ஆசானின் ஆளுமைப் பண்புகளை ஆவணமாக்கிய ஆசான் கனகசபாபதி நாகேஸ்வரன்!… முருகபூபதி.
அஞ்சலிக்குறிப்பு :
ஆசானின் ஆளுமைப் பண்புகளை ஆவணமாக்கிய ஆசான் கனகசபாபதி நாகேஸ்வரன்
முருகபூபதி.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் நம்மத்தியிலிருந்து யாராவது ஒரு ஆளுமை நிரந்தரமாக விடைபெற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரியில் மல்லிகை ஜீவா விடைபெற்றார். டிசம்பரில் கனகசபாபதி நாகேஸ்வரனும் விடைபெற்றுவிட்டார். இதற்கிடையில் எழுத்தாளர் கே. எஸ் ஆனந்தனும் சென்றுவிட்டார்.
மரணம் இயற்கையானது. அதனால்தான் இயற்கை எய்தினார் என்கின்றோம். எமது தாயகத்தில் எவரேனும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் மறைந்தவுடன், தொலைவிலிருந்து அந்த மரணச்செய்தியை கேட்கும்போது, ஏனோ சற்று கலங்கிவிடுகின்றேன்.
இந்த ஆண்டும் அந்தக்கலக்கம் அடிக்கடி வந்தமைக்கு முக்கிய காரணம் அவர்களின் வயதுதான். என்னை விட வயதில் குறைந்த ஒருவர் விடைபெறும்போது, மரணபயமும் வந்து சூழ்ந்துவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் நான் வதியும் மெல்பனில் ஒரு தமிழ் அன்பர், என்னிலும் வயதில் குறைந்தவர் வாகனவிபத்தில் மறைந்தார். அந்தத் துயரத்தை கடப்பதற்கிடையில் நண்பர் க. நாகேஸ்வரனின் மரணச்செய்தி வந்து சேர்ந்தது.
தாமதிக்காமல், அவரது பூர்வீக ஊரைச்சேர்ந்த நண்பர் பூபாலசிங்கம் புத்தக நிலைய அதிபர் ஶ்ரீதரசிங்கை தொடர்புகொண்டு விசாரித்தேன். சிறிது காலம் நாகேஸ்வரன் சுகவீனமுற்றிருந்தார் என்ற மேலதிக செய்தியும் கிடைத்தது.
இந்த அஞ்சலிக்குறிப்புகளுக்கு “ ஆசானின் ஆளுமைப்பண்புகளை ஆவணமாக்கிய ஆசான் கனகசபாபதி நாகேஸ்வரன் “ என்று தலைப்பிட்டமைக்கு, அவரது சிறந்த நூல் ஒன்று எனது மேசையிலிருப்பதுதான் காரணம். சில வருடங்களுக்கு முன்னர், நாகேஸ்வரன் எழுதிய அறிவொளி மாவை த. சண்முகசுந்தரம் ( தசம் ) – சிந்தனைகளும் எழுத்துப்பணிகளும் – என்ற நூலை ( 395 பக்கங்கள் கொண்டது ) தசம் அவர்களின் புதல்வி என்னிடம் சேர்ப்பித்திருந்தார்.
தசம் என்று பலராலும் அழைக்கப்பட்ட எழுத்தாளர் த. சண்முகசுந்தரம் அவர்கள், யாழ். மகாஜனா கல்லூரியில் அதிபராக
பணியாற்றிய காலப்பகுதியில், பின்னாளில் கலை, இலக்கிய , ஊடகத்துறையில் பிரகாசித்த பலருக்கு ஆசானாக விளங்கியவர்.
நான் அறிந்தமட்டில், எழுத்தாளர்கள் சோமகாந்தன், ஆ. சிவநேசச் செல்வன், கோகிலா மகேந்திரன், நாகேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.
க. நாகேஸ்வரன், தனது ஆசான் பற்றி எழுதிய நூலின் அணிந்துரையில் இவ்வாறு ஒரு பந்தியை பதிவுசெய்துள்ளார்.
“ மலையைக் காண்பதற்குத் தூரம் வேண்டும். சம்பவங்களை மதிப்பிடுவதற்குக் காலம் வேண்டும் “ என்று எமக்கு உபதேசம் செய்யும் ‘அறிவொளி ‘தசம் ‘அவர்களை நாம் நினைக்கும்போதெல்லாம், ஒரு விரிவான – விசாலமான – உண்மையான – நன்மையான – திடமான – நம்பிக்கை தரும் கோட்பாட்டை இரை மீட்கின்றோம் என்ற திருப்தி எமக்கு ஏற்பட்டதை இன்றும் மீள நினைக்கின்றோம். “
இந்த வரிகளை படிக்கும்போது, இம்மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் தனது 69 வயதில் மறைந்திருக்கும் நாகேஸ்வரன் பற்றிய நினைவுகளுக்கும் இது முற்றிலும் பொருந்துகின்றது.
எப்போதும் புன்னகை தவழும் முகத்திற்கு சொந்தக்காரரான இவரை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்துள்ளன.
இவர், யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் 1966 முதல் 1974 வரையில் கற்றவர். இக்கல்லூரி பல கலை, இலக்கிய ஆளுமைகளின் உருவாக்கத்திற்கு காரணமாக விளங்கியது.
தமிழ்ப்பணியிலும் கலை, இலக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டவாறு, ஆன்மீகப் பாதையிலும் பயணித்திருக்கும் நாகேஸ்வரன், நயினா தீவு ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தின் மரபுவழி அறங்காவலர் பரம்பரையில் அங்கு தர்மகர்த்தாவாக விளங்கியவர்.
சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் கலை, இலக்கிய சமய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டவராகவும், இசைப்பிரசங்கம் நிகழ்த்தும் சிறந்த பேச்சாளராகவும், விளங்கியவர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ச்சிறப்பு பட்டதாரி என்றும் அறியமுடிகிறது.
பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா, கைலாசநாதக் குருக்கள், சி. க. சிற்றம்பலம், அ. சண்முகதாஸ், எம். ஏ. நுஃமான், நா.
சுப்பிரமணிய அய்யர், எஸ். சத்தியசீலன், வி. சிவசாமி, சித்திரலேகா மௌனகுரு, சபா. ஜெயராசா முதலானோரிடம் கற்றுத் தேர்ச்சியடைந்தவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர்.
சித்தாந்த பண்டிதர் பரீட்சையிலும் சித்தியடைந்து, தேவார பன்னிசையிலும் தேர்ச்சி பெற்றவர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கைத் தலைநகரில் நீண்ட காலமாக இயங்கிவரும் அகில இலங்கை இந்து மாமன்றம், தமிழ்ச்சங்கம், விவேகானந்த சபை, ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஆகியனவற்றிலும் இணைந்திருந்தவர்.
இவரும் 1980 களில் யாழ். ஈழநாடு பத்திரிகையில் சிறிதுகாலம் துணை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சீனாவுக்கு புலமைப்பரிசில் பெற்றுச்சென்று வானொலி, தொலைக்காட்சி பயிற்சியும் பெற்றுத்திரும்பியவர்.
சாகித்திய விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றையும் பெற்றிருப்பவர். நாம் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நான்கு நாட்கள் நடத்தியபோதுதான் இவருடன் அதிகநேரம் உரையாடக்கிடைத்தது.
அச்சமயம்தான் எனது மனைவி மாலதியின் ஆசானாகவும் இவர் விளங்கியிருந்ததை அறிய முடிந்தது.
நாகேஸ்வரனின் மரணச்செய்தி அறிந்ததும் நாமிருவரும் சற்று நேரம் ஆழ்ந்த துயரத்தில் உறைந்துவிட்டோம்.
உறவாடுவதற்கு உகந்த எளிமையான பண்புகளை கொண்டிருந்த அன்பர் பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரனுக்கு தொலை தூரத்திலிருந்து சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்.
அன்னாரின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கேற்கின்றோம்.
—0—