கட்டுரைகள்

கெஞ்சுகிறேன்!…. அண்டனூர் சுரா.

நான் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளி. தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறவன். இரண்டு நாட்களுக்கு முன்பு,  மாத்திரை வாங்குவதற்காக  அரசு மருத்துவமனையில், வரிசையில் நின்று மருத்துவரைச் சந்தித்தேன். வரிசையில் நிற்கையில்  எதிர்பாரா விதமாக, போன் வந்துவிட்டது. அதற்காக வருத்தம் தெரிவித்து, சுவிட்ச் ஆப் செய்துகொண்டேன். எனக்கு முன்பு இரு முதியவர்கள், வரிசையில் நின்றார்கள். அவர்கள் விலகிய பிறகு,  என் மாத்திரை குறிப்பு நோட்டையும், தனியார் இரத்த பரிசோதனை நிலையத்தில் செய்துகொண்ட  இரத்த பரிசோதனை அறிக்கையையும்  மருத்துவரிடம் நீட்டினேன். இளம் பெண் மருத்துவர் அவர்.மருத்துவ நோட்டை வாங்கியபடி, ” என்ன செய்கிறீர்கள்?”, எனக் கேட்டார். ” எனது தொழிலைச் சொன்னேன்”. எனது தொழிலைச் சொல்லி, மனம் நோகும்படியாகப் பேசினார்.என் உயர் இரத்த அழுத்தம் சட்டென பல்மடங்காக அதிகரித்தது. எனக்கு படபடப்பு வந்தது. அரசு மருத்துவமனைக்கு வந்தது தவறோ? பதிலுக்கு ஒன்றும் நான் பேசவில்லை. அவரது முகமே எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. அவரிடம் கொடுத்த  இரத்த பரிசோதனை மற்றும் மருத்துவ குறிப்பு நோட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டு  வரிசையிலிருந்து வெளியேறினேன்.நான் என்ன தவறு செய்தேன்? அத்தனை பொறுமையாக வரிசையில் நின்று, அந்த மருத்துவரைச் சந்தித்தேன். எதிர்பாரா விதமாக போன் வந்ததற்காக வருத்தமும் கூட தெரிவித்தேன். எனது உடல்நிலை குறித்து அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், அதைக் காது கொடுத்து கேட்காமல், அவ்வளவு பேருக்கும் முன்பு, அப்படியாகச் சொல்லிவிட்டாரே, அச்சொல் என்னைக் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.எனக்கு மயக்கமும், வாந்தியும் வந்தது. மனதை மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு சற்று நேரம் அங்கேயே ஓய்வு கொண்டேன். சற்று நேரத்தில் அங்கு ஓர் ஆண் மருத்துவர் வந்தார்.  அவரிடம் சென்று, பரிசோதனை அறிக்கையைக் காட்டி மாத்திரை வாங்கிக்கொண்டு, பணிக்குத் திரும்பினேன். அன்றைக்கு முழுவதும் என்னால் இயல்பாக இயங்க முடியவில்லை. அந்த இளம் மருத்துவர் கேட்ட அந்தக் கேள்வி, என் மனதைப் பெரிதும் வதைப்பதாக இருந்தது.மாலை ஏழு மணியளவில் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போது பணியிலிருந்த மருத்துவரைச் சந்தித்து, நடந்ததை விளக்கினேன். இதை, அப்பொழுதே தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் செய்திருக்கலாமே, என்றார். நான் இருந்த பதட்டத்தில் அப்பொழுது சொல்லியிருந்தால், ஏதேனும் ஒரு சொல்  அந்த மருத்துவரைக்  காயப்படுத்துவதாக இருந்திருக்கும். வரிசையில் நிற்கும் எத்தனையோ வயதான நோயாளிகளுக்கு  இடையூறாக இருந்திருக்கும். அவரது பணியில் குறுக்கீடு செய்வதாக அமைந்திருக்கும். நான் உளவியல் படித்திருக்கிறேன். உடனடி செயலாற்றலும், பதிலுக்குப் பதிலும்  வேடிக்கை பார்க்கும் பார்வையாளர் மத்தியில் சரியென தோன்றக் கூடலாம். காயம்பட்ட மனதுக்கு ஒரு காலமும் அது மருந்து ஆகாது. அது, நல்ல முறையும் அல்ல. அதனால் தான் அப்பொழுது முறையிட வில்லை. இப்பொழுது கூட இதை ஏன் நான் உங்களிடம் சொல்கிறேன் என்றால், சொல்வதன் மூலம் என் மனப்பாரம் சற்றே குறையும் என்றுதானே தவிர, இப்படியான சொற்களை இனி வேறு யாரிடமும் உபயோகிக்காதீர்கள், என்றுதானே தவிர வேறு எதற்காகவும் இல்லை,  என்றேன். நாளை காலை தலைமை மருத்துவரிடம் சொல்லுங்கள், என்றார்.  வீடு திரும்பினேன்.

 அன்றைய இரவு, என் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. மருத்துமனையின் பெயரைச்சொல்லி, அவரது பெயரையும் சொல்லி, தலைமை மருத்துவ அதிகாரி பேசுகிறேன், என்றார். உங்கள் எண்ணைக் கேட்டுப்பெற இவ்வளவு நேரமாகிவிட்டது. காலையில் மருத்துவமனை வந்தீர்களா, அங்கு என்ன நடந்தது சொல்லுங்கள், எனக் கேட்டார். எதையும் மறைக்காமல் நடந்ததைச் சொன்னேன். சற்றே மூச்சு வாங்கிய அவர்,  ” முதலில் நடந்த இந்த சம்பவத்திற்காக   மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”, என்றார்.ஒருவர் செய்யும் தவறுக்கு இன்னொருவர் மன்னிப்புக்கோருவது, எவ்வளவு வலியானது! அப்படியாக அவர் கேட்கிறார் என்றால் அவரது இதயம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். எனக்கு அந்நேரத்தில் அண்ணல் காந்தியும் அன்னை தெரசாவும் நினைவுக்கு வந்தார்கள். ” அய்யோ அம்மா, ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை. அதெல்லாம் வேண்டாம் ” என்றேன்.

” இல்ல சார், எந்தவொரு மருத்துவரின் சொல்லும், அவர் தரும் மருந்தும் நோயின் வீரியத்தைத் தணிப்பதாகவே இருக்க வேண்டும். நோயின் வீரியத்தை மேலும் கூட்டுவதாக இருந்துவிடக் கூடாது.  நான் சைக்ளாஸ்சிஸ்ட். எனக்குத் தெரியும், ஒரு சொல் ஒரு மனிதனை எந்தளவு வதைக்கும் என்று. காலையில் நடந்த ஒரு சம்பவத்தை மாலையில் வந்து சொல்கிறீர்கள் என்றால் அச்சொல் எந்தளவு உங்களைப் பாதித்திருக்கும். இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க வேண்டும், அதற்காகத்தான் இந்த  ராத்திரியில் உங்களிடம் பேசுகிறேன். நடந்த சம்பவத்திற்காக திரும்பவும் மன்னிப்பு கோருகிறேன். நிம்மதியாகத் தூங்குங்கள் ” என்றார்.என் கண்கள் கலங்கிவிட்டன. அவ்வளவு நேரம் எனக்குள் கனத்துக்கொண்டிருந்த  ஒரு சுமை சட்டென இறங்கிவிட்டிருந்தது. இரவு நன்றாக தூங்கினேன். இந்தத் தூக்கம், அந்த தலைமை மருத்துவ அதிகாரி,  எனக்குத் தந்ததாக இருந்தது.  அவர்  மீது அன்பு மேலோங்கியது. அவர் அன்பாக உபயோகித்த சொற்களுக்குப் பரிசாக எதையேனும் கொடுக்க வேண்டும், போலிருந்தது. இந்த எழுத்தாளனிடம் புத்தகம் தவிர வேறென்ன உண்டு. “ ஒரு நாள் தூக்கம் தருவித்த தலைமை மருத்துவ அதிகாரிக்கு நன்றி” என எழுதி கையெழுத்திட்டு அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தேன்.தலைமை மருத்துவர் என்னை நாற்காலியில் அமர்த்தி, நடந்த சம்பவத்திற்காக பெரிதும் வருந்தி, திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு என்னை அழைத்துக்கொண்டு, அந்த இளம் பெண் மருத்துவரிடம் சென்றார். அவருடன் கூட பணியாற்றும் மூன்று மருத்துவர்கள்  இருந்தார்கள். அதில் ஒருவர் அச்சம்பவம் நடக்கையில், கூட இருந்தவர். மற்றொருவர், மாலையில் நான் சந்தித்த மருத்துவர். அறையின் கதவைச் சாத்திக்கொண்டு, இவரைத் தெரிகிறதா? எனக்கேட்டார். அந்த இளம் மருத்துவர் தெரியவில்லை, என்றார். இவர் அரசு ஊழியர். அரசு மருத்துவமனை மீதும், அரசு மருத்துவர்கள் மீதான நல்ல அபிப்ராயத்தின் பேரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருக்கிறார். அவரது மனம் புண்படும்படியாக நடந்திருக்கிறீர்கள். மருத்துவராகிய நமது வேலை நோயின் வீரியத்தைத் தணிப்பதே தவிர அதன் வீரியத்தை அதிகப்படுத்துவது அல்ல. ஒரு நோயாளிக்கு மருத்துவர் தரும் மருந்தை விடவும் அன்பு உச்சரிக்கும் சொற்களும், அரவணைப்பும் மேலானது. அவரது மனம் புண்படும்படியாக பேசியிருக்கிறீர்கள். அவரது மனதைப் புண்படுத்து நாம் யார்? எவ்வளவு பெரிய வார்த்தை இது! இவரிடம் மட்டுமல்ல, யாரிடமும் இப்படியாக பேசாதீர்கள். எந்த நோயாளியையும் அலட்சியமாக பார்க்காதீர்கள். எந்த நோயாளியையும் மனம் புண்படும்படியாக நடக்காதீர்கள்,  என்பதாக அறிவுரை செய்தார். இதற்கு அந்த இளம் மருத்துவர் என்ன வினையாற்றப் போகிறார், என எதிர்பார்த்தேன். அவரோ, அப்படியெல்லாம் நான் பேசவே இல்லை, என்றார். நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா, எனக்கேட்டார் தலைமை மருத்துவர். நோயாளிகளை அன்பாக கையாளுங்கள். அன்பு ஒன்றே எல்லாவற்றிலும் மேலானது, என்றேன். தலைமை மருத்துவ அதிகாரி நடந்த சம்பவத்திற்காக, திரும்பவும் மன்னிப்பு கேட்டார்.அந்த இளம் மருத்துவர் கடைசி வரை அதற்காக இரங்கவோ, வருந்தவோ இல்லை. என்னிடம் அவர் வருத்தம் தெரிவிக்க அவரது உதடுகள் கூசியிருக்கலாம். காரணம், அவரை விட நான் வயதால் மூத்தவன் என்றாலும் அவர் அளவிற்கு நான் படித்தவனில்லை. ஆனால், அவருக்காக மன்னிப்பு கேட்ட, அவரது அதிகாரியிடம் குறைந்தப்பட்சம் நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஒரு சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கேட்பதும்  இன்றைய இளைய தலைமுறையிடம் எதிர்பார்ப்பது நியாயமில்லை, என நினைத்தவனாய், தலைமை மருத்துவ அதிகாரியைக் கையெடுத்து கும்பிட்டபடி, மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன்.இப்போது எனக்கு அந்த மருத்துவர் மீது கோபமோ, வருத்தமோ கடுகு அளவிற்கேனும் இல்லை. அவரும் ஒரு வகையில் பாவம்தான். அவருக்கு என்ன பிரச்சனையோ? எனக்கு முன்பு வரிசையில் நின்ற நோயாளிகளில் எத்தனை பேர் அவரை கோபப்படுத்தினார்களோ! அவருக்காக நான் இரங்கவே செய்தேன்.மருத்துவத்துறை மருத்துவ அறிவோடு நோயாளி மன உளவியலையும் சேர்த்து பாடம் புகட்டினால் நல்லது, என்று தோன்றுகிறது. ஏன் நீட் தேர்வில்கூட மனவியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாம். அல்லது நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் முன் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், எனக் குறைந்தபட்ச வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவிக்கலாம்.  நோயாளிகளை வரிசைப்படுத்த, இடைவெளி விட்டு நிறுத்த ஊழியர்களை நியமிக்கலாம். எப்படியாயினும் நோயாளிகள் மீது ஒரு மருத்துவர் கோபப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியவில்லை. ஒரு படித்த பட்டதாரிக்கே இந்த நிலை என்றால், தினம் தினம் மருத்துவமனையில் கால் கடுக்க நிற்கும் அப்பாவி, பாமர மக்களின் நிலையை இந்த இடத்தில் நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.மருத்துவத்துறைக்கு அன்பான ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளை மட்டுமே அள்ளிக்கொடுக்காமல், நோய்களை ஆற்றுப்படுத்தும் இதமான சொற்களையும் கண்டுபிடித்து வழங்குங்கள். அன்றைக்கு என் இரத்த அழுத்தத்தைத் தணித்தது, மருந்தோ மாத்திரையோ அல்ல. அந்த தலைமை மருத்துவ அதிகாரி எனக்களித்த ஆறுதலான  சொற்களே!நம் முன்னோர்கள் சொல்லி வைத்த ஓர் அனுபவ கூற்று, இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. ” நீதிக்கு இளம் வழக்கறிஞரை நாடுங்கள். மருத்துவத்திற்கு  அனுபவ மருத்துவரிடம் செல்லுங்கள் “.  எத்தகைய சத்திய வார்த்தை இது.ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் தரும் மருந்து அதை விழுங்கிய பிறகே அதன் வினையைத் தொடங்குகிறது.  அதே நேரம் அம்மருத்துவர் தரும் அன்பான ஒரு சொல், அக்கணமே அதன் வினையைத் தொடங்கிவிடுகிறது. நோயாளிகளை இளம் மருத்துவர்கள் இதயம் கொண்டு பார்க்க வேண்டும், என்பது எனது வேண்டல் அல்ல, கெஞ்சல். – அண்டனூர் சுரா

Loading

3 Comments

  1. அதிக நாட்களுக்குப்பின் நான் படித்த அருமயான கட்டுரை. திரைப்படம் என்றால் நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் என்ற வரைமுறை ஏற்படுத்தி படம் எடுப்பவர்கள் மத்தியில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல நல்ல திரைப்படம் வந்து மகிழ்வூட்டுவதைப்போல கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று கட்டம் கட்டி எழுதிவரும் எழுத்துலகில் இப்படியும் கட்டுரையை வித்தியாசமாகப் படைக்கலாம் என்று காட்டியிருப்பது புதுமுயற்சியே. பொதுவாக கட்டுரையை வரலாற்று ஆவணம் போல் பெரும்பாலானோர் எழுதிச்செல்ஙார்கள். சிலர் சமூகத்தில் பார்ப்பதைவைத்து பாலம் அமைப்பார்கள். ஆனால் கட்டுரைகளை சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியின் பின்பலத்தில் நடைபெறுவதை கதையாகப் பாராமல் கட்டுரையாகத் தந்திருப்பது வரவேற்கத் தக்கதே. எப்படி வரலாற்றையும் பொன்னியின் செல்வன் கதைபோல எழுதமுடியமோ அதேபோல் நடப்பதை கதையாக எழுதாமல் கட்டுரையாக எழுதலாம் என்று காட்டியிருக்கிறீர்கள். மாற்றம் ஒன்றுதானே மாறாமல் இருப்பது.

    எல்லாம் சாதியில் ஏற்ற தாழ்வினைக கற்பித்திருக்கும் நம்நாட்டில் பணியிலும் ஏற்ற தாழ்வினை கற்பித்திருக்கும் விந்தையே. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்ற குறளை அறியா மக்கள். மருத்துவத் தொழில் உயிர்காக்கும் உன்னதமான தொழில்தான் இல்லை என்று எவரும் சொல்லவில்லை. ஆனால் உயிர்வாழ உணவிருந்தால்தானே அந்த உயிரைச் சுமக்கும் உடலுக்கு மருத்துவம் செய்யமுடியும். அந்த மருத்துவத்தையும் கற்றுத்தர ஆசான் இல்லாவிடில் சுயம்புவாக மருத்துவர் தோன்ற முடியுமா?

    மருந்தை தயாரிக்கும் இரசாயணத்துறையின் உதவியின்றி மருத்துவரால் மருந்தை எழுதிக் கொடுக்க இயலுமா? அறுவை சிகிச்சைக்கு வேண்டிய கருவிகளை தயாரிப்பவர்கள் இல்லாவிடில் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா? இப்படியான பணிகளெல்லாம் ஆற்றங்கரையிலோ அல்லது ஆலமரத்தடியிலா நடக்கிறது? அதெல்லாம் நடைபெறத் தேவைப்படும் கட்டிடம் கட்டும் கட்டிடத் தொழிலாளர்கள் அவசியமற்றவர்களா? எல்லாத் தொழில்களுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதையறியா மாந்தர் எட்டிமரம் காய்த்துப் பயனென்ன காயாதிருந்தென்ன என்பதைப்போல் கற்றுப் பயனென்ன கல்லாதிருந்தென்ன?

    -சங்கர சுப்பிரமணியன்.

  2. An excellent piece of srticle in Tamil. Really he pen picturises his idead and feelings in a smooth manner.My appreciation to the writer Andanoor Sura. Best wishes for him to write further. Now I remain. With regards Prof S.Murugavel. 16.12.2021 Thu.

  3. மிக்க நன்றிங்க ஐயா. உங்கள் கருத்துரை என்னை ஊக்குவிக்கிறது. எல்லா துறையிலும் இதுபோன்ற பணியாளர்கள் உண்டு, என்பது வருத்தமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.