கதைகள்

நடுகைக்காரி!…. 30 ….. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

சாப்பிடும் போது முறுக்குச் சத்தமும் கச்சான்கடலைச் சத்தமும் கேட்கக்கூடாது என்பதற்காக வாயைக் கைகளால் பொத்தி பாறுவும்,பூரணியும் தனமும் மற்றப் பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் „முறுக்கோடை சேர்த்து மத்தியானச் சாப்பாட்டையும் கொண்டு வந்து சாப்பிடலாந்தானே’ என்று நகைச்சுவையாகச் சொல்ல, அவருக்குப் பக்கத்திலிருந்தவராக்கும் ஏன் பாய் தலைகணியையும் கொண்டு வந்திருந்தால் ஆரச்சோர படுத்திட்டு போகலாமே என்று அவரும் நகைச்சுவையாகச் சொல்ல சிரிப்பை அடக்க முடியாமல் பாறு சத்தமாக சிரிச்சுவிடுகிறாள்.

அந்த நிசப்தமான இருட்டில் தியேட்டரில் உள்ள அனைவருக்குமே அவளின் சிரிப்புச் சத்தம் கேட்டு விடுகிறது.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பாறுவையும் தனத்தையும் பூரணியையும் கடந்து நடந்து கொண்டே திரும்பிப் பார்த்த இரண்டு இளைஞிகள் கொஞ்சம் தாமதிச்சு நின்று அவர்களில் ஒருத்தி பாறுவைப் பார்த்து „நீங்கதானே முறுக்குக் கொண்டு வந்து கறுக்கறுக்கென்று சாப்பிட்டதும் கொஞ்சம் பொறுத்து வாய்விட்டுச் சிரிச்சதும் „ எனக் கேட்க பாறு,’ம் நான் மட்டுமல்ல இவாவுந்தான்’ என பக்கத்தில் நின்ற தியேட்டரில் பழக்கமாகிய பெண்ணைக் காட்டுகிறாள் பாறு.

„நீங்கள் முசுப்பாத்தியான ஆள் போல’ என்று அவர்கள் சொல்லிக் கொண்டே நடக்க,தியேட்டரில் அருகருகாக ஒரே வரிசையில் இருந்த அந்த இளம் ஆணும் பெண்ணும்,ஞானத்திடமும் பாறுவிடமும்’ இன்னொரு முறை படம் பார்க்க வரும் போது சந்திப்போம் என அரைப்பங்கு நம்பிக்கையுடனும் மீதி அரைப்பங்கு சந்தோசமாகவும் சொல்லிவிட்டு அவர்களும் போய்விடுகின்றனர்.

தெற்கு நோக்கி ஞானம்,பாறு,தனம், பூரணி நடந்து கொண்டிருக்கும் போது ஞானத்தைப் பார்த்து „இனி எங்கை போகப் போறம் „ என்று கேட்க, „இனி கே.கே.எஸ் றோட்டிலையிருக்கிற தமிழ்ப் பண்ணை புத்தகக் கடைக்குப் போய் கதைப் த்தகங்கள் வாங்கிப் போட்டு அப்படியே கொஞ்சத்தூரத்திலை தாமோதர விலாசும், சுதா கபேயும் இருக்கின்றன.தாமோதர விலாசிலை நல்ல மரக்கறிச் சாப்பாடு இருக்கும், சுதா கபேயிலை குத்தரிச் சோறும் முருக்கங்காய்க்கு இறால் போட்டு வைச்ச கறி, கோழிக்கறி,ஆட்டுக்கறி, நண்டுக்கறி,கோவா வறை கத்தரிக்காய்க் கறி என்று எல்லாம் இருக்கும்……’

„ உங்களுக்கு எங்கை சாப்பிட விருப்பமோ அங்கை போவம்’ என்று ஞானம் சொல்ல,பாறு’ தாமோதர விலாசுக்கே போவம், நானும் யூனியன் கொலிஜ்ஜிலை படிக்கேக்கை கேள்விப்பட்டனான்,தாமோதர விலாஸ் சாப்பாடு நல்லாயிருக்கும் என்று’ என்றவள் பூரணியையும் தனத்தையும் பார்த்து „உங்களுக்கும் விருப்பந்தானே’ என்று கேட்க „ எங்கள் இரண்டு பேருக்கும் எந்தப் பிரச்சினையும்

இல்லை, நீங்கள் இரண்டு பேரும் எங்கை போறியளோ நாங்கள் உங்களுக்கு பின்னாலை வர வேண்டியதுதான் „ என கொஞ்சம் பகிடியாகச் சொல்கிறாள் தனம்.

தமிழ்ப் பண்ணை புத்தகக் கடைக்குள் நுழைந்த நால்வரையும் „வாங்க புதுக் கதைப் புத்தகங்கள் எல்லாம் வந்திருக்கு „ என்று புத்தகக் கடை முதலாளி சொல்லிக் கொண்டிருந்தவர் ஞானத்தைக் கண்டதும் „ என்ன தம்பி கனநாளாக இந்தப் பக்கம் காணவில்லை’என்று கேட்கிறார்.

„நேரம் கிடைக்கேலை இண்டைக்குத்தான் நேரம் கிடைச்சுது,இவர்களுக்கும் புத்தகம் வாசிக்க விருப்பம் ஆனால் இவர்களுக்கு புத்தகங்கள் கிடைப்பதில்லை’ என்று சொல்லிக் கொண்டே தனத்திடமும் பூரணியிடமும் காசைப்பற்றி யோசிக்காமல் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களைச் சொல்லுங்கள்’ என்று சொல்ல,அவர்கள் இருவருக்குமே புத்தகக் கடை ஒரு புதினமாகவும் புது அனுபவமாகவும் இருந்தது.

பூரணியும் தனமும் யூனியன் கல்லூரியில்தான் படித்தவர்கள்.யூனியன் கல்லூரி அதிபர் எந்த வேறுபாடுமே பார்க்காதவர்.மனிதர்கள் அனைவரும் சமமே என்ற மனித நேசம் உள்ளவர்கள்.

பூரணியும் தனமும் ஒன்பதாம் வகுப்புடன் எஸ்.எஸ்.சி சோதனை எடுக்காமலேயே பள்ளிக் கூடத்தைவிட்டு நின்றுவிடுகின்றனர்.படிப்பித்த ஆசிரியர்களும் பூரணி தனம் பாறு ஆகியோரைச் சார்ந்தவர்களை தொடர்ந்து படியுங்கள் என்று ஊக்கப்படுத்தவும் இல்லை.

படிப்பு என்பது எழுதவும் வாசிக்கவும் கடிதங்களை வாசிக்கவும் தெரிந்தால் போதும் என்பதை,மேட்டுக்குடி வர்க்கம் அவர்களின் பெற்றோருக்கு சொல்லிக் குடுத்தது மட்டுமல்ல, படிச்சுத்தான் உங்கடை பிள்ளையள் என்னு செய்யப் போகினம் என்று ஒரு தாழ்வுமனப்பான்மைச் சிந்தனையை வளர்த்தும்விட்டனர்.

படிச்சதற்குப் பிறகு தோட்டத்திலை புல்லுப் பிடுங்கவும்,வெங்காயம் நடவும், வெங்காயம் கிளறவும், வெங்காயத் தளையை அறுக்கவுந்தானே உங்கடை பிள்ளையல் போகப் போகினம் என்று அம்பனை வயலில் தோட்ட வேலைக்காக கூப்பிட வருகிறவர்கள் சைக்கிளில் காலை ஊன்றிக் கொண்டு அவர்களின் படலைகளில் நின்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொன்னதை „ அது சரிதான் போல கிடக்கு „ என்று யோசிக்க வைச்ச அம்பனை வயல்வெளியில் தோட்டம் செய்தவர்களின் சிலரின் நயவஞ்சக போக்கை அவர்கள் உணரவே இல்லை.

பூரணியாலும் தனத்தாலும் எழுதவும் வாசிக்கவும் முடியும்.ஆனால் பாறுவின் தகப்பன் தாய் யாருக்குமே பயப்படாதவர்கள்.எவர் முன்னும் கூனிக்குறுகி தலையில் கட்டியிருந்த சால்வையை அவிழ்த்து இடுப்பில் கட்டியோ கமக்கட்டில் வைச்சோ நயினார் என்று சொல்லாதவர்கள்.

அதனால்தான் பாறு பிறைவேட்டாக எஸ.எஸ்.சி சோதனை எடுக்கப் போறன் என்று சொன்னதும் அதற்குச் சம்மதிச்;சது மட்டுமல்ல ஞானம் சொல்லிக் குடுப்பதற்கும் சம்மதிச்சனர்.

தமிழ்ப் பண்ணை புத்தகக் கடையின் அலுமாரிகளில் அடுக்கி வைச்சிருந்த கதைப் புத்தகங்களைப் பார்த்ததும் பூரணிக்கும் தனத்துக்கும் கதைப்புத்தகங்களை வாசிக்க வேண்டுமே என்று ஆர்வ மிகுதியால் நீண்டகாலமாக தாம் இழந்துவிட்ட ஒன்றை மீண்டும் பெற்றுவிட்டதாக உணர்வு ஏற்பட்டது.பாறுவும் இதுவரையில் புத்தகக் கடைகளுக்கு சென்றதில்லையென்றாலும் வாசித்தல் என்பது அவளுக்கு பரிச்சயமான ஒன்றாகவே இருந்தது.

„பூரணியக்கா தனமக்கா உங்களுக்கு தேவையான புத்தகங்களை சொல்லுங்கள் „ என்று ஞானம் கேட்க, „நீங்களே நல்ல புத்தகங்களை எடுத்துத் தாருங்கள் தம்பி„ என்று தனம் சொல்ல,ஞானம் சிவகாமியின் சபதம்,பொன்னியின் செல்வன், வரதராசனாரின் கரித்துண்டு, நெஞ்சில் ஒ ருமுள்,சாண்டியல்னின் கடல்புறா,யவனராணி,கன்னிமாடம் ஈழத்துச் சிறுகதைகளின் தொகுப்பு, டொமினிக் ஜீவாவின் கண்ணீரும் தண்ணீரும் என புத்தகங்களை கேட்டு வாங்கி வைச்சுக் கொண்டே „பாறு உங்களுக்கு’ என்று பாறுவைப் பார்த்துக் கேட்க,’ அதான் இந்தப் புத்தகங்களையே நாங்கள் மாறி மாறி வாசிக்கவெ ஐஞ்சாறு மாதம் தேவை’ என்று சொல்கிறாள் பாறு.

கதைப் புத்தகங்களுக்கு காசைக் குடுத்த ஞானம்’ எல்லாத்தையும் பையிலை போட்டு வையுங்கள், சாப்பிட்டிட்டு வந்து எடுக்கிறம் „ என்று கடை முதலாளியிடம் சொல்லிவிட்டு, சாப்பிடுவதற்காக பூரணி, தனம் பாறுவையும் கூட்டிக் கொண்டு தாமோதர விலாசுக்குப் போகிறான்.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எல்லாரையும் கூறுகுறிப்பாக பார்த்த சாப்பாடு பரிமாறறிக் கொண்டிருந்த வயதானவர் „நீங்கள் எல்லாரும் எந்த இடத்திலையிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்க மற்றவர்கள் வாய்திறந்து பதில் சொல்ல முந்தி,தெல்லிப்பழை அம்பனையிலிருந்து வருகிறம் „என்றவன் தனத்தையும் பூரணியையும் காட்டி இவை இணர்டு பேரும் என்னுடைய அக்காமார்,இவ என்னுடைய மாமாவின்ரை மகள் மச்சாள் என்று தனக்குப் பககத்திலையிருந்த பாறுவைக் காட்டிச் சொல்கிறான்.

அவரோ விடவில்லை „ அப்ப மச்சாளைத்தான் கட்டப் போறியள்’ என்றவர் „மெய்யே தம்பி இரண்டு பேருக்குமிடையில் காதல் கீதல் இல்லையோ „ என்று கேட்க,’அது இல்லாமலா’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்கிறான் ஞானம்.

தெல்லிப்பழை அம்பனையிலிருந்து வருகிறம் என்று சொன்னதைக் கேட்ட பரிமாறுபவர்’அப்படியென்றால் உங்களுக்கு மகாஜனாவுக்கு முன்னாலை லிங்கம் கபே நடத்திற தருமலிங்கத்தைத் தெரிய வேணுமே, அவர் இஞ்சைதான் வேலை

செய்தவர்’ என்று அவர் சொல்ல’லிங்கண்ணனையா ஓ நல்லாத் தெரியுமே’ என்று ஞானம் சொல்கிறான்.

தங்களிருவரையும் தன்னுடைய அக்காமார் என்று ஞானம் சொன்னதைக் கேட்டுத் திகைத்த தனமும் பூரணியும் நன்றியுடன் ஞானத்தைப் பார்க்கின்றனர்.

தாமோதர விலாசில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாறு „ நாங்கள் ஒரு நாளும் இந்தக் கடையில் வந்து சாப்பிட்டதே இல்லை’ என்று சொல்ல „ம்’ என்று மட்டும் சொல்லித் தலையாட்டுகின்றனர் பூரணியும் தனமும்.

சாப்பிட்டு முடிஞ்சதும் மீண்டும்,தமிழ்ப் பண்ணை புத்தகக் கடைக்கு நால்வரும் வந்து, ஞானம் அங்கு வாங்கிய புத்தகங்களை கடை முதலாளி ஒரு பையில் போட்டு வைச்சிருந்ததை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வீதியில் நடந்து கொண்டிருக்க’ தம்பி என்னட்டைத் தாருங்கள் நான் தூக்கிக் கொண்டு வாறன் „என்று பூரணி ஞானத்திடம் கேட்க’வேண்டாமக்கா இது கொஞ்சப் பாரம் நானே தூக்கிக் கொண்டு வாறன்,தெல்லிப்பழையிலை இறங்கியவுடன் நீங்கள்தானே வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகப் போறீங்கள்,அங்கை இறங்கியதும் ஆளுக்கு இரண்டு புத்தகங்கள் என எடுத்துக் கொண்டு போனால் பாரம் தெரியாது’ என்று சொன்ன ஞானத்திற்கு, „தம்பி நாங்கள் உங்களுடன் படம் பார்த்ததையோ, அந்தப் புத்தகக் கடையில் நீங்கள் எங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தந்ததையோ,தாமோதர விலாசில் சாப்பாடு வாங்கித் தந்ததையோ எங்களாலேயே நம்ப முடியவில்லை, நன்றி தம்பி, எங்களைப் போன்ற ஆட்களுக்கு யாருமே வேற்றுப் பிரிவு பார்க்காமல் செய்ய மாட்டினம்,நாங்கள் எங்கனையோ நீங்கள் எங்கனையோ அதுவும் உங்கடை பகுதியிலிருந்து இப்படி அதையெல்லாம் மீறி எங்களைச் சமனாகப் பார்க்கிறது ஒரு கனவு போல இருக்கிறது,புளியடி வைரவர் என்றைக்கும் துணையாக நிற்பார் „ என்று தனம் நெகிழ்ந்து சொல்லிக் கொண்டாள்.

பாறு அமைதியாக வந்து கொண்டிருந்ததைப பார்த்த தனம்’ என்ன பாறு எதுவுமே கதைக்காமல் வாறாய்…’ பூரணி சொல்ல, „அவளுக்கு நாங்கள் வாறது இடைஞ்சலாய் இருக்குது போல, இந்த இரண்டுகளையும் ஏன்தான் கூட்டிக் கொண்டு வந்தன் என்று யோசிக்கிறாள் போல’ என்றவள் „ தம்பி உங்களைக் கெஞ்சிக் கேட்கிறம்,பாறுவைக் கைவிட்டிடாதீர்கள் நீங்கள் கைவிட்டியளோ அவள் உயிரோடையே இருக்க மாட்டாள்,நீங்கள் ஆரெண்டு தெரிஞ்சும் துணிஞ்சு உங்களை விரும்புகிறாள் என்றால் புளியடி வைரவர் ஏதோ முடிச்சுப் போட்டு வைச்சிருக்கிறார் என்று நினைக்கிறன்’ என்று சொல்லி முடிக்கிறாள்.

„தனமக்கா நான் ஏன் கதைக்காமல் வர்றனென்டால் நாளைக்கு நடக்கப் போவதை நினைச்சுப் பயத்தாலைதான்’ என்று பாறு சொல்ல,’ நீங்கள் ஏன் அதை நினைச்சு பயப்படுறியள், நீங்கள் பயப்படுற மாதிரி ஒன்றும் நடக்காது,நீங்கள் இருந்து பாருங்கள் ஒரு பிரச்சினையும் நடக்காது எல்லாம் நல்லபடியாக முடியும்’ என்று பாறுவை ஆறுதல்படுத்தினான் ஞானம்.

பாறுவின் கையை ஆதரவாக பிடிச்சு அவளின் தோளை தன்னோடு அணைச்சு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று ஞானம் நினைச்சாலும், தனமும் பூரணியும் தெரிஞ்சவர்களாக இருந்தால்கூட அவர்களை பக்கத்தில் நடந்துவர அதுவும் வீதியில் வைச்சு அப்படி நடந்து கொள்வது நாகரீகமற்றது என நினைச்சு,’கவலைப்படாமல் இருங்கள் என்று அவளின் முதுகில் மெதுவாக கைவைச்சு ஆறுதல் படுத்தினவன் மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதென்பதற்காக வேகமாக கையை எடுத்து விடுகிறான்.

ஞானம் கையை எடுக்கவும் தனது வலது கையால் அவனின் இடது கைவிரல்களை இறுக்கிப் பிடிச்சு அவனை நிமிர்ந்து பார்க்க, பாறுவின் கண்கள் கலங்குவதைக் கண்ட ஞானம்’ இப்ப எதுக்கு கண்கலங்கிறியள் எதுக்கும் நான் இருக்கிறன் „என்று அவளின் விரல்களோடு தனது விரல்களைச் சேர்த்து ஆறுதல்படுத்த அதைக் கவனிச்ச தனமும் பூரணியும் ஒருவரோடு ஒருவர் கொஞ்சம் வேகமாக முன்னுக்குப் போவம் என்று கண்சாடை காட்ட ஞானம் பாறுவுக்கும் இடையில் இரண்டு மீற்றர் இடைவெளியில் முன்னுக்கு நடந்து கொண்டிருந்தனர்.

கஸ்தூரியார் வீதியிலிருந்த ராஜா கிறீம் கவுசை தனமும் பூரணியும் கடப்பதைக் கண்ட ஞானம் „தனமக்கா நில்லுங்கோ’ என்று சொல்ல, அவர்கள் திரும்பிப் பார்க்க, ராஜா கிறீம் கவுசடிக்கு ஞானமும் பாறுவும் வருகின்றனர்.

„வாங்க உள்ளை என்று’ ராஜா கிறீம் கவுசுக்குள் தனத்தையும் பூரணியையும் அழைச்சுக் கொண்டு ஞானம் நுழைகிறான்.

„தம்பி வேண்டாம்,அங்கை சாப்பிட்டதே போதும்’ என்று பூரணி சொல்ல’ ஓம் தம்பி வேண்டாம்’ என்று தனம் சொல்ல, „ இது ஐஸ்கிறீம்தானே இதுவும் ஒரு தண்ணிதான்,தண்ணியாகக் குடிப்பதை பாலையும் சீனியையும் வனிலாவையும் போட்டு கொஞ்சும் உறைய வைச்சு குடுக்கினம்,உருசியாக இருக்கும்’அவ்வளவுதான் என்று அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே ஒரு வெறுமனையான மேசையை தேர்வு செய்து கதிரைகளில் உட்காருகின்றனர்.

அவர்கள் உட்கார்ந்ததும் „பார்வதி’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு குரல் வந்த தனக்கு இடதுபக்கத் திசையில் பாறு திரும்பிப் பார்க்க,தனம்,பாறு,பூரணி,ஞானம் இருந்த இடத்துக்கு இடது பக்க மேசையில் படம் பார்க்கும் போது சந்திச்ச அண்ணனும் தங்கச்சியும் ஐஸ்கிறீம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காண்கின்றனர்.

„என்ன உங்கடை முழுப்பெயரையும் சொல்லி அவா கூப்பிடுறா’ என்று ஞானம் கேட்க,’தியேட்டரிலை வைச்சு கதையோடை கதையாக என் பெயரைக் கேட்டா சொன்னன்,உங்கடை பெயரையும் சொன்னன் நாங்கள் இரண்டு பேரும் லவ்வேர்ஸ் என்றும் கல்யாணம் கட்டப் போறம் என்றும் சொன்னன்’ என்று பாறு சொல்ல „ அடி பாவி இவ்வளவு விபரமாகச் சொல்லிவிட்டாடி பயமாயிருக்கு என்று நாடகமாடினாய் „ என்று தனம் சொல்லிக் கொண்டே அவளின் கையைப் பாசமாகக் கிள்ளினாள்.

தியேட்டரில் சந்திச்ச அவர்களிருவரும் ஐஸ்கிறீம் குடிச்சு முடிச்சு எழுந்து நேராக பாறு,ஞானம்,பூரணி,தனம் இருந்த இடத்துக்கு வர „ உங்கடை பெயரைக் கேட்காமல் விட்டிட்டம்….’ என்று ஞானம் அவர்களைப் பார்த்துச் கேட்க,’என்னுடைய பெயர் தவபாலன் தங்கச்சியின் பெயர் தவமலர், சரி நாங்கள் வாறம் என்று ஓரடி எடுத்து வைச்ச இளைஞன் „தங்கச்சி சொன்னா நீங்கள் இரண்டு பேரும் லவ்வேர்ஸ் என்றும் கெதியிலை கல்யாணம் கட்டப் போறியள் என்றும், துணிச்சலாக இரண்டு பேரும் சோடியாக வந்திருக்கிறியள் உங்கடை காதல் வெற்றி பெற எங்கடை வாழ்த்துக்கள் கல்யாணத்திற்கு எங்களுக்கும் சொல்லுங்கள் „என்று வாய்நிறைந்த சிரிப்புடன் வாழ்த்த தவமலரும் பாறுவின் முதுகைத் தட்டி வாழ்த்துக்கள் „ என வாழ்த்த ஐஸகிறீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளம் சோடிகள் பாறுவையும் ஞானத்தையும் பார்த்து மெதுவாகச் சிரிச்சதுடன்,பாறுவுக்கும் ஞானத்திற்கும் கைகளைக் காட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.

தவபாலனும் தங்கச்சியாரும் பாறுவிடமும் ஞானத்திடமம் விடைபெற்றுச் சென்றுவிடுகின்றனர்.

தாய் தகப்பனுக்குத் தெரியாமல் படம் பார்க்க வரும் காதலர்கள் படம் பார்த்து முடிஞ்சதும் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்து பயந்து ராஜா கிறீம் கவுசில் ஜஸ்கிறீம் சாப்பிடுவதும்,ஐஸ்கிறீமை காதலுடன் கலந்து முழுமையாக சுவைக்க முடியாமல் காதலர்கள் தத்தளிப்பதும் உண்டு.

ஐஸ்கிறீம் சாப்பிட்டு முடிச்ச இளம் சோடிகள் சாப்பிட்டு முடிஞ்சு எழுந்து காசுப்பட்டடைக்குப் போகும் போதே ஏதோ ஒரு உணர்வில் சோடிகளில் ஆண்கள் ஞானத்தின் முதுகிலும்,பெண்கள் பாறுவின் முதுகிலும் உங்களிருவரின் காதலும் வெற்றிபெறட்டும் என்பது போல கையைவைச்சு மெதுவாக தட்டிவிட்டுப் போனார்கள்

சிலர் ஆங்கிலத்தில் ஆல் த பெஸ்ற் என்றும் வாழ்த்திவிட்டும் சென்றனர்.ஐஸ்கிறீமுக்கு ஓடர் செய்துவிட்டு காத்திருக்கையில் தனமும் பூரணியும் கண்கலங்குவதைக் கண்ட ஞானம்’ஏன் இரண்டு பேரும் கண்கலங்கிறியள்’ என்று கேட்க,’இல்லை ஒன்றுமில்லை’ என்று தனம் சமாளிக்க,’ ஏன் அவை கண்கலங்கினம்’ என்று எனக்கு விளங்குது என்று பாறு யாருக்குமே கேட்காதவாறு சொல்ல’ ஏன்…’ என்று ஞானம் கேட்க,’ தங்களுக்கு இவ்வளவு மதிப்புக் குடுக்கிறியளே’ என்று நினைச்சுத்தான் அவை இரண்டு பேரும் கண்கலங்கினம் „ என்று பாறு சொல்ல, அதுதான் என்பது போல அவர்களிருவரும் தலையை ஆட்டுகின்றனர்.

„சரி சரி விடுங்கள் மற்றவர்கள் கவனிக்கப் போகின்றனர்’ என்று அவர்களை ஆறுதல்படுத்தினான் ஞானம்.

தமிழ்ப்பண்ணை புத்தகக் கடையிலும்,பூபாலசிங்கம் புத்தகக் கடையிலும் புத்தகங்கள்; வாங்கிக் கொண்டு பொதுநூலகத்திற்கும் தனம்,பூரணி,பாறு என எல்லாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று ஞானம் யோசிச்சு

வைச்சிருந்தாலும் நேரம் போய்க் கொண்டிருப்பதால் ஐஸ்கிறீம் சாப்பிட்டு முடிஞ்சவுடன் வீட்டுக்குப் போக வேண்டுமென்ற அவசரத்தில் பஸ் நிலையத்தை நோக்கி நால்வரும் நடந்து கொண்டிருந்தனர்.

பாறு அடிக்கடி சோர்ந்து போவதைக் கண்ட ஞானம் „ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்,நாளைக்கு உங்களைப் பார்க்க வருபவர்கள் வந்து போகட்டும், நீங்கள் அப்பா அம்மாவுக்கு எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுங்கள் மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறன்’என்று நம்பிக்கையைக் கொடுத்தான்’ ஞானம்.

கீரிமலைக்கு போகும் பஸ்ஸில் நால்வரும் ஏறி உட்கார்ந்தனர்.பாறு ஞானத்திற்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.தனமும் பூரணியும் ஒன்றாகவே உட்கார்ந்திருந்தனர்.

„இனி எப்ப என்னைப் பார்க்க வருவியள்’ என்று கேட்க,’நாளைக்குப் பின்னேரம் வருகிறன்’என்கிறான் ஞானம்.

„திங்கட்கிழமை உங்களுக்கு தெல்லிப்பழை பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்திலை இன்ரவியூ என்று சொன்னனீங்கள் மறக்காமல் போங்கள்’ என்று பாறு சொல்ல,’ கட்டாயம் போவன் எனக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காகவாவது போவன் „ என்று பதில் சொன்ன ஞானம்’ இனி தோட்ட வேலைக்கு வரமாட்டியள்தானே’ என்று ஞானம் கேட்க,’உங்கடை தோட்டத்திலை வேலை இருந்தால் உங்களைக் பார்ப்பதற்கு அதைச் சாட்டி வருவன், வேறை ஆட்களின்ரை தோட்டத்திற்கு நான் போக மாட்டன்,எனக்கு விருப்பமில்லை, ஒவ்வொரு நாளும் என்னைப் பார்க்க வரவேணும்,உங்கடை முகத்தை ஒவ்வொரு நாளும் நான் பார்க்க வேணும்….’ என்று பாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே „எனக்கும் உங்கடை முகத்தைப் பார்க்காவிட்டால் நிம்மதியாக இருக்காது……அதோடை…..’ என்று ஞானம் ஏதோ சொல்ல வர „எனக்கு விளங்கும்….அதை இஞ்சை கதைக்காதையுங்கோ…..’ ஞானத்தின் கையைக் கிள்ளுகிறாள்.

பஸ்சும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியடியில் வந்து நிற்க நால்வரும் இறங்குகின்றனர்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.