மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவுரை!…. நடேசன்.
( ஆஸ்திரேலியா மெல்பனில் கடந்த 19 ஆம் திகதி ஞாயிறன்று நடைபெற்ற மல்லிகை ஜீவா நினைவரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )
காட்டில் வசிக்கும் யானை தாகம் தணிக்க நீர் நிலைகளையும் , தனக்குத் தேவையான உணவையும் தேடி நடந்த பாதையிலேயே ஏனைய மிருகங்களும் நடக்கும் என்பதால் யானைகளே உலகில் முதல் பாதை அமைத்த சிவில் எஞ்ஜினியர்கள். அதேபோன்று நமது வாழ்வு இலக்கியங்களின் வழியே நடக்கிறது. ஒரு இலக்கிய புத்தகத்தை தனது வாழ்வில் வாசிக்காதவர்கூட அதை ஒட்டியே நடக்கிறார்.
எப்படி ?
எந்த ஒழுக்கமுமில்லாதவனும் கூட தனது மனைவி சீதையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறான். அவனுக்கு வால்மீகியையோ கம்பரையோ தெரிந்திருக்கவேண்டிய அவசியமுமில்லை.
ஒருவரது பொருளைத் திருடுவது நல்லதல்ல என எமது குழந்தைகளுக்குச் சொல்லுகிறோம். அதற்காக பாரதம் படிக்கத் தேவையில்லை .
ஒருவன் அரசனாகவோ தலைவனாகவோ இருந்தாலும் நியாயமாக நடக்கவேண்டும் என்கிறோம். அவன் செய்த கொடுமை அவனைக் கொன்றது என்கிறோம். எமக்கு இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் தெரியத் தேவையில்லை.
நமது நாடுகளில் ஒழுக்கம் விழுமியம் பண்பாடு எனத் தூக்கிப் பிடிப்பவர்கள், மேற்கு நாடுகளிலும் அப்படியா..? எனக் கேட்கலாம்.
மேற்கு நாடுகளிலும் அப்படியே. இலக்கியங்களே சமூகத்தை வழிநடத்துகிறது என்பதற்கு கிரிக்க மூன்று மூன்று துன்பியல் நாடகங்களை விபரிக்கிறேன்.
எப்படி?
இலியட் காவியத்தில், ரோய்யில் (Troy) பத்து வருடகாலம் போர் நடத்திவிட்டு கிரேக்க அரசன், அகமனனன் (Agamemnon) வீடு திரும்பி வந்தபோது அவரது மனைவியான க்ளைரெம்மென்ஸ்ரா ( Clytemnestra ) தனது காதலனுடன் சேர்ந்து அகமனன்னை கொலை செய்கிறாள். சில காலம் அவர்கள் இருவரும் அரசாள்கிறார்கள். கொலை நடந்த காலத்தில் வெளிநாட்டிலிருந்த அந்த மன்னனின் மகன் ஓரெஸ்டஸால் ( Orestes) அந்தத் தாயும் அவளது காதலனும் (Aegisthus.) கொலை செய்யப்படுகிறார்கள். தாயை கொன்ற துக்கத்தில் அந்த மகன் தெய்வமான அப்போலோவிடம் சரணடையவும், அதற்கான வழக்கு ஆதீனா என்ற தெய்வத்தால் நீதிமன்றத்திற்கு வருகிறது.
அப்போலோ மகன் ஓரெஸ்டஸுக்கு சார்பான வக்கீல்.
சாதாரண குடி மக்கள்தான் ஜூரர்கள். முடிவில் அந்த ஜூரர்கள் இரண்டாக பிரிந்தபோது, தீர்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் நீதிபதியான அதீனா, தனது வாக்கைச்செலுத்தி, அந்த மகனை விடுவிக்கிறார்
இந்தக் கதை புகழ்பெற்ற மூன்று துன்பியல் நாடகங்களாக எழுதப்பட்டது. எழுதியவர் ஏசிக்கிளஸ் ( Aeschylus 458 bc….Father of Tragedy also warrior in the war of Marathon) அவரது மூன்று நாடகங்கள்- The Oresteia ,The libation Bearers and The Eumenides என்பன.
இந்த நாடகத்திலிருந்தே நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் ஜூரர்கள் முறை வந்தது. அதுவரையும் நடந்த குற்றங்களுக்கு இரத்தப் பழி வாங்கல்கள்தான் நடந்தன. ஆங்கிலத்தில் காங்காருக்கோட்டு என்போம். கொலைகள், திருட்டுக்கள், அரசிற்கு எதிரான குற்றங்கள், அல்லது சட்ட மீறல்கள் என்று தற்போதைய நீதிமன்றம், வக்கீல்கள், ஜூரர்கள் உருவாகுவதற்கு இங்கு இலக்கியம் வழிகாட்டியுள்ளது.
ஏன் டொமினிக் ஜீவாவை நாம் கொண்டாடவேண்டும் ?
டொமினிக் ஜீவா இந்த ஆண்டு தொடக்கத்தில் இறப்பதற்கு ஒரு சில வருடங்கள் முன்பாகவே, நினைவுகளை இழந்து வாழ்ந்தவர். அவரது நினைவுகள் அந்திமத்தில் இருந்த காலத்தில், கொழும்பின் புறநகரில் அவரது ஏகபுதல்வன் திலீபனின் வீட்டில் அவரை என்னால் சந்திக்க முடிந்தது.
அவரது இறப்பை ஒரு வரமாக அவரை நேசிப்பவர்கள் கொண்டாடவேண்டும். ஆனால், அவர் போன்ற இலக்கியவாதியின் சாதனைகள் இறப்போடு முடிவதில்லை. நமது சமூகத்தில் இறந்த பின்பே இலக்கியவாதியை நினைவு கூர்வார்கள். அதுதான் மகாகவி பாரதிக்கும் நடந்தது. பலருக்கும் நடக்கும். அந்த விதியை யாராலும் மாற்ற முடியுமா?
டொமினிக் ஜீவா, யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையம் வைத்திருந்தவர் என்பதே 99 சத வீதமான யாழ்ப்பாணத்தவர்களது நினைவாக இருந்திருக்கும்.
பக்கத்திலிருந்த நகைக் கடைகள் மற்றும் புடவைக் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு, இதென்ன மயிர் வெட்டுபவன் இதற்குள்ளே இருக்கின்றான்..? என்ற மனநிலைதான் அப்போது இருந்திருக்கும். அந்த 1968- 70 வருட காலத்தில் நான் வாரத்தில் இருமுறையாவது அந்த வீதியால் நடப்பவன்.
அந்த வீதியிலே , கடை வைத்திருப்போருக்கோ அல்லது யாழ்ப்பாண சமூகத்திற்கோ கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டதா..? இல்லையா…? என்பது நமது கவலையல்ல. அவரை நேசித்த நாம், எப்படி அவரை நினைவு கூருவது என்பதே எனது வினா?
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் தனியொருவனாக மல்லிகை என்ற கலை, இலக்கிய இதழை வெளியிட்ட இதழ் ஆசிரியராக அவரை பலர் நினைவு கூரலாம்.
நமது நண்பர் முருகபூபதி போன்றவர்களது முதல் ஆக்கம் மல்லிகையில்தான் வெளியானது. அத்துடன் மல்லிகையின் ஆஸ்திரேலிய சிறப்பு மலர் வெளியிட்டு, இங்குள்ளவர்களது ஆக்கங்களையும் ஜீவா பிரசுரித்தார்.
பெரிய பத்திரிகைகள் , இதழ்கள் மறைந்துவரும் தற்போதைய கணினி உலகிது . நித்திய ஜீவியாக ஜீவா வாழ்ந்தாலும்கூட மல்லிகை நின்று பிடிப்பது கடினமாகியிருக்கும்.
அவரால் ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் பதிக்கப்பட்டது. அந்த புத்தகங்களால் அவற்றின் படைப்பாளிகளது மனதில் ஜீவா நிலைத்திருக்கமுடியும். எனது வண்ணாத்திக்குளம் நாவலையும் அவர் பதிப்பித்து வெளியிட்டார்.
அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர். அழகியல் தன்மை கொண்ட கதைகள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். ஆனால், அவரது கதைகள் பரவலாக பேசப்படாததற்கு முக்கிய காரணம் அவரது மற்றைய அவதாரங்களே . என்னைப் பொறுத்தவரையில் அவரது கதைகள் அக்காலத்தை நமக்குக் காட்டும் வரலாற்றுக் கண்ணாடிகள்.
அக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராக அவர் இருந்து, யாழ்ப்பாண சாதி விதிமுறைகளுக்கு எதிராகப் போர் கொடியேற்றினார் என்பதால் அவரை இடதுசாரிகள் கொண்டாடி தம்மில் ஒருவராக வைத்துக் கொள்ள விரும்பலாம். அது அவர்களது உரிமை. ஆனால், இடதுசாரியமானது ஏட்டில் அல்லது கணினியில் மட்டும் உறங்கிப் போய்விட்ட நிலை. சாதியம் நிச்சயமாக தற்போதும் இருந்த போதிலும், அவர் காலத்தில் இருந்தது போல் இல்லை.
அவர் பாடசாலையில் கற்ற காலத்தில், ஒரு ஆசிரியர் ‘சிரைக்கப் போ ‘ எனச் சொன்னதுபோல் இன்று எவரும் சொல்ல முடியாது. இப்படியான இறங்கு நிலையில் அவரை வெறுமனே சாதியப் போராளியாக மட்டும் நினைத்தால் அவர் குறித்த நினைவுகளும் மங்குமே! சாதியத்துக்கு மட்டும் எதிரான செயற்பாட்டாளராக அவரை நிறுத்தினால் அவரது நினைவு அடுத்த தலைமுறைவரையும் கடக்காது
இவற்றுக்கப்பால் அவரிடமிருந்த விடயம் குருஷேத்திரப் போரில் கலந்து கொள்ளாது, விதுரன் வில்லொடித்ததபோல், தமிழ்த்தேசியத்தின் பேரால் முப்பது வருடங்கள் நடந்த குருதிப்போரில் கலந்து கொள்ளாது, முற்றாக ஒரு முனிவராக வாழ்ந்து அதனைப் புறக்கணித்தார்.
இது சாதாரணமான விடயமல்ல. எழுத்தாளர்கள், மத வாதிகள் , பேராசிரியர்கள் , அறிவுஜீவிகள் தங்களை மறந்து போருக்குத் துணை போனபோது, அந்த சுனாமியில் இருந்து விலகி நின்றார். அவர் மாறாக தமிழ்த் தேசியராக இருந்திருந்தால் உலகமெங்கும் வலம் வந்திருப்பார். அதற்கான அழைப்பைப் புறக்கணித்து கொழும்புக்கு இடம்பெயர்ந்தார் . அதற்கப்பால் சிங்கள அறிவுஜீவிகள் எழுத்தாளர்களை மல்லிகையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வந்தார் . தமிழ்ப்பேசும் இஸ்லாமிய சமூகத்தை எதிரியாக நினைத்த தமிழர்கள் மத்தியில் சகோதர இஸ்லாமிய எழுத்தாளர்களின் படைப்புகளை மல்லிகையில் தொடர்ந்து பிரசுரித்தார். இன ஒற்றுமை இலங்கையில் தேவை என்பதற்கு தனி மனித உதாரண புருஷராக நிமிர்ந்து நின்றார்.
அவரிடம் செவ்வி எடுத்த சிங்கள எழுத்தாளர் மடுள்கிரியே விஜயரத்தினா, தமிழர் உரிமையைப் பற்றி அவரிடம் கேட்டபோது , “ நீங்கள் சிறுபான்மையினராகவும் நாங்கள் பெரும்பான்மையினராகவும் இருந்தால், நீங்கள் எம்மிடம் எதைக்கேட்பீர்களோ அதையேதான் நாமும் கேட்கின்றோம். “ என ஆணித்தரமாகப் பதிலளித்தார் என்பதை மடுள்கிரியே விஜயரத்தினா என்னிடம் சொன்னார்.
இதற்கப்பால் அவரை நான் மெச்சுவது, இளம்வயதில் உனக்கு படிப்பெதற்கு சிரைக்கப்போ என அந்த ஆசிரியர் சொன்னபோது பாடப் புத்தகத்தை எறிந்துவிட்டு, தந்தையின் தொழிலைத் தொடர்ந்துவிட்டு, எழுத்தாளராகப் பேச்சாளராக வந்து புகழ்பெற்ற பின்னர் அவர் என்றைக்குமே தன்னை புறக்கணித்தவர்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டவராக வாழ்ந்திருக்கவில்லை.
மதம், சாதி, இனம் ஏன் வர்க்கம் என்று பேசுபவர்கள் பலர் தங்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் மீது அழுக்காறும் குரோதமும் கொண்டு மனதில் கொலை வெறிகொண்டு இயங்குவார்கள். இது நான் எனது சொந்த வாழ்வின் அனுபவத்தில் பார்த்த விடயம்.
உலகத்தில் காந்தி மண்டேலா போன்ற மிகச் சிலராலே கொள்கை நிலையை எதிர்த்தும், அதேவேளையில் கொள்கையைக் கொண்ட மனிதர்களை சகோதரர்களாகப் பாவிக்க முடியும்.
அப்படியான ஒருவராக டொமினிக்ஜீவாவை என்னால் பார்க்க முடிந்தது.
என்னைப் பொறுத்தவரை டொமினிக்ஜீவாவை இடதுசாரியாகவோ , சாதி எதிர்ப்பாளராகவோ பதிப்பாளராகவோ அல்லது மல்லிகை ஆசிரியராகவோ பார்க்க விரும்புவது பருந்தின் செட்டையை வெட்டி கிளிபோல் கூண்டுக்குள் அடைப்பதற்கு ஒப்பான விடயமாகும்.
டொமினிக் ஜீவா, முழு இலங்கைக்கும் சொந்தமான தீர்க்கதரிசனமும் மனிதாபிமானமும் கொண்ட தமிழ் இலக்கியவாதி என நான் கருதுகிறேன். அவரை நாம் பல சந்ததிகள் கடந்தும் நினைவு கூரல்வேண்டும்.
—0—