சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்!… ( 31 )…. சட்டத்தரணி, பாடும்மீன்.ஸ்ரீகந்தராசா.
“இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை”
தெளிவாக இருந்த நாட்டு நிலைமை, தேர்தல் முடிந்தபின்னர் மப்பும் மந்தாரமுமாக மாறத்தொடங்கினாலும், இனக்கலவரம் ஒன்று ஏற்படும் என்பதை நான் கற்பனைகூடச் செய்யவில்லை. அதனால், வழமைபோல அந்தவாரச் சனிக்கிழமையும் நான் அலுவலகம் சென்றிருந்தேன்.
1977 பெப்ருவரியில் இருந்து கொழும்பு தொழிற் திணைக்களத்தில் கடமையாற்றத் தொடங்கி, இரண்டு மாதங்களிலேயே தலைமை எழுதுனராகவிருந்த பெரேராவுக்கு எனது வேலையில் மிகுந்த திருப்தி ஏற்பட்டுவிட்டதனால், அதன்மூலம் உதவி ஆணையாளரின் கவனத்தை ஈர்த்தவனானேன். எனது கடமையில் சுறுசுறுப்பும், நேர்த்தியும் இருந்தமையால் மேற்பார்வையாளரின்றித் தன்னிச்சையாகப் பணியாற்றக்கூடியவர் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாகச் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்கு வந்து கடமையாற்ற எனக்கு அனுமதி தந்தார்கள். இவ்வாறு ஒரு மாதத்தில் ஆகக்கூடியது, ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்கக்கூடிய வசதி கிடைத்தது. அது எனது படிப்பிற்கும், ஊருக்குச் செல்வதற்கும் மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிற் தினைக்களத்தில் வேறு சிலரும் அவ்வாறு விடுமுறை நாட்களில் பதில்வேலை செய்பவர்களாக இருந்தாலும், எனது கிளையில் நான் மட்டுமே செய்தேன். சில நாட்களில் தலைமை எழுதுனரும் வந்திருக்கிறார்.
தேர்தலுக்குப் பின்னர் வந்த அந்தச் சனிக்கிழமையன்று
நான் வேலை செய்துகொண்டிருந்தபோது, வேறொரு மாடியில் வேலைக்கு வந்திருந்த சிற்றூழியர் சுமணதாச பதற்றத்துடன், அவசரமாக என்னிடம் ஓடிவந்து, “ ஐயா, ஐயா வெளியில பிரச்சினை நடக்கிறது. கடையெல்லாம் அடிச்சி உடைக்கிறாங்க…. தமிழர்களுக்குத்தான் அடிக்கிறாங்க…நீங்க இங்க நிக்க வேணாம், உடனே இங்க இருந்து போயிருங்க..” என்று சொல்லி, என்னை வெளியேறுமாறு அவசரப்படுத்தினான். எனது அலுவலகம் இருந்தது ஒன்பதாவது மாடியில். உடனே அங்கிருந்து யன்னலினூடாக வெளியே எட்டிப் பார்த்தேன், வீதியில் ஒரே கலவரமாக இருந்தது. உரத்த சத்ததில் ஆரவாரமிட்டுக் கொண்டு, கூட்டம் கூட்டமாக வீதியில் அட்டகாசமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
தொழிற் திணைக்களக் கட்டிடத்திற்கு முன்னால் இருந்த சைவ உணவகம் அடித்து நொருக்கப்பட்டுக்கொண்டிருந்தது. தூரத்தில் சில இடங்களில் தீப்பற்றிக்கொண்டிருந்தது. இவ்வாறான முன்னனுபவம் இல்லாத காரணத்தால், என்ன செய்வதென்று தெரியாத நிலையில், உடனேயே நான் அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன். சுமணதாச என்னுடன் வந்தான். மிந்தூக்கியினுள் செல்லும்போதும் கூடவே வந்தான். மின்தூக்கியினுள்
அவனும் நானும் மட்டுமே இருந்த நிலையில் அவன் என்னைக் குறுகுறு என்று பார்த்துக்கொடிருந்தான். அது எனக்கு என்னவோ போலிருந்தது. அவன் எதாவது செய்துவிடுவானோ என்ற அச்சம் மனதில் எழுந்தது. மிந்தூக்கி மிகவும் மெதுவாகச் செல்வதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. எனது கலவரத்தை என் முகம் காட்டியிருக்க வேண்டும். அவன், “மாத்தயா, ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம், நீங்க என்னோட வாங்க..” என்று சொன்னான். “அதுதாண்டா பயமாயிருக்கிறது…” என்று சொல்ல முடியுமா? அதற்குள் மிந்தூக்கி தரைத் தளத்தை அடைந்தது. எனது பதற்றமும் குறைந்தது. வெளியே நான் வந்ததும், சுமணதாசவும் என்னுடன் சேர்ந்து நடந்து பஸ்தரிப்பு நிலையம் வரை வந்து என்னை அனுப்பி விட்டான்.
மிகவும் அழகான சிங்களப் பெண்கள் இருவர் நாங்கள் தங்கியிருந்த
வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்தார்கள் அது அவர்களது சொந்த வீடு. ஒருத்திக்கு இருபத்தைந்து வயது இருக்கும். மற்றவளுக்கு இருபது என்று சொல்லலாம். இளையவளின் பெயர் சோபா, மூத்தவளின் பெயர் நினைவில் இல்லை. சோபாவுக்கு முன்பல் கொஞ்சம் மிதந்திருந்தாலும், செக்கச் செவேலென்று மிகவும் அழகாயிருந்தாள். சோபாவின் அக்காவும் அழகானவள்தான் என்றாலும், இருவரும் சேர்ந்து போகும்போது, இளையவளின் மீதுதான் கண்கள் நிலைக்கும்! நாங்கள் தங்கியிருந்த வீட்டில், எங்களுக்கான அறைக்கு வெளியில் இருந்து எங்களின் போக்குவரத்திற்காகத் தனியான வாசல் இருந்தது. எங்களின் வாசல் கதவு இரவுதவிர எப்போதும் திறந்திருப்பதால் அவர்கள் எங்கள் அறையைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் எங்கள் அறைப்பக்கம் தங்கள் பார்வையை ஒருமுறை வீசிவிட்டுத்தான் செல்வார்கள். வெறும் பார்வை காலப்போக்கில் புன்னகையோடு சேர்ந்து வெளிப்படலாயிற்று. அந்தப் புன்னகையை நாங்கள் தொடங்கி அவர்களும் தொடர்ந்தார்களா, அல்லது அவர்கள் தொடங்கி நாங்களும் தொடர்ந்தோமா என்பது தெரியவில்லை.
ஒருநாள் எங்கள் அறைக்குள் நானும் நடேசனும் இருக்கும்போது, சுருட்டிக் கசக்கப்பட்ட கடதாசி த்துண்டு ஒன்று, அறையின் ஜன்னல் வழியாகச் வந்து விழுந்தது. அதை எடுத்த நடேசன் பிரித்துப் பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்தான். “நீங்கள் என்னைக் காதலிக்கிறீங்களா?” என்று சிங்களத்தில் எழுதியிருந்தது. அது தனக்குத்தான் வந்தது என்று நடேசன் சொன்னான். எனக்குத்தான் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. மறுநாள், அவர்கள் எங்களைத்தாண்டிப் போகும்போது, அந்தக் கடதாசியைக் காட்டி, இது தனக்கா என்று நடேசன் சைகையால் கேட்டான், சோபா தன் சுட்டுவிரலால் என்னைக் காட்டிவிட்டுச் சிட்டெனப் பறந்தாள். அன்றிரவே அவளது கடிதத்திற்குப் பதிலை எழுதினேன். மறுநாள் காலை நான் அலுவலகம் செல்லும்போது, தங்கள் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்தபடி ஒருத்திக்கு மற்றவள் தலைசீவிக்கொண்டிருந்தாள். சாதாரணமாக நடப்பதுபோல நடந்தநான், அவர்களுக்குப் பக்கத்தால் செல்லும்போது, கையில் கசக்கி, உருட்டி வைத்திருந்த பதில் கடிதத்துண்டைக் கையிலிருந்து நழுவ விட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல நடந்தேன். ஐந்து ஆறு அடி நடந்தபின்னர் திரும்பிப்பார்த்தேன். சோபா எழுந்துவந்து அதைக் குனிந்து எடுத்துக் கையில் பொத்திக்கொள்வதைக் கண்டேன்.
அதில் என்ன எழுதியிருந்தேன்? “எனது காதலை இன்னொருத்திக்குக் கொடுத்துவிட்டேன். நீங்கள் மிகவும் தாமதமாகிவிட்டீர்கள். மன்னிக்கவும்” என்று சிங்களத்தில் எழுதியிருந்தேன். உண்மையைத்தான் எழுதினேன். அப்போது, நடேசனின் மருமகள் முறையானவளை, பெற்றோர் பேசித் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இருவரும் விரும்பத்தொடங்கிச் சில மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அவள் வேறு யாருமல்ல, எனது மனைவிதான்!
சோபா சகோதரிகளுக்கு, ஓர் அண்ணன் இருந்தார். நல்ல கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டிருந்த அவருக்கு எங்களை விட ஓர் ஐந்து வயது அதிகமாக இருக்கலாம். அசப்பில், திரைப்பட வில்லன் நடிகர் வீரப்பாவின் தம்பி என்று சொல்லக்கூடிய தோற்றமுள்ளவர். சோபாவின் வீட்டிலும் ஓர் அறையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, ஐம்பது வயதைக் கடந்த இருவர் தங்கியிருந்தார்கள். யூனியன் பிளேஸ் இல் இருந்த உணவுக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் கடமையாற்றிய அவர்களில் ஒருவரான, குமரன் என்பவர், எப்போதும் நெற்றியில் சிறியதொரு சந்தனப்பொட்டு வைத்திருப்பார்.
அரசியல் எப்படி இருந்தாலும், சமூகம் என்ற அளவில் தமிழர்களும் சிங்களவர்களும் பெரிய முரண்பாடுகள் எதுவும் இல்லாமலும், தனிப்பட்ட நட்பைப் பேணியவர்களுமாக வாழ்ந்து வந்த காலம் அது. அந்தக் காலத்தைப் புலப்படுத்துவதற்காகவே, நெற்றியில் திருநீறும் பொட்டும் இட்டுக்கொண்டு சிங்களப்படம் பார்த்ததையும், இன பேதமின்றி இளைஞர்கள் கூடிக்குலாவித் திரிந்ததையும், காதலில் வீழ்ந்ததையும் குறிப்பிடும் சம்பவங்களை நான் மேலே பதிவிட்டேன்
மிகவும் கலவரத்துடன் என் இருப்பிடத்திற்கு வந்தபோது அங்கே அறையில், நண்பர்கள் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்று வெளியில் எங்கும் செல்லவில்லை என்றாலும், எங்கள் இருப்பிடத்தின் சூழ்நிலையும் குழப்பத்தில் இருப்பதைப் பற்றிய தகவல்களை என்னிடம் கூறினார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய எவ்வித எதிர்வுகூறல்களையும் எவரும் வெளிப்படுத்தமுடியாதவாறு விக்கித்து நின்றார்கள். சிறிது நேரத்தில், யாரோ யாருக்கோ சிங்களத்தில் உரத்து ஏசுகின்ற குரல் கேட்டது. தொடர்ந்து பலகுரல்கள் சங்கமிக்க, ஏதோ வாக்குவாதம் நடப்பது புரிந்தது. எட்டிப் பார்த்தோம், எதிர் வீட்டில், திறந்த விறாந்தையில் அமர்ந்திருந்த குமரனையும் மற்றவரையும் சிங்களவர்கள் அச்சுறுத்திக்கொண்டிருந்தார்கள். சோபாவின் அண்ணன் அவர்களோடு வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தான். குமரன் என்பவரை, அவரது
நெற்றிப்பொட்டை அழிக்குமாறு ஒருவன் அச்சுறுத்திக்கொண்டிருந்தான். அவர் அழிக்கவில்லை. முறைத்துப் பார்த்தபடி அமைதியாக இருந்தார். கைகலப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்குக் கணநேரம்கூட எடுக்காதே என்று நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கையில், எங்கள் வீட்டுக்காரரின் பிள்ளைகளான ரவியும், புவியும் வேகமாக ஓடிவந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த சிங்களவர்களோடு தர்க்கம் செய்தார்கள். அதுவரை, எவ்வித சேதமும் இல்லாமல் எப்படித் தப்புவது என்ற சிந்தனையில் இருந்த
எனக்கு வயிற்றில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியதுபோல இருந்தது. ஏன் ரவியும், புவியும் தாங்களாகவே வந்து இதில் தலையிடுகிறார்கள். அதுவும் சண்டையல்லவா பிடிக்கிறார்கள். கடவுளே…இனி..அந்தக் காடையர்களின் கவனம் எங்கள் பக்கமும் திரும்புமே….என்ற சோக அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னதான் கொழும்பில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இவர்களும் தமிழர்கள்தானே! நாங்கள் ரவியிடமும், புவியிடமும் சண்டையிடவேண்டாம் என்று மெதுவாகச் சொல்லிப் பார்த்தோம். ” அதெப்படி? இவங்க யார் எங்களை அச்சுறுத்த? வரட்டும் பார்க்கலாம், நாங்களும் அடிப்பம். ஏலுமெண்டால் அடிச்சுப் பார்க்கட்டும்” என்றவாறெல்லாம் பெரிய சத்தத்தில், அதுவும் சிங்களத்தில் கத்தினார்கள்!
நள்ளிரவு தாண்டியும் வாகன இரைச்சலும், வெடிச் சத்தங்களும், சனங்களின் ஆரவாரங்களும் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றிரவு முழுவதும் தூக்கத்தை மறந்து, அச்சத்தில் உறைந்திருந்தோம். எப்போது வருவார்களோ..எப்படி வருவார்களோ….என்று ஏங்கியபடி, எங்கள் நிலைமை எவரது கற்பனைக்கும் எட்டாத காட்சியாகத் தொடர்ந்தது. இதற்குமேல் இதுபற்றி நான் விவரிக்கத்தேவையில்லை. காலை விடிந்தது. தேனீர் வந்தது. வெளியே எட்டிப்பார்த்தோம். முன்வீட்டு விறாந்தையில், குமரனும் மற்றவரும் அதே இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள். குமரனின் நெற்றியில் பொட்டு இல்லை!
(நினைவுகள் தொடரும்)