வெள்ளீய அச்சுக்காலம் முதல் எண்ணிம யுகம் வரையில் எழுத்தூழியம் ஆற்றியவர் கானமயில்நாதன்!…. முருகபூபதி.
அஞ்சலிக்குறிப்பு:
வெள்ளீய அச்சுக்காலம் முதல் எண்ணிம யுகம் வரையில் எழுத்தூழியம் ஆற்றியவர் கானமயில்நாதன் !
முருகபூபதி.
இலங்கையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலப்பகுதியில் இருபதிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் சிலரே நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்திருப்பதாக ஒரு பதிவை படித்திருக்கின்றேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் நான் படித்திருந்த இந்தக்குறிப்பு இச்சந்தர்ப்பத்தில் நினைவுப்பொறியில் தட்டுவதற்கு, கடந்த 22 ஆம் திகதி மறைந்த இலங்கையின் மூத்த தமிழ்ப்பத்திரிகையாளர் ம. வ. கானமயில்நாதன் அவர்கள் பற்றிய நினைவுகளே காரணம்.
இலங்கையில் நீண்டகாலமாக காகிதத்தையும் பேனையையும் ஏந்தியவாறு ஊடகத்துறைக்கான செய்தி வேட்டையில் ஈடுபட்டு, சமூகத்திற்காக பேசியும் சமூகத்தை பேசவைத்தும் இயங்கிய எந்தவொரு பத்திரிகையாளனும், வெளிநாட்டுக்கு நிர்ப்பந்த வசமாக புலம்பெயரநேரிட்டால், எத்தகைய மனவலியுடன் காலத்தை கடத்தியிருப்பார் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் எங்கள் தமிழ் ஊடகக் குடும்பத்தைச்சேர்ந்த சகோதரர் கானமயில்நாதன்.
உள்ளார்ந்த ஊடகத்துறை ஆற்றலும் படைப்புத்திறனும் மிக்க எந்தவொரு எழுத்தாளனும் தாயகம்விட்டு உலகின் எந்த மூலைக்குச்சென்றாலும், தனது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்கே காத்திருப்பார்.
அது அங்கே கிட்டாதுபோனால், சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா? என்று சொல்லிக்கொண்டோ, பாடிக்கொண்டோ நாடு திரும்பிவிடுவார்கள்.
அவ்வாறு ஐரோப்பியா கண்டத்தில் சொர்க்கமாகத் திகழும் சுவிட்சர்லாந்தில் கிடைத்த சுகவாழ்வையே துறந்து நாடு திரும்பி,
மீண்டும் தான் உளமாற நேசித்த ஊடகத்துறைக்கு வந்தவர் கானமயில்நாதன்.
பொதுவாகவே எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் தமது அடையாளத்திற்காக தொடர்ந்தும் அமைதியாக எழுதிக்கொண்டிருந்தாலும், கலந்துரையாடல், மேடைப்பேச்சு , விவாதம் என்று வந்துவிட்டால் குரலை உயர்த்தியே பேசுவார்கள். ஆனால், அதிர்ந்தே பேசத் தெரியாத ஒரு தமிழ் ஊடகவியலாளர் எம்மத்தியில் வாழ்ந்தார் என்றால், அந்தப்பெருமையும் புகழும் கானமயில்நாதனுக்கு உரியது என்பது எனது அபிப்பிராயம்.
அவர் கொழும்பில் தினபதி – சிந்தாமணி பத்திரிகையில் பணியாற்றிய காலப்பகுதியில் நான் வீரகேசரியில் பணியிலிருந்தேன்.
அவருடன் அந்த குணசேனா நிறுவன ஊடகப்பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் செல்வரத்தினம் அவர் பற்றி அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பின்னாளில் செல்வரத்தினம் பிரான்ஸுக்கும் நான் அவுஸ்திரேலியாவுக்கும், யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் வெளியான பத்திரிகைகளில் பணியாற்றிய சிலர் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.
அதற்கெல்லாம் அங்கிருந்த அசாதாரண அரசியல் நிலைமைகளும் அச்சுறுத்தல்களும்தான் காரணம்.
கானமயில்நாதனுக்கு தெரிந்த தொழில் ஊடகத்துறை மாத்திரமே. அதனை அவர் நெஞ்சாற நேசித்தார். அவர் பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். பல்லாயிரக்கணக்கான செய்திகள் அவரால் செம்மைப்படுத்தப்பட்டு வெளிவந்தன.
வெள்ளீய அச்சு எழுத்துக்காலம் முதல் எண்ணிம யுகம் வரையில் அயராமல் எழுத்தூழியம் புரிந்தவர்.
இலங்கையில் 1977 இற்குப்பின்னர் பேரினவாத அரசியல் மேலோங்கிய காலத்திலும் 1980 இற்குப்பின்பு போர் மேகங்கள் சூழ்ந்த வேளையிலும் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் தனக்குத் தெரிந்த தொழிலையே அர்ப்பணிப்புடன் மேற்கொண்டவர்.
1985 இற்குப்பின்னர் அவர் சிறிது காலம் வீரகேசரியின் யாழ். கிளை அலுவலகத்திலிருந்து பணியாற்றியவேளையில் அவருடன் செய்திகள் தொடர்பாக பேசும் சந்தர்ப்பங்கள் எனக்குக் கிடைத்தன.
யாழ்ப்பாணத்தில் அவர் உதயன் பத்திரிகையில் பணிதொடர்ந்தபோது நான் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
அவர் அங்கே அந்த போர் நெருக்கடி காலத்தில் எவ்வாறு இயங்கினார் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் அறியமுடிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத்தொடங்கிய காலைக்கதிர் நாளிதழின் முன்னோட்ட வெளியீடாக வந்த விடியலின் வீச்சு சிறப்பிதழில் கானமயில்நாதன் சிறப்பானதோர் கட்டுரையை இலக்கிய நயமுடன் உதயசூரியனின் பொன்னிறக்கதிர்களுக்கு ஒப்பிட்டு எழுதியிருந்தார்.
அந்தச் சிறப்பிதழில் நானும் அதன் ஆசிரியர் நண்பர் வித்தியாதரன் கேட்டவாறு உதயதாரகை முதல் காலைக்கதிர் வரையில் என்ற கட்டுரையை எழுதியிருந்தேன்.
அதுவரையில் கானமயில்நாதன் அவர்கள்தான் காலைக்கதிரின் ஸ்தாபக ஆசிரியர் என்பது எனக்குத் தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர், யாழ். காலைக்கதிர் அலுவலகம் சென்று அவரை நேரில் சந்தித்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன். அப்போதுதான் அவரை நேருக்கு நேர் முதல் முதலில் சந்திக்கின்றேன் எனச்சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்தத்தகவல் எனக்கே அதிசயமானது. ஆனால், அதுதான் உண்மை !
கொழும்பில் அவர் தினபதி – சிந்தாமணியில் பணியாற்றிய காலத்திலும் அங்கு நடந்த பொதுநிகழ்வுகளில் அவரை காணமுடியாது. எந்தவொரு மேடைகளிலும் அவர் பேசியதாகவும் அறியக்கிடைக்கவில்லை. நாம் கொழும்பில் தமிழ்ச்சங்கம் உட்பட பல இடங்களில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். ஆனால், கானமயில்நாதன் என்ற பத்திரிகையாளர் அதில் கலந்துகொண்டார், உரையாற்றினார் என்ற செய்தியே வெளிவந்திருக்காது.
அந்தளவுக்கு தன்னடக்கத்தின் உறைவிடமாக திகழ்ந்தவர் கானமயில்நாதன்.
நெருக்கடி மிக்க காலத்தில் அவருக்கு சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைவதற்கான வாய்ப்புக்கிடைத்து செல்லும்போதும், தனக்காக அல்லாமல், தனது வளர்ப்பு பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருதிச்சென்று அவர்களுக்கான வளமான எதிர்காலத்தை அமைத்துக்கொடுத்துவிட்டே தாயகம் திரும்பி, மீண்டும் தான் உளமாற நேசித்த தொழிலுக்கு வந்துவிட்டார் என்ற செய்தியும் எனக்கு காலம் கடந்துதான் தெரியவந்தது.
வழிகாட்டி மரங்கள் நகருவதில்லை என்பதையும் அவரது வாழ்க்கை முன்னுதாரணமாக்கியிருக்கிறது.
அந்தவகையில் ஓர் அதிசயப்பிறவியாகவும் அவர் திகழ்ந்திருக்கிறார்.
பாரதி நினைவு நூற்றாண்டில் மறைந்திருக்கும் கானமயில்நாதனும், பாரதியைப்போன்று அச்சுறுத்தலையடுத்து இடம்பெயர்ந்து, மீண்டும் பாரதியைப்போன்றே திரும்பிவந்து, அமைதியாக பணிதொடர்ந்து வயது மூப்பின் காரணமாக எம்மை விட்டு விடைபெற்றுள்ளார்.
தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தாமல், சமூகத்திற்கான செய்தியாளனாகவே வாழ்ந்திருக்கும் கானமயில்நாதன் அவர்கள் பிரான்ஸில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பினாலும் வட இலங்கையில் யாழ்.ஊடக அமையத்தினாலும் பாராட்டப்பட்டு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளமை மனதிற்கு நிறைவு தருகிறது.
அவர் இந்த விருதுகளையெல்லாம் எதிர்பார்த்து எழுத்தூழியம் செய்ய வந்தவரில்லை என்பதை அவரை நன்கு அறிந்த அனைவரும் தெரிந்துவைத்திருப்பார்கள்.
அமைதியின் உறைவிடம் கானமயில்நாதன் அவர்களுக்கு கடல் கடந்த தேசத்திலிருந்து இந்த அஞ்சலிக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன்.
—0—