கதைகள்

நடுகைக்காரி!…. 31…. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

பஸ்ஸைவிட்டு இறங்கிய தனமும், பூரணியும்,பாறுவும் ஞானத்திடம் விடைபெற்றுக் கொண்டு வடக்கு நோக்கி காங்கேசன்துறை வீதி வழியாக நடக்க எத்தனிக்கையில், தயங்கி நின்ற பாறுவைக் கண்ட ஞானம் அவளருகில் செல்ல’ எனக்கு நாளைய நினைச்சால் பயமாயிருக்கு, அப்பா அம்மா என்ன முடிவெடுக்கப் போயினமோ தெரியாது „ என அவள் கலங்கி நிற்க’ ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் பிழையாய் ஒன்றும் நடக்காது எதுக்கும் நானிருக்கிறன்’ என்று அவளை ஆறுதல்படுத்தி அனுப்பி வைச்ச ஞானம், தெல்லிப்பழைப் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தில் நிறுத்தி வைச்சிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு தெல்லிப்பழைச் சந்தியால் திரும்பி மேற்காக அம்பனை நோக்கி போக வேண்டுமென்ற யோசனையில் வந்தவன் என்ன நினைச்சானோ தெரியாது சைக்கிளத் திருப்பி வடக்குப் பக்கமாக யூனியன் கல்லூரியைத் தாண்டி காங்கேசன்துறை வீதியில் போய்க் கொண்டிருந்தான்.

ஞானத்தின் கண்கள் தூரத்தில் தனமும், பூரணியும் பாறுவும் போகிறார்களா எனத் தேடின.அவர்கள் புளியடி வைரவர் கோவிலையம் பெற்றோல் நிலையத்தையும் தாண்டி காளிகோவிலடி ஒழுங்கைக்குள் இறங்கி நடந்து கொண்டிருப்பதைக் கண்ட ஞானம் அந்த இடத்தை நோக்கி வேகமாகப் போக, தற்செயலாகத் திரும்பிப் பார்த்த பாறு „ அவர் வந்து கொண்டிருக்கிறார் „ என்று சொல்லித் தாமதிக்க’ சரி நீ அவரோடை கதைச்சுக் கதைச்சு வா நாங்கள் முன்னுக்குப் போறம்’என்று சொல்லிய தனம் பூரணியுடன் வேகமாக நடக்க,பாறு தாமதிச்சு நிற்க சைக்கிளில் அவளருகில் வந்த ஞானம் சைக்கிளைவிட்டு இறங்கி அவளுடன் சேர்ந்து நடந்து கொண்டிருக்கையில் „ நீங்கள் அப்பிடியே வீட்டை போறெனெண்டு சொல்லிப் போட்டுப் போனியள், நீங்கள் இஞ்சை வருவியள் என்று எதிர்பார்க்கவில்லை’ என்றவள் „ உங்களை ஒரு நாளைக்கு ஒரு தரமாவது பார்க்காவிட்டால் என்னால் நிம்மதியாகவே இருக்க முடியாது இனி எப்ப உங்களைப் பார்ப்பன் என்று கவலைப்பட்டபடி நடந்து கொண்டிருந்தன்…அதுதான் என்னவோ புளியடி வைரவர் உங்களை இங்கை அனுப்பியிருக்கிறார’ என்று அவள் சொல்ல,’என்னாலும் உங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது’என்று ஞானம் சொல்ல,’நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியாது „ என்று சொல்லி பாறு கலங்குவதைக் கண்ட ஞானம் „ பயப்படாமல் இருங்கள் நாங்கள் இரண்டு பேரும் ஒருத்தரையொருவர் உண்மையாக விரும்புகிறவர்களென்றால் நாளைக்கு எந்தவிதமான பாதகமான நிலையும் உங்களுக்கு நடக்காது’ என்ற ஞானம்’ நான் கெதியிலை உங்கடை அப்பா அம்மாவிட்டை எங்கடை காதலைப்பற்றிச் சொல்லியும் கல்யாணம் செய்யப் போவதைப் பற்றியும் சொல்லத்தான் போகிறன்’ என்று சொல்ல’ ஐயையோ இப்ப வேண்டாம் ஆறுதலாய்ச் சொல்லுங்கள் „ என்று பாறு பதட்டத்துடன் சொல்ல „சொல்ல வெண்டிய நேரத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்,நாங்கள் இரண்டு பேரையும் யார் வெறுத்து ஒதுக்கினாலும் சரி கல்யாணம் செய்து வாழப் போறம்

என்று முடிவெடுத்திட்டம்,அதற்குப் பிறகு எமது முடிவை எவர் எவருக்கு சொல்ல வேண்டுமோ சொல்லித்தான் தீரவேண்டும், வாறது வரட்டும் „ என்று ஞானத்தின் குரலில் இருந்த உறுதியைப் பார்த்த பாறு திகைத்துவிட்டாள் அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

பாறுவின் வீட்டுப்படலைவரையும் பாறுவோடு நடந்து வந்த ஞானம் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளை அணைதச்சு „பயப்படாமல் போங்கள்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறான்.அவளை அனுப்பிவிட்டு ஞானம் சைக்கிளில் ஏறி அமர்ந்து பாலம் இருக்கும் ஒழுங்கை வழியாக தெற்கு நோக்கிப் போக எத்தனிக்கையில் திறந்த படலைக்கூடாக ஞானம் சைக்கிளில் இருப்பதை முற்றத்தில் நின்ற தாய் கண்டுவிடுகிறாள்.

படலையைத் திறந்து முற்றத்தில் கால் வைத்த பாறுவிடம் „அந்தத் தம்பியும் உங்களோடை படத்தக்கு வந்தவரோ’ என்று தாய் கேட்க,’இல்லையம்மா நாங்கள் ஒழுஙகையிலை இறங்கி நடக்கேக்கை மாவிட்டபுரப் பக்கத்திலையிருந்து அவர் வந்து கொண்டிருக்கேக்கை கண்டவர், எங்களைக் கண்டதும் எங்கை போட்டு வாறியள் என்று கேட்டார், படத்தாலை வாறம் என்று சொல்ல, என்ன படம் பார்த்தனீங்கள் என்று கேட்டுச் சும்மா கதைச்சுக் கொண்டு வந்தவர் „ என்று தாய்க்குப் பொய் சொல்கிறாள் பாறு.

தன்னைப் பார்த்துக் கதைக்காமல் பாறு அங்கை இங்கை பாரத்துக் கதைப்பதைக் கண்ட பாறுவின் தாயார் அவள் எதையோ மூடிமறைக்க முயற்சிக்கிறாள் என்பதை உணர்ந்து; „ கொஞ்சநாளாய் உன் போக்கே சரியில்லை, எப்ப நீ அம்பனைத் தோட்டங்களுக்கு வேலை செய்யப் போனியோ அன்றையிலிருந்து கவனிச்சுக் கொண்டுதான் வாறன் அந்தத் தம்பி உன்னைக் கொண்டு வந்து இங்கை விடுறதும், பிறகு இருட்டினப் பிறகும் படலையடியில் நின்று அவரோடை கதைப்பதும் இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியாது, நினைச்சாலே நெஞ்சு படபடக்கிறது,நீ நினைக்கிறாயாக்கும் நீங்கள் இரண்டு பேரும் ஒழுங்கை முகரிகளில் நின்று கதைக்கிறது யாருக்கும் தெரியாதென்று,போகிறவை வாறவை கண்டும் காணாதமாதிரிப் போனாலும் அவை கதைக்கத்தான் செய்வினம், என்ரை காதிலையும் விழுந்திருக்கு கொப்பாவின்ரை காதிலையும் விழுந்திருக்கு, ஒரே ஆட்களென்றால்கூடப் பரவாயில்லை, அந்தத் தம்பியின்ரை குடும்பம் எட்டாத உயரத்தில் இருப்பவர்கள்,அவைக்கென்ன சேறு கண்ட இடத்திலை விழக்கி தண்ணி கண்ட இடத்திலை கழுவிப் போட்டுப் போனால் உன்னை எப்படியடி சரிப்படுத்த முடியும், யாரடி உன்னைக் கட்டுவினம்’ என்று தாய் பதைபதைப்புடன் சொல்ல,எல்லாத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பாறு, சத்தமாக „அம்மா கொஞ்சம் பேசாமல் இருக்கிறியளே,நீங்கள் இப்ப சொன்னியளே சேறு கண்ட இடத்திலை விழக்கித் தண்ணி கண்ட இடத்திலை கழுவுகிறவை என்று, அவர் அப்படிப்பட்டவரல்ல, நானும் அவரும் தனியனாய் தோட்டத்திலை இருந்திருக்கிறம்,அப்ப ஒருநாள்கூட பிழையாகக் கதைச்சதுமில்லை, பிழையாக நடக்கவுமில்லை, அம்மா நான் வெளிப்படையாகவே சொல்றன் நானும் அவரும்

ஒருத்தரையொருத்தர் விரும்புகிறம், நாங்கள் இரண்டு பேரும் கல்யாணம் கட்டத்தான் போறம்,இந்த விசயம் அவற்றை தாய் தகப்பனுக்கும் தெரியும், அவற்றை அயலட்டைக்கும் தெரியும் „ என்று பாறு சொன்னதும் தாய் அதை எதிர்பார்க்கவில்லையாதலால்’ என்னடி சொல்கிறாய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிட்டுதாடி, நடக்கிற காரியமாடி இது கடைசியிலை வெட்டுக்குத்தாகி இரத்தம் சிந்திற நிலைக்குத்தான் வரப் பொகுது, கடவுளே என்ன நடக்கப் போகுதோ தெரியேலையே, பாறு நான் சொல்றதை வடிவாய்க் கேள் நாளைக்கு உன்னைப் பார்க்க ஒரு பொடியன் வரப் போறான், அவன் எங்கடை ஆட்கள் ஓம் என்று சொல்லி அந்தப் பொடியனைக் கட்டு, நடக்க முடியாத ஒன்றை கற்பனை செய்து உன்ரை வாழ்க்கையை பழுதாக்காதை „ என்று தாய் சொல்ல, „அம்மா நிற்பாட்டு கதையை நானும் அவரும் கல்யாணம் செய்யத்தான் போறம், அதை யாராலும் தடுக்க முடியாது, தடுக்க ஆர் நினைச்சாலும் அதையும் தாண்டி கல்யாணம் செய்து வாழுவம்’ என்று பாறு கோபமாகவும் அழுகையாகவும் சொல்லிக் கொண்டே விறாந்தையில் ஏறி அறைக்குள் நுழைந்து கதைவைப் படாரென அடித்துப் பூட்டுகிறாள்.

படலை திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறாள் பாறுவின் தாய், பாறுவின் தகப்பன் படலையைத் திறந்து வந்து கொண்டிருக்கிறார்.

விறாந்தையில் படித்துக் கொண்டிருந்த மகனுக்கு கிட்டப் போன தாய் „ கொக்காவும் நானும் சண்டை பிடிச்சதை கொப்பாவுக்குச் சொல்லிப் போடாதை „ என்று சொன்னவாறு அடுப்படிக்குள் போகிறாள் பாறுவின் தாய்.

„பாறு படத்தாலை வந்திட்டாளோ’ என்று பாறுவின் தகப்பன் கேட்க,’ அக்கா வந்திட்டா அறைக்குள்ளைதானிருக்கிறாவப்பா’ என்று பதில் சொல்கிறான் பாறுவின் தம்பி.

ஞானம் சைக்கிளில் அம்பனைச் சந்தியைக் கடந்து குணம் கடையடிக்கு போகையில் „ உங்கை வாறார் புரட்சியாளன் „ என்று கிண்டலும் கேலியுமாக கொண்டக்ரர் மணியம் சொல்லிக் கொண்டே கடையைவிட்டு வெளிக்கிட ஞானத்தின் காதில் அவர் சொன்னது விழவே „அண்ணை கொஞ்சம் நில்லுங்கள் உங்களோடை கதைக்க வேணும்’ என்று சொல்லியபடி சைக்கிளை கடையோடிருந்த பூவரசம் கதியாலோடு சாத்திவிட்டு மணியத்திற்கு கிட்டப் போகிறான் ஞானம்.

ஞானம் வந்த வேகத்தையும் முகத்தையும் பார்த்து திகைத்துப் போய் நிற்கிறான் கொண்டக்ரர் மணியம்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.