கட்டுரைகள்

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் ! கண்துடைப்பு மாத்திரம் பரிகாரமா…? அவதானி.

இம்மாதம் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் குரூரமாகக் கொல்லப்பட்ட பிரியந்த குமார ( வயது 48 ) தொடர்பான செய்தி இலங்கை நாடாளுமன்றிலும் ஒலித்திருப்பதுடன், ஊடகங்களிலும் பேசப்படுகிறது.

செய்தி வெளியானதும், இலங்கை அரசும், எதிரணி தரப்பும் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும், இச்சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசுக்கு உறுதிமொழி அளித்துள்ளனர்.

பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. அவர்களின் புனிதமான ஒரு நாள்தான் வெள்ளிக்கிழமை. அத்தகைய ஒரு நாளில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இலங்கையரான பிரியந்த குமார என்பவர் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்ற பொறியியலாளர். தொழில் நிமித்தம் அவரைப்போன்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாகிஸ்தான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் தத்தமது குடும்பங்களை தாயகத்தில் விட்டுவிட்டுச்சென்று, உழைத்துவருபவர்கள். அவர்கள் அனுப்பும் பணத்தை நம்பி வாழும் அக்குடும்பங்கள், குறிப்பாக பெற்றோர், மனைவி மக்கள், கணவன் பிள்ளைகள், தங்கள் குடும்பத்தின் மூல உழைப்பாளிக்கு எப்போது விடுமுறை கிடைக்கும்..? எப்போது நாடு திரும்புவார் ..? என்றே காத்திருப்பார்கள்.

குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற குடும்பத் தலைவியும் தலைவனும் கூட தாயகம்வரும் நாளுக்காக பல கனவுகளை சுமந்தவாறு காத்திருப்பர்.

இந்நிலையில், பணிக்குச்சென்றவிடத்தில் உயிரிழந்து சடலமாகவோ, உடல்பாகங்களாகவோ திரும்பநேர்ந்தால், அதன் வலியை தாங்குவது சுலபமல்ல. அந்த இழப்பின் துயரத்தை கடந்து செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

பாகிஸ்தானில், சியால்கோட் நகரில் ஒரு தொழிலகத்தில் மேலாளராக பணியாற்றிவந்திருக்கும் பிரியந்தகுமார, மதம் சார்ந்த சுவரொட்டிகளை கிழித்து அகற்றினார் என்பதற்காக அதனால் உணர்ச்சிவசப்பட்டு வெகுண்ட பலர், அவரை அடித்தும் எரித்தும் கொன்றிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அதனை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, இந்தத் தாக்குதல் கொலைச் சம்பவத்தையும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்றும் ஞானசார தேரர் முதலான கடும்போக்காளர்கள் கருத்து வெளியிடத்தொடங்கிவிட்டனர்.

இதேவேளை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, சம்பவம் பற்றி அறிந்ததும், பிரியந்த குமாரவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட அரச தரப்பு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச்சம்பவம் தொடர்பாக நூறுக்கும் மேற்பட்டோர் அங்கே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது இவ்விதமிருக்க, இலங்கை தமது பாகிஸ்தானுக்கு இதுவரையில் 35 ஆயிரம் கண்களை தானம் செய்திருக்கிறது. ஆனால், நாம்தான் பார்வையை இழந்துவிட்டோம் என்று அந்த நாட்டின் விசேட கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் நியாஜ் புரோகி என்பவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தச்செய்திகள் யாவும் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கும் சொல்லப்படும் தேறுதல் வார்த்தைகள் மாத்திரம்தான்.

இதனால், பிரியந்த குமார மீண்டும் எழுந்து வந்துவிடமாட்டார் !

சில வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் சவூதி அரேபியாவில் அங்குள்ள சட்டத்தின் பிரகாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கிழக்கிலங்கை யுவதி ரிஸானா நஃபீக் என்பவரது சடலம் நாடு திரும்பிய வேளையிலும் அரசியல்வாதிகள் பலர் அவரின் வீட்டுக்குச்சென்று தேறுதல்கூறினர்.

இத்தகைய கண்துடைப்புச் சம்பவங்கள்தான் தற்போது பிரியந்த குமாரவின் விடயத்திலும் நடக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பணியாற்றும் இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்துவிடல்வேண்டும் என்ற குரலும் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.

தன்னால் முடிந்தவரையில் போராடி பிரியந்த குமாரவை காப்பாற்றுவதற்கு முயற்சித்த மலிக் அதான் என்ற மனிதாபிமானிக்கு பாகிஸ்தானின் உயர் விருது வழங்கப்படவிருப்பதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இத்தகைய மனிதாபிமானிகள் உலகில் சிறுபான்மையினரே. 1983 இல் இலங்கையில் கலவரம் நடந்தபோது, பல பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மனிதாபிமானிகள் தமிழர்களை காப்பாற்றியுள்ளனர்.

அடிப்படை மதவாதம், இனவாதம் என்பன இறுதியில் கொலையுணர்ச்சிக்கே தள்ளிவிடும் என்பதற்கு சியால்கோட் சம்பவம் மற்றும் ஒரு உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ளமையால், அண்டை நாடுகளிலும் இஸ்லாமிய அடிப்படை வாதம் பயங்கரவாதமாக மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறத்தொடங்கிவிட்டனர்.

அதே சமயம் சியல்கோட் சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர், பர்வேஸ் கட்டாக் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை தருகிறது.

பிரியந்த குமார தெய்வநிந்தனை செய்தமையால், இஸ்லாத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் அவ்வாறு நடந்துகொண்டனர் என்றும், கருத்துச்சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருப்பதாகவும், நடந்துள்ள சம்பவம் பொதுவானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் அங்கம் வகிக்கும் அரசின் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் நடந்த சம்பவத்தை கண்டிக்கின்றர். இலங்கையிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்தப்பின்னணிகளை பார்க்கும்போது, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கடும்போக்குள்ள இஸ்லாமிய அடிப்படை வாதியா..? என்ற சந்தேகம் எழுகின்றது.

அவ்வாறாயின் பாகிஸ்தானுக்கு பணி நிமித்தம் சென்றிருப்பவர்கள், செல்லவிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே அத்தகைய நிலைப்பாட்டுடன் இருந்தால், பாகிஸ்தானின் அயலுறவுக்கொள்கை எவ்வாறு அமையும் என்ற சந்தேகங்கள் எழும் !

எனினும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்ற பிரதமர் இம்ரான்கானின் உறுதிமொழி காப்பாற்றப்படுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தற்போது, பிரியந்த குமாரவின் விவகாரம் ஊடகங்களில் பெரிதாகப்பேசப்பட்டாலும், இதனைவிட வேறு ஒரு பிரச்சினை பூதாகரமாகிவிட்டால், இதனை மக்கள் மறந்துவிட்டு புதிய பிரச்சினையை பேசுபொருளாக்குவார்கள்.

இதற்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் வேலையாளாக பணியாற்றிய மலையக யுவதியின் மரணம் தொடர்பான செய்தி மக்கள் மத்தியில் தற்போது அடங்கிப்போயிருப்பது போன்று பிரியந்த குமாரவின் கொலைச்செய்தியும் அடங்கிவிடலாம்.

அரசு இதுபோன்ற சம்பவங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடக்கும்போது கண்துடைப்பு அறிக்கைகளை மாத்திரம் வெளியிடாமல் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.