கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 45 ….. (உண்மைக்கதை) ஏலையா க.முருகதாசன்.

„பொஸ்’ என்று என்னைக் கூப்பிட்டதும் என்னை நன்கு அறிந்தவரால்தான் இந்தப் பெயர் சொல்லி கூப்பிட முடியும் என எண்ணிய நான் திரும்பிப் பார்க்க யோகமலரும் திரும்பிப் பார்த்தாள்.

என்னை எனது நண்பர்கள் பொஸ் என்று கூப்பிடுகிறவர்கள் என்று யோகமலருக்குச் சொல்லியிருந்தன், அதனால் என்னைத்தான் யாரோ கூப்பிடுகினம் என்று அவளும் திரும்பிப் பார்த்தாள்.

உரும்பிராயைச் சேர்ந்த உமாகாந்தன் ஐஞ்சு மீற்றரளவில் பின்னால் வந்து கொண்டிருந்தான்.

„யாருங்க இவரு உங்களுக்குத் தெரிந்தவரா’ என்று யோகமலர் கேட்க „இவரும் ஜிஇயில வேலை செய்தவர், ஞாபகமில்லையா என்று கேட்க, „ஆ அங்க பார்த்த ஞாபகம் கொஞ்சமிருக்கு சரிங்க நீங்க அவரோட பேசிட்டு வாங்க, நான் அவங்களோட கன்ரீனுக்கு போறேங்க’ என்றவள் மற்ற மலேசியத் தமிழ்ப் பெண்ணோட கதைச்சபடி போய்க் கொண்டிருந்தாள்.

எனக்கு கிட்ட வந்த உமகாந்தன்’ எப்ப இங்கை வேலைக்கு வந்தனீங்கள் பொஸ்’ என்று கேட்க „இண்டைக்குத்தான்’ என்று பதில் சொன்ன நான் „நீங்கள் எப்ப தொடக்கம் வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்க „ஒரு கிழமைக்கு முந்தி இங்கை வேலை செய்யத் தொடங்கிட்டன்,பதினெட்டாம் நம்பர் கட்டிடத்தில் ஒரு மலேசிப் பொடியனோட இருக்கிறன்’ என்றான்.

நாங்கள் இருவரும் கதைச்சுக் கொண்டே நடந்து கொண்டிருக்கையில்’பொஸ் நான் ஒரு கதை கேள்விப்பட்டனான் நீங்கள் ஒரு மலேசிய தமிழ்ப் பெண்ணோட குடும்பம் நடத்திறியள் என்று திரும்பிப் பார்த்தாவே அவாதானோ’ என்று அவன் கேட்க எனக்குப் பகீர் என்றது.

உமகாந்தனும் ஜிஇ பக்ரறியில் வேலை செய்தாலும் அவனிருந்தது யூரோங்கில் நாங்களிருந்தது பூன்லேறைவில்.

நான் கல்யாணம் செய்தவன் என்பதும் எனக்கு மூன்று பிள்ளைகளிருப்பதும் அவனுக்கும் தெரியும்.உடுவிலில் சபா சின்னத்தம்பி வீட்டிலிருந்து நாங்கள் சிங்கப்பூருக்கு போவதற்கு கொழும்புக்கு உடுவிலிருந்துதான் மினிபஸ்ஸில்தான் போனோம்.என்னை வழியனுப்ப மனைவி பிள்ளைகள் வந்திருந்ததும்,எனது மூத்த மகன் விக்கி விக்கி அழுததையும் உமாகாந்தன் பார்த்திருக்கிறான், அதைக் கவனித்திருந்தான்.

அதனால் நான் ஒரு பெண்ணோடு வாழ்வது பிழை என்று அவன் உணர்வதை அவன் குரலின் தொனியிலிருந்து அறிய முடிஞ்சது.

நான் எந்தப் பதிலுமே சொல்லாமல் தலைகுனிந்தபடி நடந்து கொண்டிருந்தன்,’ம் என்னமோ செய்யுங்கள் „ என்று அவனும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு அதற்குப் பிறகு எதுவுமே கேட்கவில்லை.

அவனும் நானும் கன்ரீனுக்குள் நுழைந்த போது யோகமலரும்,மலேசியப் பெண்ணும் ஒரு மூன்று கதிரைகள் கொண்ட மேசையில் உட்கார்ந்திருந்தனர்

உமாகாந்தன் வேறொரு இடத்தைத் தேடி உட்கார, நான் யோகமலருக்குப் பக்கத்தில் இருந்த வெறுமனையான கதிரையில் போய் உட்கார்ந்தன்.

„ பிறேக்பாஸ்டுக்கு எதுங்க சாப்பிடுவம்’ என்று யோகமலர் கேட்க, எதுவென்றாலும் பரவாயில்லை’ என்று சொல்ல „நீங்க இருங்க நானே எங்க இரண்டு பேருக்கும் ஏதாவது எடுத்திட்டு வரேங்க’ என்று எழுந்து போக,மலேசியத் தமிழ் பெண்ணும் எழுந்து போனாள்.

நூடில்ஸ்சும், அதற்கு மேல் முட்டைப் பொரியலும்,பக்கத்தில் நெத்தலிக் கருவாடும் கச்சான்கடலைக் கொட்டைகளும் கலந்து பொரித்த பொரியலும் தனக்கும் எனக்குமாக வேறு வேறு கோப்பைகளில் யோகமலர் கொண்டு வந்து வைச்சாள்.

மலேசியப் பெண்ணும் அதே சாப்பாட்டைத்தான் கொண்டு வந்து சாப்பிடத் தொடங்கினள்.நூடில்சுக்கு முட்டைப் பொரியலும், நெத்தலிக் கருவாடும் கச்சான்கடலைக் கொட்டை கலந்த பொரியலும் சாப்பிடும் போது சுவையாக இருந்தன.

„ரேஸ்ற்றாக இருக்குதுங்க இல்லையா’ என்ற யோகமலருக்கு,’இந்த நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் கச்சானும் கலந்த பொரியலை இப்பதான் முதன்முறையாகச் சாப்பிடுகிறன்’ என:று சொன்னன்.

நான் உமகாகாந்தனுடன் கதைச்சபடி கன்ரீனுக்குள் போவதற்கு முன்,யோகமலர் மலேசியப் பெண்ணிடம் அவளின் பெயரை கேட்டறிந்து விட்டதால்,’இவங்க பெயர் லீலா, கோலாலம்பூரிலிருந்து வந்து இங்க வீட்டிலை தங்கி நின்று வேர்க் பண்றாங்க, இவங்களோட இன்னொரு கேர்ளும் இருக்காங்க,அவங்க செகண்ட் சிப் வேலையாம்’ என்று லீலாவைப் பற்றிச் சொன்னாள் யோகமலர்.

கொட்டலுக்கு போவதற்காக லிப்டடிக்கு போன போது லீலா எம்மோடு நடந்து வந்து லிப்டில் ஏறியதும், லிப்டிக்குள் நான் கதைதச்ச தொனியை வைச்சு என்னை சிறீலங்காவா என்று கேட்டு தானும் சிறீலங்கா வம்சாவழி என்று சொன்னது எனக்கு ஞாபகமிருந்ததால் „உங்கடை தாத்தா சிறீலங்காவில் எந்த இடத்தைச் சேர்ந்தவர் „ என்று கேட்க,’ தாத்தா யப்னாவில வட்டுக்கோட்டை என்ற இடத்தைச் சேர்ந்தவர்’ என்று லீலா சொன்னாள்.

கொட்டலில் சந்தித்த சுற்றுலா வந்த தம்பதிகள் தாங்கள் கொக்குவிலில் இருந்து வந்ததாகச் சொன்னார்கள்.நாங்கள் தங்கியிருந்த கொட்டலில் வேலை செய்த

இராஜகுமாரி தனது ஊர் சங்கானை என்று சொன்னாள்.அவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டன்.

இருபது நிமிட இடைவேளையாதலால் வேகமாக சாப்பிட்டு முடிச்சம்.தேத்தண்ணி குடிப்பமா என்று யோகமலரைக் கேட்க அவள் தலையாட்ட நானே போய் மூன்று தேத்தண்ணி வாங்கிக் கொண்டு வந்து அதில் ஒன்றை லீலாவுக்கு குடுத்தன்.

சிங்கப்பூர்த்; தேத்ண்ணிக் கடைகளில் பெரும்பாலும் கிளாசில்தான் தேத்தண்ணி குடுப்பார்கள்,கன்ரீனிலும் கிளாசில்தான் தந்தார்கள்.அதைக் குடிச்சுப் பார்த்த போது ஊரில் குடிச்ச தேத்தண்ணிக்கும் இதுக்கும் உருசி வித்தியாசமாகவே இருந்தது.

இடைவேளை முடிஞ்சு திரும்பவும் வேலை தொடங்கியது.பக்ரறிக்குள் பரல்லிங் என்ற பொலிஸ்ஸிங் பகுதி கண்ணாடி பதித்த ஒரு அறைக்குள் இருந்தது.

பரல்லிங் செய்யும் மிசின்கள் சந்தமாக இருப்பதால் கதவைப் பூட்டியே வைச்சிருக்க வேண்டும்.யோகமலர் வேலை செய்யும் உதிரிப் பாகங்களை தரம் பார்க்கும் இடத்திற்கு எனது அறையைத் தாண்டிப் போக வேணும்.

லீலா ஒரு சிறிய லேத் மிசினில் வேலை செய்தாள்.நீளமான உருண்டையான பிளாஸ்டிக் தடிகளை மிசினுக்குள் விட்டால் பற்கள் உள்ள நடுவில் ஓட்டை உள்ள சிறிய சக்கரமாக வெட்டி விழும்.

அதையும் தரம் பார்க்கும் இடத்திற்கு கொண்டு போய் குடுக்க வேணும்.யோகமலர்,இன்னும் மூன்று மலேய்ப் பெண்கள் அத்துடன் தரம் பார்க்கும் பொறுப்பாளர் ஒரு யப்பானியர்.எல்லாமாக ஐந்து காலமை சிப்டில் தரம் பார்ப்பவர்களாக இருந்தனர்.

ஓவ்வொருநாள் காலையிலும் தரம் பார்க்கும் யப்பானியப் பொறுப்பாளர் தனது இடத்துக்கு போகமுந்தி நான் வேலை செய்யும் பரல்லிங் பகுதிக்குத்தான் முதலில் வருவார்.அங்கிருந்த ஐஞ்சு மிசின்களும் வேலை செய்து கொண்டிருந்தால் முதுகில் தட்டி உற்சாகப்படுத்திவிட்டுப் போவார்.

ஏதாவது ஒரு மிசின் பழுதடைந்து நின்றால் அவரின் முகத்திலிருந்து சிரிப்புப் போய் சோர்ந்த முகத்துடன் அந்த இடத்தைவிட்டுப் போவார்.

உதிரிப் பாகங்களின் அளவைப் பொறுத்து எந்தந்த மிசினில் அதைப் போட வேண்டும் என்பதையும் அதற்குப் பொருத்தமான சிறிய கற்களைப் போட வேண்டும் என்பதையும் பழக்கித் தந்திருந்தார்கள்.

பெரிய கிடாரம் போன்ற ஒரு கொள்கலனுக்குள் வட்டம் வட்டமாக வெட்டப்பட்ட கல்வனைஸ் பைப் துண்டுகளைப் போட்டு அதற்கேற்ற கற்களைப் போட்டு அதற்குரிய திரவகத்தையம் ஊற்றி சுவிட்சைப் போட்டால் அந்தக் கிடாரம் போன்ற பகுதி நடுங்கத் தொடங்கும்.

உள்ளே இருக்கும் பைப்துண்டுகள் இடது புறத்திலிருந்து வலது புறமாக நடுங்கியபடி கற்களுக்குள் மூழ்கியும் வெளிப்பட்டும் சுற்றிக் கொண்டு வரும்.

இப்படி இடது புறத்திலிருந்து வலது புறமாக வைபிறேசன் என்ற நடுங்கிக் கொண்டு வந்தால்தான் வெட்டப்பட்ட பைப் துண்டுகளில் உள்ள பிசுறுகள் நீங்கி அழுத்தமாக வரும்.

வைபிறேசன் வலது புறத்திலிருந்து இடதுபுறமாக வந்தால் உதிரிப்பாகங்களோ கற்களோ சுற்றிக் கொண்டு வராது.

ஒரு நாள் இப்படி நடப்பதைக் கண்ட நான் எனது பொறுப்பாளரான சமற்றிடம் போய்ச் சொன்னன்.அவர் வந்து பார்த்துவிட்டுச் சொன்னார் „தசான் மிசினை நிற்பாட்டுங்கள்’ என்றவர் வேகமாகப் போய் வேர்க் மனேஜர் பொப் லீயிடம் சொல்ல ஒரு மணித்தியாலத்திற்குள் பெல்மக் என்ற பக்ரறியிலிருந்து மெக்கானிக்குகள் இரண்டுபேர் வந்தார்கள்.

பெரியதாளில் மிசினின் வரைபடம் கொண்டு வந்தவர்கள்; .அதனை தரையில் விரிச்சு வைச்சுப் பார்த்தவர்கள் மிசினின் ஒரு பகுதியை மூடியிருந்த மூடியைத் திறந்தார்கள்.உள்ளே இருந்த வயர்களை கழட்டினார்கள் பிறகு மாற்றிக் கொழுவிவிட்டு மிசினின் சுவிட்சைப் போட்டார்கள்.

வழமை போல மிசின் இடது புறத்திலிருந்து வலது புறமாக வேலையைச் செய்யத் தொடங்கியது.கிட்டத்தட்ட பத்துநிமிடங்களுக்குள் திருத்தம் செய்து மிசின் ஓடத் தொடங்கிவிட்டது.

மற்றைய மிசின்களில் ஒன்றில் வெட்டப்பட்ட உதிரிப் பாகங்களை போட்டு பரல்லிங் செய்ய வேணும்,இன்னொன்று பித்தளை உலோகச் சிறிய பாகங்களைப் போட்டு பரல்லிங் செய்யவேணும்.இன்னொரு மிசின் கீழிருந்து மேலாக வட்டமாக சுற்றிவருகிற மிசின்.அதில் சிறு சிறு பத்து உலோகத்திலான பெட்டிகள் மூடிகளுடன் இருக்கும்.அதற்குள் உதிரிப் பாகங்களைப் போட்டுப் பெட்டிகளை பூட்டி சுற்றவிட்டு பரல்லிங் செய்ய வேணும்.

உதிரிப் பாகங்களை பரல்லிங் செய்து முடிச்சதும் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து அதை கம்பிகளால் செய்யப்பட்ட பெட்டிக்குள் போட்டு ஒருவகை எண்ணைத் தொட்டிக்குள் இறக்கி அங்கும் இங்கும் ஆட்டிக் கழுவிப் போட்டு எடுத்து வைக்க தரம் பார்ப்பவர்கள் வந்தெடுத்துக் கொண்டு போய் மீண்டும் தரம் பார்ப்பார்கள்.அந்தப் பாகம் சரியாக பரல்லிங் செய்யப்படவில்லையென்றால் மீண்டும் பரல்லிங் செய்து எண்ணகை;குள் விட்டு எடுத்துக் குடுக்க வேணும்.

வழமையாக பரல்லிங் முடிந்தவுடன் உதிரிப் பாகங்களை பரல்லிங் கொள்கலனிலிருந்து பொறுக்கியெடுத்து அதனை எண்ணையில் கழுவிக் குடுக்க வேணும்.

உதிரிப் பாகங்கள் அவசரமாக தேவையென்றால் பரல்லிங் மிசினிலிருந்து உதிரிப் பாகங்களுடன் கற்களை அள்ளி பெட்டியொன்றில் போட்டு அதிலிருந்து பொறுக்கி எடுக்க வேணும்.சிறிய உதிரிப் பாகங்களை பொறுக்கி எடுப்பதற்கு இது சுலபமாக இருக்கும்.

சில நேரங்களில் அதுசார்ந்த பொயியிலாளரே நான் வேலை செய்யும் இடத்துக்கு வந்து என்னுடன் சேர்ந்து பொறுக்கி எடுப்பார்கள்;.அவர்கள் கஸ்டமான வேலைகளை இலகுமுறையில் செய்வதற்குச் சொல்லித் தருவார்கள்.மிகச் சிறிய உதிரிப் பாகங்களை கற்களுக்குள் இருந்து பொறுக்கி எடுப்பதற்கு நேரஞ் செல்லும்.

அதனால் அதற்கு அவர்கள் இலகுவான வழியைச் சொல்லித் தந்தார்கள்.அது எப்படியென்றால் இடது கையால் உதிரிப்பாகங்களையும் கற்களையும் சேர்த்து அள்ளி கைகளை விரிச்சு அதில் உள்ள உதிரிப் பாகங்களை எடுக்க வேணும்.உதிரிப் பாகங்கள் எடுத்து முடிஞ்ச கற்களை வேறொரு பெட்டியில் போட்டுவிட வேண்டும்.முழுக் கற்களுக்குள்ளும் கையை வைச்சுஎ கிளறிக் கொண்டிருப்பதைவிட பொறுக்கி எடுப்பதற்கு இது சுலபமான வழி.தோட்டுச்சுரை, மூக்குத்திச்சுரையளவிற்குகூட உதிரிப் பாகங்களிருக்கும்.

சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் வேலை செய்யப் பழக வேணுமென்றால் யப்பானியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

நான் ஒரு தொழிலாளியின் மகன் மட்டுமல்ல எனது தந்தை ஒரு தோட்டக்காரனும்கூட.எப்பொழுதும் எனது தந்தைக்கு சோம்பேறித்தனம் என்பது துளியளவும் பிடிக்கவே பிடிக்காது.

சிங்கப்பூரில் வேலை செய்த போதும் சரி ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஒரு பக்ரறியில் வேலை செய்த போதும் சரி எனது தந்தை சொல்லிக் குடுத்த சுறுசுறுப்பு தொழில் முன்னேற்றத்திற்கு எனக்கு ஏணியாகவிருந்திருக்கிறது.

என்எம்பியில் காலமை வேலைக்கு வரும் யப்பானிய அதிகாரிகள் பக்ரறியில் வெளியான ஒரு இடத்தில் ஒன்றுகூடி முதலில் ஐஞ்சுநிமிச உடற்பயிற்சி எடுப்பார்கள்.அது மூளையையும் உடலையும் உற்சாகப்படுத்தும்.

நான் பரல்லிங் வேலை செய்யத் தொடங்கி ஒரு கிழமை வரையும் எனது பொறுப்பாளர் சமற் வேகமாக பரல்லிங் அறைக்குள் நுழைஞ்சு தசான் குயிக் என்று சொல்லிவிட்டுப் போவார்.முருகதாசன் என்ற எனது கடைசிச் சொற்களான தாசன் என்பதை அவர் தசான் என்றே உச்சரிப்பார்கள்.நாட்கள் செல்லச் செல்ல அங்கு வேலை செய்பவர்களில் சிலர்; என்ற மரங்களில் பாய்ஞ்சு செல்லும் ராசான் என்ற கார்ட்டுன் சித்திரப் படத்தை ஞாபகப்படுத்தி ராசான் என்று கூப்பிடுவார்கள்.

சில நேரங்களில் வெட்டப்படும் உதிரிப் பாகங்கள் தரம் பார்க்கப்பட்டு பரல்லிங்கு வரும்,சில உதிரிப் பாகங்கள் வெட்டப்பட்டவுடன் நேரடியாக பரல்லிங்கு வரும்.

தரம் பார்க்கப்பட்ட உதிரிப் பாகங்களை ஒரு மலேயப்; பெண் கொண்டு வந்து வைச்சுவிட்டுப் போவாள்.அவசரமாக பரல்லிங் செய்து குடுக்க வேண்டுமென்றால் நான் இடைவேளைக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆரம்பத்தில் தசான் இடைவேளைக்கு போக வேண்டாம், உங்களுக்கான பிரேக் பாஸ்ற்றையும் ரீயையும் உங்களுடைய வைப் கொண்டு தந்து தருவா நீங்கள் வேலை செய்து கொண்டே சாப்பிடலாம் என்று சொன்ன எனது பொறுப்பாளரான சமற்

ஆனால் இது பக்ரறி சட்டப்படி பிழை,இடைவேளையிலும் பக்ரறிக்காக வேலை செய்வதால் இது உங்களுக்கான சலுகை,வைப்பிடம் சொல்லுங்கள் சாப்பாட்டையும் ரீயையும் யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் கொண்டு வந்து தரச் சொல்லி என்று சொல்லி வந்தவர்,ஒரு கிழமைக்குப் பிறகு இடைவேளையின் போது நான் வேலை செய்ய வேண்டுமென்றால் என்னிடம் அதைச் சொல்வதில்லை,யோகமலரிடமே அதைச் சொல்லி விடுவார்.

யோகமலரும் இடைவேளைக்கு கன்ரீனுக்குப் போகும் போது நான் வேலை செய்து கொண்டிருக்கும் அறையைத் திறந்து, நீங்கள் வேலை செய்யுங்கள், நான் சாப்பாடும் தேத்தண்ணியும் கொண்டு வந்து தாறன் என்று கையால் சைகை செய்துவிட்டுப் போய்விடுவாள்.

யோகமலரும் இருபது நிமிட இடைவேளை நேரத்தில் வேகம் வேகமாகச் சாப்பிட்டு தேத்தண்ணி குடிச்சிட்டு எனக்கு சாப்பாட்டையும் தேத்தண்ணியையும் வாங்கி ஒரு துணிப் பையில் போட்டு தேத்தண்ணி பையை உள்ளே வைச்சு பையின் கைபிடியோடு பிடித்தபடி கொண்டு வந்து தருவாள்.

சிங்கப்பூரில் தேத்தண்ணி உட்பட தண்ணீர் வகைளை வாங்கிக் கொண்டு போயக்; குடிக்க வேணுமென்றால் நூல் போன்ற பிளாஸ்ரிக் கயிறால் கட்டப்பட்ட பிளாஸ்ரிக் பையில் ஊற்றி ஒரு ஸ்ரோவும் வைச்சுக் குடுத்து விடுவார்கள்.

தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் யோகமலர் ஒரு சிறிய துணிப்பையை தனது பிளவுசின் பைக்கற்றுக்குள் வைச்சிருப்பாள்.

இடைவேளை நேரங்களிலும் நான் வேலை செய்ய வேண்டி வந்தால் கன்ரீனில் சாப்பாட்டுடன் பிளாஸ்ரிக் முள்ளுக் கரண்டியையும் பைக்குள் வைச்சு தேத்தண்ணி பையை துணிப்பைக்குள் வைச்சு அதன் கைப்பிடியை துணிப்பையின் கைப்பிடியோடு சேர்த்துப் பிடிச்சுக் கொண்டு வந்து தருவாள்.

பரல்லிங் செய்யும் மிசின்களின் சத்தம் இரைச்சலைக் குடுக்கக்கூடியவை.கதவைத் திறந்தவுடனயே வெளியே பெரும் இரைச்சலாகக் கேட்கும்.இரைச்சலால் காது உறுப்புக்கள் பழுதடையக்கூடாதென்பதற்காக இயர்புளக் என்ற பிளாஸ்ரிக்கால் செய்யப்பட்ட காதுத் துவாரத்துக்குள் வைக்கக் கூடிய சிறிய பொருளைத் தந்திருந்தார்கள்.

பக்ரறிகளில் உடல் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பது சிங்கப்பூரில் உள்ள எல்லாப் பக்ரறிகளுக்கும் சிங்கப்பூர் அரசு கொடுத்திருக்கும் சட்ட அறிவுறுத்தல்.

ஒரு நாள் இடைவேளை நேரத்தில் யோகமலர் எனக்குச் சாப்பாட்டையும் தேத்தண்ணிiயும் தந்து சாப்பிடச் சொல்லிவிட்டு பரல்லிங் முடிஞ்ச கொள்கலனிலிருந்து உதிரிப் பாகங்களை கைகளால் எடுத்துக் கொண்டிருத்தாள்.இந்த இரைச்சலுக்குள் நிற்க வேண்டாம் என நான் தடுத்தும் „பரவாயில்லீங்க’ என்று எடுத்துக் கொண்டிருந்தாள்.

உரத்துக் கதைச்சால்தான் கேட்கும்.திடீரென பொறுப்பாளர் சமற் கதவைத் திறந்து பார்க்க காதுகளில் இயர்புளக் போடாமல்; கைகளால் உதிரிப் பாகங்களை எடுத்துக் கொண்டிருந்த யோகமலரைக் கண்டதும் கைச்சைகையால் வெளியே வரச் சொல்லிக் கூப்பிட்டவர்,இயர்புளக் போடாமல் உள்ளை நிற்கக் கூடாது என்று சொன்னதுடன்,அவளைக் கூட்டிக் கொண்டு போய் தனது மேசையில் இருந்த இயர்புளக் பெட்டியைக் குடுத்து, இதைத் திறந்து உள்ளை இருக்கிற இயர்புளக்கைப் போட்டுக் கொண்டு உங்களுடைய கஸ்பெண்டோட அவர் சாப்பிடும் வரை இடைவேளை முடியும் வரை நிற்கலாம்.ஆனால் பக்ரறிச் சட்டத்தில் அதுவும் குற்றம்.எனக்குச் சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இயர்புளக்கை கவனமாக வைச்சிருந்து தேவை ஏற்படும் போது பாவித்துப் போட்டு இந்த பக்ரறியை விட்டு நிரந்தரமாக போகும் போது தந்துவிட்டுப் போங்கள் என்று குடுத்துவிட்டிருக்கிறார்.

இயர்புளக்கை போட்டுக் கொண்டு எனது பரல்லிங் அறைக்குள் வந்தவளிடம் சமற் என்ன சொன்னவர் என்று நான் சத்தமாக கேட்க இதைத் தந்தவர் என்று காதுகளில் செருகியிருந்து இயர்புளக்கை காட்டியவள் வேலை முடிஞ்சு வீட்ட போகும் போது சொல்றேனுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைவேளை முடிஞ்சு மற்றவர்கள் தத்தமது இருப்பிடங்களுக்கு போவதைக் கண்ட யோகமலரும் கதவைத் திறந்து தனது இடத்துக்குப் போனாள்.

வழமையாக மலேப் பெண்ணே தரம் பார்க்கப்பாட்ட உதிரிப் பாகங்களைக் கொண்டு வந்து நான் வேலை செய்யும் இடத்தில் பரல்லிங்குக்காக வைச்சுவிட்டுப் போவாள்.

ஆனால் அந்தப் பெண் கொண்டு வந்து வைப்பது குறைஞ்சு யோகமலர் கொண்டு வந்து வைக்கத் தொடங்கினாள்.

வேலை முடிஞ்சு போகும் போது „ஏன் அந்த மலே பெண் இப்ப பாட்ஸைகளை கொண்டு வைப்பது இல்லை’ என்று கேட்க, „அந்த மலேக்காரி நீங்க நியூ கப்பிள்ஸ்தானே,கனிமூன் முடிஞ்சும் நாலுநாள்தானே ஆகுது நீங்கள் அவரிட்டை இதைக் கொண்டு போகிற சாக்கிலை அடிக்கடி போனீங்கள் என்றாள் உங்களுடைய கஸ்பெண்டுக்கும் உங்களுடைய முகத்தைப் பார்த்ததும் எனேர்ஜி கூடுமல்லவா „ என்று அவள் சொன்னவள், நானும் பாட்ஸை கொண்டு வந்து வைக்கிற சாட்டிலை உங்களைப் பார்க்லாம்னு வரேனுங்க’ என்றவள்,’என்னோட முகம் சிவந்ததை அந்த மலேய்க்காரி கவனிச்சிட்டு,இப்படி முகம் சிவக்கிறதுக்கு இன்னொரு நேரக் காரணம் இருக்கிறுது என்னு காதில அதைச் சொன்னாங்க’ என்றவள் „வீட்டிலை இரவு அதைச் சொல்றேனுங்க „ என்றாள்.

நாட்கள் செல்லச் செல்ல பெண்டாட்டி கெட்டிக்காரி என்று பேர் எடுக்க வேணும் என்று நானும்,தனது மனுசன் பரல்லிங் செய்து குடுக்கும் பாட்ஸ்கள் மீண்டும் பரல்லிங்குக்கு வரக்கூடாது என்று நானும் அவளும் மிகவும் விசுவாசமாக கவனமாக பொறுப்புடன் வேலை செய்யத் தொடங்க கழிவுகள் என்று உதிரிப் பாகங்களை எறியாத நிலை வர சமற், பொப் லீ, தரப் பொறுப்பாளர் அங்கிருந்த இன்னொரு அதிகாரி எல்லாருக்கும் ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டது.

வேலைக்குப் போய் மூன்றாவது கிழமை நானும் யோகமலரும் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போவதற்காக உடுப்பை மாத்திப் போட்டு யோகமலரோடு வேலை செய்யும் மலேப் பெண் மலே சாப்பாடு தாறன் கொண்டு போய்ச் சாப்பிடுங்கள் என்று சொன்னதற்காக காத்திருக்கையில்,அலுவலகத்திற்கு போகவென வந்த வேர்க் மனேஜர் பொப் லீ எங்கள் இருவரையும் கண்டதும்’ யூ போத் ஆர் வொண்டபுல் அண்ட் யெனுயூன் வேர்க்கரஸ்;, ஐ ஆம் வெறி கப்பி.யூ போத் ஆர் வெரிகுட்: கபபிள்ஸ் அண்ட் ஸ்மாற் கப்பிள்ஸ் ஆல் த பெஸ்ற் கொட் பிளஸ் யூ„ என்று வாழ்த்திவிட்டுப் போனார்.

அவர் போனதும் வேகமாக வந்த மலே பெண் யோகி இது மலேப் பலகாரம் நீங்கள் ஜோகூர்பாருவில சாப்பிட்டு இருப்பீங்க,உங்களுடைய கஸ்பெண்டுக்கு சிறீலங்காவில இது கிடைச்சிருக்குமா என்று தெரியாது என்று ஒரு பிளாஸ்ரிக் பெட்டியில் ஏதோ பலகாரத்தைக் குடுத்தாள்.

அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு அவளுடன் நடந்து முன்வாசலைத் தாண்டி எங்களுடைய வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தம்…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.