கவிஞர் அம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்து!
கவிஞர் அம்பியின் நெஞ்சார்ந்த வாழ்த்து
எனது நீண்ட கால நண்பர்களின் வரிசையில் இடம்பெறுபவர்களில், ஈழத்தில் மல்லிகை ஜீவாவும், அவுஸ்திரேலியாவில் எஸ்.பொன்னுத்துரையும் முருகபூபதியும், அக்கினிக்குஞ்சு பாஸ்கரும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இக்காலம் எங்கள் மூத்த முதல் கவிஞர் மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு. இவ்வேளையில் இதனை தரிசிக்காமல் எம்மை விட்டு எஸ்.பொ.வும் மல்லிகை ஜீவாவும் பிரிந்துவிட்டனர்.
எவ்வாறு நாம் பாரதியை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து வருகின்றோமோ, அவ்வாறே இனிவரும் காலத்தில் நாம், ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுழைத்த மல்லிகை ஜீவாவையும் எஸ்.பொ.வையும் நினைத்துக்கொண்டிருப்போம்.
மகாகவி பாரதியின் உலகப்பிரசித்தி பெற்ற கவிதையான அக்கினிக்குஞ்சுவின் பெயரிலேயே முதலில் இலக்கிய சிற்றிதழையும் நடத்தி, பின்னர் அதே பெயரில் இணைய இதழையும் நடத்திவரும் நண்பர் யாழ். பாஸ்கர் அவர்கள் பாராட்டப்பட்டு, விருது வழங்கி, கௌரவிக்கப்படுகிறார் என்ற செய்தி அறிந்து பேருவகை கொள்கின்றேன்.
இந்நிகழ்வு எனக்கு பல ஒற்றுமைகளை காண்பிக்கின்றது. குறிப்பிட்ட அக்கினிக்குஞ்சு இலக்கிய சிற்றிதழாக மலர்ந்தவேளையிலும் எனது ஆக்கங்கள் அதில் வெளிவந்தன. அப்போது நான் பாப்புவா நியூகினியிலிருந்து அவற்றை எழுதினேன்.
பிறகு, அக்கினிக்குஞ்சு இணைய இதழாகியதும் அதிலும் எழுதினேன். எனது சொல்லாத கதைகள் தொடர் இந்த இணைய இதழில் சுமார் முப்பது வாரங்கள் வெளியானதாக ஞாபகம். அக்கினிக்குஞ்சு என்ற பெயரிட்ட எமது நண்பர் “ எஸ்.பொ. “ அவர்கள் எனது நூல்களை சென்னையில் பதிப்பித்தது மட்டுமன்றி, எனது பவள விழாவையும் சிட்னியில் கொண்டாடினார்.
இவ்வாறு அக்கினிக்குஞ்சு ஆசிரியர் யாழ். பாஸ்கருக்கும், எஸ்.பொ. மற்றும் மல்லிகை ஜீவா, முருகபூபதி ஆகியோருக்கும் மத்தியில் நீடித்த உறவு இழையோடிக்கொண்டிருக்கிறது.
ஒரு இலக்கிய இதழை நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை அறிவீர்கள். சவால்கள் நிரம்பியது. இந்த எண்ணிம யுகத்தில் உலகெங்கும் பல இணைய இதழ்கள் வெளியாகின்றன.
அந்தவகையில் நாம் வாழும் அவுஸ்திரேலியா கண்டத்தில், சிட்னியிலிருந்து தமிழ் முரசுவும் மெல்பனிலிருந்து அக்கினிக்குஞ்சுவும் தங்கு தடையின்றி தொடர்ச்சியாக எமது சமூகம் பற்றிய செய்திகளையும், அறிவித்தல்களையும் கலை, இலக்கியவாதிகளின் ஆக்கங்களையும் உலக விவகாரங்களையும் பதிவேற்றி வருகின்றன.
இதற்காக செலவிடும் நேரம் மிகவும் பெறுமதியானது. நண்பர் யாழ். பாஸ்கர் தன்னை ஒறுத்து, அர்ப்பணிப்போடு இந்தப்பணியை மேற்கொண்டு வருகிறார்.
அத்தகைய ஒருவருக்கு, எமது தாயகத்தில் அர்ப்பணிப்போடு இயங்கி, இலக்கியப்பணியாற்றிய மல்லிகை ஜீவா அவர்களின் நினைவாக விருது வழங்கி கௌரவித்து பாராட்டுவது சாலவும் சிறந்தது. பொருத்தமானது. எமதினிய இலக்கிய நண்பர் அக்கினிக்குஞ்சு யாழ். பாஸ்கரை வாழ்க வளமுடன் என்று ஆசி கூறி வாழ்த்துகின்றேன்.
19 – மார்கழி 2021 இ. அம்பிகைபாகர்
Unit 1/34-38, Empress Street, Hurstville, N. S. W. 2220