கவிதைகள்
விவசாயி மனத்தில் மகிழ்ச்சிவந்தால் விவசாய தினமே வெளிச்சமாகும்!…. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
ஏர்முனை என்பது கூர்முனையாகும்
இயங்கிடும் உலகின் அருந்துணையாகும்
வாழ்வினை இயக்கும் வரமாயிருந்து
மலர்ந்திடும் துறையே ஏர்முனையாகும்
சேற்றிலே காலை வைத்திடாவிட்டால்
சோற்றிலே கையை வைத்திடமாட்டோம்
நாட்டினை வளமாய் ஆக்கிடவைக்கும்
ஏர்முனை யென்றும் கூர்முனையாகும்
விளைநிலம் என்பது வரமதுவாகும்
விளைபொருள் அதனனின் விளைவதுவாகும்
தளர்விலா உலகு தானதுவிருக்க
விளைநிலம் என்பது வரமதுவாகும்
விவசாயி என்றும் முதுகெலும்பாவான்
முதுகெலும் புடைந்தால் மூச்சுமேநிற்கும்
முதுகெலும் புடைய செய்திடுபாங்கில்
அதிகார மெழுதல் அறமுடையல்ல
இயற்கையின் சீற்றம் ஒருபுறந்தாக்க
இயந்திரம் மயத்தால் இயல்புகழழிய
செயற்கையின் வரவு திசையினைமாற்ற
திகைக்கிறான் விவசாயி செய்வதறியா
விவசாயம் இப்போ விஞ்ஞானமாச்சு
விவசாயி நிலையோ விரக்தியாயாச்சு
பயிர் நிலமெல்லாம் பலவிதவுரங்கள்
இயற்கையோ பார்த்து ஏங்குதலாச்சு
சங்கங்கள் வருகுது சங்கடமாகுது
சரியான தீர்வோ விவசாயிக்கில்லை
விவசாயி நிலத்தை தொட்டுமேபார்த்து
வேதனை விழிம்பில் நிற்கிறானிப்போ
விவசாயம் நாட்டின் முதுகெலும்பாகும்
விவசாயி வாழ்வின் பெருவரமாவான்
விவசாயி அழுதால் தாங்காவுலகு
விவசாயி மகிழ்ந்தால் உலகதுமலரும்
விளைநில மெல்லாம் குடிமனையாகுது
விளைநில மூடாய் வீதியும்வருகுது
விளைநிலமீது மின்கம்பம் அமைக்கிறார்
விவசாயி பேச்சோ காத்திலேபோகுது
விவசாயபட்டம் பெறுகிறார் பலபேர்
விவசாயி நட்டம் அறிகிலாரவரோ
உயர்பீடமாக விவசாயம் இருக்கு
உழல்கிறான் விவசாயி உயர்பீடமுணரா
ஒளவையுரைத்தார் வள்ளுவர் உரைத்தார்
எங்கள்பாரதி இடித்துமே உரைத்தார்
பண்டையிலக்கியம் பகர்ந்தது பலதை
படித்துமே யாவருமே உணர்கிறாரில்லை
உண்டி கொடுக்கும் விவசாயி
உலகின் பெருவளம் ஆகின்றான்
உணவைக் கொடுக்கும் விவசாயி
உயிரை மாய்த்து மடிகின்றான்
விவசாய தினத்தை நினைக்கின்றோம்
விரிவாய் விரிவுரை ஆற்றுகிறோம்
விவசாயி மனநிலை உணராமல்
விழாவினை எடுப்பது முறையாமோ
வேதனை துடைக்க வழிசமைப்போம்
விவசாயி வாழ்வில் ஒளிகொடுப்போம்
விவசாயி மனத்தில் மகிழ்ச்சிவந்தால்
விவசாய தினமே வெளிச்சமாகும்.
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
விவசாய தினமே வெளிச்சமாக மாறும்…..
விடியல் கணமோ விரைவில் மலரும்…..
வாழ்த்துகள் ஐயா
விவசாய தினமே வெளிச்ச நிலமே
விடியல் காணுமே விரைவில் மலருமே
விவசாய தினமே வெளிச்ச நிலமே
விடியல் காணுமே விரைவில் மலருமே
கவிஞர் மருதகாசியின் வரிகள் ஆகா மகத்தானது…..
மான்புமிகு ஐயாவின் வரிகள் அதற்கு இணையானது…..
உழவின் உயர்வை உணர்த்தும்
கவிதை!