கடனில் மூழ்கும் தேசம்!…. மீண்டும் 1970 யுகத்திற்கு தேசம் செல்லுமா…? அவதானி.
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் – என்ற வரிகளை கம்பராமாயணத்தில் பார்க்கலாம். மாற்றான் மனைவியை கடத்திவந்து, இறுதியில் போர்க்களம் புகுந்து, “ இன்று போய் நாளை வா….. “ என எள்ளிநகையாடப்பட்டு, இறுதியில் நாட்டையும் இழக்கும் சூழ்நிலை வந்தபோதுதான் இலங்கேஸ்வரனின் மன நிலையை கம்பர் அவ்வாறு வர்ணித்தார்.
அந்த இலங்கேஸ்வரன் ஆண்ட தேசம்தான் தற்போது கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளிடம் நிதியுதவி கோரி செல்லவேண்டிய இக்காலத்தில், இன்றுபோய் நாளை வா..? என்று நிதியமைச்சரை திருப்பி அனுப்பும் சூழ்நிலை வந்துள்ளது.
பெருந்தொற்றினால், பெரிய வல்லரசுகளும் பொருளாதார ரீதியில் நலிவுற்றிருக்கும் காலப்பகுதியில் இலங்கைபோன்ற மூன்றாம் உலக, வளர்முக நாட்டின் கதி எவ்வாறிருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
கடந்த 2020 தொடக்கத்தில் கொரோனோ பெருந்தொற்று வந்தவுடன், நாடு முடக்கப்பட்டு வர்த்தகமும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சரிந்துவரும் பொருளாதாரத்தை காப்பதற்காக நிதியமைச்சரில் மாற்றம் வந்தது. அதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை விட்டுக்கொடுக்கவும் நேர்ந்தது.
தலையணையின் உறை மாற்றப்பட்டாலும் தலையணை மாறவில்லை !
அவ்வாறு வந்த நிதியமைச்சர், அண்டை நாடான இந்தியாவிடமும் கடனுதவி கேட்டுச் சென்றார். சீனாவும் கொடுத்தது. இரண்டு நாடுகளும் ஏட்டிக்குப்போட்டியாக கொடுக்கும் என்பதும் தெரிந்ததுதானே..?
இலங்கை வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை பெரிதும் கவரும் சுற்றுலாவுக்கு சிறந்த தேசமாகும். அவர்களின் வருகையினாலும் நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திரத்தன்மை கொண்டிருந்தது.
ஆனால், எதிர்பாராதவகையில் 2019 இல் நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து வெளிநாட்டினர் வருவதற்கு அஞ்சினர். வெளிநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சுகளும் இலங்கையை ஆபத்தான நாடு, செல்லவேண்டாம் என தமது நாட்டு பிரஜைகளை எச்சரித்தன.
2019 ஏப்ரிலுக்குப்பின்னர் இந்த நெருக்கடியை சந்தித்த இலங்கை, 2020 ஜனவரிக்குப்பின்னர் பெருந்தொற்றினால் மேலும் நெருக்கடிக்குள்ளாகியது.
விமான நிலையம் வெறிச்சோடியது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 73.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதென்றும், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய 90 சதவீதத்திற்கும் அதிகமான முறைசார் விற்பனை நிலையங்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான முறைசாரா விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன முதலான செய்திகள் வெளியாகியுள்ளன.
இது இவ்விதமிருக்க எரிவாயு சிலிண்டர்கள் நாடெங்கும் வெடிக்கத்தொடங்கியதையடுத்து, மற்றும் ஓர் பிரச்சினையை நாடு எதிர்நோக்கியுள்ளது.
சோதிடத்தில் பொங்கு சனி, மங்கு சனி என்பது பேசுபொருள்.
அதுபற்றிய விளக்கம் ஒன்றை இந்தப்பதிவை எழுதும் அவதானி படித்தார். அதில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது:
மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர். இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர்.
ராஜபக்ஷ குடும்பத்தினர் சோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். மகிந்த ராஜபக்ஷ 2015 இல் அவசரப்பட்டு அதிபர் தேர்தலை நடத்தி தோல்வி கண்டதற்கும் ஒரு சோதிடர்தான் காரணம் என்று முன்னர் சில செய்திகள் கசிந்திருந்தன.
எனினும் அப்போது வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமராக வந்த ரணில் விக்கிரமசிங்காவுக்கும் முதலில் பொங்கு சனியும் இறுதியில் விரிசல் வந்து மங்கு சனியும் வரவும், மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினர் 2019 ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன்
எழுச்சிகொண்டு, “ தாங்கள் பதவியிலிருந்திருந்தால், அந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்காது “ எனச்சொல்லிக்கொண்டு மீண்டும் பதவிக்கு வந்தனர்.
தற்போது, மூன்று ஆண்டுகளுக்குள், இவர்களின் ஆட்சி பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றது.
விரைவில் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடப்போகிறது என்று எதிர்க்கட்சிகள் நாடெங்கும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.
கடன்சுமையால் நாடு தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும், தேசத்தின் வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்படுவதாகவும் அவை சொல்லிவருகின்றன. இது இவ்விதமிருக்க, அரசின் பங்காளிக்கட்சிகளும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால், அவற்றுக்கும் வேறு போக்கிடமில்லை.
இன்னும் சில வாரங்களில் கையிருப்பிலிருக்கும் அந்நிய செலாவணி பூச்சியத்திற்கு வந்துவிடும் என்று சொல்கிறார் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ.
பொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடுமே அபாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறது எனச்சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை தற்போது ஏல விற்பனை பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அரசைப்பார்த்து கிண்டலடிக்கின்றார்.
தேசிய வளங்கள் தாரை வார்க்கப்படும் தருணத்தில் அமைச்சரவை வெறும் சமிக்ஞை தூணாகத்தான் மாறியிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.
மொத்தத்தில் மலரவிருக்கும் 2022 புத்தாண்டு அபாயச் சங்கை ஊதிக்கொண்டுதான் உதயமாகுமோ என்று அஞ்சுமளவுக்கு செய்திகள் கசிந்துகொண்டிருக்கின்றன.
1970 களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்த கூட்டரசாங்கத்தின் காலத்தில், மக்கள் பாண் வாங்குவதற்கு அதிகாலையிலேயே பேக்கரிகளின் வாசலில் வரிசையில் காத்து நின்ற காட்சிகள் நினைவுக்கு வருகின்றன.
அத்துடன் வீடுகளில் இருக்கும் தரைகளில் மரவள்ளிக்கிழங்கை பயிரிடவேண்டிய தேவையும், சீனிக்குப்பதிலாக பனம் கருப்பட்டி, கித்துல் கருப்பட்டியை பாவிக்கவேண்டிய மாற்றமும் நேர்ந்தது.
அப்போதுதான் ஶ்ரீமா அம்மையார் சந்திரமண்டலத்திற்கு சென்றாவது அரிசியை வாங்கி வருவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
அரைநூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட அந்த காட்சிகள்தான் மீண்டும் அரங்கேறப்போகிறதோ தெரியவில்லை.
இது இவ்விதமிருக்க, எமது தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் தொடர்ந்தும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் இனப்பிரச்சினை தீர்வு விடயம் பற்றி அயர்ச்சியின்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வாறு பேசுவதற்கு முன்னர் தமக்குள் ஒற்றுமை உருவாகவேண்டும் என்றும் அறிக்கை விடுத்து வருகிறார்கள்.
இவ்வேளையில் தனது மருத்துவ தேவைகளுக்காக சிங்கப்பூருக்கு பறந்திருக்கும் அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற அமர்வை 2022 ஜனவரி 18 ஆம் திகதி வரையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியுள்ளார்.
டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் வருகிறது. ஜனவரி 01 ஆம் திகதி புதுவருடம் பிறக்கிறது. அதனையடுத்து தைப்பொங்கல் பண்டிகை.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதிகளுக்குச்சென்று மக்களின் தேவைகளை கவனிப்பதற்காகவாவது இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்துவார்களா..?