தேமதுரத் துரோகி ஓசை உலகமெல்லாம் பரவுமா..? …. அவதானி.
இலங்கையில் தமிழ் ஈழ அரசியல் வட்டுக்கோட்டை தீர்மானத்துடன் ஆரம்பமாகி பல ஆண்டுகளாகிவிட்டன.
அதனையடுத்து அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்களில் ஒருவரான வட்டுக்கோட்டையின் முன்னாள் நாடாளு மன்றப்பிரதிநிதி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் தாம் வளர்த்த கடாக்களினாலேயே மோதப்பட்டு உயிரிழந்தார்.
அதற்கு முன்னர், யாழ். மேயர் துரையப்பா அதே கடாக்களினால் கொல்லப்பட்டபோதும் அவரை இனத்துரோகி என்றனர். இனத்துரோகிகளை இயற்கையாக சாகவிடாதீர்கள் என்று இளைஞர்களை உசுப்பேத்திய உணர்ச்சிக் கவிஞரும் நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டில் அஞ்சாத வாசமிருக்கிறார்.
தன்னை ஈழத்தமிழினம் மறந்துவிடும் என்பதனால் அவ்வப்போது தனது இருப்பைக்காண்பிப்பதற்கு சமகால மெய்நிகரில் வெளியே வருவார்.
கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல்களில் வெற்றிபெற்று வந்த மட்டக்களப்பு பிரதிநிதி செல்லையா இராஜதுரையை தோற்கடிப்பதற்காக தளபதி அமிர்தலிங்கத்தினால் களமிறக்கப்பட்டவர்தான் அந்த உணர்ச்சிக்கவிஞர். இறுதியில் அவர் தம்பிமாருடன் இணைந்த காலத்தில், தளபதி கொழும்பில் துரோகி பட்டத்துடன் கொல்லப்பட்டவேளையில் அதனைக் கண்டிக்காமல் மௌனம் காத்தவர் அந்தக்கவிஞர்.
யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா துரோகி, இராஜதுரை துரோகி, இவர்களை துரோகி என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேத்திய அதே அமிர்தலிங்கமும் இறுதியில் துரோகிப் பட்டத்துடன் மேல் உலகம் அனுப்பப்பட்டார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினுள்ளும் முதலில் மாத்தையா மகேந்திரராஜா துரோகியாகி, இறுதியில் காணாமலேயே போனார். கிழக்குத்தளபதி கருணா அம்மானுக்கும் அந்த பட்டம் சூட்டப்பட்டது.
அந்த இயக்கத்தின் தலைவரும் இயக்கமும் 2009 மே மாதம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், அரசியல் அரங்கிற்கு வந்துள்ள மதியாபரணம் சுமந்திரன் அவர்கள் தற்போது துரோகியாக வர்ணிக்கப்படுகிறார்.
அவர் புகலிட நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களுடனான சந்திப்புகளுக்கு செல்லும்போதெல்லாம் இந்த வசைமொழியை பெற்றுக்கொண்டே தாயகம் திரும்புகிறார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடனான பேச்சுவார்த்தைக்குச் சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு – வடக்கு பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியனும் சுமந்திரனும் இலங்கை திரும்புவதற்கு முன்னர் கனடாவில் இயங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிளையினர் நடத்திய பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்திற்கும் சென்றனர்.
அவர்கள் வாஷிங்டன் சென்றுவிட்டு, கனடா வந்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்த்துவிட்டு, தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளின் விருந்துபசாரத்துடன் திரும்பியிருக்கலாம்.
ஆனால், அவர்கள் அரசியல்வாதிகள். தாம் என்ன செய்கின்றோம்..? என்பதை ஊடகங்கள் வாயிலாக மாத்திரம் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தெரிவித்தால் மட்டும் போதாதென்று நேருக்கு நேர் சந்தித்துப்பேசுவதற்கும் விருப்பம் தெரிவிப்பது ஜனநாயக மரபுதான்.
தொடர்ச்சியாக சுமந்திரனை குறிவைத்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பிரசாரங்கள் சுமந்திரனை மேலும் மேலும் பலப்படுத்தியே வந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியா வந்திருந்தபோதும் அவர் கலந்துகொண்ட கூட்டம் குழப்பத்தில் முடிந்தது.
அவருக்கு வெளிநாடுகளில் இத்தகைய வரவேற்பும் துரோகி பட்டமும் கிடைக்கிறது என்பதற்காக எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அவரை புறம் ஒதுக்கிவிடவில்லை.
தொடர்ந்தும் இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் உட்பட வெளிநாட்டு அமைச்சர்கள், செயலாளர்களை சந்திக்கும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளில் முக்கியமானவராவே அவர் கருதப்படுகிறார்.
தேமதுர தமிழ் ஓசையை உலகமெல்லாம் பரப்பவேண்டிய ஈழத்தமிழர்களில் ஒரு சாரார் , தொடர்ச்சியாக தங்கள் சுருதியை மாற்றி பாடிவருகின்றனர்.
சாணக்கியனும் சுமந்திரனும் கனடா கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணவேண்டுமாயின் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் வடக்கு – கிழக்கு இணைந்த அதிகாரப்பரவலாக்கல் முறைமையே
தேவை என்றுதான் பேசினார்கள். அதற்காகவே தொடர்ந்து போராடுவதாகவும் சொன்னார்கள்.
அதாவது, வடக்கும் – கிழக்கும் இணைந்த தீர்வுதான் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு அர்த்தமுள்ள சரியான தீர்வு என்பது அவர்களின் வாதம். அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினதும் தமிழரசுக்கட்சியினதும் நிலைப்பாடும் அதேதான்.
இந்த நிலைப்பாட்டுடன்தான் சில மாதங்களுக்கு முன்னர் சாணக்கியனும் சுமந்திரனும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நெடும்பயணப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர்.
இந்தப்பின்னணிகளுடன் நாம், குறிப்பிட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை முறைமையையும் அது ஏன் இல்லாமல்போனது என்பதையும் அதனை இல்லாதொழித்தவர்கள் யார்..? என்பதையும் நினைவுபடுத்திப்பார்த்தல் வேண்டும்.
அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நின்றவரான அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, தான் “ My Boys “ உடன் பேசி தமிழர்பிரச்சினையை தீர்த்துவிடுவேன், எனச்சொன்னதும் கொழும்புக்கு ஓடிச் சென்றவர்கள் யார்..? என்பது தெரியும்தானே..?
இன்றும் வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வுதான் தமிழர்களின் அனைத்துப்பிரச்சினைக்கும் சரியான வழியைக்காண்பிக்கும் என்று அடிக்கடி இந்தியத் தரப்பிடம் நினைவூட்டிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கியவர் யார் என்பதும் தெரியும்தானே..?
2001 ஆம் ஆண்டு விடுதலைப்புலித்தலைமைப்பீடத்தினால் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவை ஆதரித்தது.
இவரும் 2009 மே மாதம் புலிகளின் விடுதலைப்போராட்டம் மௌனமாக்கப்படுவதற்கு காரணமாகத்திகழ்ந்தவர்களில் ஒருவர். அந்த வெற்றியை ராஜபக்ஷ சகோதரர்களுடன் கேக்கும் பாற்சோறும் வெட்டி உண்டு களித்தவர்.
அதன்பிறகும் தமிழ்த்தேசியக்கூட்மைப்பைச்சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுஸ்திரேலியா, கனடா, உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணித்து பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.
எனினும் போர் முடிவுக்கு வந்த பின்னர் நான்கு அதிபர் தேர்தல்களும் நாடாளுமன்ற தேர்தல்களும் நடந்துவிட்டன.
1987 இல் அறிமுகமான வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டதைத் தவிர, சிறந்த செயற்பாடின்றி இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக இயங்கியும் ஆக்கபூர்வமாக எதனையும் தமிழ் மக்களுக்காக சாதிக்கமுடியாமல் போனதையும் தவிர வேறு என்ன நடந்தது..?
ஆனால், ஏதோ நடந்திருக்கிறது. தமிழர் தரப்பில் புதிய கட்சிகள் குட்டிபோட்டுள்ளன. ஒன்றிணைந்திருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியரசர் விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா ஆகியோர் தனி வழிசென்றனர்.
செல்வம் அடைக்கலநாதனும் சித்தார்த்தனும் புளியம்பழமும் ஓடுமாக இக்கூட்டமைப்பில் ஒட்டுறவின்றி ஊசலாடுகின்றனர்.
சுமந்திரனும் சாணக்கியனும் அமெரிக்கா – கனடா சென்று வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி அங்குள்ள இராஜதந்திரிகளை சந்தித்துப்பேசிவிட்டு மீண்டுகொண்டிருக்கையில், இலங்கை வந்திருந்த ஐ. நா. மத்திய கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அரசியல் விவகாரங்களுக்கான உதவிப்பொதுச்செயலாளர் காலித் கியாரியிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், “ இலங்கை அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் மூலம் அதிகாரப்பகிர்வுக்குத் தாயாரில்லை “ என்று சுட்டிக்காண்பித்தனர்.
இது இவ்விதமிருக்க, புகலிடத்தில் சுமந்திரன் போன்றவர்களுக்கு எதிராக துரோகி பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தக்காட்சிகளைப்பார்த்து ஈழத் தமிழினம் தலையை பிய்த்துக்கொள்ளுகிறது.
யார் செய்வது சரி..? யார் செய்வது பிழை..? என்பது தெரியாமல், யாரைத்தான் நம்புவதோ ..? என்று குழம்புகிறது.
—00—