நானும் சைக்கிளும்!…. (ஒரு அனுபவப் பகிர்வு 2) …. ஏலையா க.முருகதாசன்.
(முதல்நாள் சைக்கிள் சவாரியிலிருந்து தொடரான சைக்கிள் ஓட்டம்.)
ஏலையா க.முருகதாசன்.
பஞ்சு ஐயாவிட்டை திருநீறு போட்டுக் கொண்டு வந்ததற்குப் பிறகு எனக்குள்ளை பெரும் நம்பிக்கை ஏற்பட்டு சைக்கிள் ஓட்டத்தில் பெரும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.
ஓவ்வொருவரின் சைக்கிள்களையும் உற்றுப் பார்ப்பதுதான் எனது வேலையாகவிருந்தது.சிலருடைய சைக்கிள்கள் காண்டிலின் இரு பகுதிகளிலும் இரண்டு அடிக்கிற மணிகள்(பெல்கள்) இருந்தன.சைக்கிளோடு வரும் பெல் காண்டிலைத் தாங்கி நிற்கும் குறுகிய செங்குத்தான தண்டுப் பகுதியில் பூட்டியிருக்கும்.
இதைவிடச் சிலர் முன் மக்காட்டில் கொம்பு முளைச்ச குதிரையைப் பூட்டியிருப்பார்கள்.எனக்கு மணியம் என்பவரைத் தெரியும்.நடிகர் தியாராஜா பகவதர் மாதிரி கழுத்துக்கு கீழை தோள்பட்டையோடு தலைமயிர் வளர்த்திருப்பார்.பவுன் பல்லும் கட்டியிருப்பார்.
அவரின் சைக்கிள் அலங்காரம் அந்தமாதிரி இருக்கும்.மேலை நான் சொன்ன கொம்பு முளைச்ச குதிரை,காண்டிலில் இரண்டு பெல்கள்,இதைவிட சைக்கிள் கம்பிகளில் தட்டி பெல்மூடியில் டிங்டிங்டிங்டிங்…என்று தொடர்ச்சியாக மணியடிக்கும் பெல், பாருக்கு கம்பளம் சுற்றிய மாதிரி ஒரு பார் கவர் இப்படி அவற்i றசைக்கிள் கோவில் சிகரம் மாதிரி கலாதியாக இருக்கும்.
அவர் மகாஜனக் கல்லூரிக்கு எதிராக உள்ள லிங்கம் கபே பாலத்தில் தனது சைக்கிளை நிற்பாட்டி இறங்கி பெருமிதத்தோடு நடந்து வரேக்கை பென்ஸ் கார் வாங்கிய எங்கடை ஆட்கள் எங்கடை சனம் கூடிய இடத்தில் காரை நிற்பாட்டிப் போட்டு ஆராவது பார்க்கினமா என்ற கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு வருவினமே அப்படி அவரும் லிங்கம் கபேயில் தேத்தண்ணி குடிச்சுக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டே வருவார்.
இதில் லிங்கண்ணை தொட்டு எல்லாரும் புது உயிரினத்தைப் பார்ப்பது போல வியப்புடன் மணியத்தின்ரை சைக்கிளைப் பார்ப்பார்கள்.மணியமு; தனது சைக்கிள் வாகனத்திற்கான ஒப்பனைக்கு தான் எவ்வளவு சிலவழித்தேன் என்பதை குதூகலத்தோடு விலாவாரியாக எடுத்துச் சொல்வார்.
மணியம் சைக்கிளில் வாறார் போறார் என்றால் மதில் கட்டிய வீட்டுக்குள் இருப்பவர்களும் மணியத்தின்ரை சைக்கிள்தான் வீதிவலம் வருகின்றது என்பதை கண்டுபிடிச்சு விடுவார்கள்.
மணியம் சைக்கிளை கழுவித் துடைச்சு அலங்காரம் செய்து வைப்பதில் அவர் எவ்வளவுதூரம் சைக்கிளை நேசிக்கிறார் என்று தெரிஞ்சுவிடும்.
மணியத்தின்ரை சைக்கிள் மக்காட்: மற்றது றிம்,சில்லுக் கம்பிகள் மற்றது சகல சைக்கிள் உறுப்புக்களும் எப்பவும் மினுமினுத்துக் கொண்டே இருக்கும்.
இப்ப என்ரை விசயத்திற்கு வருகிறன்.மெல்ல மெல்ல நான் சீற்றில் இருந்து ஓடத் தொடங்க தெல்லிப்பரழைச் சந்தியிலுள்ள கடைகளுக்கு போய் சாமான்கள் வாங்கி அதைப் பையில் போட்டு காண்டிலில் கொழுவி ஓடிக் கொண்டு போய் குடுக்கத் தொடங்கி ,கால்மூட்டை அரிசிச் சாக்கை காண்டிலில் வைச்சு ஓடத் தொடங்கும் அளவுக்கு கட்டம் கட்டமாக தேர்ச்சி பெறத் தொடங்கினன்.
அங்கை இங்கை என்று நான் சைக்கிள்சவாரி செய்து ஆண்டுகள் கடக்க, எனது முகத்தில் பருக்கள் போடத் தொடங்கி அரும்பு மீசை வளரத் தொடங்கி, கமக்கட்டிலும், அங்கையும் பத்தையாக மயிர்கள் முளைக்கத்; தொடங்க என் நிர்வாண உடலைப் பார்த்து நானே மகிழ்ச்சியடையத் தொடங்கினன்.
சைக்கிளுக்கு டீசலும் மண்ணெண்ணையும் போட்டு துடைச்சு மினுமினுப்பாக வைச்சிருந்த நான் என்னூரின் ஒழுங்கைகளில் சுற்றுலா வரத் தொடங்கினம்.சில ஒழுங்கைகளில் ஒழுங்கையோடு ஒட்டி பங்குக் கிணறுகள் இருக்கும்.இந்தப் பங்குக் கிணறுகளில் குமர்ப்பிள்ளைகள் தண்ணி அள்ளுவார்கள் இல்லாட்டி குளிப்பார்கள்.என்னுடைய இந்தச் சைக்கிள் வலம் அவர்கள் என்னைப் பார்ப்பதும் நான் அவர்களைப் பார்ப்பதுடன் என்ரை சைக்கிளின் மினுமினுப்பை காட்ட வேண்டும் என்பதும் ஒன்று.
நான் இளந்தாரியாகிவிட்டன் என்பதை உணர்ந்த அப்புவும் அம்மாவும் தோளுக்கு மேலை வளர்ந்திட்டான் இனி அவனை நீளக் கயிற்றிலை கட்டி விட்டுப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்புவின்ரை புதுச் சைக்கிளை எடுத்து ஓடுவதைத் தடுக்கவில்லை.
பெரிய மச்சாளின் மகன்மாருடன் கிழமைக்கு ஒருமுறை இல்லாட்டில் இரண்டுமுறை கீரிமலைக்கு கடலிலும் கேணியிலும் குளிக்கப் போவதிலிருந்து அப்பப்ப காங்கேசன்துறை இராஜநாயகித் தியேட்டருக்கும், யாழ் தியேட்டருக்கும் படம் பார்க்கப் போவது வரை நீண்டு பிறகு தூர இடங்களில் உள்ள கோவில்களான சன்னதி,நல்லூ; ஆகிய கோவில் திருவிழாக்களுக்குப் போவது, அளவெட்டி கும்பிளாவளை திருவிழாவுக்குப் போவது யாழ்ப்பாணத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் இணுவிலில் உள்ள காலிங்கன் தியேட்டருக்கும் படம் பார்க்கப் போவது வரை எனது சைக்கிள்சவாரி தொடர்கதையாகியது.
எனது அயலட்டையில் உள்ளு பொம்பிளைப் பிள்ளையலும் சாமத்திப் பட்டு நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவர்களும்; தாமரைப் பூவாகி நின்றனர்.
„இப்ப நல்லாய் பழகிவிட்டியள் போல’ என ஓரிரு தோழிகள் சொல்ல அர்த்தம் பொதிந்த சிரிப்புகள் என தொடர்கையில் ஒழுங்கை முடிவிலிருந்து கனகம்மா வீடுவரை ஒரு பத்துமீற்றர்தான் இருக்கும். கனகம்மா வீடுவரை நடந்து போகவிருந்த தோழியை ஏறு காண்டிலில் கொண்டு போய்விடுகிறன் என்று கட்டாயப்படுத்தி ஏற்ற தோழியும் ஆரேன் பார்க்கினமோ என்று அங்கை இங்கை பார்த்து காண்டிலில்
ஏறி, கனகம்மா வீட்டடியில குதிச்சு இறங்குவது என எனது சைக்கிள் சவாரி வளர்ந்தது.அம்மா வேலிக் கிடுகு ஒட்டைகளுக்குள்ளாலை கண்டிட்டா,ஆரெண்டும் அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சுது,அம்மா தெரியாமாதிரி „ஆரைச் சக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்தனி „ என்று அம்மா கேட்க,அது இன்னார் என்று சொல்லி „காலிலை முள்ளுக்குத்தி நொண்டி நொண்டி நடந்து வந்தா அதுதான் ……’ என்று இழுக்க,’குமர்ப்பிள்ளையை சைக்கிளில் ஏற்றலாமா, இது அங்கை சுத்தி இங்கை சுத்தி எங்கையோ போய் முடியும்’ என்று அம்மா சொல்ல நான் பேசாமலிருந்தன்.(அம்மா சொன்ன மாதிரி அது சிக்கலானது உண்மைதான் அது இன்னொரு அனுபவக் கட்டுரையில் எழுதுவன்)
அப்பு காலமை ஐஞ்சு மணிக்கு எழும்பி காங்கேசன்துறை சீமெந்துப் பக்ரறிக்கு வேலைக்குப் போக, அம்மா புட்டோ இடியப்பமோ அவிசசுத்தர அதை நான் கொல்லங்கலட்டி றோட்டுக்கூடாக நடந்து குவாரி இருந்த தசசன்காடென்கிற அலம்பல் செடிகளும்,பேய்முட்டிக் கொடியும், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கிற கற்களையும் தாண்டி அப்பு வேலை செய்கிற குவாரி ஓபிசில் கொண்டு போய் குடுத்திட்டு வந்து பிறகு குளிச்சு சாப்பிட்டு பள்ளிக்கூடம் போவது வழக்கம்.அப்பு குவாரி ஓபீசுக்கும் பக்கரறி மெயின் ஓபீசிக்கும் இடையில் பியோனாக வேலை செய்தவர்.அவருக்கு யாழ்தேவி என்ற பட்டப்பெயரும் உண்டு.ஏனென்றால் அவர் ஸ்பீட்டாக சைக்கிள் ஓடுகிறவர் என்பதால்.
பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் – ஆசிரியைமாருக்கு பட்டப்பெயர் வைப்பது போல சீமெந்து தொழிற்சாலையிலும் பட்டப்பெயர்கள் உண்டு.ஒரே பெயர் கனபேருக்கு இருந்தால் பட்டப்பெயர்கள் அங்கு கௌரவவிருதுப் பெயர்களாகிவிடும்.
அடிக்கடி எந்தச் சொல்லை சொல்லிக் கதைக்கிறார்களோ அந்தப் பெயர் அவரவருக்கு காரணப் பெயராகி விடும்.பள்ளிக்கூட கக்கூசுகளில் மாணவ மாணவிகள் பாலியல் வரைபடங்களுடன் தமக்குப் பிடிக்காத ஆசிரிய ஆசிரியைகளின் பட்டப்பெயர்களை எழுதி விடுவது மட்டுமல்ல சோடியும் சேர்த்தும் எழுதி விடுவார்கள். பள்ளிக்கூட நிர்வாகம் எத்தனை முறைதான் அதற்கு மேல் வெள்ளை அடிப்பது.
பொன்னையா என்பவர் அடிக்கடி „அந்திரட்டி பிடிச்ச ஆக்கினை’ என்று சொல்லச் சொல்ல அதுவே அவருக்கு அந்திரட்டிப் பொனனையா என்று விளித்தலாகிச்சுது.
என்னுடைய அப்பு ஸ்பீட்டாக சைக்கிள் ஓடுவதால் அவருக்கு யாழ்தேவி என்று கௌரவப் பட்டம்.இன்னொருவர் செல்லத்துரை.அவர் எப்பொழுதும் சினிமா நடிகைகளை பெண்களை வர்ணிக்கும் போது „சொரூபம் மாதிரி’ என்று வர்ணிப்பார் அதனால் அவருக்கு சொரூபம் செல்லத்துரை என்று கௌரவ விருது வழங்கப்பட்டிருந்தது.
சைக்கிள் ஓடுவதில் அதீத பயிற்சி பெற்ற நான், சைக்கிளை ஓடிக் கொண்டே காண்டிலைப் பிடித்தபடி இரண்டு கால்களையும் தூக்கி பாரில் வைச்சு கனதூரம் போவது,முழங்கைகள் இரண்டையும் காண்டிலில் வைச்சுக் கொண்டு
ஓடுவது,காண்டிலைப் பிடிச்சு ஓடாமல் பிறேக் கம்பிகளைப் பிடிச்சு ஓடுவது,கைகள் இரண்டையும் விட்டிட்டு ஓடுவது, காண்டிலில் பக்கவாட்டுக்கு இருந்து கொண்டு ஒற்றை பெடலை உழக்கி ஓடுவது என இப்படியாக பல வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தன்.
நாங்கள் தோட்டம் வைச்சிருந்ததால் குப்பைக் கடகத்தை தலையில் வைச்சபடி அதை ஒரு கையாலையும்,மற்றக்;கையாலை காண்டிலைப் பிடிச்சுக் கொண்டு ஓடுகையில்,எங்கடை தோட்டத்துக்கு வெள்வாய்க்காலாலை ஏறி இறங்கித்தான் போக வேணும்.
குப்பைக் கடகத்தை தலையில் வைச்சு ஒரு கை கடகத்தைப் பிடிக்க மற்றக்கை காண்டிலைப்பிடிக்க வெள்ளவாய்க்காலுக்குள் சைக்கிளை இறக்கி பிறகு ஏற்றி கிட்டத்தட்ட பதினைஞ்சிலிருந்து இருபது சென்றிமீற்றர் அகல வரம்பில் குப்பைக் கடகத்துடன் சைக்கிளோடி தோட்டத்திற்கச் செல்லுமளவுக்கு புவியீர்ப்புக்கு ஏற்ற வாறு சமநிலையைக் கற்று தேர்ச்சியடைந்தேன்.
ஒரு நாள் குப்பைக் கடகத்தை தலையில் வைச்சு ஒரு கையால் கடகத்தை பிடித்து மற்றக் கையால் காண்டிலைப் பிடித்துக் கொண்டு வெள்ளவாய்க்காலில் சைக்கிளை இறக்கி மறுபக்கத்தில் சைக்கிளை ஏற்றிய போது சைக்கிளும் நானும் குப்பைக் கடகமும் தொபார் என்று விழ பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைப் பார்த்திட்டு „ ஏன் தம்பி இந்தச் சேர்க்கஸ்’ வேலையெல்லாம் செய்யிறியள் என்று சொல்லி சிரிப்புடன் கவலைப்பட்டார்கள்.
ஆனால் நான் விழுதல் என்பது எழுகையே என்பது போல விழுந்து விழுந்து எழும்பினாலும் எனது இந்தக் குப்பைக்கடகச் சேர்க்கஸ் வித்தையை விடவேயில்லை. நான் குப்பைக்கடக சேர்க்கஸில் பாவித்தது அப்புவின் பழைய சைக்கிளைத்தான்.
அப்பு பழைய சைக்கிளில் வேலைக்குப் போய்விடுவார்.அவருக்கு சாப்பாடு கொண்டு போய்க் கொடுப்பதற்கு புதிய சைக்கிளையே பாவித்தன்.
சாப்பாடு கொண்டு போய்க் கொடுத்து வரும் ஒருநாளில் படுவேகமாக சீமெந்து தொழிற்சாலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த நான் குவாரிப் பகுதி பாதையாலை சைக்கிளை ஓடிக் கொண்டு போகும் போது எனக்கு முன்னால் மூவர் போய்க் கொண்டிருந்தனர்.ஒருவர் லோங்ஸ் சேர்ட் போட்டிருந்தார்,மற்றைய இருவரும் வேட்டி சேர்ட்டுடன்; இருந்தனர்.ஒருவரின் கையில் பையில் ஒன்றிருந்தது.அவர்கள் முழுப் பாதையையும் அடைச்சு நடந்து கொண்டிருந்தனர்.லோங்ஸ் போட்டுக் கொண்டிருந்தவர் குவாரி மனேஜர் தேவராஜர்.இவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர்.மற்றவர் காசிப்பிள்ளை.இன்னொருவரின் பெயர் என்னவென்று தெரியாது.
குவாரியிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு போகும் டம்பராலும் யூக்கிளிட்டாலும் அந்தப் பாதையில் உள்ள சிறுசிறு கற்கள் எல்லாம் தூளாகி வெள்ளைப்புழுதி பறக்கும் பாதையாகி போயிருந்தது.
தற்செயலாக பின்னோக்கித் திரும்பிப் பார்த்த காசிப்பிள்ளை நான் வேகமாகச் சைக்கிளில் வருவதைக் கண்டதும் கையாலை சைக்கிளின் வேகத்தை குறை குறை என்பது போல சைகை செய்ய,நான் தட்டுத்தடுமாறி பிறேக் பிடிக்க,சர்ர்ரென்று சைக்கிள் சில்லு புழுதி கிளப்பிக் கொண்டு தேவராஜாவின் வலது பக்க காலோடு போய் நிற்க, அவர் பயந்து துடிச்சுப் பதைச்சு விலத்தி நின்று என்னைப் பார்க்க நான் எதுவுமே நடக்காததது போல அவரைப் பார்க்க, „ஆர் பொடியன் „ என்று தேவராஜா கேட்க, யாழ்தேவியின்ரை மகன் என்று காசிப்பிள்ளை பதில் சொல்ல „ஓகோ காரமான பொடியன்தான் குட்டி யாழ்தேவியான்’ என்று சொல்ல, அதைக் காதிலை வாங்கியும் வாங்காதமாதிரிப் நான் அப்புக்கு சாப்பாடு குடுக்கப் போனான் அப்புவிடம்’உந்த ஒபீசிலை வேலை செய்யிற தொக்கை மனேஜற்றை காலுக்குள்ளை சைக்கிளை விட்டிட்டன் அவர் உங்களிட்டை ஏதேன் கேட்பார்’என்று சொல்லிப் போட்டு சாப்பாட்டை குடுத்திட்டு வந்திட்டன்.
அன்றைக்கு பின்னேரம் அப்பு வேலையாலை வந்து சைக்கிளை முற்றத்திலை மரத்தோடு சாத்திக் கொண்டே சிரிச்சபடி „இஞ்சரப்பா உன்ரை மோன் இண்டைக்கு என்ன செய்தவனென்று தெரியுமே, பட்டைக் கல்லற்றை காலுக்குள்ளை சைக்கிளை விட அந்தாள் பயந்திட்டுதாம்.அவர் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்’ உன்ரை மோன் என்ரை காலுக்குள்ளை சைக்;கிளை விட்டிட்டு சைக்கிளில் இருந்தபடி நிமிர்ந்து இருந்தபடி ஏதோ நான் அவற்றை பாதையிலை நடந்து வந்த மாதிரி ஒரு பார்வை பார்த்தானே,உசாரான பொடியனதான்;’ என்று சொன்னவரப்பா என்றார்.
அப்பதான் எனக்குத் தெரிஞ்சுது அவருக்கு பட்டைக்கல்லர் என்ற கௌரவ விருதை தொழிலாளிகள் மனமுவந்து வழங்கியிருக்கின்றனர் என்பது. பின்பக்கம் பெரிதாகவும் வயிறு பெரிதாகவும் இருந்த அவரின் உருவமே அவருக்கு இக்கௌரவப் பெயரை வாங்கிக் குடுத்திருக்கலாம் என்பதை ஊகித்துக் கொண்டன்.பின்னாட்களில் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
சைக்கிளும் நானுமாக என்னூரில் உள்ள ஒழுங்கை குச்சொழுங்கை காலடிப் பாதைகள் என நண்பர்களுடன் திரிந்து கொண்டிருந்தன்.வேலி அடைக்காத இரண்டு கதியால்களுக்கிடையில் சைக்கிள் ஓடுவது.ஒரு கையால் இன்னொரு சைக்கிளைப் பிடித்துக் கொண்டு போவது இப்படிப் பலவாக எனக்கும் சைக்கிளுக்குமிடையில் ஒரு மெச்சத்தக்க உறவு இருந்து வந்தது.
எனது வாகனமான சைக்கிள் பின்னாட்களில் எனக்கு அபரிதமாக உதவத் தொடங்கியது.
எனது உடம்பு கணைச்சூடு உடம்பு.செல்லத்துரை பரியாரியிடம் எனது கணைச்சூட்டுக்கு அம்மா மருந்து கேட்க,அவர் சொல்லியிருக்கிறார்,கனச்சூட்டுக்கு ஏன் மருந்து,நிறையத் தண்ணியும் ,இளநீரும் குடிக்க வேணும் பழக்கங்களும் சாப்பிட வேணும்,கொஞ்ச நாளைக்கு ஒரு சின்னக் கிளாசிலை உடன்பனைக் கள்ளுக் குடிச்சால் வயிற்றுச் சூடு போயிடம் ஆயுள்வேத வைத்திய வாகடத்தில் அது இருக்குது.கள்ளு ஒரு மூலிகை மோனுக்கு வெறிக்கிற மாதிரி கனக்க குடுக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்..
அப்பு வேலையாலை வந்து தோட்ட வேலை முடிஞ்சதற்குப் பிறகு உடம்பு அலுப்புக்கென்று கள்ளுக் குடிப்பார்.ஆனால் நித்தம் குடிப்பவராகவும் இல்லை.மாதக் கணக்கில் குடிக்காமலும் இருந்திருக்கிறார்.
எனக்கு கள்ளுத் தருவதில் அப்புக்கும் அம்மாவுக்கும் உடன்பாடில்லை இல்லையென்றாலும் கணைச்சூட்டைக் கருத்தில் கொண்டு பின்னேர உடன் கள் வாங்கிக் கொண்டு வந்து அப்பு தர அம்மா’ இதை மருந்தென்று நினைச்சுக் குடி,வெறிக்கு குடிக்கிறதெண்டு நினைக்காதை மாமாவின்ரை காதுக்கு இந்த விசயம் போச்சுதோ பிரச்சினை வரும்,இரவிலை படிச்சு முடிச்சதும் ஒரு கிளாஸ் மட்டுமே குடிச்சிட்டு படுத்திட வேணும்.சாப்பிட்டுட்டு ஒரு நடைநடந்து நிலவு நேரங்களில் உன்ரை தோழன் தோழிகளோடு கதைக்கிறதை குடிக்கிற நாளையிலை செய்யக்கூடாது, திருப்பித் திருப்பிச் சொல்றன் இது உன்ரை கணைச்சூட்டுக்கு தருகிற மருந்துமாதிரி’ என்று அம்மா ஒரு பிரசங்கமே வைச்சார்.
நாக்கிலை பட்ட கள்ளு உருசி பின்னாளில்……
(ஓடும்)