எழுத்தும் வாழ்க்கையும்!…. அங்கம் 72 ….. “ உனக்கு என்ன பிஸினஸ் தெரியும்..? “ …. முருகபூபதி.
பலரும் கேட்ட பொதுவான கேள்வியின் உறை பொருளும் மறை பொருளும் !
முருகபூபதி.
பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருப்பது வறுமை. சமகாலத்தில் நினைவு நூற்றாண்டுக்குரியவராக கொண்டாடப்படும் மகாகவி பாரதியார் அதற்கு சிறந்த முன்னுதாரணம்.
வீரகேசரியில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, நீர்கொழும்பில் வாடகை வீடு. இரண்டு குழந்தைகள். தினமும் கொழும்பு சென்று திரும்புவதற்கு பஸ்கட்டண செலவு. இத்தனை செலவுகளையும் சமாளிப்பதற்கு வீரகேசரி – மித்திரனில் 20 ரூபாவுக்கும் 15 ரூபாவுக்கும் கட்டுரைகளும் தொடர் கதைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன்.
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வடமராட்சி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஆதாரம் சொல்லும் செய்திகளை சேகரித்து வருவதற்காக நிருவாகம் என்னை அங்கே அனுப்பியபோது, எவரது வீடுகளிலும் தங்காமல், யாழ். சுபாஸ் விடுதியில் தங்குமாறும், அதற்கான பணமும் தரப்படும் என்றுதான் முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் சொன்னார்.
அவ்வாறு சொல்லி 500 ரூபா பணமும் தந்துதான் என்னை அனுப்பினார். அன்றாடம் உப்புக்கும் புளிக்கும் மரக்கறிக்கும் குழந்தைகளின் பால் மாவுக்கும் அல்லாடிக்கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத் தலைவன் எதற்காக தங்குவதற்கு சுபாஸ் விடுதிக்குச்சென்று செலவிடவேண்டும்…?
அந்தப்பணத்தில் சரி பாதியை வீட்டில் மனைவியிடம் செலவுக்கு கொடுத்துவிட்டு, இரவு பஸ்ஸில் யாழ். நோக்கிப் பயணித்த பொறுப்புள்ள குடும்பத்தலைவன் நான்.
கையில் அணிவதற்கும் கைக்கடிகாரம் இல்லை. வேலைக்குச்செல்லும்போது அணிவதற்கும் ஒழுங்கான சப்பாத்து
இல்லை. சில நாட்கள் குளியலறைக்கு பயன்படுத்தும் இரப்பர் பாட்டா பாதணிகளுடன் சென்றிருக்கின்றேன். ஒரு மழை நாளில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் திடீரென தேங்கிய மழைவெள்ளம் ஒரு பாதணியையும் அழைத்துச் சென்றுவிட்டது.
மற்றது எதற்கு ? என்று அதனையும் வெள்ளத்தோடு அனுப்பிவிட்டு, கொழும்பிலிருந்து வெறும் காலுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
யாழ்ப்பாணம் அரியாலையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வந்த பல பிள்ளைகளின் பெற்றோர் எனது நிலையை நேரடியாக அனுதாபத்துடன் பார்த்தனர்.
அந்தப்பிள்ளைகளின் பாசமுள்ள அண்ணனாக அவர்களை நோர்வே தூதரகம், கடைவீதி என்று பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று அவர்களின் தேவைகளை கவனித்தேன்.
ஒரு பெரிய குஞ்சியம்மாவின் மகன் லண்டன் பரீட்சை எழுதுவதற்காக வந்திருந்தார். அவருக்கு சிங்களம் தெரியாது. பரீட்சை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் அமைந்திருந்த கட்டிடத்தில் ஒரு கூடத்தில் நடந்தது.
அங்கு அவரை அழைத்துச்சென்று, மீண்டும் அழைத்து வந்து நீர்கொழும்பில் அவரது ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் விடவேண்டும். முதல்நாள் இரவுக்கடமை முடிந்து வந்து மறுநாள் காலை அவரை கொழும்புக்கு அழைத்துச்சென்று மாநாட்டு மண்டபத்தில் விட்டுவிட்டு, பரீட்சை முடியும் வரையில் வெளியே காத்திருந்து, அழைத்துவந்து ஊரில் விட்டுவிட்டு, மீண்டும் வீரகேசரிக்கு இரவுக் கடமைக்குச்சென்றேன்.
பஸ்ஸில்தான் உறங்கினேன்.
என்னையும் எனது இயல்புகளையும் அருகிருந்து பார்த்த அவர், தனது தாயாரிடமும் கடந்த ஒரு அங்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த அவரது குஞ்சியம்மாவிடமும் சொல்லி, என்னையும் எவ்வாறாவது வெளிநாடொன்றுக்கு அனுப்பிவிடுவதற்கு உதவுமாறு கேட்டுள்ளார்.
அவரது தங்கையும் அவரது மற்றும் ஒரு குஞ்சியம்மாவின் பிள்ளைகளும் நோர்வேக்கு செல்லத் தயாராகியிருந்தனர். சில நாட்கள் எனது கடமை நேரத்தை இரவுக்கு மாற்றிக்கொண்டு அவர்களுக்காக கொழும்பில் அலைந்தேன்.
“ பூபதி அண்ணா…நீங்களும் வந்துவிடுங்கள்…. குறைந்த சம்பளத்தில் எப்படி குடும்பத்தை நடத்தப்போகிறீர்கள். உங்களுக்கு நாம் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம். ஒரு கூடப்பிறந்த பிறவியாக எங்களிடம் நீங்கள் காண்பிக்கும் கரிசனையால் மிகவும்
நெகிழ்ந்துபோயிருக்கின்றோம். “ என்று தினம் தினம் சொல்லிக்கொண்டிருந்தனர்.
“ பிள்ளைகளே… எனக்கு வெளிநாடு செல்ல விருப்பம் இல்லை. எனது குழந்தைகளை விட்டுச்செல்ல மாட்டேன். சோவியத் பயணத்திலும் நான் மூன்று வாரங்கள் அங்கே நின்றிருக்கவேண்டும். குழந்தைகளை பிரிந்திருக்க மனமில்லாமல், இரண்டு வாரத்தில் திரும்பி வந்த ஆள் நான். அத்தகைய என்னால் எவ்வாறு ஒரு அந்நிய நாட்டுக்குச்செல்ல முடியும். வறுமையிலும் செம்மையாக வாழப்பழகிக்கொண்டேன். “ என்று அவர்களிடம் சொன்னேன்.
நான் எவ்வாறு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தேன் என்பதையும் சத்திய வாக்குமூலமாக இங்கே தெரிவிக்கின்றேன்.
எனது வாராந்த விடுமுறை நாளில் தேங்காய், முட்டை விற்றேன். ஒரு குடும்ப நண்பர் மாவத்தகம என்ற இடத்தில் ஜெயம்விஜயரத்தினம் அவர்களின் Desiccated coconut உற்பத்தி செய்யும் ஆலையில் முகாமையாளராக இருந்தார். அவரிடம் சொல்லி தேங்காய்களை ஒரு வாகனத்தில் வரவழைத்து, தேங்காய் உரிக்கும் உளியினால் நானே உரித்து சந்தைக்கு விற்பனைக்கு கொடுத்தேன். சில குடும்ப நண்பர்கள் வீடுகளுக்கும் குறைந்த விலையில் விநியோகித்தேன். அவ்வப்போது முட்டை வியாபாரமும் செய்தேன்.
இரக்க குணமிருப்பவர்களுக்கு வியாபாரம் வெகு தூரம்தான். சில மாதங்களிலேயே அந்த வியாபாரமும் பெரிய நட்டத்தை தந்துவிட்டது. மனைவியின் தாலிக்கொடியை அடவு வைத்து கடனை அடைத்தேன். திருமண மாற்று மோதிரம் அடவு வைக்கப்பட்டு மீள முடியாமல் போனது.
நோர்வேக்கு செல்ல வந்தவர்களை ஒவ்வொருவராக வழியனுப்பிவிட்டு, தடுப்புக்காவலிலிருந்த சின்னக்குஞ்சியம்மாவின் மகனை மீட்கும் போராட்டத்தில் அவர்களுடன் கொழும்பில் அலைந்துகொண்டிருந்தேன்.
என்னையும் அவரும் , அவரது உறவினர்களும் அவர்களின் பிள்ளைகளும் வெளியே அனுப்பிவிடுவதற்கு தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
நான் அதிருப்தியுடன் அவர்களைப் பார்த்தேன். திடீரென்று நான் புறப்பட நேர்ந்தால், வீரகேசரிக்கு சொல்லாமல் செல்ல நேர்ந்துவிடும். அவ்வாறு நான் நடந்துகொண்டால், சுமார் பத்தாண்டு கால சேவைப்பணம் எதுவும் கிடைக்காது. சேமலாப நிதியிலிருக்கும் இருப்பினைப் பெறுவதிலும் சிக்கல் வரலாம். அதனைவிட
இதுவரைகாலமும் எனக்கு குறைந்த வேதனமாவது வழங்கிய ஒரு நிறுவனத்திற்கு சொல்லாமல் விடைபெற்று துரோகம் செய்யலாகாது.
அதனால், 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்ததும் நான் எனது பதவியிலிருந்து விலகுகின்றேன் எனக்குறிப்பிட்டு, அதற்கான ஒரு மாத முன்னறிவித்தல் கடிதம் என்று எழுதி, பிரதம ஆசிரியர் சிவநேசச்செல்வனிடம் கொடுத்தேன்.
அவர் அதனைப்படித்துவிட்டு திகைத்தார். என்னை அமரச்சொன்னார்.
“ வேலையை விட்டு விட்டு என்ன செய்யப்போகிறீர்..? “
“ எனது தம்பி மத்திய கிழக்கிலிருந்து திரும்பிவிட்டார். அவர் எங்கள் ஊரில் ஒரு கடை திறக்கப் போகிறார். அவருக்கு உதவியாக நானும் அங்கே வேலை செய்யப்போகின்றேன். “
சிவநேசச்செல்வன் சிரித்தார்.
“ ஐஸே… உமக்கு என்ன பிஸினஸ் தெரியும் ஐஸே…? பேப்பரையும் பேனையையும் விட்டால், உமக்கு வேறு என்ன தொழில் தெரியும்…? சும்மா பேக்கதை பேசாமல், போய் வேலையைச் செய்யும். சம்பளம் போதாது என்பது தெரியும்தான். அதற்காக நல்லதோர் வேலையை விடப்போகிறீரா..? நிருவாகத்திடம் பேசிப்பார்க்கின்றேன் “ என்றார்.
“ எவ்வளவு காலமாகப் பேசுகிறீர்கள்…? “ எனக்கேட்டேன்.
அவர் தனது குறுந்தாடியை வருடிக்கொண்டு சிரித்தார்.
“ மாஸ்கோ சென்று திரும்பியதனால், உமக்கு சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவில் ஏதும் வேலை கிடைக்கவிருக்கிறதா..? சொல்லும் ..? “ என்று நானே நம்பமுடியாத ஒரு கேள்வியை அவர் அப்போது கேட்டார்.
நான் எனது நீண்ட தலைமுடியை வருடிக்கொண்டு சிரித்தேன்.
“ உங்களுக்குத்தான் அங்கே நண்பர்கள் இருக்கிறார்களே… கேட்டுத்தான் பாருங்களேன் .. “ என்றேன்.
“ சரி… சரி… போம். உமது கடிதத்தை முகாமையாளர் பாலச்சந்திரனிடம் கொடுக்கின்றேன். “ என்று என்னை வெளியே அனுப்பிவிட்டு, வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன்.ராஜகோபாலையும் சிரேஷ்ட செய்தி ஆசிரியர் நடராஜாவையும் தனது அறைக்கு தனித்தனியாக அழைத்து மந்திராலோசனை நடத்தினார்.
இவர்கள் இருவரும் என்ன சொல்லியிருப்பார்கள்..? என்பது புரிந்துகொள்ளத்தக்கது.
அதனையும் இங்கே பதிவிடுகின்றேன்.
“ இக்கடிதங்கள் எல்லாம் வெறும் வெருட்டுதல்தான். தங்கள் சம்பளத்தை உயர்த்துவதற்கு இப்படியும் முயற்சிப்பார்கள். இங்கே பேனையையும் காகிதத்தையும் நம்பித்தான் நாம் அனைவரும் காலத்தை பல வருடங்களாக ஓட்டுகின்றோம். இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறதுதானே…? ! “
ஆம், அவர்கள் சொன்னதுபோன்று எனது அக்கடிதம் சிவநேசச்செல்வனின் மேசை லாச்சியில் ஒரு மாதகாலமாக அதாவது 1987 ஜனவரி 28 ஆம் திகதி வரையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது என்பதை இந்தத்திகதியில்தான் பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.
அவர் எனது கடிதத்தை அலட்சியம் செய்திருந்தார்.
இதன்போதுதான் கடந்த அங்கத்தின் இறுதியில் நான் குறிப்பிட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்திருந்த மலையகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் தோழர் என்னைத் தேடிவந்தார்.
கட்சியின்அலுவலகம் ஆமர்வீதியும் புளுமெண்டால் வீதியும் சந்திக்கும் நாற்சந்தியில் வலது புறம் அமைந்திருந்த ஒரு மர ஆலை கட்டிடத்தின் முதலாவது மாடியிலிருந்து இயங்கியது.
ஆனால், 1983 நடுப்பகுதியில் கட்சி தடைசெய்யப்பட்டதும் மூத்த தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகியிருந்தனர். தோழர் லயனல் போப்பகே கைதாகி, தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவருடனான எந்தத் தொடர்பும் கிடைக்கவில்லை. ஆளை ஆள் சந்திக்க முடியாமல் கலங்கிப்போயிருந்த காலம்.
கட்சி அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு சிங்களத் தோழரை மாத்திரம் அவ்வப்போது வெளியே சந்தித்து தகவல்களை பெற்றுக்கொண்டேன். நான் வெளிநாடு செல்லவிருக்கும் தகவலை அவரிடமும் மறைத்து, வீரகேசரியிலிருந்து விலகி எனது தம்பியுடன் இணைந்து ஒரு கடையில் வேலை செய்யப்போகின்றேன் என்று அவரிடமும் பொய் சொன்னேன்.
அதற்கு அவரும் , சிவநேசச்செல்வன் என்னிடம் கேட்ட கேள்வியைத்தான் கேட்டார்.
“ தோழர்… உங்களுக்கு என்ன பிஸினஸ் தெரியும்… “ அவரும் தனது குறுந்தாடியை வருடிக்கொண்டு சிரித்தார். ம.வி. முன்னணி மோழர்கள் பலர் தாடி வளர்த்திருந்தனர். இடதுசாரிகளுக்கு தாடி ஒரு அழகு. கார்ல் மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், சேகுவேரா, ஃபிடல் காஸ்ரோ முதல் பல இடதுசாரிகள் தாடி வளர்த்தவர்கள்தான்.
ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க முதலான ம.வி. மு. தலைவர்களும் தாடி வளர்த்திருந்தனர். நான் தாடிக்குப் பதிலாக தலைமுடி வளர்த்திருந்தேன். அது சாயிபாபாவின் தலைமுடிபோன்று செழித்து வளர்ந்திருந்தது. பயிர் வளர்க்கத் தெரியாத நான் மயிரையாவது வளர்த்தேன். நான் வேகமாக நடக்கும்போது எனது தலைமயிர் காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் பறக்கும்.
குறிப்பிட்ட தோழர் மூலமாக செய்தி, என்னைத்தேடி வந்த மலையகத் தோழருக்கும் சென்றிருக்கிறது. அத்துடன் எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்திருந்த தோழர் ரோகண விஜேவீராவுக்கும் சென்றிருக்கிறது.
பல அரசியல் சார்ந்த செய்திகள் ஊடகங்களில் கசிவதற்கு முன்பே நான் அவருக்குத் தெரிவித்திருந்தமையால், என்மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். நான் வீரகேசரியிலிருந்து விலகிச்செல்வதை அவரும் விரும்பவில்லை என்று என்னைத் தேடி வந்த தமிழ்த்தோழர் சொன்னார்.
ரோகண விஜேவீரா, உபதிஸ்ஸ கமநாயக்க, சாந்த பண்டார, கழு ஆராய்ச்சி, வாஸ் திலகரத்ன, மகிந்த பத்திரன, சோமவன்ஸ அமரசிங்க உட்பட பல தோழர்கள் தலைமறைவாகியிருந்தனர்.
“ இந்த வலதுசாரி, முதலாளித்துவ, ஏகாதிபத்திய வாதம் பேசும் அரசு வீட்டுக்குச்செல்லவேண்டும். அடக்குமுறையை ஏழைத் தொழிலாளர், விவசாயிகள், பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக மேற்கொண்டுவருகிறது. மக்கள் விரைவில் புரட்சிக்கு தயாராகிவிடுவார்கள். வீதிக்கு வந்து போராடுவார்கள். இத்தகைய கால கட்டத்தில் நீங்கள் பத்திரிகையிலிருந்து வெளியேறுவதை எமது தோழர்கள் – குறிப்பாக விஜேவீரா தோழர் விரும்பவில்லை. தயவுசெய்து உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் “ என்றார்.
அக்கால இடதுசாரிகளின் இந்த வாய்ப்பாட்டை இப்போது நினைத்து மனதிற்குள் சிரிக்கின்றேன். ஆனால், வேதனை கலந்த சிரிப்பு !
எனது விலகல் கடிதம் பிரதம ஆசிரியரின் மேசை லாச்சியில் உறங்குகிறது.
நான் அவுஸ்திரேலியா தூதரகத்தில் விசா பெற்றுவிட்ட அத்தாட்சி பதிந்த கடவுச்சீட்டு வீட்டில் இருக்கிறது.
இலக்கிய நண்பர் சோமகாந்தன், இவை எதுவும் தெரியாமல், தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதனுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி, என்னை தினகரனுக்கு அழைப்பதற்கு இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சோவியத் தூதுவரலாயத்தின் தகவல் பிரிவில் பிரேம்ஜி ஞானசுந்தரனும் இதர நண்பர்களும், “ ஒரு பிஸினஸும் உருப்படியாகத் தெரியாத இந்தப்பூபதி என்ன செய்யப்போகிறான் ..? “ என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் விலகப்போகின்றேன் என்ற செய்தி கசிந்து, இலக்கிய நண்பர் இரத்தினவேலோன் மல்லிகைக்கு ஒரு பிரியாவிடை வாழ்த்து மடல் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
நான் பயணத்திற்கான ஏற்பாடுகளை அமைதியாக செய்துகொண்டு, மித்திரனில் எழுதி முடிக்கவேண்டிய கதாநாயகிகள் தொடர்கதையின் இறுதி அங்கங்களை இரவு பகலாக எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
அத்துடன் விமான டிக்கட்டுக்கான பணத்தை தேடுவதற்கும், கையோடு எடுத்துச்செல்வதற்கு தேவைப்பட்ட 500 அமெரிக்கன் டொலர்கள் பெறுமதியான ட்ரவலர்ஸ் செக் வாங்குவதற்குத் தேவையான இலங்கைப் பணத்திற்காகவும் அல்லாடி அலைந்துகொண்டிருந்தேன்.
பிரதேச நிருபர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து காசி. நவரத்தினமும், அரசரத்தினமும், புலோலியிலிருந்து தில்லைநாதனும் திருகோணமலையிலிருந்து இரத்தினலிங்கமும், வவுனியாவிலிருந்து மாணிக்கவாசகரும், மட்டக்களப்பிலிருந்து நித்தியானந்தனும், மாத்தறையிலிருந்து முகம்மத்தும், குண்டசாலையிலிருந்து குவால்தீனும் தினமும் பேசும்போது, செய்தி தருவதற்கு முன்னர் எனது முடிவை மறுபரிசீலனை செய்யச்சொன்னார்கள்.
என்னை இழக்க விரும்பவில்லை என்றார்கள்.
நண்பர் தனபாலசிங்கம் சோர்ந்த முகத்துடன் வந்து, “ என்னடாப்பா…? உண்மையைச்சொல்லு… நீ… தம்பியுடன் சேர்ந்து பிஸினஸ்தானா செய்யப்போகிறாய்… உனக்கு என்ன பிஸினஸ் தெரியும் “ என்று அதே கேள்வியையே கேட்டார்.
இதர அலுவலக ஊடக நண்பர்களான சட்டம் படித்துவிட்டு வந்திருந்த பாலச்சந்திரன், தம்பையா ஆகியோர் “ சம்பள உயர்வு பற்றி நிருவாகத்துடன் பேசிப் பார்ப்போமா..? அதுவரையில் உங்கள் விலகல் கடிதம் மேலிடத்திற்கு செல்லாதிருக்கட்டும் “ என்றனர்.
அனைத்தையும் அமைதியாக வெளியே செய்து கொண்டிருந்த நான், அவர்கள் முன்னிலையில் ஒரு குற்றவாளி போன்று கூனிக்குறுகிக்கொண்டிருந்தேன்.
செய்தி ஆசிரியர் “ நடா “ நடராஜாவும், வாரவெளியீட்டு ஆசிரியர் பொன் . ராஜகோபாலும் என்னை அழைத்து, “ 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் சம்பள உயர்வு பற்றி மேலிடம் மீளாய்வு செய்யும். அதுவரையில் பொறுத்திருக்க முடியாதா..? “ என்று கேட்டனர்.
அந்த நாட்கள் எனக்கு மனப்போராட்டத்திலேயே கழிந்தன.
அவர்கள் குறிப்பிட்ட அந்த 1987 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நான் மெல்பனில் Brunswick என்னுமிடத்தில் Australian Printing Company என்ற புடவை அச்சிடும் நிறுவனத்தில் பணியிலிருந்தேன்.
( தொடரும் )