிர்கள் மேல் கொண்டுள்ள இரக்ககுணம். அதேபோல் தான் பாராட்டும் குணத்தை அடிப்படையாகக் கொண்டே பொன்னாடை போர்த்தும் வழக்கம் ஏற்பட்டது. மானங்காக்கும் பழக்கமே ஆடையணியும் வழக்கமானது. அந்த வழக்கம் வேண்டாமென ஆடையைத் துறக்க இயலாதல்லவா? ஆனால் பொன்னாடை அப்படியல்ல? ஏற்பவர் ஏற்கலாம், ஏற்காவிட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே ஒரு வழக்கத்தை பின்பற்றுவதும் அதனால் வரக்கூடிய நன்மை தீமைகளைப பொருத்தது என்பது வெள்ளிடைமலை. விருதைப் பற்றிப் எழுதிக் கொண்டிருக்கும்போதே விருதாச்சலம் சென்று விட்டேன். விருது தகுதியானவர்களுக்கு தகுதியானவர்களாலோ அல்ல தகுதியான அமைப்பாலோ வழங்கப்படல் வேண்டும். பணம் கொடுத்தோ பணத்தைப் பெற்றோ விருது வழங்கக்கூடாது. இதைச்செய்தால் இது நமக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கொடுக்கப்படுவதும் பெறப்படுவதும் விருதாகாது. எத்தனையோ விருதுகளை தனது தகுதியை உணர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன. எத்னையோ விருதுகளை அறிவித்துவிட்டு கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார்கள். எத்தனையோ விருது பெற்றவர்கள் அந்த விருது வழங்கியவர்களின் பிற்கால செயற்பாட்டால் விருதினை திருப்பியனுப்பியிருக்கிறார்கள். இதற்கு ஒரு நிகழ்வினை சான்றாக சொல்கிறேன். ஒருவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. அது வழங்கப்பட்டு சிறிது தேரத்தில் குப்பைத்தொட்டியில் கிடந்தது. இப்படி ஒரு நிகழ்வு இந்தியாவில் ஒரு தொழிற்சங்க விழாவில் நடந்ததாக சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். இப்படி குப்பைத் தொட்டியில் போடக்காரணம் என்ன? அவர் அச்சான்றிதழை மதிக்கவில்லை. கொடுத்தவரோ அல்லது கொடுத்த அமைப்போ அவரை அவமானப் படுத்தியோ அல்லது மனதைக் காயப்படுத்தியோ இருக்கலாம். அதை திசைதிருப்பி அவரை சமாதானப் படுத்தும் நோக்கில் அந்த கௌரவத்தை வழங்கியிருக்கலாம். அதன் பின்விளைவே குப்பைத் தொட்டியில் தஞ்சமானது. அதனால் விருதும் தவறல்ல. அதைப் பெறுபவர்களும் வழங்குபவர்களும் தவறானவர்கள் அல்ல. தகுதியற்றவர்களுக்கு தகுதியானவர்களோ தகுதியான அமைப்போ வழங்குவதும் தவறு தகுதியானவர்களுக்கு தகுதியற்றவர்களோ தகுதியற்ற அமைப்போ வழங்குவதும் தவறு. “அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை” விருதுக்கே விருதா? என்று 19/12/2001 ஞாயிறு மாலை அன்று வியந்தேன். வாழும் காலத்திலேயே தகதியானவர்களை வாழ்த்தி பாராட்ட வேண்டும் என்ற கருத்தினை பின்பற்றி திரு. யாழ். பாஸ்கர் அவர்கள் இலக்கியச் சேவை புரிந்தவர்களை சல்லடைபோட்டு தேடித்தேர்வு செய்து “வாழ்நாள் சாதனையாளர்” விருதை “அக்கினிக்குஞ்சு”ஆண்டு விழாவில் வழங்கிவருகிறார். நாம் என்ன செய்கிறோமோ அதுவே நமக்கு திரும்பும் என்ற கூற்றுப்படி விருது வழங்குபவருக்கே விருது கிடைத்துள்ளது. ஆம், மேலே குறிப்பிட்ட தினத்தில் பெவிக் மூத்த குடிமக்கள் மண்டபத்தில் மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சாந்தி சிவக்குமார் தலைமையில் திரு. லெ. முருகபூபதி அவர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ஓர் அங்கமாக மல்லிகை ஜீவா நினைவரங்கு நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக “அக்கினிக்குஞ்சு” என்ற இணைய இதழை அரும்பாடுபட்டு நடத்திவரும் செயற்கரிய செயலைப் பாராட்டி திரு. யாழ். பாஸ்கர் அவர்களுக்கு “மல்லிகை ஜீவா நினைவு விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த வெகு சிறப்பான விருதினைப் பெற்ற அவரை “அக்கினிக்குஞ்சு” இதழின் படைப்பாளிகளும் வாசகர்களும் இணைந்து பாராட்டுவோம். வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்!! -சங்கர சுப்பிரமணியன்.
விருது பெறுபவர்கள், விருது வழங்குபவர்கள் பற்றி சிறப்பானதோர் பதிவை எழுதியிருக்கும் கலை,இலக்கிய ஆர்வலர் திரு. சங்கர சுப்பிரமணியன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
அன்புடன்
முருகபூபதி
விருது பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணிவந்தேன். அச்சமயம் குருவி அமர பனம்பழம் விழுந்த கதையாக மல்லிகை ஜீவா நினைவு விருது நான் இக்கட்டுரை வடிக்க வழியாய் அமைந்தது. இந்த வாய்ப்பினை வழங்கி உதவிய நண்பருக்கு நன்றி. நன்றி நண்பரே!
என்றும் அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.