ஓர் ஆவணப் பதிவுக்கான அடித்தளமே இந்தக் கட்டுரை. இதில் சேர்க்கப்படவேண்டிய தகவல்களைத் தந்துதவுமாறு அறிந்தவர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழுமையான பதிவு வெளியிடப்படும்போது, தகவல்களுக்கான மூலங்களும், உசாத்துணை விபரங்களும் குறிப்பிடப்படும்.
ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள். தமிழகமும், இலங்கையும் தமிழரின் பாரம்பரியத் தாயகங்கள். அந்தத் தாயகங்களுக்கு வெளியே எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
உலகின் மூலை முடுக்குக்களிலெல்லாம் தமிழன் தன் காலைப் பதித்திருக்கிறான். காலைப் பதித்த இடமெல்லாம் வாழத்
தலைப்பட்டுவிட்டான். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் வாழ்வாதாரங்களுக்காகத் தாயகங்களைவிட்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நிலை பிறழ்ந்து போனார்கள். மொழியிழந்து போனார்கள். இனம் மறந்து போனார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் தாயகங்களோடு தொடர்பிழந்து போனாலும் மொழி மறந்துபோகாமல், இனப்பிறழ்வுக்கு ஆளாகாமல் இன்னும் தமிழராய் இருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில், மலேசியாவில், சிங்கப்பூரில் இலங்கையின் மலையகத்தில் எல்லாம் இனத்துவ அடயாளங்களைப் பேணி அந்த மக்கள் தனித்துவத்துடன் வாழ்கின்றார்கள். அண்மைக்காலத்தில் தாயகங்களில் இருந்து, குறிப்பாகத் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைத்துலக நாடுகள் பலவற்றில் அந்தந்த நாடுகளின் பிரசைகளாக மாறியவர்களாயும், மாறாதவர்களாயும், அகதிகளாயும் வாழ்கின்றார்கள். அவர்களெல்லாம் தாயகங்களோடு இணைந்தவர்களாயும், தாயக நினைவுகளைச் சுமந்தவர்களாயும், தாய்மொழிப்பற்று மிகுந்தவர்களாயும் அந்தந்த நாடுகளில் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது புலம்பெயர்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகின்றது.
அத்தகைய தமிழ்மக்கள் கணிசமான தொகையினராய் வாழ்ந்துவருகின்ற ஒரு நாடாக அவுஸ்திரேலியாவும் திகழ்கின்றது. அவுஸ்திரேலியத் தமிழ் மக்கள் தம் இனத்தைப்பற்றியும், தம்மொழியைப்பற்றியும் மிகுந்த அக்கறை கொண்டவர்களாயிருக்கின்றார்கள். தம் எதிர் காலச் சந்ததிகளிடம் தமிழ் மொழியைக் கற்க வைப்பதற்கும், தமிழ்ப் பண்பாடுகளைத் தக்க வைப்பதற்கும் அவர்கள் எடுக்கின்ற அயராத முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இங்கு வாழும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைத் தமிழர்களாக இருந்தபோதும் இந்தியத் தமிழர்களும் கணிசமானதொகையினர் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரை என்னதான் வசதியுடன் வாழ்ந்தாலும் எப்போதும் தாயக நினைவுகளுடனும், இறுதிக்காலத்திலாவது தாய்மண்ணில் வாழவேண்டும் என்ற ஆவலுடனுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் தமிழ் மக்களின் குடியேற்றம் 1965 ஆம்ஆண்டிலிருந்து இடம்பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர்கள் தொழில் வாய்ப்புப்பெற்று அவுஸ்திரேலியாவுக்கு வரத் தொடங்கியிருந்தாலும், 1970 ஆம் ஆண்டு குடியுரிமைபெற்று வாழக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதற்குப் பின்னரே அத்தகைய தமிழர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆனால் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனப்படுகொலையினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தனர். 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் இலங்கைத் தமிழர்கள் படகுகளிலும் வரத் தொடங்கினார்கள்.
அவுஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்களும், இரண்டு மண்டலங்களுமாக மொத்தம் எட்டு சமஸ்டி அரசாட்சிப் பிரிவுகள் உள்ளன. இந்த நாட்டின் சனத்தொகை ஏறத்தாழ இரண்டு கோடியாகும். அதாவது, அண்ணளவாக இலங்கையின் சனத்தொகைக்கு ஒப்பானது. ஆனால். நிலப் பரப்பளவில் அவுஸ்திரேலியா, இலங்கையைப்போல ஐம்பத்தியிரண்டு மடங்கு பெரியது.
அவுஸ்திரேலியத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கையினரில் நான்கில் மூன்றுக்கும் அதிகமானோர் சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ், மெல்பேண் தலை நகராகவுள்ள விக்ரோறியா ஆகிய இரு மாநிலங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மேற்கு அவுஸ்திரேலியா(பேர்த்), குயீன்ஸ்லாந்து(ப்றிஸ்பேண்), தெற்கு அவுஸ்திரேலியா(அடிலைட்), தலைநகரமண்டலம்(கன்பரா), வடமண்டலம்(டார்வின்), தஸ்மேனியா(ஹோபாட்) ஆகிய மற்றைய
மாநிலங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். இன்றைய நிலைவரப்படி உறுதிப்படுத்தப்படாத கணக்கெடுப்பாக ஏறத்தாழ எழுபத்தியையாயிரம் தமிழ் மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் இலங்கைத் தமிழர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையினரே இந்தியத் தமிழர்கள். மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பிஜித் தீவுகள், மியன்மார்(பர்மா) ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் மக்கள் இங்கு குடியேறியுள்ளனர்.
தமிழ் ஊடகங்கள்…. இங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் தாயக நினைவுகளை மறவாது வாழவும், தமது இனத்தின் அடையாளங்களை நிலையாகப் பேணவும் தமிழ்மொழி ஊடகங்களையும் துணையாகக் கொண்டுள்ளார்கள்.
தனித் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள், வானொலிபரப்புக்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்றெல்லலாம் பரந்துபட்ட ஊடகங்களைச் சிறந்தமுறையில் நடாத்துகின்றார்கள். ஆரம்பிக்கப்பட்டுச் சில மாதங்களிலும், சில வருடங்களிலும் தடைப்பட்டுப்போன ஒளிபரப்புக்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் அவற்றில் பல. அவை அவ்வாறு நின்றுபோனமைக்கு ஒவ்வொன்றுக்கும் வௌ;வேறு காரணங்கள் இருக்கமுடியும் என்றாலும், எல்லாவற்றுக்கும் பொதுவானதும் அடிப்படையானதுமான காரணம் போதிய நிதி வளம் இல்லாமைதான். ஆனால், அவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தமிழ்மொழி, கலை, இலக்கியம் என்பவற்றின்மீதுள்ள தணியாத அக்கறையும், அவற்றைப் பேணவேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும்தான் அவற்றை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மை.
தொலைக்காட்சி:
தமிழ் ஆர்வலர்கள் சிலரது அயராத முயற்சியின் விளைவாக,
அவுஸ்திரேலியாவில் முதல் தமிழ் தொலைக்காட்சிச் சேவை விக்ரோறிய மாநிலத்தில், 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்டது. சனல் 31 இல் 30 நிமிட நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்ட இந்த தொலைக்காட்சிச் சேவையின் இயக்குனராகவும். நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், ஒளிபரப்பாளராகவும் இலங்கை வானொலியில் கடமையாற்றிய அனுபவம் மிக்க திரு. இரெத்தினம் கந்தசாமி பணிபுரிந்தார். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி நடைபெற்றுவந்த இந்த ஒலிபரப்பு தவிர்க்க முடியாத காரணங்களினால் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்திருக்க முடிந்தமை கவலைக்குரியது.
2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சிகரம்’ தமிழ்த் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, உள்ளுரில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புக்களும் இடம்பெற்றன. சிகரம் தொலைக்காட்சி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு
நாடுகளிலும் ஒளிபரப்பை நடாத்தியது. சில வருடங்களில் சிகரம் தொலைக்காட்சிச்சேவை நின்றுவிட்டது. அதே காலகட்டத்தில், இங்கிலாந்திலிருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியும் சில மாதங்கள் ஒளிபரப்பானது. இப்போது இல்லை. இவை இரண்டுக்கும் முன்னர் ‘பாரதி’ தொலைக்காட்சி பணம்செலுத்தி அங்கத்தவராகுவோருக்கு மட்டும் என்ற வகையில் ஒளிபரப்பப்பட்டது. சில மாதங்களில் திடீரென அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.
இப்பொழுது மாதாந்தக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு தொலைக்காட்சிச் சேவைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜீடிவி, மற்றும், சண், விஜய், ராஜ், ஜெயா, மக்கள், கப்டன், தந்தி, கலைஞர், புதியதலைமுறை முதலிய பெயர்களில் உள்ள தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளின் சேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றில் ‘சண்’ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு 2004ஆம் ஆண்டிலேயே இங்கு வரத் தொடங்கிவிட்டது.
வானொலிச் சேவை:
1978 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் மொழி அவுஸ்திரேலிய வானலைகளில் மிதக்கத் தொடங்கிவிட்டது. அக்காலத்தில் எத்தினிக் றேடியோ (Ethnic Radio) என்ற பெயரில் இயங்கிவந்த
வானொலிச் சேவையில் ஏனைய மொழிகளுடன் தமிழ்மொழியும் 1978 ஆம் ஆண்டில் இணக்கப்பட்டது. அரைமணி நேர நிகழ்ச்சி சில வாரங்களுக்கு ஒருதடவை என்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் இரு வாரங்களுக்கு ஒருதடவையாகி அதன்பின்னர் வாராவாரம் நடைபெறும் அளவுக்கு வளர்ச்சியடைந்தது. இந்த ஒலிபரப்பினை திருமதி. தேவி பாலசுப்பிரமணியம் என்பவர் ஆரம்பித்து நடாத்தி வந்தார். பின்னர் இந்த ஒலிபரப்புச் சேவை, ‘விசேட ஒலிபரப்புச் சேவை’ (SBS) என்ற பெயரில் 1993 ஆம் ஆண்டிலிருந்து இயங்கத் தொடங்கியபோது விக்ரோறிய மாநிலத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் அவுஸ்திரேலியா முழுவதற்குமான ஒலிபரப்பினை நடாத்தத் தொடங்கியது. 1993 ஆம் ஆண்டிலிருந்து நீண்டகாலமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் அரை மணிநேரம் தமிழ் ஒலிபரப்பு நடாத்தப்பட்டு வந்தது. இப்பொழுது, 2013 இலிருந்து, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வாரத்தில் மூன்று நாட்கள் ஒவ்வொரு மணிநேரம் நடைபெறுகின்றது. இதில் பணியாற்றும் அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஊதியமும் கொடுக்கப்படுகின்றது.
நாள் முழுக்க, அதாவது இருபத்துநான்கு மணிநேரமும் இடை விடாது தமிழில் ஒலிபரப்பைச் செய்யும் வானொலிச் சேவைகள் உள்ளன. 1995 ஆம் ஆண்டு, பாலசிங்கம் பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘இன்பத்தமிழ் ஒலி’ வானொலியும், 2002 இல் ஆரம்பிக்கப்பட்ட
அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியுமே அவையாகும். இன்பத் தமிழ் ஒலி இப்பொழுது இணைத்தினூடாகத் தனது ஒலிபரப்பினைத் தொடர்;கிறது. இன்றுவரை தொடர்ந்து இயங்கிவரும் இவற்றில் தன்னார்வத் தொண்டர்களே ஊதியம் இல்லாது பணியாற்றுகின்றார்கள். சிலவருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட
‘தாயகம்’ இணையவழி வானொலிச் சேவையும் நாள்முழுவதும் ஒலிபரப்பை நடத்திவருகிறது. மேலும் சில இணைய வானொலிகள் அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிபரப்பைச் செய்யும் தமிழ் வாhனொலிகள் உள்ளன. சிட்னியில், தமிழ் முழக்கம், முத்தமிழ் மாலை, இன்பமான இரவினிலே, உதயகீதம், மெல்பேணில், தமிழ்க்குரல், நிதர்சனம், தமிழ்ஓசை, சங்கநாதம், தமிழ்ப் பூங்கா, வானமுதம், வானிசை, பிறிஸ்பனில், தமிழ் ஒலி, பேர்த்தில், தமிழ்ஒலி,
தமிழ்ச்சோலை, கன்பராவில், தமிழ்வானொலி, தமிழ்வானொலி (இளைஞர்), டார்வினில், தமிழ்ச்சங்க வானொலி என்றிவ்வாறு மொத்தமாக இருபதுக்கும் மேற்பட்ட வானொலிச் சேவைகள் தத்தமது மாநிலங்களுக்குள் தமிழ் ஒலிபரப்பை நடாத்துகின்றன.
இவை பெரும்பாலும் வாரமொருமுறை அல்லது இரண்டு முறை நடைபெறும் சேவைகளாகும். இவையெல்லாவற்றிலும் அறிவிப்பாளர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களாகத் தன்னார்வத் தொண்டர்களே பணிபுரிகின்றார்கள். தமது நேரத்தையும், உழைப்பையும் மட்டுமன்றி, சிலவேளைகளில் சொந்தப் பணத்தையும் தியாகம் செய்வோராலேயே இந்த வானொலிச் சேவைகள் நடாத்தப்படுகின்றன.
பத்திரிகை, சஞ்சிகைகள்
அவுஸ்திரேலியாவில் முதல்முதல் வெளியிடப்பட்ட மாதப்பத்திரிகை ‘தமிழ்க்குரல்’ ஆகும். மாத்தளை சோமுவால் 1987 ஆம் ஆண்டு புகைப்படப் பிரதிகளாக வெளியிடப்பட்ட இந்த இதழின் விலை ஒரு வெள்ளியாக இருந்திருக்கிறது.
அரவிந்தனின் மரபு, யாழ் எஸ்.பாஸ்கரின் அக்கினிக்குஞ்சு அகிய
சஞ்சிகைகள் 1990 களில் வெளிவந்துகொண்டிருந்தன. காலப்போக்கில் நின்றுவிட்டன. அக்கினிக்குஞ்சு இப்பொழுது இணையத்தளத்தில் வந்துகொண்டிருக்கின்றது.
சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவை ஆசிரியராகக்கொண்டு, மருத்துவகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்களால் 1994 ஏப்பிரல் மாதத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘தமிழ்உலகம் (Tamil World)’ என்ற இருமொழிப்பத்திரிகை, இருவாரங்களுக்கு ஒருதடவை என்ற வகையில் வெளிவந்தது. ஒருவருடம் தொடர்ந்து வெளிவந்த தமிழ்உலகம் பின்னர் நின்று போயிற்று. ‘உதயம்’ என்றபெயரில் 1997 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு மருத்துவ கலாநிதி எஸ்.நடேசன் அவர்களால் வெளியிடப்பட்ட மாதப்பத்திரிகை பதினான்கு வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. 2010 ஆம் ஆண்டு அதுவும் மூடுவிழாவை நடாத்திவிட்டது. இவை அனைத்தும் மெல்பேணைத் தளமாகக்கொண்டு வெளியிடப்பட்டவையாகும்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவுடன் 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட’ஈழமுரசு’ என்னும் மாதப்பத்திரிகை மெல்பேணைத் தளமாகக்கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றது.
2008 ஆம் ஆண்டிலிருந்து சிட்னியிலிருந்து, இந்தியத் தமிழரான திரு
சுப்பிரமணியம் அவர்களால் பிரசுரிக்கப்படும் ‘தமிழ்ஓசை’ என்ற மாத சஞ்சிகை, தமிழ் இலக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தவறாமல் வெளிவந்துகொண்டிருக்கின்றது. மாத்தளை சோமு அவர்கள் அதன் ஆசிரியராகவுள்ளார். மற்றும், திரு.ஜோண் நிவேன் அவர்களின் ‘தென்றல்’ என்ற சஞ்சிகை சிட்னியில் இருந்து வெளிவருகிறது. ‘தமிழ் அவுஸ்திரேலியன்’ என்ற சஞ்சிகை கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்திலிருந்து சட்டத்தரணி சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களை முதன்மை ஆசிரியராகக்கொண்டு சில வருடங்கள் வெளிவந்தது.
1994 ஆம் ஆண்டு, சிட்னி பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு, இப்பொழுது அவுஸ்திரேலியப் பட்டதாரிகள் தமிழர்சங்கத்தினால் கொண்டு நடாத்தப்படும் ‘கலப்பை’ என்னும் காலாண்டுச் சஞ்சிகை தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றது. இந்தியத் தமிழரான அரவிந்தனின் ‘மெல்லினம்’ என்ற சஞ்சிகையும் மெல்பேணிலிருந்து வெளியிடப்படுகின்றது. இவை இரண்டும் சந்தாதாரர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன.
சந்ததாதாரர்களுக்கு மட்டும் விநியோகிக்கப்படும் வகையில் வெளிவந்துகொண்டிருந்த ‘உதயசூரியன்’ மாத சஞ்சிகை சிட்னியிலிருந்து திரு.குணரெட்ணம் அவர்களால் சில வருடங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் காலத்தில் ‘பாலம்’ ‘தரிசனம்’ ஆகிய சஞ்சிகைகளும் சிட்னியிலிருந்து வெளிவந்ததாக அறியக்கிடக்கின்றது. சிட்னியில் இருந்து பாலசிங்கம் பிரபாகரனை ஆசிரியராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘இன்பத்தமிழ் ஒலி’ மாத சஞ்சிகை இரண்டாவது மாதத்துடன் நின்றுவிட்டது. தெய்வீகன். பிரசாந்த் ஆகியோரால் வெளியிடப்படமு வரும் ‘எதிரொலி’ மாதப் பத்திரிகை 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
இவை தவிர இங்கு இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புக்கள் தமது அங்கத்தவர்களிடையே விநியோகிக்கும் நோக்கத்திற்காக, ஆண்டிதழ்களையும், காலாண்டிதழ்களையும், மாத இதழ்களையும் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் அமைப்புக்களின் செய்திகள் மட்டுமன்றி, சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் இடம்பெறுவது வளமையாகும். ஊதாரணமாக, விக்ரோறிய ஈழத்தமிழச் சங்கத்தின் ‘தமிழ் முரசு’, அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியத்தின் ‘அவுஸ்திரேலிய முரசு’ என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இணையத்தளச் சஞ்சிகைகளாக, உலகளாவிய விடயங்களைத் தாங்கிவரும் அக்கினிக்குஞ்சு, உள்ளூர் தகவல்களைப் பெரும்பாலும் உள்ளடக்கி திங்கட்கிழமைதோறும் பிரசுரமாகும் அவுஸ்திரேலிய முரசு ஆகியவை வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எழுத்தாளர்கள், படைப்புக்கள்
புகழ்பெற்ற பல ஈழத்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவுஸ்திரேலியாவைப் புகலிடமாகக் கொண்டுள்ளார்கள். எஸ்.பொ., கவிஞர் அம்பி, காவலூர் இராஜதுரை, லெ.முருகபூபதி, மாத்தளை சோமு, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, மாவை நித்தியானந்தன், கோகிலா மகேந்திரன், நட்சத்திரன் செவ்விந்தியன், தெ.நித்தியகீர்த்தி, தெய்வீகன், வேந்தனார் இளங்கோ, நோயல் நடேசன், வானொலிமாமா நா.மகேசன், அருண் விஜயராணி, பாமினி செல்லத்துரை, ஆழியாள், ஆசி.கந்தராசா, ஜெயக்குமரன், கிறிஸ்டி நல்லரெட்ணம், கணநாதன், கே.எஸ். சுதாகர், நல்வைக்குமரன் க.குமாரசாமி,
ஆவூரான் சந்திரன், இளமுருகனார் பாரதி, ஆ.கந்தையா, கலாநிதி பொ.பூலோகசிங்கம், பாலம் லக்ஸ்மணன், சந்திரிகா சுப்பிரமணியம், கலையரசி சின்னையா, மனோ ஜெகேந்திரன், இளைய பத்மநாதன், மெல்பேண் மணி, யாழ் எஸ் பாஸ்கர்,ஜெயராம சர்மா மகாதேவ ஐயர், செல்லதுரை கிருஷ்ணமூர்த்தி, நிரஞ்சக்குமார், சந்திரலேகா வாமதேவா, சிசு நாகேந்திரன், விக்டர் சதா, செ.பாஸ்கரன், சவுந்தரி கணேசன், அ.சந்திரகாசன், ஜெய்ராம் ஜெகதீசன், சிதம்பரநாதன், சாந்தா ஜெயராஜ், சாந்தினி புவனேந்திரராசா, கானா பிரபா, திருமலை மூர்த்தி, புவனா இராஜரெட்ணம், கல்லோடைக்கரன், முருகர் குணசிங்கம், விமல் அரவிந்தன், மணிவண்ணன், உசா ஜவகர், எஸ்.கிருஸ்ணமூர்த்தி, மேகநாதன், எஸ்.சுந்தரதாஸ், சிறி நந்தகுமார் என்று இந்தப் பட்டியல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியதாக நீழும். இவர்களில் சிலர் காலமாகிவிட்டார்கள்.
இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் இங்கு வெளியிடப்படும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மட்டுமன்றி இலங்கை, இந்திய மலேசிய பத்திரிகைகளிலும் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற இதழ்களிலும் இணையத் தளங்களிலும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் நூல் வெளியீடுகள் இங்கு அடிக்கடி இடம் பெறும். மேற்குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களில் பலரின் நூல்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. பெரும்பாலான நூல் வெளியீட்டு விழாக்கள் மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்படுகின்றன. 1987 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அவுஸ்திரேலியா முழுவதிலும் நூற்றுக்கும் அதிகமான தமிழ் நூல்வெளியீட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன.
லெ.முருகபூபதி, மாத்தளை சோமு, எஸ்.பொ., கவிஞர் அம்பி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, நோயல் நடேசன் ஆ.கந்தையா, ஆசி.கந்தராசா முதலிய எழுத்தாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில்மட்டுமன்றி, ஏனைய மாநிலங்களிலும் தங்கள் நூல் வெளியீட்டு விழாக்களை நடாத்தியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் மிக அதிகமான நூல்களை எழுதியவர்கள் என்ற வகையில் திரு. லெ.முருகபூபதி 20 நூல்களையும், திரு. மாத்தளை சோமு 23 நூல்களையும்; எழுதி வெளியிட்டுள்ளனர். திரு. லெ. முருகபூபதியின் ‘சமாந்தரங்கள்’ சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 1989 ஆம் ஆண்டு மெல்பேணில் நடைபெற்றது. இதுவே அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது தமிழ் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியாகும். சிட்னியில் முதன்முதலில் நூல் வெளியீட்டையும், பாரதியார் விழாவையும் நடாத்தியவர் திரு.மாத்தளை சோமு ஆவார். 1991 இல் நடைபெற்ற அந்த விழாவில் அவரது ‘அவன் ஒருவனல்ல’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது.
மொழிபெயர்ப்பு முயற்சிகள்:
அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் இனத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற படைப்பாளியான ஹென்றி லோசன் என்பரின் சிறுகதைகளை, சிட்னியில் வசிக்கும் காவலூர் இராஜதுரையின் மகன் நவீனன் இராஜதுரை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தனது தந்தையாரின் சில கதைகளையும் அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். கன்பராவில் வசிக்கும் மதுபாஷpனியும் (ஆழியாள்) ஆதிவாசிகளின் சில கதைகளையும், கவிதைகளையும் தமிழில் தந்திருக்கின்றார். குறிப்பாக ஆர்ச்சி வெல்லர், சாலிமோர்கன், மெர்லிண்டா போபிஸ், ஜாக் டேவிஸ் எலிசபெத் ஹொஜ்சன், பான்சிரோஸ் நபல்ஜாரி ஆகியோரின் படைப்புக்களைக் கூறலாம்.
சிட்னியில் வாழும் மாத்தளை சோமுவும் ஆதிவாசிகளின் ஆங்கிலத்திலிருந்த கதைகள் சிலவற்றைத் தமிழில் தந்திருக்கின்றார்.
ஹிந்தி மொழியில், விஜய்தான் தோத்தா எழுதிய கதையொன்றினை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து, ‘துவிதம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் காசிநாதன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து, திரு. விமல் அரவிந்தனை அசிரியராகக்கொண்டு, 1990 களில் வெளிவந்துகொண்டிருந்த மரபு என்ற இலக்கியச் சிற்றிதழில் வெளியிட்டிருந்தார்.
சிட்னியில் வசிக்கும் எஸ்.பொ. ஆபிரிக்க இலக்கியங்கள் சிலவற்றைத் தமிழில் தந்திருக்கின்றார். சீனுவா ஆச்சுபே எழுதிய மக்களின் மனிதன், செம்பென் ஒஸ்மான் எழுதிய ஹால ஆகிய நாவல்கள் அவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மெல்பேணில் வசிக்கும், நல்லைக்குமரன் (குமாரசாமி) ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய Animal Farm பிரபல்யமான நாவலை ‘விலங்குப் பண்ணை’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அத்துடன், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் ‘வரையப்படாத சித்திரத்திற்கு எழுதப்படாத கவிதை’ என்ற சுயசரிதை நூலை, Undrawn Portrait For Unwritten Poetry என்ற பெயரிலும், மருத்துவர் நடேசனின் ‘வண்ணாத்திக்குளம்’ என்ற நாவலை, Butterfly Lake என்றபெயரிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். நடேசனின் மற்றொரு நாவலான, ‘உனையே மயல்கொண்டு’ தமிழ் நாட்டைச்சேர்ந்த ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பார்வதி வாசுதேவ் என்பவரால் Lost in you என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சிட்னியில் வாழும் கவிஞர் அம்பி, தனது ‘கிறீனின் அடிச்சுவட்டில்’ என்ற நூலை Scientific Tamil Pioneer என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
சிட்னியில் உள்ள பேராசிரியர் ஆசி கந்தராசாவின் பத்துக்கதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் Horizon என்ற பெயர்ல் வெளியிடப்பட்டுள்ளது. பேராசிரியர் பார்வதி வாசுதேவ் அதனை மொழிபெயர்த்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞர் சுமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தனது ஆய்வுப் பணிக்காக இங்கு வந்திருந்தபோது, மெல்பேணைச் சேர்ந்த திருமதி அருண் விஜயராணியின் ‘தொத்து வியாதிகள்’ என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்தார்.
திருமதி. பாமினி செல்லத்துரை அவர்கள் தனது “North South and Death” என்னும் ஆங்கில நாவலையும் ‘சிதறிய சித்தார்த்தன்’ என்னும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் மெல்பேணில் வெளியிட்டள்ளார்.
அவுஸ்திரேலியாவை நிரந்தர மற்றும் தற்காலிக வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் எழுத்தாளர்கள் பதினைந்துபேரின் சிறுகதைகளில் பதினான்கினைக் கனடாவில் வசிக்கும் சியாமளா நவரெத்தினமும், ஒன்றை நவீனன் இராஜதுரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Being Alive என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்ட நூல் 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர்விழாவில் வெளியிடப்பட்டது. சியாமளா நவரெத்தினம் அருண்விஜயராணியின் ‘கன்னிகாதானங்கள்’என்ற சிறுகதைத் தொகுப்பினையும் மொழிபெயர்த்திருந்தார். அது இன்னும் வெளியிடப்படவில்லை.
மெல்பேணைச் செர்ந்த ரேணுகா தனுஸ்கந்தா முருகபூபதியின் ‘புதர்க்காடுகள்’ என்ற சிறுகதையை Bush Walk என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நூல்களில் ஒன்று ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ‘சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்’ என்ற அவரது தமிழ் நூலின் மொழிபெயர்ப்பாக “Sankam Period and Sankam Literature”என்ற நூலை ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆலயங்களும், வணக்க முறைகளும்
தமிழர்களுக்கென்று தனியாகக் கிறீத்தவ ஆலயங்கள் இங்கே இல்லை என்றாலும் பல ஆலயங்களிலே தமிழ்க் குருமார்களால் தமிழிலே கிறீத்தவ வழிபாடுகளும், பூசைகளும் நடாத்தப்படுகின்றன.
உலகெங்கும் இப்பொழுது சைவசமயம், சாக்த சமயம், வைணவசமயம் முதலிய வைதீகச் சமயங்களின் பெயர்கள் வழக்கொழிந்து போய் இந்துசமயம் என்ற தவிர்க்கப்படமுடியாத பொதுப்பெயரின் உள்ளே அவையெல்லாம் அடக்கப்பட்டு அழைக்கப்படுகின்ற காரணத்தால் இங்கும் சிவா விட்டுனு கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில், காளிகோவில் எல்லாம் பொதுவாக இந்துக்கோவில்கள் என்றே கொள்ளப்படுகின்றன.
அவுஸ்திரேலிய நாட்டில் மொத்தமாக இருபதிற்கு மேற்பட்ட இந்து ஆலயங்களும், அதே தொகைக்குச் சற்று அதிகமான தற்காலிக வழிபாட்டு நிலையங்களும் உள்ளன. பெரும்பாலான ஆலயங்கள் அழகிய கட்டிட வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
சிட்னியிலும், மெல்பேணிலும் சில ஆலயங்கள் மிகப்பிரமாண்டமாக எழுந்து நிற்கின்றன.
இந்தியாவிலிருந்து அந்தண ஆச்சாரியார்கள் வரவழைக்கப்பட்டு, ஆலயங்களுக்குக் குடமுழுக்கு வைபவங்கள் முறைப்படி செய்யப்படுகின்றன.
சிட்னியைத் தலை நகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், ஸ்ரீவெங்கடேஸ்வரர் கோவில், சிட்னி முருகன் கோவில், மின்ரோ சிவன் கோவில், ஓர்பன் கிருஷ;ணன் கோவில், துர்க்கா தேவஸ்தானம், ஆகிய ஆலயங்கள் அமைந்துள்ளன. மெல்பேண் தலை நகராகவுள்ள விக்ரோறியா மாநிலத்தில், சிவாவிஷ;ணு கோயில், வக்கிரதுண்ட விநாயகர் கோயில், சண்சைன் முருகன் கோவில், குன்றத்துக்குமரன் கோயில், ஹரேகிருஸ்ணா ஆலயம், ஆகியன உள்ளன. இவை தவிர, தனிப்பட்டவர்களால் தற்காலிக கட்டிடங்களில் பூசைகள் நிகழ்த்தப்படும் விஷ;னு துர்க்கா ஆலயம் முதலிய வேறு சில கோயில்களும் உள்ளன. கன்பரா தலைநகர மண்டலத்தில் கன்பரா இந்துக்கோவில், விஷ;ணு சிவன் கோவில், ஆறுபடை முருகன் கோவில் ஆகியன அமைந்துள்ளன.
மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் பேத் இந்துக்கோவில், பேர்த் பாலமுருகன் கோவில், என்பனவும், தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் அடிலைய்ட் கணேசர் ஆலயமும், குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் செல்வ விநாயகர் கோவிலும், வடமண்டலத்தில் டார்வின் சித்திவிநாயகர் கோவிலும் அமைந்துள்ளன.
தமிழ் அமைப்புக்கள்
ஏறத்தாழ எழுபத்தியையாயிரம் தமிழ் மக்கள் வாழ்கின்ற அவுஸ்திரேலியாவிலே நூற்றுக்கும் அதிகமான சங்கங்கள் உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் மக்களின் ஒன்றுகூடலாகவும், தாயக மக்களின் துயர்துடைக்கும் நோக்கத்திற்காகவுமே சங்கங்கள் அமைக்கப்பட்டன.
காலப்போக்கில், அரசியல் உணர்வுகளால் அமைந்த சங்கங்கள், சமயக் கோட்பாடுகளார் சமைந்த சங்கங்கள், கலை ஈ:பாட்டினால் எழுந்த சங்கங்கள், உதவிசெய்யும் உயர்ந்த நோக்கத்தில் ஒன்றிரண்டு சங்கங்கள், பதவி ஆசையால் பிரிந்த சங்கங்கள், அரச உதவித்தொகைக்காக பதிந்த சங்கங்கள், தனிப்பட்ட குரோதங்களால் தழைத்த சங்கங்கள், உறவினர்கள் மட்டும் பதவிகளில் இருத்தி அமைத்த சங்கங்கள் என்று இப்படி,
கொள்கையால் தோன்றியவை, கோபத்தால் தோன்றியவை, பதவி மோகத்தால் தோன்றியவை, பிரிந்த வேகத்தில் தோன்றியவை, புகழின் தாகத்தால் தோன்றியவை என்றவாறு தாயகத்தைப்பேலவே இங்கேயும் சங்கங்களுக்குக் குறைவில்லை.
ஆனாலும், காலத்தின் தேவைகருதி அமைக்கப்பட்டு, இன்றும் காத்திரமான பணிசெய்துவரும் சங்கங்கள் பல உள்ளன.
1977 ஆம் ஆண்டு வைத்தியகலாநிதி ஆர். சிவகுருநாதன் அவர்கள் தலைமையில் சிட்னியில் இலங்கைத் தமிழர் சங்கம் நிறுவப்பட்டது. பின்னர் 1982 ஆம் ஆண்டு முதல் ஈழத்தமிழர் கழகம் என்ற பெயரில் இன்றுவரை தொடர்ந்து இயங்கி நற்பணியாற்றி வருகின்றது.
சிட்னி தமிழ் மன்றம் 1978 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
விக்ரோறிய மாநிலத்தில், 1978 அம் ஆண்டு. பேராசிரியர் சீ.ஜே. எலியேசர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘விக்ரோறிய இலங்கைத் தமிழ்ச்சங்கம்’, 2000 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 19 ஆம் திகதி, அப்போதைய தலைவர் சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமையில் ‘விக்ரோறிய ஈழத்தமிழ்ச் சங்கம்’ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
மற்றும், மேற்கு அவுஸ்திரேலிய தமிழச்சங்கம் (1979) மேற்கு அவுஸ்திரேலிய இலங்கைத்தமிழர் சங்கம் (1986), குயீன்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம்(1984). குயீன்ஸ்லாந்து ஈழத்தமிழ்ச்சங்கம்(1990), கன்பரா தமிழ்ச்சங்கம்(1983), தெற்கு அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழ்ச் சங்கம்(1983).வடமண்டலத் தமிழ்ச்சங்கம் (1983), தென்துருவத் தமிழ்ச் சம்மேளனம் (1984) என்ற வகையில் ‘தமிழ்ச்சங்கம்’ என்ற பெயரினைத் தாங்கியவாறு உள்ள மேற்படி சங்கங்களைத் தவிர மேலும் காத்திரமான பணிகளைச் செய்துவரும் அமைப்புக்கள் அவுஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ளன. சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும், மெல்பேணைத் தலைநகராகக்கொண்ட விக்ரோறிய மாநிலத்திலும் அத்தகைய சங்கங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. உதாரணமாக, சிட்னியைத் தளமாகக் கொண்ட இயங்கும் அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம், மெல்பேணில் அவுஸ்திரேலிய தமிழர் ஒன்றியம் (1990), விக்ரோறியதமிழ்க் கலாசாரக் கழகம் (1993), மெல்பேண் தமிழ்ச்சங்கம்(2003) விற்றல்சீ தமிழ்ச்சங்கம் (2005), அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், கேசீ தமிழ்மன்றம் ஆகியவற்றைக் கூறலாம்.
மேலும் இலங்கையில் தாம் படித்த பாடசாலைகளின் பெயரால் அவற்றின் பழைய மாணவர்கள் நடாத்துகின்ற சங்கங்கள் பல உள்ளன. உதாரணமாக யாழ் இந்துக்கல்லூரி, சுழிபுரம் விக்ரொறியாக் கல்லாரி, சென். புற்றிக் கல்லூரி, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம், யாழ். வேம்படி மகளிர்கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி முதலிய வற்றின் வழைய மாணவர் சங்கங்களைக் கூறலாம்…..
தொடரும்.