கட்டுரைகள்
தற்பெருமை அவசியமா?…. சங்கர சுப்பிரமணியன்.
தற்பெருமை என்பது விரும்பத்தகாத ஒன்று. ஏனென்றால் தற்பெருமை பேசுபவர்களை யாரும் விரும்பமாட்டார்கள். எப்போதாவது தற்பெருமை பேசுபவர்களையே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும்போது எப்போதுமே தற்பெருமை பேசுபவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இந்த தற்பெருமை பேசுவதும் ஒரு கலை. இதற்காகவே ஆய்வு செய்து அதில் பட்டம் பெற்றவர்கள் போல் பேசுவார்கள்.
இதற்கு சில சான்றுகள் சொல்கிறேன் கேளுங்கள். கவிப்பேரரசு வைரமுத்து நாடறிந்த கவிஞர். தற்பெருமைவாதி ஒருவர் ஒரு கவிதை எழுதியிருப்பார். அவர் கவிஞர் என்று நான்கு பேருக்குகூட தெரிந்திருக்காது. ஆனால் இவர் வைரமுத்துவை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் எனது கவிதைகளைப் போலவே உங்கள் கவிதைகளும் உள்ளன என்று சிறிதும் கூச்சமில்லாமல் சொல்வார். உண்மையில் அவர் கவிதை சிறப்புடையதாக இருந்தாலாவது அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவரது கவிதை கவிதை மாதிரியே இருக்காது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். அத்தோடு விடுவாரா பார்ப்பவர்களிடம் எல்லாம் வைரமுத்துவின் கவிதை எனது கவிதை போலவே இருக்கும் என்று அளந்து விடுவார். அடுத்ததாக ஒன்றைச் சொல்கிறேன். இவர் வீடு ஒரு சிறிய வீடாகவே இருக்கும். இன்னனொருவர் வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் அந்த மாளிகையை தனது வீட்டோடு கொஞ்சமும் தயக்கமின்றி அவரிடமே ஒப்பிட்டு பேசுவார்கள். எப்படி? உங்கள் வீடும் எங்கள் வீட்டைப் போலவே காற்றோட்டமாகவே இருக்கிறது என்பார்கள். அதைப்போலவே எங்கள் வீட்டைப்போலவே உங்கள் வீடும் நல்ல வெளிச்சமாக இருக்கிறது என்று தன் வீட்டையே முன்னிலைப் படுத்தி பேசிக் கொண்டிருப்பார்கள். முதலில் இந்த தற்பெருமை பேசுபவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். பிறரைவிட தாமே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்ற அடிப்படை மனப்பாங்கே இதற்கு காரணம். இந்த மனப்பாங்கு எதனால் வருகிறது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் ஒரு உண்மை பலப்படும். என்னதான் இவர்கள் தங்களை மற்றவர்களைவிட சிறந்தவர்கள் என்று எண்ணி தங்களைப் பெருமைப் படுத்திக் கொண்டாலும் இவர்கள் பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பதுதான் உண்மை. இந்த தாழ்வு மனப்பான்மையை மறைக்கவே இவர்கள் தற்பெருமையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களை வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு என்ற உண்மை தெரியாத அப்பாவிகள் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியும் இவர்களை எண்ணிவிடவும் முடியாது. பாம்பென்று அடிக்கவும் முடியாது பழுதென்று விடவும் முடியாது. மனதத்துவப்படி யாருமே தன்னைப் பாராட்டாதபோது தன்னைத் தானே பாராட்டிக் கொள்வார்கள் என்ற கருத்தோடு இணைந்து போகலாம். இவர்களை யாருமே பாராட்ட மாட்டார்கள். ஏன் இவர்களை யாருமே பாராட்ட மாட்டார்கள்? ஏனென்றால் இவர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள். இவர்கள் படித்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் படித்து என்ன பலன்? நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு கிடைக்கும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள். எறியும் பந்து திரும்பவரும் என்பதுதானே உண்மை. எந்த வேகத்தில் வருகிறோமோ அதேவேகத்தில் திரும்பும் என்ற நியூட்டனின் விதியைக் கூட அறியாதவர்கள். நம்மிடம் பெருமைப் படத்தக்க ஒன்று இருக்கலாம் அல்லது இருக்கும். ஆனால் அதை நாமே சொல்லி தம்பட்டம் அடிக்கக்கூடாத. நம் பெருமையை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும். நம்மிடமுள்ளவற்றை நாமே பெருமையாக சொல்லும்போது மற்றவர்கள் முகம் சுளிக்க வாய்ப்புண்டு. அதையே நம்மை மற்றவர்கள் பாராட்டும்போது அதில் ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது. மற்றவர்களை புகழுங்கள். நீங்கள் புகழப் படுவீர்கள். அப்புகழ்ச்சி உண்மையாகவும் உள்நோக்கமற்றதாகவும் இருக்க வேண்டும் ஏதேதோ கலப்படங்கள் வந்து கலப்படமாக மாறிவிட்ட உலகில் இப்போது எண்ணக் கலப்படமும் முளைத்துள்ளது. அடுத்ததாக புகழ்க் கலப்படம். புகழ் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. புகழ் வேண்டாம் என்று சொல்ல இங்கு எவரும் ஞானி அல்ல. வள்ளுவனே தோன்றிற் புகழொடு தோன்றுக என்றே கூறியிருக்கிறான். ஆனால் அப்புகழ் நியாயமாய் இருத்தல் வேண்டும். அதைப் பணம் கொடுத்து வாங்கக்கூடாது. மற்றவர்களை வற்புறுத்தி சிறுகுழந்தை அழுது அடம்பிடித்து இனிப்பை பெறுவதுபோல் பெறக்கூடாது. இதை தற்பெருமை பேசுபவர்கள் செய்யத் தவறமாட்டார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும்போது,“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார் ஒரு மானமில்லை ஒரு ஈனமில்லெ அவர் எப்போதும் வால்பிடிப்பார்” என்ற பாடல் வரிகள்தன் நினைவுக்கு வருகிறது. “காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே” என்பதுவும் எவ்வளவு உண்மை என்பதையும் உணர்த்தி நிற்கிறது. -சங்கர சுப்பிரமணியன்.