கட்டுரைகள்

காலமும் கணங்களும்…. ஓவியர் ( அமரர் ) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை…. வாழ்வும் பணிகளும்…. முருகபூபதி.

காலமும் கணங்களும் :

ஓவியர் ( அமரர் ) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை – வாழ்வும் பணிகளும்

காணொளியின் பிரதியாக்கம்

முருகபூபதி.

‘தங்கத்தாத்தா’ என அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவரைப்பற்றி அறிந்திருக்கிறோம். அவரை சிறுவயதில் பாலபோதினி பாடப்புத்தகத்திலும் பார்த்திருக்கிறோம். குறிப்பிட்ட படத்தை தமது புகைப்படக்கருவியினால் எடுத்து இன்றளவும் நாம் தெரிந்துகொள்ள வகைசெய்த கலைஞர் ஓவியர் கே.ரி. செல்வத்துரை அய்யாவைப்பற்றி நம்மில் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறோம்.

செல்வத்துரை ஐயா 1915 ஆம் ஆண்டில் வட இலங்கையில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காண்பித்தார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்றவேளையிலும் அவரிடமிருந்த உள்ளார்ந்த ஓவியம் வரையும் ஆற்றல் குறைந்துவிடவில்லை.

செல்வத்துரை அவர்கள், கல்வி கற்றபின்னர், படப்பிடிப்பு கலைஞராகவும் மாறினார்.

அக்காலத்தில் ஒளிப்படக்கருவி எனச்சொல்லப்படும் கெமராவினால் எடுக்கப்படும் படங்கள் கறுப்பு – வெள்ளையாக இருக்கும் என்பதை அறிவோம். ஓவியர் அய்யா, அத்தகைய கறுப்பு – வெள்ளைப்படங்களை எடுத்தபின்னர், தூரிகையினால் வர்ணம் தீட்டி அவற்றை வண்ணப்படமாக்கி, அந்தத் துறையிலும் மிளிர்ந்தவர்.

இலங்கைத் தலைநகரத்தில் அவர், PLATE என்ற ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவேளையில், அங்கு எடுக்கப்பட்ட கறுப்பு – வெள்ளை படங்களை வண்ணக்கலருக்கு மாற்றி புகழ்பெற்றவர்.

குறிப்பாக அக்காலப்பகுதியில் கொழும்பில் திருமணப்படங்கள் இவரது கைத்திறனால் வண்ணப்படமாகியிருக்கின்றன. இந்தியாவுக்கும் சென்று, சென்னை, பெங்களுர் முதலான

மாநகரங்களில் ஒளிப்படக்கலை தொடர்பாக மேலதிக பயிற்சியும் பெற்றவர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை யோகர் சுவாமிகளின் தீவிர பக்தரான செல்வத்துரை அய்யா, அவரையும் தனது கெமராவினால் படம் எடுத்தவர். குறிப்பிட்ட கறுப்பு – வெள்ளைப்படத்தையும் தூரிகையினால் வண்ணப்படமாக்கினார்.

அந்தப்படத்தை யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரும் பின்னாளில் தேசிய கடதாசி ஆலைக்கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் விளங்கிய ( அமரர் ) கே. சி. தங்கராசா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

ஈழநாடு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1959 ஆம் ஆண்டு வெளியானதும், அதன் முதல் இதழை யோகர்சுவாமியிடம் காண்பித்து ஆசிபெற்றார்கள்.

1981 ஆம் ஆண்டு யாழ். ஈழநாடு தாக்குதலுக்குள்ளானபோது, குறிப்பிட்ட யோகர் சுவாமியின் படத்தை கே. சி. தங்கராசா அவர்கள் எடுத்துச்சென்று தமது வீட்டின் வரவேற்பு அறையில் காட்சிப்படுத்தினார்.

செல்வத்துரை அய்யா, கொழும்பில் கலாலய என்ற இசை – நாட்டிய நிறுவனத்துடனும் நெருக்கமான உறவைப்பேணியவர். கலாலயவினால் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் மேடை அரங்க நிர்மணத்தை நேர்த்தியாகவும் கலையழகுடனும் அமைத்தார்.

அவுஸ்திரேலியா மெல்பனுக்கு அவர் வருகைதந்தபின்னர், அவர்பற்றிய செய்திகளை அறிந்த பின்னணியில், ஓவியக்கலை ஆர்வம் தொடர்பாக அவருடன் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் உரையாடியபோது, “ சின்ன வயதில் எல்லோருமே ஓவியர்கள்தான்” என்றார்.

“எப்படி?” எனக்கேட்டோம்.

“ கையில் பென்ஸில் கிடைத்தால் எதில் வேண்டுமானாலும் கிறுக்கும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம். பெரும்பாலும் குழந்தைகள் சுவரில் எழுதி பெற்றோரிடம் ஏச்சும் பேச்சும் சில சமயங்களில் அடியும் வாங்கியிருப்பார்கள். அவ்வாறு எழுதும் குழந்தைகளிடமிருந்து பென்ஸிலையோ பேனையையோ பறித்தெடுக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு வெள்ளைக்காகிதங்களும் கலர் பென்ஸில்களும் வாங்கிக்கொடுத்து அவர்களின் பால்ய கால

ஆர்வத்தை வளர்ப்பார்கள். அவ்வாறு என்னை நானே வளர்த்துக்கொண்டேன். ” என்றார். மெல்பனுக்கு அவர் வந்தபின்னர் அவரது பிள்ளைகளின் வீடுகளில் அவரது ஓவியங்களை காண முடிந்தது.

அவரிடமிருந்து பல தகவல்களைப்பெற்றுக்கொண்டோம்.

1946 ஆம் ஆண்டில் அகில இந்திய ரீதியில் நடைபெற்ற புடவை டிசைன் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு சுமார் ஐந்தாயிரத்து எழுநூறு டிசைன்கள் வந்திருக்கின்றன. பின்னர் முதல் கட்டத் தேர்வுக்குரியதாக இரண்டாயிரத்து ஐநூறு டிசைன்கள் தெரிவாகியிருக்கின்றன. இதில் ஓவியர் அய்யாவின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

1947 ஆம் ஆண்டில் லண்டனில் விக்ரோரியா அல்பர்ட் மியூசியத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில், இந்தியப்பிரிவிலும் அவரது ஓவியங்கள் வைக்கப்பட்டன.

ஓவியர் ஐயா இந்த கண்காட்சிக்காக நடத்தப்பட்ட போட்டிக்கும் அவர் நான்கு ஓவியங்களை அனுப்பியிருக்கிறார். அவற்றுள் மூன்றுக்கு பரிசில்கள் பெற்றுள்ளார்.

1956 இல் கொழும்பு கலாபவனத்தில் நடந்த ஓவியக்கண்காட்சியிலும் அவருடைய ஓவியத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 1954 இல் இலங்கை சிறுகைத்தொழில் திணைக்களத்தில் பணியாற்றத்தொடங்கினார். அவரது ஓவிய ஆற்றலை தெரிந்துகொண்ட அப்போதைய அரசு, மகாதேசாதிபதியின் வாசஸ்தலத்தின் அலங்காரத் திரைகளுக்கான ஓவியங்களை வரைவதற்கு அழைத்தது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவி ஏற்கமுன்னர், குறிப்பிட்ட பதவியேற்பு விழாவில் உள்ளுர் கைத்தறி சேலையை அணிவதற்கு விரும்பியிருக்கிறார். அதற்கான டிசைனை வரைந்தவரும் ஓவியர் செல்வத்துரை ஐயாதான்.

1965 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் அனைத்துலக விஞ்ஞான – கைத்தொழில் கண்காட்சி பல வாரங்கள் நடைபெற்றவேளையில், அரசின் பணிப்புரைக்கு அமைய, இலங்கையின் பல பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருந்த தொழிற்சாலைகளை படம் எடுத்து, ஒரு அரங்கில் அனைத்தையும் காட்சிப்படுத்தி பாராட்டுப்பெற்றார்.

உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஊக்கம் தருவதற்காகவும் கைவினைப்பொருட்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காகவும் அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட லக்சல என்ற நிறுவனத்தில் பிரதி பணிப்பாளராகவும் ஓவியர் அய்யா பணியாற்றினார்.

அக்காலப்பகுதியில் இலங்கையில் பல பிரதேசங்களில் முன்னர் வீடுகளில் பாவனையிலிருந்த புராதன பொருட்களையும் லக்சல காட்சி அறைகளில் பார்வைக்கு வைப்பதற்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டார்.

இவரது ஆற்றல்களை இனம்கண்டுகொண்ட அன்றைய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பினையும் பெற்றிருந்த ஓவியர் அய்யா பற்றிய ஒரு தகவலையும் இச்சந்தர்ப்பத்தில் சுவாரசியம் கருதி பதிவுசெய்கின்றோம்.

அக்காலப்பகுதியில் நீர்பாசன மின் சக்தி, நெடுஞ்சாலைகள் அமைச்சராகவிருந்தவரும் மதவாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சேனநாயக்கா, தமிழ்ப்பெண்ணான பத்திரிகையாளர் ரஞ்சியை மணம் முடித்தபோது அவர்களின் பதிவுத் திருமணத்திற்கு சாட்சியாக கையொப்பம் இட்டவரும் ஓவியர் அய்யா அவர்கள்தான்.

இலங்கையிலிருந்து முதலில் இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்து பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். தாயக நினைவுகளோடு வாழும் எந்தவொரு படைப்பாளியும் கலைஞரும் தாயகத்தின் ஆத்மாவை தமது படைப்புகளில் சித்திரிக்கத் தவறமாட்டார்.

செல்வத்துரை ஐயாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கிச்செல்லும் எந்தவொரு வாகனமும் நின்று தரித்துச்செல்லும் இடம் முறிகண்டி. அங்குள்ள குடிசைக்கோயிலையும் ஓவியமாக வரைந்துள்ளார். 1992 இல் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் நடத்திய முத்தமிழ் விழா ஓவியக்கண்காட்சியில் குறிப்பிட்ட முறிகண்டி குடிசைக்கோயில் ஓவியமும் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் நடந்த முதலாவது முத்தமிழ் விழா அதுவாகும். வடமாகாண ஆத்மாவை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை அவர் வரைந்துள்ளார்.

ஓவியக்கலையில் மாத்திரமன்றி மேடை அரங்க நிர்மாணம் ஒளிப்படக்கலை ஆகியனவற்றிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவர். இலங்கையிலும் இங்கிலாந்திலும் மெல்பனிலும் சில அரங்கேற்றங்களுக்கு மேடை அரங்குகளை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். அத்துடன் மெல்பனில் சில இளைஞர்கள் 1989 – 1990 களில் மேடையேற்றிய கலையும்கண்ணீரும், பண்டார

வன்னியன் ஆகிய வரலாற்று நாடகங்களுக்கும் அரங்கங்களை நிர்மாணித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அகதிகள் கழகம் சர்வதேச ரீதியாக அகதிகள் வாரத்தை முன்னிட்டு நடத்திய ஓவியப்போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து நிர்க்கதியாகும் ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்காக மெல்பனில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்புபு தொடங்கப்பட்ட போது அதற்கான இலச்சினை ( Logo ) தேவைப்பட்டது. குறிப்பிட்ட தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் நோக்கத்தை கேட்டறிந்தபின்னர், கங்காரு தனது கரத்தில் ஒரு புத்தகத்தை ஏந்திக்கொண்டு நிற்பது போன்றதொரு அர்த்தமும் அழகும் பொருந்திய இலச்சினையை அவர் வரைந்து வழங்கினார்.

இலங்கை வடபுலத்தில் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரை நேரில் சந்தித்த ஓவியர் ஐயா, அவரை தனது கெமராவினால் படமெடுத்து தினகரன் பத்திரிகைக்குக்கொடுத்துள்ளார். அந்தப்படமே பின்னாளில் பாலபோதினி உட்பட பல தமிழ்ப்பாட நூல்களிலும் இடம்பெற்றது..

மெல்பனில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் நினைவரங்கில் எழுத்தாளர் முருகபூபதியின் நூல்கள் வெளியிடப்பட்டபோது, சுந்தாவின் குரலும் ஒலிபரப்பப்பட்டது. கொழும்பில் நடந்த மீனாட்சி கல்யாணம் என்ற நாட்டிய நாடகம் மேடையேறியபோது சுந்தா தனது மதுரக்குரலினால் அந்த நிகழ்வை சித்திரித்திருக்கிறார். குறிப்பிட்ட குரலையே அன்றைய நூல் வெளியீட்டின்போது ஒலிபரப்பினார்கள்.

அதனை சபையில் கேட்டுக்கொண்டிருந்த இலக்கிய ஆர்வலர் திருமதி பாலம்லக்ஷ்மணன் அவர்களும் எழுத்தாளரும் ஓவியரின் புதல்வியுமான திருமதி அருண். விஜயராணியும் ஒரு புதிய தகவலைத்தந்தனர்.

அந்த புதிய தகவல் இதுதான்: குறிப்பிட்ட அரங்கேற்றத்தின் ஒலிசித்திரத்தை எழுதியவர் பாலம் லக்ஷ்மணன். அரங்கங்களை அழகாக வடிவமைத்தவர் ஓவியர் ஐயா செல்வத்துரை.

அவருக்கிருந்த மனக்குறை பற்றியும் இங்கு பதிவுசெய்யவேண்டும். படைப்பிலக்கியம், இசை, நடனம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம் முதலான கலைத்துறைகளிலும்

வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி முதலான ஊடகத்துறைகளிலும் தீவிர கவனம் செலுத்தும் எம்மவர்கள் ‘ஓவியம்’ மீது குறைந்த பட்ச ரசனையைக்கூட வளர்த்துக்கொள்ளவில்லை என்ற நியாயமான கோபம் அவருக்கிருந்தது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசைக்கும் நடனத்துக்கும் மொழிக்கும் பள்ளிகள் இருப்பதுபோன்று ஒவியக்கலைக்கு தமிழ்ப்பள்ளிகள் தோன்றவில்லை. ஓவியக்கலையை வளர்க்க தமிழ் சமூகம் தவறிவிட்டது என்ற மனக்குறையுடனேயே அவர் 1998 இல் மறைந்தார்.

ஒருவரின் சிறப்பியல்புகள் அவர் வாழும் காலத்தில் கொண்டாடப்படவேண்டியது. துர்ப்பாக்கியவசமாக சிறப்பான மனிதர்களின் மறைவுக்குப்பின்னர் பேசப்படும் புகழாரங்கள் எம்மை நாம் தேற்றிக்கொள்ளத்தான் உதவும் என்பதனால் பலரை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடி அவர்களையும் மகிழ்விக்கவேண்டும்.

அந்தவகையில் 1997 இல் எழுத்தாளர் முருகபூபதியின் இலக்கிய பிரவேச வெள்ளிவிழா காலத்தில் நடந்த நூல் வெளியீடரங்கில் நான்கு கலை – இலக்கிய ஆளுமைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் செல்வத்துரை ஐயா, ஏனையோர் எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன்.

குறிப்பிட்ட நிகழ்வு மெல்பன் Y. W . C. A மண்டபத்தில் 15-11-1997 ஆம் திகதி நடந்தது. அதற்கான அழைப்பிதழ்களை அச்சிட்டு அனுப்பிக்கொண்டிருந்தபோது அவருக்கு கடுமையான சுகவீனம் வந்தது. அவரது குடும்பத்தினர், “ ஐயா நிகழ்ச்சிக்கு வருவது நிச்சயமில்லை” என்று கவலை தெரிவித்தார்கள். அதாவது விழா நடைபெறும் வரையில் அவர் தாக்குப்பிடித்திருப்பாரா..? என்ற ஏக்கத்தை பகிர்ந்துகொண்டார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் அவர், “ ஆள் பலம், அரசியல் பலம், பண பலம் யாவும் தற்காலிகமானதுதான். ஆன்ம பலம்தான் நிரந்தரமானது. அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும். “ என்றார்.

அந்த விழா திட்டமிட்டவாறு நடந்தது.

அவர் சொன்னபடி வந்தார். தனது ஏற்புரையின்போது கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார்.

அந்தப் பாராட்டு நிகழ்வு மெல்பனில் முன்மாதிரியாக அமைந்தது. அதன்பின்பு பலருக்கு பொது நிகழ்வுகளில் பொன்னாடைகளும் பூமாலைகளும் நெருக்கமாயின.

அன்றைய நிகழ்வுக்கு எழுத்தாளர் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜா தலைமை தாங்கி ஓவியர் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தினார். 17-04-1998 இல் அதாவது குறிப்பிட்ட பாராட்டு நிகழ்வு நடந்து, சுமார் ஆறுமாதங்களின் பின்னர் ஐயா மறைந்தார்.

2003 இல் மெல்பனில் நடந்த மூன்றாவது எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் பதிவான முருகபூபதி எழுதிய ‘ எம்மவர் ’ நூல் ஓவியர் ஐயாவுக்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2004 இல் கன்பராவில் நடந்த நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாவில் ஓவியர் செல்வத்துரை ஐயாவின் நினைவாக அவரது குடும்பத்தினரின் ஆதரவு அனுசரணையுடன் இளம்தலைமுறையினர் மத்தியில் ஓவியப்போட்டி நடத்தி பரிசில்கள் வழங்கப்பட்டன.

ஓவியர் அய்யாவின் குடும்பத்தினர் கலை ஆர்வம் மிக்கவர்கள். கலைக்குடும்பம் என்றே அழைக்கலாம். அத்துடன், எழுத்து, கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள்.

ஓவியரின் பேத்திமார் ( திருமதி ) வானதி சூரியகுமார்

( திருமதி ) வாசுகி பிரபாகரன், ( திருமதி ) விசாலினி ஜனகன் ஆகியோரும் பேரன் திரு. அர்ஜுனன் புவீந்திரனும் நடன அரங்கேற்றம், மிருதங்க அரங்கேற்றம் கண்டவர்கள். செல்வி வைஷ்ணவி புவீந்திரன், திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜா செல்வி விதுஷினி விக்னேஸ்வரன் ஆகியோரும் நடனக்கலை மற்றும் இசைக்கலை பயின்றவர்கள்.

லண்டனில் வதியும் கொள்ளுப்பேரன் செல்வன் அரன் சூரியகுமார் புல்லாங்குழல் இசைக்கும் ஆற்றல் மிக்கவர்.

ஓவியர் அய்யாவின் புதல்வி திருமதி அருண். விஜயராணியும் புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. ஓவியரின் மூத்த புதல்வன் சட்டத்தரணி ரவீந்திரன் அரசியல் ஆய்வு எழுத்தாளராவார்.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் முனியப்பதாசன் ஓவியர் அய்யாவின் தங்கை மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓவியர் அய்யாவின் நினைவுகள் போற்றத்தக்கவை.

காணொளியில் குரல் பதிவேற்றிய திருமதி சரண்யா மனேசங்கர், அவுஸ்திரேலியாவிற்கு புது வரவு.

இலங்கையில் தனது வர்த்தகத் துறை பல்கலைக்கழக கல்வியை முடித்தபின்னர் மெல்பனுக்கு வருகைதந்தார்.

சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் மிக்கவர்

மெல்பனில் வானவில் மேடை நிகழ்ச்சி , வானமுதம் , தமிழ்குரல், மற்றும் அவுஸ்திரேலியா தமிழ் தொலைக்காட்சி முதலான ஊடகங்களில் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்

அத்துடன் கவிதைகளிலும் வாசிப்பிலும் ஆர்வம் மிக்கவர்.

தற்போது விக்ரோரியா சிறுவர் பாதுகாப்பு துறையில் நிர்வாகக் குழு மேலாளராக முழு நேரம் பணியாற்றினாலும் வானொலி அறிவிப்பு , செய்தி வாசிப்பு, மற்றும் மேலதிக தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கிக்கொண்டிருக்கின்றார். விற்றில் சீ கவுன்சிலிலும் பெண்களின் வளர்ச்சி, தொழில் அனுபவம் , மற்றும் நிதி கல்வி பயிற்சி பட்டறைகளையும் செயற்படுத்தியுள்ளார்.

அத்துடன் தனது இரண்டு குழந்தைளையும் பராமரித்தவாறு, சர்வதேச வளர்ச்சி தொடர்பான முதுநிலை பட்டப்படிப்பினையும் தொடருகின்றார்.

இக்காணொளியை தயாரித்து வழங்கும் கன்பரா தமிழ்க்களஞ்சியம் அமைப்பின் நிருவாகி தாமேதரம்பிள்ளை பிரமேந்திரன், இலங்கையில் திருகோணமலை நகரில் பிறந்தவர்.

நிறுவன முகாமைத்துவத்தில் முதுமானிப் பட்டம் பெற்ற இவர், ஐக்கிய நாடுகள் நிறுவனங்களில் திட்ட முகாமையாளராகப் பணியாற்றி தற்போது திறன் சார்ந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவின் தலைநகரில் வசித்து வருகிறார்.

சிறு வயது முதல் தமிழிலும் தான் சார்ந்த சமூகத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் மரபுக் கவிதைகளில் ஆயிரம் விருத்தங்கள் எழுதும் முயற்சியில் உள்ளார்.

தமிழ் மற்றும் தமிழர் மரபு சார்ந்த விடயங்களை புதுக் கவிதை மற்றும் மரபுக் கவிதை வடிவில் முகநூலில் எழுதி வருகிறார்.

அத்துடன் தமிழர் மரபுகளையும் தமிழ்ப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் வலையொளித் தளத்தில் ஏற்றும் நோக்கில்

தமிழ்க் களஞ்சியம் எனும் வலையொளித் தளமொன்றை நடத்தி வருகிறார்.

———————————————————————————————————————-

நன்றி

இந்த ஆவணப் பதிவுக்குத்தேவைப்பட்ட ஓவியர் ஐயாவின் ஒளிப்படத்தையும் ஓவியங்களையும் தந்து உதவியவர்கள் ஓவியரின் பேரன் திரு.அமிர்தன் அரசரட்ணம், ஆரூரன் ரவீந்திரன், திரு.அர்ஜுனன் புவீந்திரன்

நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் ஒளிப்படத்தை தந்துதவியவர் சிட்னியில் வதியும் புலவரின் பேரன் டொக்டர் இளமுருகனார் பாரதி.

இவர்களுக்கும் இக்காணொளியை பதிவேற்றும் கன்பரா தமோ பிரம்மேந்திரனுக்கும் குரல் வழங்கிய திருமதி சரண்யா மனோசங்கருக்கும் எமது மனமார்ந்த நன்றி.

முருகபூபதி

———————————————————————————————————————

Loading

One Comment

  1. சிறப்பான பதிவுகள்.உங்களுக்கே உரித்தான அழகு நடையில் வாசிக்க சுவாரசியமாகவுமிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.