இலக்கியச்சோலை

இன்று டிசம்பர் 19 கவிஞர் சண்முகம் சிவலிங்கம் (1936 – 2012) பிறந்த தினம்!… முருகபூபதி.

காலமும் கணங்களும் :

 டிசம்பர் 19 கவிஞர் சண்முகம் சிவலிங்கம் (1936 – 2012)

பிறந்த தினம்

நனவிடை தோய்தற் குறிப்புகள்

முருகபூபதி.

எவரும் எதிலிருந்து தப்பினாலும் மரணத்திலிருந்து தப்பமுடியாது. ஆனால், , தமக்கு மரணம் எப்படி வரவேண்டும் என்ற விருப்பத்தை சொல்வார்கள். அமைதியான, எவருக்கும் தொல்லை தராத, படுக்கையில் அழுந்தாத, நாட் கணக்கில் படுக்கையில் கிடந்து அவலப்படாமல், நித்திரையிலேயே உயிர் போய்விடவேண்டும் என்று விரும்புபவர்களைத்தான் பார்க்கின்றோம்.

” இரவிலோ பகலிலோ உறங்கி, அந்த உறக்கத்திலேயே எந்தச்சலனமும் இன்றி அமைதியாக உயிர்பிரிந்துவிட வேண்டும்” எனச்சொல்பவர்களில் இதனை வாசிக்கும் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

அவ்வாறு மறைந்து விடுபவர்களை Silent Attack வந்து போய்விட்டார்கள் என்போம்.

ஈழத்தின் மூத்த படைப்பாளியும் பலரதும் ஆசிரியப் பெருந்தகையுமான சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தமது மரணம் குறித்து தீர்க்கதரிசனத்துடன் வாழ்ந்தவரா…? என்ற எண்ணம் அவரது பின்வரும் கவிதையை படித்ததும் வருகிறது.

நான் மறைந்துவிடுவேன் நான் இருந்தேன் என்பதற்கு எந்தத்தடயமும் இருக்காது ஆனால், எனது இருப்பு காற்றுக்குள் ஊதியிருக்கும். அதை நீங்கள் காணமாட்டீர்கள் எனது இருப்பின் வன்மம் அவலங்களின் சின்னமாயிருக்கும் அதை நீங்கள் அறியமாட்டீர்கள் தொலைக்காட்சியில் வானொலியில் புகைப்படத்தில் அல்லது ஒரு பாராட்டுக்கூட்டத்தில் என்னை மலினப்படுத்த முடியாது

ஒன்றும் இல்லாமைக்குள் எனது ஒரு கண் என்றும் … சிவப்பாய் இருக்கும்.

சண்முகம் சிவலிங்கம் இந்தக்கவிதைக்கு ” “இருப்பின் வன்மம்” என்று தலைப்பிட்டுள்ளார்.

அவரை அவர் பிறந்து வாழ்ந்த கிழக்கிலங்கையில் கல்முனை – பாண்டிருப்பு பிரதேசத்தில் அவருக்குப்பிரியமான சைக்கிளுடனேயே காண்பார்கள். வழக்கமாக இரவில் அருகில் இருக்கும் நண்பர்களை பார்க்கச்செல்வார். வீடு திரும்பி, இரவு உணவுக்குமேல் நெடுநேரம் எழுதுவார். படிப்பார். அதன்பிறகு உறக்கத்துக்கு செல்வார். அப்படி ஒரு நாள் இரவு உறங்கினார். மறுநாள் அவரது மனைவி திருமதி தங்கராணி சிவலிங்கம் அவரை துயில் எழுப்பச்சென்றார். அவரது உறக்கம் களையவில்லை. கணவர் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதாக நினைத்துக்கொண்டு, மனைவி தனது வீட்டுவேலைகளில் மூழ்கினார். மேலும் அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கட்டிலருகே சென்று தட்டி எழுப்பினார்.

அவர் எழும்பவே இல்லை. 2012 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதியன்று இரவு அவர் உறங்கிய அந்த இரவே, அவரது கடைசி இரவு. அவர் விரும்பியிருந்தவாறே அவர் மறைவு சம்பவித்திருக்கிறது. அது அவருக்கு கிட்டிய கொடுப்பினை. சண்முகம் சிவலிங்கம் மறைந்தார் என்ற செய்தியை லண்டன் பி.பி.சி. தமிழோசையில் கேட்டதன் பின்னர் அவரது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடி எனது கவலையை தெரிவித்து தேறுதல் சொன்னேன்.

கிழக்கிலங்கையின் மூத்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், 1939 ஆம் ஆண்டில் இன்றைய தினம் டிசம்பர் 19 ஆம் திகதி பிறந்தவர். 2012 இல் திடீரென மறைந்தார். 1972 முதல் எனக்கும் நண்பராக விளங்கியவர்.

2005 இல் சுநாமி கடற்கோள் நிவாரண உதவிகளுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து கிழக்கிலங்கை சென்ற வேளையில் அவரது பாண்டிருப்பு இல்லத்திலேயே தங்கியிருந்தேன். அவர் தமது சைக்கிளில் எழுத்தாளர்கள் உமா வரதராஜனையும் சடாட்சரனையும் சந்திக்க அழைத்துச்சென்றார்.

அந்த இரவுப்பொழுதில் அவரும் நானும் அவர் வீட்டின் பின்வளவில் வளர்ந்திருந்த தென்னை மரத்தின் கீழே அமர்ந்து

நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் அவரே என்னை பஸ்ஏற்றிவிட்டார். தொடர்ந்தும் அவருடன் தொலைபேசித் தொடர்பில் இருந்தேன்.

அவர் எப்பொழுதும் வித்தியாசமாக சிந்திப்பவர். அவரது பிள்ளைகள் ஆறு ஆண்மக்கள். அதில் ஒருவரை இராணுவம் சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் நடந்தது அறிந்து வெளியே சென்ற மகனை அவர் தேடிச்சென்றார். அவர் கண்முன்னாலேயே சிலரது சடலங்கள் ட்ரக்கில் செல்வதையும் பார்த்திருக்கிறார். அதில் அவரது மகனும் ஒருவர் என்பது விடிந்த பின்பே அவருக்குத் தெரியவந்தது.

என்னிடம் மகனின் இழப்பு குறித்து அனுதாபம் தேடும் உணர்வோடு 2005 இல் அவர் பேசவில்லை. மகனின் மரணத்திலிருந்து அவர் அக்கால கட்டத்திற்கேயுரிய பிரத்தியேக சமூகச்செல்வாக்கைத் தேடவுமில்லை. அதிலிருந்து அவர் மலினப்படுத்த முடியாத பிறவி என்பது தெளிவாகின்றது.

சண்முகம் சிவலிங்கத்தின் மறைவையடுத்து, மீண்டும் ஒரு கிழக்கிலங்கை பயணத்தில் பாண்டிருப்புக்குச் சென்றேன். அன்று இரவு நானும் நண்பர் நற்குணசிங்கமும் அவரது வீடு தேடிச்சென்று கேட்டை தட்டும் வரையில் நான் வருவது அவரது மனைவிக்கும் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாது.

அவர் மறைந்து ஓராண்டு காலத்தின் பின்னர் வெளியான நினைவுவெளி என்ற மலரை திருமதி சண்முகம் சிவலிங்கம் தந்தார். அதில் அவரது கவிதைகள், கட்டுரை, சிறுகதை வெளியாகியிருக்கின்றன.

மலரை வெளியிட்டவர்கள் அவருடைய பிரியமான சைக்கிளின் படத்தையும் அதில் பதிவு செய்துள்ளனர்.

அதன் நாயகன் இன்றி வழக்கம்போல் அது அந்த வீட்டில் மௌனித்து நிற்கிறது.

அதில் அவரது வன்மம் படிந்திருக்குமா…? என்பது தெரியவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் மட்டக்களப்பு சென்றிருந்த சமயத்தில் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்டுவிட்டு, புறப்படத்தயாரானபோது ஒரு அன்பர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாம் வெளியிடும் விருந்து கலை, இலக்கிய இதழைத் தந்தார்.

எதிர்மன்னசிங்கத்தின் நூல் வெளியீடு அன்றையதினம் அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்திருந்தமையால் அந்த நிகழ்ச்சியும் கலை, இலக்கிய விருந்தாகவே அமைந்திருந்தது.

அதன் சுவையை ரசித்துவிட்டு கிளம்புகையில் எனது கைக்கு வந்தது கிழக்கிலங்கை பாண்டிருப்பிலிருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளியாகும் விருந்து.

வெல்லும் தமிழ் – எங்கள் வெல்லத்தமிழ் என்ற கவித்துவ மகுடத்துடன் இதனை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன் இதழையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

எனக்குத்தரப்பட்டது அதன் மூன்றாவது இதழ். இவ்விதழ் வெளியாகும் ஊரில் பிறந்து வளர்ந்து, இலக்கியப்பணியும் ஆசிரியப்பணியும் புரிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட விருந்து வெளியாகியிருந்தது.

எனக்குக் கிடைத்த விருந்து இதழில் கவிஞர் சடாட்சரன், ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோரும் அவரைப்பற்றி எழுதியிருக்கின்றனர்.

சண்முகம் சிவலிங்கம் அவர்களை 1972 இற்குப்பின்னர் அடிக்கடி கொழும்பில் நண்பர் இலக்கிய விமர்சகர், கவிஞர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களின் கொள்ளுப்பிட்டி அறையில் சந்திப்பேன். அக்காலப்பகுதியில், புதுக்கவிதை வீச்சுடன் எழுந்திருந்தது. அதனை ஏற்பதா? நிராகரிப்பதா? என்ற விவாதங்களையும் இலக்கிய இதழ்கள் தொடக்கியிருந்தன. பல புதிய கவிஞர்கள் புற்றீசலாக வெளிக்கிளம்பி, புதுக்கவிதைகளை எழுதிக்குவித்தனர்.

அவர்களுக்கு தமிழ்நாடு வானம்பாடி கவிஞர் குழாமும் உத்வேகம் தந்திருந்தனர். நண்பர் ( அமரர்) கவிஞர் ஈழவாணன் 1975 இல் அக்னி என்ற புதுக்கவிதை சிற்றிதழை நடத்தினார்.

அதன் முதல் இதழ்வெளியீட்டு அரங்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் திருமதி பாலம் லக்ஷ்மணன் தலைமையில் நடந்தபோது, சண்முகம் சிவலிங்கம், நுஃமான் ஆகியோருடன் நானும் உரையாற்றியிருக்கின்றேன்.

இலக்கணத்தை தெரிந்துகொண்டு அதனை மீறவேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்கள் மேலோங்கியிருந்த காலப்பகுதியிலும் அதற்கு முன்னரும் பின்னரும் எழுதியவர் சண்முகம் சிவலிங்கம்.

எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாடு மாநாடு 1974 இல் கொழும்பில் பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்தபோது, இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் இ. முருகையன் தலைமையில் கவியரங்கும் இடம்பெற்றது.

அதில் கவிதை சமர்ப்பித்த சண்முகம் சிவலிங்கம், தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையல்ல என்ற தொனிப்பொருளில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். எதிர்காலத்தில் எங்கள் தேசத்தில் நேர்ந்துவிடக்கூடிய அபாயங்களை அவர் அன்றே தீர்க்கதரிசனமாக முன்வைத்தார்.

2005 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது கண்காணிப்பில் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம். அவரது ஒரு மருமகள் திருமதி நிருமிதன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாம் மாணவர்களுக்கு உதவியபோது அவர்களுடைய கண்காணிப்பாளராக பல்கலைக்கழக உதவிப்பதிவாளராக பணியாற்றினார். நீர் வளையங்கள் ( கவிதை) சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் ( கவிதை ) காண்டாவனம் – ( சிறுகதை) முதலான அவரது நூல்கள், அவரது படைப்பாளுமையை பேசிக்கொண்டிருக்கின்றன.

எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்திலிருந்து சண்முகம் சிவலிங்கம் அவர்களும் 2012 இல் விடைபெற்றார்.

நினைவுகள்தான் எஞ்சியிருக்கின்றன.

—0–

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.