கட்டுரைகள்
என் பார்வையில் நான் காணும் பாரதி!….. சங்கர சுப்பிரமணியன்.
அன்பு நண்பர் திரு. முருகபூபதி அவர்கள் கூறியதைப்போன்று பாரதி மந்திரம் போன்று சொற்களை பொதிந்து வைத்துவிட்டுத்தான்
போயிருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்திலேயே தன்னைப்பற்றியும் தன் எதிர்பார்ப்புக்களையும் எதிர்காலத்தையும் முன் கூட்டியே உணர்ந்து முற்றும் உணர்ந்து முற்றும் துறந்தவர். ஆதலால் பாரதியை எளதில் படித்து விடவோ புரிந்து விடவோ முடியாது. இனி கூற்றுக்கு வருவோம். தமிழர் இயல்பிலேயே தம்மை உயர்வாக எண்ணும் மனப்பாங்குடையவர்கள். அதற்கு ஏற்றாற்போல் கங்கை கொண்டு கடாரம் வென்ற வரலாறும் கொம்பு சீவி விடுகிறது. இந்த மனப்பாங்குதான் தமிழருக்கிடையே நான் பெரியவன் நீ பெரியவன் என்று கூறி தமிழரிடையே ஒற்றுமையை சிதைக்கிறது. இதே மனப்பாங்குதான் பி்ற்காலத்தில் சாதி என்ற பூதம் புக வழிவிட்டு பெருமையுற்றிருத்த இனம் சிறுமையை நோக்கித் தள்ளப் பட்டுள்ளது. இந்த பின் புலத்தில் நின்று கொண்டு பாரதியுடன் பயணிப்போம். சீனர்களோடு பண்டைக்காலத்தில் தமிழரின் வணிக உறவு வரலாற்றில் சொல்லப்படும் அதேவேளை போதிதர்மன் போன்றவர்கள் அங்கு சென்று தற்காப்புக்கலையை கற்றுக் கொடுத்த வரலாற்றின் மூலம் அவர்களைவிட நாம் ஒருபடி மேல் என்ற உணர்வு உள்ளத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அவர்கள் பாம்பைத் தின்பவர்கள பல்லியைத்தின்பவர்கள் என்றும் முக்கியய நிகழ்ச்சிகளில் குரங்கைக்கூட உணவு சம்பந்தமாக பயன்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக அவர்களின் உருவக்கேலியும் சேர்ந்துள்ளது. இப்படி உணவுப்பழக்கங்களையும் உருவத்தையும் வைத்து மற்றவர்களை தாழ்த்திச் சொல்லும் வழக்கமே சாதிக்கட்டமைப்பில் நம் இனத்தவர்களை நாமே இழிந்துரைக்கும் ஈனச் செயலைத்தான் பாரதி ஈனப்பறையர் என்கிறார். பாரதி பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதால் அங்குள்ள ஊர்க்கட்டமைப்பை சொல்கிறேன். திருப்பணி கரிசல்குளம் என்ற நான் வளர்ந்த என் தாத்தா ஊரின் கட்டமைப்பு இதுதான். இறந்த மாட்டை எடுத்துச் சென்று அறுத்து உண்டு அதன் தோலைப் பதப்படுத்தி காலணிகள் செய்யும் சக்கிலியர் என்பவர்கள் ஊரின் ஒதுக்குப்புறம் இருப்பார்கள். அதையடுத்து ஒரு “ நோ மேன் ஷோன்”. அந்த இடத்தை தாண்டி இன்னொரு இடத்தில் பல்லர்கள் இருப்பார்கள். இது ஊரின் கிழக்குப்பக்கம். அதன்பின் இடைவெளிவிட்டு மேற்குப்பகுதி. இந்த மேற்குப்பகுதியில் தெற்கூரி்ல் பறையர்களும் அதையடுத்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கூரில் மற்ற சாதியினர் கலந்து இருப்பார்கள். கலந்திருப்பார்கள் என்றவுடன் பெருமிதம் அடைந்துவிட முடியாது. இங்கு பிள்ளை, ஆச்சாரி, கோனார், தேவர், பண்டிதர், நாவிதர் மற்றும் வண்ணார் என்று பிரிந்து அவரவர் தெருக்களில் வாழ்வார்கள். ஒரு சாதியினர் தெருவில் இன்னொரு சாதியினர் எளிதில் சென்று குடியேறிவிட முடியாது. ஆனால் ஒருவர் தெருவில் இன்னொருவர் செல்லலாம். ஆனால் பல்லர்களும் பறையர்களும் வடக்கூரில் நுழையவே முடியாது. இந்த ஈனச்செயலை புலப்படுத்தும் விதத்தில்தான் ஈனப்பறையர் என்கிறார் பாரதி. அப்படியே இருந்தாலும் அவர்கள் எம்மோடு இருக்கும் நம் தமிழினம் அல்லவா? அவர்கள் சீனர்கள் போல் ஆய்விடுவார்களா? என்கிறார். ஏனெனில் சீனர்களைப் பற்றிய தப்பான எண்ணம் உலவிவருவதால் அதையே தனக்கு சாதகமாக்கி கவிதை கூறுகிறார். அவர்கள் பறையர்கள் என்றாலும் பிறதேசத்தற்போல பற்பல தீங்கிழைப்பாரோ என்பது நம்மை ஆண்ட வெள்ளையரைப் பற்றி குறிப்பிடுவதாகும். அதைத்தான் அடுத்த வரிகளில் ஆயிரம் உண்டிங்கு சதி- எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்கிறார். அதுமட்டுமா? நாமெல்லாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள், நமக்குள் சாதிபெயர் சொல்லி சண்டையிட்டுக் கொண்டாலும் நாமெல்லாம் சகோதரர்கள் என்ற தான் கொண்ட கருத்தான “கேளடா மானிடா எம்மில் கீழோர் மேலோர் இல்லை” என்று நம் இனத்துக்காகத்தான் பாடியுள்ளார். எனவே பிற நாட்டினரை பிற நாட்டினராகத்தான் பார்த்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை என்பது வெள்ளிடைமலை. திருக்குறளுக்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக உரை எழுதியிருப்பதுபோல் பாரதியை பலகோணங்களில் இருந்தும் காணலாம். அவரை எந்த கட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிடவும் முடியாது கட்டுப்படவும் மாட்டார் என்பது என் தாழ்மையான கருத்து. -சங்கர சுப்பிரமணியன்.