தமிழரின் வாழ்வியல்!… கவிதை…. ( எண்சீர்க் கழிநெடிலடி ) …. சைவப்புலவர் முரு.சேமகரன்.
தென்னன் புகழ்பாடித் தென்றலெனுந் தேரேறித்
தெற்கிருந் திசைக்கும் தேமதுரத் தமிழாள்
கன்னல் சுவைகூட்டிக் காலமெலாங் கன்னியெனக்
கனவிலும் வந்தினித்துக் கருத்திலே கனிவாள்
மின்னற் கொடிபோலும் மின்னிவரும் மெல்லிடையாள்
மூன்று தமிழென்னும் மூவர்ணக் கொடியாள்
இன்னல் பலகண்டும் இறவாத இயல்பினாள்
இன்றும் இனிக்கின்ற தமிழென்னும் பெயராள் !
தென்மதுரைப் பதியிலே தென்னவன் பாண்டியனும்
தேனினும் இனியவள் வாழ்ந்திடத் தமிழ்ச்சங்கம்
நின்றென்றும் ஊழியிலும் நிலைத்து நிலவியும்
நீடுவாழும் தமிழன்னை நித்திலம் போலொளிர்ந்து
மன்றெங்கும் அவள்நாளும் மாண்புட னோங்கவும்
மனங்கொண்ட பாவலர்கள் மயக்குங் கவியீந்தார்
என்றென்றும் அவள்மாண்பு எங்கணுமே நிலைக்க
நன்றான அவர்பாக்கள் தமிழர்வாழ் வியலாகும் !
வெறுங்கவிக் கோலெடுத்து வீணாகும் தமிழ்ப்பாட்டு
வீம்புடனே பாவலரும் வீற்றிருந்து பாடவில்லை
நறும்மணத் தமிழ்கூறும் நற்றமிழர் நல்வாழ்வை
நானிலமும் நனிபோற்ற நல்வழிகள் பாடிவைத்தார்
உறும்வாழ்வைத் தமிழர்கள் உவப்புடன் வாழ்வியலில்
உத்தமராய்க் கைக்கொள்ள உயர்நூல்கள் படைத்தார்
குறுப்பாவும் நெடும்பாவும் கோலத்தமிழ் அணிசேர்த்துக்
கோளத்தில் வாழ்வியலைக் குற்றமறக் கோடிட்டார் !
வாழ்வியலைத் தமிழர்க்கு வாழ்வதற்கே என்றுரைத்தும்
வழிகாட்டப் பன்நீதி வழிவகை நன்றுரைத்தும்
வாழ்வதனைப் பார்போற்றி வழிபட மனமீந்தும்
மன்னுபுகழ் அழியாமல் மாண்புடன் நெறிதந்தும்
ஏழ்பிறப்பும் பழிநீங்கி எஞ்ஞான்றும் அறம்நாட்டி
ஏற்றமிகு இவ்வாழ்வு இழிவின்றி உயர்ந்தேத்தும்
ஆழ்நிலத்து நீரனைய அண்டங்க ளுள்ளமட்டும்
அரசோச்சி வாழுமம்மா தமிழர்தம் வாழ்வியலும் !
வீரத் தொடுகாதல் விளைகின்ற வாழ்வினையும்
விண்ணேர் மொழியையும் கல்வி கலையையும்
ஆரத் தொடுசூடி ஆங்கிவை அணிகளாய்
ஆதித் தமிழேடாம் தொல்காப்பியம் நன்னூலும்
சேரத் தருகின்ற செம்மைதனை அறிந்தோர்க்குச்
சீரின் உயர்வான வாழ்வுமுறை தெளிவாகும்
தேரில் வந்துலவும் திருவாய்ந்த தெய்வம்போற்
றேரில் தமிழர்க்கு வாழ்வதுவே ஒளியாகும் !
வழங்கும் தமிழர் அகம்புறம் என்றாங்கு
நீழும் நினைவும் நிலைக்கின்ற உணர்வும்
நாளு முள்ளத்தை நனைக்கு மெண்ணமும்
வீழும் கண்ணீரும் விரவும் துன்பமும்
வேர்விடு மாசைகளும் விளையும் பாசமும்
நாளும் கண்ணிரண்டும் நயக்கின்ற காதலும்
நேரும் பிரிவும் நிகர்த்தன அகமே !
புறத்தினை யாதெனப் பேசிடில் அகத்திற்குப்
புறத்தே நிகழ்வன புறத்திணை யென்றார்
மறத்தினை மற்றதன் மகிமையின் வினைகளை
மாண்புறு செயல்களை மானிடத்தை
திறத்தினை ஆற்றலைச் சாதனைச் செயல்களைத்
தரத்தினைக் கல்வியைக் கலையின் மாட்சியை
அறத்தினைப் பொருள்களை ஆக்கிடும் வழிதனை
அனைத்துங் கொண்டிங் கிலங்கும் புறமே !
சொன்ன விரண்டு திணைகளின் திறனைத்
தமிழர் வாழ்வாய் வள்ளுவ னாரும்
கன்னல் தமிழில் கருத்தொரு மித்துக்
காசினி உய்த்திட வேதந் தந்தார்
அன்ன பிறவும் அறம்பொரு ளின்பமும்
அவனியில் தமிழர் வாழ்வென வைத்தார்
இன்ன முறையை இனிதுளங் கொண்டு
உலகில் வாழ்ந்தா லுயர்வார் தமிழர் !
சைவப்புலவர்
முரு.சேமகரன்,
மெல்பேண், அவுஸ்திரேலியா.