உயிர்!… ( சிறுகதை ) …. ஏலையா க.முருகதாசன்.
நான் நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்ற நாட்களில் அதிகமான தருணங்களில் காப்புறுதி நிறுவனச் சுவரோடிருக்கின்று மின்சார அதிகரிப்பு பெட்டியின் மீது கோப்பிக் கோப்பை வைத்தபடியும் அல்லது கோப்பியைக் குடித்தபடியும் சிகரட்டை புகைத்தபடியும் ஒரு பெண் நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.
சதா மனிதன் எதையாவது எண்ணிக் கொண்டும் சிந்தித்துக் கொண்படிருப்பவன்தான்.அதற்கு நானும் விதிவிலக்கல்ல.நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது என்னை விலத்திச் செல்லும் மனிதர்கள் மீதும் கார்கள் மீதும் ஆங்காங்கே வீடுகளின் முன்னால் நடப்பட்டிருக்கும் பூச்செடிகள் மீதும் வீதியோர மரங்கள் மீதும் பார்வையும் கவனமும் சென்று அவற்றின் பெயர்கள் எதுவாக இருக்கும் என்ற நினைப்புடன் நடந்துசெல்வதும் இன்னும் பல விசயங்களை நினைப்பதுடன் நான் எழுதும் கதைகளுக்கான கருவும் உருவாவதும் உண்டு.
நடைப்பயிற்சியின் போது அவளைக் கண்டும் காணாதது போல போய்க் கொண்டிருந்த என்னை அவள், தொடர்ச்சியாக ஒவ்வொரு சில நாட்களில் நடந்து கொண்டும் சில நாட்களில் வேமாக ஓடாமல் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் என்னைக் கவனித்ததாளோ என்னவோ புன்னகைக்கத் தொடங்கினாள்.
நானும் புன்னகைத்து விட்டு கடந்து சென்றுவிடுவேன்.இந்தப் புன்னகை கலோ என்று சொல்லுமளவிற்கு வளர்ந்து குட் மோகன் என்று காலை வணக்கம் சொல்வதில் வந்து நின்றது.
சரியான குறித்த நேரத்தில் அவள் நின்ற இடத்துக்கு நான் நடந்தோ ஓடியோ வருவதும், எனக்காக அவள் காத்திருப்பது போன்று நாட்கள் கடந்தன.
காலை வணக்கம் சொல்லிவிட்டு ஒரு நிமிடமாவது அவளுடன் கதைக்கத் தொடங்கினேன்.முதலில் அவள் என்னைக் கேட்டது „நீங்கள் எந்த நாடு’ என்ற கேள்விதான்.
நான் சிறீலங்காவிலிருந்து வந்தவன் என்று சொன்னதற்கு உங்கள் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் சுற்றுலாவுக்குகூட அங்கு போனதில்லையென்றாள்.
அவள் நடுத்தர உயரத்தில் நீளமான அழகான மூக்குடன் நீளமான தலைமயிருடன் இருந்தாள்.
ஒரு நாள் எனது பெயரைக் கேட்டாள்.மகேஸ்வரன் என்று எனது பெயரைச் சொல்ல, நின்று நிதானித்து உச்சரித்தவள் நீளமான பெயர் என்று சொல்லிச் சிரித்தாள்.நான் கேட்காமலே தனது பெயர் எமிலியா என்றாள்.
அவள் தன்னுடைய பெயரைச் சொன்ன போதே அவள் கல்யாணமானவளா இல்லையா என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்ட போதும், அப்படிக் கேட்பது நாகரீகம் இல்லை என்பதற்காக அதனை நான் அறியவில்லை.
அவளாகவே நீங்கள் கல்யாணம் ஆனவரா என்று கேட்ட போது, எனக்குக் கல்யாணமாகி மூன்று பிள்ளைகள் இருப்பதாகச் சொன்னேன்.
சில நாட்களில் கோப்பி குடித்து சிகரட் புகைத்த பின்பும் எனக்காக காத்திருப்பது போல காத்திருந்து என்னைக் கண்டதும் காலை வணக்கம் சொல்லிவிட்டு மூன்று மீற்றர் தூரமே இருந்த அவள் வேலை செய்யும் பணியக வாசல்வரை என்னோடு நடந்து வந்து தொடர்ந்து நடைப்பயிற்சியை தொடர இருக்கும் எனக்கு அவ் வீடர்சேகன் என்று ஜேர்மன் மொழியில் சொல்லிவிட்டு தனது பணியகக் கதவைத் திறந்து உள்ளே போய்விடுவாள்.
ஒரு நாள் நீங்கள் சிகரட் புகைக்கிறீர்களே இது உடம்புக்கு கேடாகுமே என்று கேட்ட போது, கேடுதான் பழகிவிட்டேன் இப்பழக்கத்தை விடுவதற்கு பலமுறை முயற்சி செய்தேன்,எனக்கிருக்கும் மனநிலைதான் இந்தப் பழக்கத்திற்கு காரணம் என்றாள்.நான் இப்படிக் கேட்டது
அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நான் தலையிட்டுவிட்டேனோ என்ற ஒரு மனக் குறுகுறுப்பும்கூட எற்பட்டது.ஆனால் நான் அப்படிக் கேட்டதை அவள் பெரிசாக எடுக்கவில்லை என்பதும் தெரிந்தது.
எனது நடைப் பயிற்சியும், அவள் வேலை செய்யும் பணியக வெளிச்சுவரோடு இருக்கும் அந்த மூலையில் சந்திப்பும் ஓரிரு நிமிட உரையாடலுமாக தொடர்ந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை போல டோட்முண்ட் என்ற நகரத்திற்குப் போவதற்காக எனது நகரிலுள்ள பிரதான புகையிரத நிலையத்திற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தேன்.பிரதான புகையிரத நிலையத்தின் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக வரும் மூன்றாவது தரிப்பிடத்தில் பேருந்து நின்றதும் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனத்துடன் ஒரு பெண் நிற்பதும்,பேருந்து நின்றதும் அதில் வாகனத்துடன் அவள் ஏறுவதற்கு சிரமப்படுவதையும் கண்டேன்.
பேருந்து தரிப்பிட மேடைகள் தரையிலிருந்து உயரமாக கட்டப்பட்டிருப்பதுடன், பேருந்து நிறுத்தப்படும் போது மேடையின் சமநிலையில் பேருந்து சரிந்து கதவு திறக்கும்.பயணிகளுக்கு பேருந்தில் ஏறுவதற்கும் குழந்தைகளின் வாகனத்தை ஏற்றுவதற்கும் சுலபமாக இருக்கும்.ஆனால் நான் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து,பேருந்து மேடையை விட்டு விலகி நிற்க, அந்தப் பெண் குழந்தை வாகனத்தை ஏற்றுவதற்கு சிரமப்படுவதை பேருந்தின் கதவருகிலுள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்த நான் கவனித்ததால் எழுந்து அவளுக்கு உதவி செய்யப் போன போது அது எமிலியா எனக் கண்ட நான் „கலோ’ என்று சொல்ல,அவளும் என்னை எதிர்பார்க்கவில்லையாதலால் „க…லோ…’ என்று ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் சொல்ல, அந்தக் குழந்தை வாகனத்தின் கைப்பிடியைப் பிடித்து அதனை தூக்கிட்;டேன்.
டங்க என்று ஜேர்மன் மொழியில் சொன்னவாறு குழந்தை வாகனம் விடும் இடத்து இருக்கையில் உட்கார்ந்து புன்னகைத்தவள் „ எங்கே போகிறீர்கள் „ என்று கேட்க,இன்று
டோட்முண்ட்டில் ஒரு ஒன்றுகூடல் அதற்குப் போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே வாகனத்திற்குள் இருந்த சிறுவனைப் பார்த்தேன், இயல்பான சிறுவர்களுக்கு உரிய செயல்பாட்டில் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அந்தச் சிறுவனின் இயல்பு இருந்தது.
எமிலியா எமிலியா ….என வாயைக் கோணிக் கோணி சிறுவன் ஏதோ கேட்பது போலத் தோன்றியது.எமிலியா தனது கைப்பைக்குள்ளிருந்து ஒரு பிஸ்கட் பைக்கட்டை எடுத்து அதிலிருந்து இரண்டு பிஸ்கட்டுகளை அச்சிறுவனின் கையில் கொடுத்தாள்.
மிகவும் கஸ்டப்பட்டு வாய்க்குள் பிஸ்கட்டை அந்தச் சிறுவன் வைக்க அதற்கு உதவி செய்தால் எமிலியா.குழந்தைகளுக்கான சூப்பிப் போத்தலில் வைத்திருந்த தண்ணீரைச் சூப்பிக் குடிக்கக் கொடுத்தவள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே சூப்பிப் போத்தலை பிடித்துக் கொண்டே இருந்தாள்.
நானும் அதனைப் பார்த்துக் கொண்டு பேசாமலிருந்தேன்.ஆனால் எனது மனம் இந்தச் சிறுவன் இவளின் மகனா, ஒரு சராசரி மனித இயல்புடனும் நடத்தையுடனும் பிறக்காமல் இப்படி ஒரு குழந்தை பிறந்திருக்கிறதே என்று நினைத்த போதும் அமைதியாக உட்கார்ந்திருந்தன்.பிரதான புகையிரத பேருந்து நிலையத் தரிப்பிடத்தில் நான் இறங்கி அவளுக்கு அவ் விடர்சேகன் என்று ஜேமன் மொழியில் சொல்ல அவளும் பிஸ்பல்ட் விரைவில் சந்திப்போம் என்று சொல்ல அவளுக்கு கைலாகு கொடுத்துவிட்டு பேருந்தைவிட்டு இறங்கி புகையிரத நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
எமிலியாவுக்கு ஏன் இப்படி ஒரு குழந்தை பிறந்தது என்ற நினைப்பிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.அவள் தலையை அங்குமிங்குமாக திருப்பி என்னுடன் கதைத்த போது அவளுடைய தலைமயிர் அழகாக சிலிப்பி நிற்பதும் முகத்தில் படர்ந்த தலைமயிரை அவள் ஒதுக்கியபடி அவள்
கதைத்த அழகும் இவளுக்கா இப்படி ஒரு குழந்தை என நான் கவலைப்படத் தொடங்கினேன்.
திங்கட்கிழமை மீண்டும் அவளை எனது நடைப் பயிற்சியின் போது அவளது பணியக வெளிச்சுவர் மூலையில் சந்தித்த போது வழமையான சுகம் விசாரிப்புடன் எமது சந்திப்பு முடிந்தது. நான் அந்தச் சிறுவனின் நிலைபற்றி எதுவுமே கேட்கவில்லை.
சில கிழமைகள் போக ஒரு வெயில் நாளில் நானும் மனைவியும் பொழுதைப் போக்குவதற்காக எமது நகரிலுள்ள மரங்களும், புல்வெளிகளும் ஆங்காங்கே சிறுகுளங்களும் உள்ள பூங்காவிற்கு பூந்திலட்டுகளுடனும் வடைகளுடனம் தேத்தண்ணியுடனும் போய் வெயில் படாத ஒரு நிழலைத் தேடி வீட்டிலிருந்து கொண்டு போன விரிப்பை விரித்து அதில் உட்கார்ந்து கொண்;டு வந்த பலகாரங்களைச் சாப்பிட்டும் தேத்தண்ணி குடித்துக் கொண்டும் கதைத்துக் கொண்டும் இருந்த போது எம்மை நோக்கி ஒரு பெண் குழந்தை வாகனத்தைத் தள்ளிக் கொண்டு வருவதைக் கண்ட நான் தூரத்தில் வரும் போதே அவள் எமிலியாதான் என்பதைக் கண்டு கொண்டதனால்; „அங்கை வாறது போசனர் வீதி மூலையிலிருக்கும் இன்சூரன்ஸ் கிளையில் வேலை செய்பவள் „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் எங்களுக்கு அருகில் வந்துவிட்டாள்.
எங்களைக் கண்டதும் அவளுக்குப் பெரும் ஆச்சரியம். மகிழ்ச்சியுடன் கலோ….எப்படி இருக்கிறீர்கள், இவர் உங்களுடைய மனைவியா அழகாக இருக்கிறா „ என்று சொல்லியவாறு புற்தரையில் உட்காரப் போனவளை எனது மனைவி நாங்கள் உட்கார்ந்திருந்த விரிப்பில் உட்காரச் சொல்ல டங்க என்று நன்றி சொல்லிக் கொண்டே விரிப்பில் உட்கார்ந்தவள், „இங்கே அடிக்கடி வருவீர்களா’ என்று கேட்டவள் „ உங்கள் கணவர் உற்சாகமானவர் ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சியில் ஈடுபடுகிறாரே’ என்று சொல்ல எனது மனைவி அவர் அப்பிடித்தான் „ என்று சொன்னவள்’ இந்தாருங்கள் இதைச் சாப்பிட்டுப் பாருங்கள் „ என்று பூந்திலட்டைக் கொடுக்க,அதை வாங்கியவள் சாப்பிட்டுப்
பார்த்;து ருசியாக இருக்கிறது என்றவள் வாகனத்துக்குள் இருந்த சிறுவனுக்கும் கொடுத்தாள்.
அதற்குப் பிறகு பலவற்றைக் கதைத்தோம், பேச்சுக் கிடையில் மனைவி „ வாகனத்துக்குள் இருப்பது உங்கள் மகன்தானே’ என்று கேட்க, எதுவுமே பேசாது அமைதியாக இருந்த எமிலியா தலையைக் குனிந்து விம்மத் தொடங்கினாள்.கண்ணீரைத் துடைத்தவள்’இவன் என் மகன் அல்ல, என் தம்பி வயது பத்து ஆகிறது’ என்று சொல்லி அவள் அழுத நிலையைக் கண்ட நாங்கள் பதறிப் போய் மன்னிப்புக் கேட்க,’நான் ஒன்றுமே நினைக்கவில்லை’என்றவள் தனது தம்பியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
என்னுடைய அப்பாவும் அம்மாவும் நன்றாக குடிப்பார்கள்.சிகரட்டும் புகைப்பார்கள்.அவர்கள் கல்யாணம் செய்து அடுத்த வருசமே நான் பிறந்துவிட்டன்.
என்னை அவர்கள் தமக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று விரும்பிப் பெற்றார்கள். நல்ல சூழ்நிலையிலும் நல்ல மனநிலையிலும் மகிழ்ச்சியான நிலையிலும்; அம்மாவும் அப்பாவும் உறவு வைத்துப் பிறந்தவள்தான் நான்.
ஜேர்மனியர் தமக்கு ஒரு ஆரோக்கியமான நல்ல இயல்புடைய பிள்ளை வேண்டுமென்பதற்காக உறவு வைத்துக் கொள்வதற்குரிய மனிநிலையினையும் சூழ்நிலையினையும் திட்டமிட்டுத் தெரிவு செய்வார்கள்.
தப்பிப் பிறந்த பிள்ளை அல்லது அவசரப்பட்டதில் பிறந்த பிள்ளையென்றும் சில பிள்ளைகளைச் சொல்வார்கள்.நான் பிறந்து பதினைந்து வருடங்களுக்குப் பின் தம்பி யூலியான் பிறந்தான்.அப்பாவும் அம்மாவும் எப்பொழுதும் சண்டை பிடித்துக் கொண்டிருப்பார்கள்,குடிப்பார்கள் சிகரட்டும் பிடிப்பார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் தம்பி பிறந்தான்.
எல்லாரும்போல அவன் இயல்பாக இருந்தான்.ஒரு வருடத்திற்குப் பின் அவன் நோயுறத் தொடங்கினான்.ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.அவனால் இனி இயல்பான பிள்ளiயாக முடியாது, வயது ஏற ஏற நிலைமை
இன்னும் மோசமாகும் என்ற போது மருத்துவர்கள் கருணைக் கொலைபற்றி அப்பாவுடன் பேசிய போது அதற்கு அப்பாவும் அம்மாவும் சம்மதிச்சு அவர்கள் வீட்டிலிருந்து அதைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருந்த போது நான் திகைத்துவிட்டேன்.கோபத்துடன் அப்பா அம்மா இருந்த அறைக்குள் போய் „தம்பியைக் கொல்லப் போகிறீர்களா நான் விடமாட்டன், அவனை நான் வளர்ப்பன்’ என்று அழுதழுது அடம்பிடித்துச் சொன்னவுடன் அப்பா அம்மா என்னைச் சமாதானப்படுத்த முயற்சித்தார்கள்.நான் முடியாது முடியாது என்று வீடே அதிரும்படி சத்தம் போட்டேன்.
அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்குப் போன போது கட்டிலில் படுத்திருந்த தம்பி என்னைப் பாசத்தோடு பார்த்தான்.’எமிலியா’ என்று தட்டுத்தடுமாறிக் கூப்பிட்டான்.
என் இதயமே வெடித்தவிடும் போல இருந்தது.இவனையா இந்த உயிரையா கருணைக் கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அழுகையும் கோபமும் வர என்னையறியாமலே மருத்துவரின் அறையை நோக்கி ஓடிய நான் அவரின் அறைக் கதவைத் தட்டாமலே தள்ளித் திறந்து,என் தம்பியைக் கருணைக் கொலை செய்ய விடமாட்டன் என்று அழுகையும் கண்ணீரும் கோபமுமாக பலமாகச் சத்தம் போட்டன்.
மருத்துவர் என்னை ஆறுதல்படுத்த சமாதானப்படுத்த எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.நான் எதையுமே காது கொடுத்து கேட்கவில்லை.தம்பியைச் சாகவிடமாட்டன், அவனை நான் வளர்ப்பன், அவன் ஒரு உயிர் என்று அழுதன்.எனது அழுகையும் சத்தமும் அக்கம்பக்கம் கேட்க தாதிகளும் மருத்துவர்களும் அங்கு கூடிவிட்டனர்.
இறுதியாக மருத்துவர்கள் கருணைக் கொலை செய்வதில்லை என்று முடிவெடுத்தார்கள்.எதுவுமே செய்ய முடியாத நிலையில் யூலியானை வீட்டுக்கு கொண்டு போனோம்.வேண்டா வெறுப்பாக அப்பாவும் அம்மாவும் தம்பியைஉ வளர்த்தார்கள்.பள்ளிக்கூடம் போகும் நேரத்தைத்
தவிர மிகுதி நேரம் முழுவதும் தம்பிக்குப் பக்கத்திலேயே இருந்து பராமரிப்பேன்.
வீட்டில் வைத்துத் தம்பியை பராமரிக்க முடியாதென்று பராமரிப்பு நிலையத்தில் சேர்த்தார்கள்.நான் படித்து முடித்து வேலைக்குப் போகும் வரை தம்பி பராமரிப்பு நிலையத்திலேயே இருந்தான்.பள்ளிக்கூடம் முடிஞ்சு நேரே அவனைப் பார்க்கப் போய்விடுவேன்.எது நடந்தாலும் பரவாயில்லை அவனைச் சாகவிடக்கூடாது அவனை நான் வளர்க்க வேண்டும் என்று மனதில் சபதமெடுத்து நன்றாகப்: படித்து ஒரு வேலையை எடுத்த பின்பு அவனை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தேன்.
இதற்கிடையில் அப்பாவும் அம்மாவும் விவாகரத்துச் செய்து பிரிந்துவிட்டனர்.அவரவர் வேறு கல்யாணம் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகும் முன் அவனைப் பராமரிப்பு நிலையத்தில் விட்டிட்டு, வேலை முடிந்து போகும் போது அங்கே போய் அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போவேன்.
தம்பி பிறந்ததிலிருந்து இன்றுவரை எத்தனையோ நடந்துவிட்டன.இவன்தான் என் உலகம், இவன் எனக்கு தம்பியல்ல, என்னுடைய மகன்.என் உயிருள்ளவரை இந்த உயிரைப் பாதுகாப்பன் என்றவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.
ஒரு ஜேர்மனியப் பெண் குலுங்கிக் குலுங்கி அழுவதை முதன்முதலாக அப்பொழுதுதான் பார்த்தன்.மனைவி அவளை அணைத்து ஆறுதல்படுத்தினாள்.
பூங்காவில் அவளைச் சந்தித்ததற்குப் பின் நடைப் பயிற்சியின் போது அவளை அவளின் பணியக வெளிச்சுவர் மூலையில் சந்திக்கையில் அவள் என் மனதில் தயாகி உயர்ந்து நின்றாள்.நான் இங்கே வேலை செய்யிற இடைவேளையில் மட்டுமே சிகரட் புகைத்து வந்தேன் இப்பொழுது அதையும் விட்டுவிட்டேன் என்றாள்.நல்லது என்று சொல்லி மகிழ்ந்து தொடர்ந்து நடக்கத் தொடங்கினேன்.அவளின் அழகை அவளின் தாயுள்ளம் மறைத்து நின்றது.தாயுள்ளம் அழியாத அழகுள்ளது….
ஒரு குழந்தை பிறப்பதற்கும் வளர்வதற்கும் பின்படித்து முன்னேறவும் எது காரணம்? அம்மா அப்பா செய்த புண்ணியம்தான் காரணம் என்பார்கள். இன்னும் சிலர் அந்த குழந்தை செய்த புண்ணியம் என்பார்கள். ஆனால் வளமான வாழ்வும் வளமற்ற வாழ்வும் அமைவதற்கு சூழல்தான் காரணம் என்பதை மெத்தப்படித்த மேதாவிகள் கூட ஏற்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் என்று படித்தாலும் வாலறிவனை முழுதுமறிந்த சான்றோனாக காணாதவர்கள்.
நல்ல சூழ்நிலையிலும் நல்லமன நிலையிலும் மகிழ்ச்சியான நிலையிலும் அம்மாவும் அப்பாவும் இருந்தவேளையில் பிறந்தவள் நான் என்ற யதார்த்த நிலையை எமிலியாவின் வழியாக கூறியிருப்பதன் மூலம் தன் பெற்றோர்கள் செய்த புண்ணியத்தால் என்று சொல்வதை தவிர்த்திருக்கிறார் கதாசிரியர். அத்தோடு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் தம்பி யூலியான் பிறந்த காலத்தில் தன் பெற்றோர்கள் எப்போதும் சண்டையிட்டபடியும் குடித்தபடியும் இருப்பார்கள் என்று சொல்வதன்மூலம் தன் பெற்றோர்கள் செய்த பாவத்தால்தான் என்றும் கூறாமல் சூழலை குறிப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பு.
இதபோன்று உண்மையை உணர்த்தும் ஆக்கபூர்வமான கதைகள் எப்போதாவது வந்து முற்பிறவு இப்பிறவி மற்றும் மறுபிறவி என்பனவற்றையும் பாவம் மற்றும் புண்ணியம் என்ற கட்டுக்கதைகளையும் வேரறுக்கிறது. கழுத்தை சுற்றி மூக்கைத் தொடாமல் நன்மை செய்தால் நன்மையும் தீமை செய்தால் தீமையும் எறியும் பந்துபோல் திரும்பும் என்ற உண்மயை உணர்ந்து என்றுதான் நேரடியாக மூக்கைத் தொடுவார்களோ? வாழ்வும் தாழ்வும் நம் கையில் என்பதையும் சூழலே ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் காரணம் என்பதை உணர்த்துவதோடு இறைவன் எங்கும் இல்லை அவன் எமிலியாவைப் போன்றோரின் இதயத்தில் இருக்கிறார் என்பதைக் கூறாமல் கூறிய மாண்பு பாராட்டுதற்குரியது.
-சங்கர சுப்பிரமணியன்.