எழுபது ஆண்டுகாலம்: ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அடையாளம்!…. அவதானி.
கழுதை கெட்டால் குட்டிச்சுவர் ! கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போன்று ! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான் ! குதிரையில்லா நாட்டில் கழுதை அரசாளும் ! அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன? காரியமாகும் வரையில் கழுதையானாலும் அதன் காலைப்பிடி !
இத்தனை முதுமொழிகள் கழுதை பற்றி இருக்கின்றன. இதற்கு மேலும் இருக்கலாம்.
ஆனால், தன்னைப்பற்றி இவ்வளவு முதுமொழிகள் இருப்பது கழுதைக்குத் தெரியாது.
நாம், ஆறறிவு படைத்த மாந்தர்கள். உயர் திணை வகுப்பார். ஆனால், அஃறிணை உயிரினங்கள் குறித்து ஏராளமான முதுமொழிகளை உருவாக்கியிருக்கின்றோம்.
சமகாலத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சேடம் இழுத்துக்கொண்டிருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைப்பற்றி யோசித்தபோதுதான் எமக்கு கழுதை நினைவுக்கு வந்தது.
இலங்கையிலிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் துரோகத்தினாலும் காட்டிக்கொடுப்பினாலும் காலை வாரிவிட்டதனாலும், அடுத்துக்கெடுத்தமையினாலும் வளர்ந்தவைதான்.
அது சிங்களக் கட்சிகளாயிருந்தாலென்ன, தமிழ்க்கட்சிகட்சிகளாயிருந்தாலென்ன, முஸ்லிம் கட்சிகளாயிருந்தாலென்ன அனைத்தும் மேற்குறித்த இலட்சணங்களுடன்தான் வாழ்ந்தன. அல்லது தேய்ந்தன.
பெரும்பாலும் தலைமைப் பதவிப்போட்டிகளினாலும் கட்சிகள் பிளவுபட்டு புது புதுக்கட்சிகள் தோற்றம் பெற்றன.
அண்மைக்காலத்தில் ஆப்பிழுத்த பிராணியைப்போன்று மாறியிருக்கிறது இலங்கையின் மூத்த அரசியல் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.
இக்கட்சியின் இன்றைய நிலைக்கு மைத்திரி மாத்திரம் காரணமல்ல. அவருக்கு முன்னர் இக்கட்சியின் தலைமைப்பீடத்திலிருந்தவர்களும்தான் காரணம்.
இங்கிலாந்தில், சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா என்ற நீண்ட பெயருடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று ஐரோப்பிய நாகரீகத்துடன் உடை அணிந்து திரும்பியவர் முதலில் ஐக்கிய தேசியக்கட்சி என்ற பச்சை நிறக்கட்சியில் இணைந்து அதன் தேர்தல் சின்னம் யானையை ஏற்றுக்கொண்டவர்தான்.
அக்கட்சியின் தலைவரும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமருமான டீ. எஸ். சேனநாயக்கா, 1952 ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் குதிரையில் சவாரி செய்தபோது தவறிவிழுந்து இறந்ததையடுத்து, தனக்கே பிரதமர் பதவி தரப்படல் வேண்டும் என்றார்.
ஆனால், அவ்விடத்திற்கு முந்திக்கொண்டு வந்தவர் சேர். ஜோன் கொத்தலாவல.
அதனால் வெகுண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற நீல நிறக்கட்சியையும் அபயம் அளிக்கும் அடையாளமாகத் திகழும் கை சின்னத்துடனும் பௌத்த சிங்கள தேசிய கலாசார உடையுடனும் மக்கள் முன்னால் தோன்றி, ஐம்பெரும் சக்திகளை திரட்டிக்கொண்டு பண்டரநாயக்கா பிரதமரானார்.
அந்த இயக்கத்திற்கு அவர் சூட்டியபெயர் பஞ்சமா பலவேகய. அதில் தொழிலாளர், விவசாயிகள், ஆசிரியர்கள், வைத்தியர்கள், பெளத்த பிக்குகள் உள்வாங்கப்பட்டனர்.
விகாரைகளில் தங்கியிருக்கவேண்டிய, பொதுமக்கள் தரும் தானத்தை உட்கொண்டு புலனடக்கி வாழ்ந்து தர்ம உபதேசம் செய்துகொண்டிருக்கவேண்டிய பௌத்த பிக்குகளை அரசியலுக்கு இழுத்து வந்தவரும் இந்த பண்டாரநாயக்காதான்.
பௌத்த சிங்கள எழுச்சியுடன் தனது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கட்டி எழுப்பிய அவர், இறுதியில் தான் அரசியலில் வளர்த்துவிட்ட பெளத்த பிக்குகளின் பிரதிநிதி ஒருவராலேயே 1959 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.
வளர்த்த கடா இறுதியில் மார்பில் பாய்ந்தது. இந்தக்காட்சிகள் ஈழத்தமிழர் அரசியலிலும் இடம்பெற்றுள்ளன.
( உதாரணம் : அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், தருமலிங்கம், ஆலாலசுந்தரம் )
கணவர் பண்டாரநாயக்காவின் மரணத்தையடுத்து அதுவரையில் குடும்பப்பெண்ணாக வலம் வந்த அவரது துணைவியார் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கைப்பிரதமராக மட்டுமல்ல, உலகின் முதல் பெண் பிரதமர் என்ற கீர்த்தியையும் பெற்றார்.
தந்தையார் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட வேளையில் 14 வயதிலிருந்த சந்திரிக்காவும், 10 வயதிலிருந்த அநுராவும் காலப்போக்கில் அரசியலுக்குள் பிரவேசித்து, தந்தை தொடக்கிய கட்சியையும் வளர்க்க பாடுபட்டனர்.
இவ்வேளையில் சினிமா கலைஞரும் சமூக ஆர்வலருமான விஜயகுமாரணதுங்கா இக்கட்சியினுள் பிரவேசித்து, தனது முகக்கவர்ச்சியினாலும் சினிமா பிரபலத்தினாலும் முன்னேறி வந்ததை அநுராவால் சகிக்கமுடியாமல் உட்கட்சி மோதல்கள் படிப்படியாக அதிகரித்தது.
விஜயகுமராணதுங்க சில இடைத்தேர்தல்களில் அக்கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்டபோதும் அநுரா அவரை ஆதரித்து கூட்டங்களில் பேசுவதற்கு முன்வரவில்லை.
1977 இல் ஜேஆர். ஜெயவரதனாவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்ததும் செய்த முதல் வேலை, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமையை பறித்ததுதான்.
அவரை மேடைகளின் பொம்மையாக – பேசா மடந்தையாக வைத்துக்கொண்டு விஜயகுமாரணதுங்க கட்சியை பிரசாரங்களின் மூலம் முன்னெடுத்தார்.
கட்சிப்பிரசாரங்களுடன் அவரது கடைக்கண்பார்வை சந்திரிக்காவில் விழுந்ததையடுத்து இருவரும் மணமுடித்தனர். இதனால் வெகுண்டவர் அநுரா.
இறுதியில் அக்கட்சிக்குள் பிளவு தோன்றியது. அம்மாவா, தம்பியா, கட்சியா, அல்லது தனது காதல் கணவனா..? என்ற இக்கட்டுக்குள்ளிருந்த சந்திரிக்கா, “ உன்வழியே என் வழி “ என்று காதல் கணவனுடன் மக்கள் கட்சியை தொடக்கினார்.
ஒரு கட்டத்தில் மதவாச்சிய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரதமர் பதவியில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா இருந்த காலத்தில் வெளிநாடுகளுக்குச்செல்லும்போது பதில்பிரதமராகும் வாய்ப்பு
பெற்றவருமான மைத்திரிபால சேனநாயக்காவுடன் இணைந்து அக்கட்சியை அநுரா பண்டாரநாயக்கா கைப்பற்றினார்.
பின்னர் அங்கிருந்து கசப்புணர்வுடன் வெளியேறிய அநுரா ஒரு கட்டத்தில் பிரேமதாசவின் மறைவுடன் ஐக்கிய தேசியக்கட்சியிலும் இணைந்தார்.
இலங்கை அரசியலில் இரண்டு பெரிய கட்சிகளின் வரலாற்றில் தலைமைப்பதவிகள், யாரோ ஒருவரது மரணத்துடன்தான் மாறிவந்துள்ளன.
1988 இல் விஜயகுமாரணதுங்கா கொல்லப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் 2008 இல் அவரது மகன் அநுராவும் இறந்தனர்.
தந்தையையும் கணவரையும் துப்பாக்கிதாரிகளிடம் பறிகொடுத்த சந்திரிக்கா, பின்னர் தாயையும் தம்பியையும் அடுத்தடுத்து காலனிடம் பறிகொடுத்து தனிமரமானார்.
எனினும் தந்தை தொடக்கிய கட்சியை வளர்த்தவாறு, முதலில் மேல்மகாண முதலமைச்சராகவும், பின்னர் நாட்டின் பிரதமராகவும் அதனையடுத்த இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
தனக்குப்பின்னர் தந்தை உருவாக்கிய கட்சியை வளர்ப்பதற்காக அவர் பெரிதும் நம்பியிருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன.
இவர் 1989 ஆம் ஆண்டு தனது பொலன்னறுவை தொகுதியிலிருந்து அரசியல் பிரவேசம் செய்தவர்.
மகிந்த ராஜபக்ஷவுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் நிழல் யுத்தம் ஆரம்பமானதும், 2015 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராக களம் இறக்கப்பட்டவர்தான் இந்த மைத்திரி.
அந்தத் தீர்மானத்திற்கு முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்தவர்தான் சந்திரிக்கா.
அந்த அறிவிப்பு வெளியாவதற்கு முதல்நாள் இரவு அப்போதிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அமர்ந்து இராப்போசன விருந்தில் முட்டை அப்பம் சாப்பிட்டவரான மைத்திரிபால சிறிசேனா, அதன்பிறகு மகிந்தருக்கு ஆப்புவைத்தார்.
பண்டாரநாயக்கா, 1952 இல் எந்த பச்சைக்கட்சியிலிருந்து பிரிந்தாரோ, அதே கட்சியில் அவரது மகன் அநுராவும் பிற்காலத்தில் இணைந்து அக்கட்சியை அழித்தார். மகள் சந்திரிக்காவும்
ரணில்விக்கிரமசிங்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, தனது கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை மகிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளராக களம் இறக்கினார்.
அதன் பலாபலனை சந்திரிக்கா தற்போது அவதானிக்கின்றார்
மைத்திரிக்கு இன்றைய அரசில் அமைச்சுப்பதவியும் கிட்டவில்லை.
சந்திரிக்காவின் தந்தையார் தொடக்கிய கட்சி தற்போது சேடம் இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு யார் யார் காரணம் என்பதை சந்திரிக்காவும் மைத்திரியாரும்தான் சுயவிமர்சனம் செய்து பார்த்தல் வேண்டும்.
ராஜபக்ஷ குடும்பத்தினரின் காட்டில் மழைபெய்வதற்கு இவர்கள்தான் காரணம்.
அந்த மழையும் இனி எத்தனை நாட்களுக்கு…?
—0—