எழுத்தும் வாழ்க்கையும்!…. அங்கம் 68 ….. முருகபூபதி.
ஊடக வாழ்வில் கற்றதும் பெற்றதும் !
சமூகம் குறித்து எழுத்தாளருக்கான தெரிவு எது..?
முருகபூபதி.
செய்தி ஊடகங்களில் நேர்காணல்கள் பிரதானமானவை. எனது ஊடக வாழ்வில் இதற்கான பயிற்சியை முதலில் எனக்குத் தந்தது மல்லிகை இதழ்தான்.
மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, அதற்கு களம் வழங்கி பலரையும் ஊக்குவித்தார். அதற்கு அவரது மல்லிகை முகப்பின் அட்டைப்பட அதிதி சார்ந்த கட்டுரைகள், நேர்காணல்கள் சிறந்த உதாரணம்.
நூறுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்களை மல்லிகை அவ்வாறு தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. நினைவூட்டியிருக்கிறது.
புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் எஸ். ஏ. விக்கரமசிங்கா, தமிழக எழுத்தாளர் அசோகமித்திரன், மற்றும் வண. ரத்னவன்ஸ தேரோ ஆகியோரை மல்லிகைக்காக நேருக்கு நேர் சந்தித்து பேட்டி கண்டு எழுதியிருக்கின்றேன்.
அத்துடன் இலங்கை வானொலியில் கலைக்கோலம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க சந்தர்ப்பம் கிடைத்தவேளையிலும் சில கலை, இலக்கியவாதிகளை கலையகத்திற்கு அழைத்து பேட்டி கண்டுள்ளேன்.
வீரகேசரியிலும் எனக்கு ஆசிரியபீடத்தில் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்துடன் நான் எழுதிய நேர்காணல்களுக்காக சன்மானங்களும் பெற்றேன்.
கடந்த அங்கத்தில் நடிகர் சுரேஷுடனான சந்திப்பு பற்றி எழுதியிருந்தேன். எனினும் எனக்கு அந்த சந்திப்பில் சிறிதளவும் திருப்தியில்லை.
ஆனால், நடன நர்த்தகி வாசுகி சண்முகம் பிள்ளை, நாடகக் கலைஞர் குழந்தை சண்முகலிங்கம், இலங்கை வானொலி தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் வி. ஏ. திருஞானசுந்தரம், கி. ராஜநாராயணன், மல்லிகை ஜீவா, எஸ். பொன்னுத்துரை ஆகியோரை பேட்டிகண்டு எழுதியபோது, எனக்கும் பயன்கிட்டியது.
வீரகேசரிக்காக எழுதியிருந்தாலும், அந்த எழுத்துப்பயிற்சியின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
பின்னாளில், நான் அவுஸ்திரேலியா வந்தபிறகு, எஸ் ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு நூலைப்படித்தபோது, பத்திரிகையாளரும் நாவலாசிரியரும் பிடல் காஸ்ரோவின் நண்பரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் குறிப்பிட்ட செய்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது.
ஒரு பத்திரிகையாளனுக்குத் தேவைப்பட்ட கூர்ந்த அவதானம் பற்றியும் கிரகிக்கும் ஆற்றல் பற்றியும் அவர் சொல்லியிருந்தார்.
அதிலிருந்து சில வரிகள்:
“ டேப்ரிகார்டர்தான் ஒரு பத்திரிகையாளனின் முதல் எதிரி. அது ஒரு சாத்தான். சொன்னதைத் திரும்பச்சொல்லும் இயந்திரக்கிளி.”
“பத்திரிகையாளனுக்குத் தேவையானவை குறிப்பு எழுதுவதற்கான சிறிய நோட்டும், எதையும் கூர்மையாகக் கேட்டு உள்வாங்கிக்கொள்ளும் காதுகளும் செய்திகளின் பின் உள்ள உண்மையை அறிந்துகொள்வதற்கான விடாப்பிடியான ஆர்வமும்தான்”
இந்தப்பயிற்சியையும் வீரகேசரி எனக்குத்தந்தது.
முதலில் அங்கு நான் ஒப்புநோக்காளராகவிருந்தபோது, ஆசிரிய பீடத்தில் கட்டுரைகளை கவனித்து வந்த ஒருவர் பாரதியாரின் பிறந்த தினத்தின்போது என்னிடம் ஒரு சிறிய கட்டுரை கேட்டதனால் கொடுத்தேன்.
அதில் ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்று பாரதி கூறிய வாக்கியத்தையும் பதிவுசெய்து, ருஷ்யாவின் கொடுங்கோல் மன்னர் ஜார் என்றும் எழுதியிருந்தேன்.
அந்தத் துணை ஆசிரியர் அதனை ஜார்ஜ் மன்னர் என்று திருத்தி அச்சுக்கு கொடுத்திருந்தார்.
ஜார் யார்…? ஜார்ஜ் யார்….? என்ற மயக்கத்திலிருந்தவர்கள் மத்தியிலிருந்து பணியாற்றும்போது, செய்திகளை செம்மைப்படுத்துவதிலும் நேர்காணல்களை எழுதும்போதும் கவனத்தை எவ்வாறு கூர்மையாக்கிக்கொள்ளவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.
இந்த கற்றல் பழக்கம் இன்றளவும் என்னைத் தொடர்கிறது. புகலிடத்தில் தமிழ்சார்ந்து தங்களுக்கு மாத்திரம்தான் தெரியும் என்று நம்பிக்கொண்டிருக்கும் பல மேதாவிகளுக்கு மத்தியிலிருந்தும் நான் அவர்களையும் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.
வீரகேசரியில் ஒருநாள் ஆசிரியர் சிவநேசச்செல்வன் என்னை அழைத்து மற்றும் ஒரு ஹோட்டலுக்கு செல்லுமாறு பணித்தார் அது கொள்ளுப்பிட்டியில் அமைந்த ரேணுகா ஹோட்டல் .
எனக்கு மீண்டும் தயக்கம் வந்தது. இம்முறை எந்த நடிகர் – நடிகை வந்திருக்கிறார்..? எனக்கேட்டேன்.
“ ஐஸே… வந்திருப்பவர் ஒரு பேராசிரியர். ஆனால், அவர் ஒரு குருமார் இல்லாத சமயத்தைச்சேர்ந்தவர். அவரை சந்தித்து பேட்டி கண்டு எழுதிக்கொண்டு வாரும். “ என்றார். அந்தத்தடவையும் அலுவலக படப்பிடிப்பாளர் மோசஸ்தான் உடன் வந்தார்.
இவர் பற்றியும் கடந்த அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதனைப்படித்த நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு, மோசஸ் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்டார் என்ற துயரமான தகவலைச் சொன்னார்.
மோசஸின் நிரந்தரமான மந்திரப்புன்னகை நெஞ்சமதில் வாழ்கிறது.
ஒரு மாலைவேளையில் மோசஸுடன் ஹோட்டல் ரேணுகாவுக்குச்சென்றேன்.
அங்கிருந்தவர் மலேசியாவிலிருந்து வருகை தந்திருந்த பகாய் சமயத்தைச்சேர்ந்த பேராசிரியர், அச்சமயத்தின் கவுன்ஸிலர் நாகரட்ணம்.
அவர் மலேசியாவில் ஒரு உயர்நிலைக்கல்லூரியில் அதிபராக பணியாற்றியவர். அத்துடன் தொழிற்சங்கவாதியாக வளர்ந்து கம்யூனிஸ கொள்கைகளில் ஊறி, இறுதியில் பகாய் சமயத்தில் இணைந்தவர்.
அத்தகைய ஒருவரிடமிருந்து பல செய்திகளை பெற்றேன்.
ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம், தயானந்த சரஸ்வதியின் சூரிய சமாஜம், மற்றும் இராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனைகள் பற்றியெல்லாம் விரிவாக விளக்கினார்.
பின்னர், தான் பின்பற்றும் பகாய் சமயத்திற்கென மதகுருமாரோ, சடங்குகளோ இல்லை என்றார்.
உலகம் பல பிரச்சினைகளினதும் நெருக்கடிகளினதும் மொத்த உருவமாகவே விளங்குகிறது. பிரச்சினைகள் என்று வந்துவிட்டால், அவற்றின் வடிவங்கள் உள்ளடக்கங்களில்தான் மாறுபாடுகள் – வேறுபாடுகள் உண்டு. சாந்தியும் சமாதானமும் குன்றியதனாலும் ஏற்றத்தாழ்வு பெருகியதனாலுமே உலகில் இன்று அமைதியின்மை நிலவுகின்றது.
வீடு, சமூகம், சமுதாயம் , நாடு, உலகம் என்று மாறுபட்ட வடிவங்கள் தோன்றியபோதிலும் இவைகள் எல்லாவற்றிற்கும் அடிநாதமாக மனிதப்பிறவியும் இயற்கையும் விஞ்ஞானமும் திகழ்கின்றன.
மனித சமூகம் என்பது ஆண் – பெண் என்ற இரண்டு இறக்கைகளுடனேயே பறந்துகொண்டிருக்கிறது. இதில் ஒரு இறக்கை தாழ்ந்தாலும் ஆபத்துத்தான். எனவே ஆண் – பெண் சமத்துவம் வேண்டும்.
இன்றும்கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகள் இல்லாத வரையில் ஏனைய துறைகளில் உரிமைகள் சாத்தியமாவதற்கு காலதாமதம் ஏற்படுவது குறித்து சொல்லவும் வேண்டுமா..?
1840 ஆம் ஆண்டளவில் பாரசீகத்தில் ( இன்றைய ஈரான் ) தோன்றிய பகாய் சமயம், பல சோதனைகளைக்கண்டது. இன்றும் இச்சமயத்திற்கு எதிரான பிரசாரங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.
எனினும் இச்சமயத்தை தோற்றுவித்த தேவதூதர் பகாவுல்லாவின் கூற்றுக்கள் கோட்பாடுகள் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தத் தேவதூதர் வாழ்ந்த காலத்தில்மாத்திரம் இவரை பின்பற்றிய சுமார் இருபதினாயிரம்பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
“தர்மம் குன்றி அதர்மம் மேலோங்கும்போது நான் அவதரிப்பேன் “ என்று கிருஷ்ணபரமாத்மா பகவத் கீதையில் சொல்கிறார்.
அவரும் ஒரு தேவதூதரே. அதுபோன்று பகாய் சமயத்தின் தேவதூதர்தான் பகாவுல்லா.
பேராசிரியர் சொல்லச்சொல்ல கூர்ந்து கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டேன். என்னிடம் டேப்ரெகோடர் இல்லை. காகிதமும் பேனையும்தான் இருந்தன.
பேராசிரியர் நாரட்ணம் ரேணுகா ஹோட்டல் ஊழியரை அழைத்து எனக்கும் மோசஸுக்கும் சுவையான தேநீர் வரவழைத்தார்.
அருந்தியபோது எனது மனதில் ஒரு கேள்வி உருவானது.
“ சமயச்சடங்குகள் இல்லை. மத குருமார் இல்லை. ஆண் – பெண் சமத்துவத்தையும் உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறீர்கள். அத்துடன் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் நம்புகிறீர்கள். அப்படியென்றால், மார்க்ஸீயத்திற்கும் தங்கள் பகாய் சமய கோட்பாடுகளுக்கும் இடையே ஓரளவு நெருக்கம் இருப்பதாகப்படுகிறதே…? இது பற்றி என்ன சொல்கிறீர்கள்….? என்று இழுத்தேன்.
உடனே அவர், “ விஞ்ஞானமும் மதமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக வேண்டும். விஞ்ஞானம் இல்லையென்றால் மூட நம்பிக்கைகள்தான் வளரும். மதத்தை விட்டுவிட்டு, விஞ்ஞானம் மாத்திரம் வளர்ந்தால், இறுதியில் அழிவுதான் மிஞ்சும். மனித இயல்புகளை கட்டுப்படுத்துவது ஆத்மீகம். பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது மார்க்ஸீயம். எனவே இரண்டினதும் கோட்பாடுகளும் வேறுபட்டவையே. ஐக்கிய நாடுகள் சபையிலும் பகாய் சமயத்திற்கு அங்கீகாரம் கிட்டியுள்ளது.
அதாவது அரசாங்கம் இல்லாத சமூகங்கள் என்ற அடிப்படையிலான அங்கீகாரமே அது.
அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வள்ளலார் பற்றியும்சொன்னார்.
வள்ளலார் தனது போதனைகளை மக்கள் ஏற்காதபோது, “ கடையை விரித்தோம் . கொள்வாரில்லை. கட்டிவிட்டோம் “ என்றார் எனச்சொன்னவுடன், அந்தப்பேராசிரியரின் பரந்த அறிவு கண்டு வியந்தேன்.
விடைபெற்று வந்து அந்த நேர்காணலை விரிவாக எழுதினேன். ஆசிரியர் சிவநேசச்செல்வனிடம் அதன் மூலப்பிரதியை காண்பித்தேன்.
அவர் முழுவதும் படித்துவிட்டு, “ இதற்காகத்தான் ஐஸே… உம்மை அனுப்பினேன். நான் இந்தப்பிரதியில் கைவைப்பதற்கு
அவசியமில்லாதவாறு எழுதியிருக்கிறீர் “ என்று சொல்லிவிட்டு அதனை அச்சுக்கு அனுப்பினார்.
அந்த நேர்காணல் கட்டுரை வெளியானது. எனக்கு இருபது ரூபா சன்மானம் கிடைத்தது.
அந்த நேர்காணல் வெளியாகிய நாளன்று, ரேணுகா ஹோட்டலிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
பேராசிரியர் நாகரட்ணம் மீண்டும் வருமாறு என்னை அழைத்தார்.
நான் செல்லவில்லை.
மீண்டும் நான் அவரைச்சந்திக்கநேர்ந்தால் திசைமாறிய பறவையாகிவிடுவேனோ என்ற தயக்கமும் அதற்குக்காரணம்.
எழுத்துலக வாழ்வில் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஊடகவியலாளனுக்கும் ஒரு தெரிவு முக்கியமானது. எந்தத் திசைநோக்கிப்பயணிக்கப்போகின்றோம் என்ற தெளிவான தெரிவுதான் அது.
மீண்டும் அந்தப்பேராசிரியரை நான் சந்தித்திருப்பின் எனது மூளை சலவைசெய்யப்பட்டிருக்கலாம். இயல்பிலேயே சமயங்கள் குறித்து எனது பார்வை வேறாக இருந்தது.
எனது 70 வருட வாழ்வில் இதுவரையில் எத்தனையோ சமயங்களை பார்த்துவிட்டேன். சமய பீடங்களின் பின்னணி பற்றியும் அறிந்துவருகின்றேன்.
ஆனால், சமயங்கள் வளர்ந்துகொண்டிருந்த அதேவேளையில் உலகெங்கும் உள்நாட்டு போர்களும் ஆயுத உற்பத்திகளும் பெருகிக்கொண்டிருந்தன.
அகதிகளின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுகொண்டிருந்தது.
இலங்கையில் அப்போது வடக்கிலும் – கிழக்கிலும் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள். தேடுதல் வேட்டைகள். அந்தச்செய்திகளை எழுதிக்குவித்துக்கொண்டிருந்தபோது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம்தான் நிற்கவேண்டும். அவர்கள் குறித்த செய்திகளுக்குத்தான் முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர சமயங்கள் பற்றிய பிரசாரத்திற்கு எனது பேனை துணை செல்லக்கூடாது என்ற தெளிவு பிறந்தது.
அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், சமயத்தலைவர்கள், கலை, இலக்கியவாதிகள், சமூகப்பணியாளர்கள், கல்விமான்கள், சினிமா நடிகர்கள்…. பிரமுகர்கள்….. என்று எவரைச்சந்தித்து நேர்காணல் எழுதினாலும் அந்த நேர்காணலில் சமூகத்திற்கான உருப்படியான செய்தியும் குரலும் இருக்கிறதா..? என்பதையும் கவனத்தில்கொண்டு எழுதினேன்.
செய்திகளை எழுதிக்கொண்டிருந்தபோது, வடக்கு – கிழக்கு அரசாங்க அதிபர்களான பஞ்சலிங்கமும் அந்தோனி முத்துவும் தினமும் செய்திகளை தந்தனர். வடக்கைச்சேர்ந்த அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் மு. சிவசிதம்பரமும், வவுனியா சிவசிதம்பரமும் தமிழ்நாட்டில் தங்கிவிட்டனர்.
மட்டக்களப்பிலிருந்து சட்டத்தரணி சாம் தம்பி முத்து மற்றும் மாவட்ட அபிவிருத்திச்சபை உறுப்பினர் வேல்முருகு ஆகியோரும், யாழ்ப்பாணத்திலிருந்து பேராசிரியர் சிவத்தம்பியும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர் விஜயானந்தனும் யாழ். இந்து மகளிர் கல்லூரி துணை அதிபர் செல்வி புஷ்பா செல்வநாயகமும் எமது பிரதேச நிருபர்களுடன் செய்திகளை தந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் நடந்த தேடுதல் வேட்டை தொடர்பாக பல இளைஞர்களை ஆயுதப்படையினர் இழுத்துச்சென்ற செய்தியை கேள்விப்பட்டதும், கொழும்பில் அரசாங்க அமைச்சராகவிருந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரையுடன் தொடர்புகொண்டேன்.
அவரால் அக்காலப்பகுதியில் தனது தொகுதி மக்களை சென்று பார்க்கக்கூடிய நிலைமை இல்லை.
மட்டக்களப்பு அரச அதிபர், ஊடகங்களுக்கு செய்தி தருகிறார். ஆனால், தனக்கு எதுவும் சொல்வதில்லை என்றார்.
“ அய்யா… உங்கள் தொகுதி தமிழ் இளைஞர்கள். அதில் பலர் அப்பாவிகளாகவும் இருக்கலாம். உங்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சொல்லுங்கள் “ என்றேன்.
“ ஓம் தம்பி கவனிக்கின்றேன் “ என்றார்.
இந்தப்பதிவில் நான் குறிப்பிட்டவர்களில் செல்வி புஷ்பா செல்வநாயகம், சிவத்தம்பி தவிர்ந்து, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், பஞ்சலிங்கம், அந்தோனி முத்து, விஜயானந்தன், வேல்முருகு, சாம்
தம்பி முத்து அனைவரும் எமது தமிழ் ஈழக்கொழுந்துகளான போராளிகளினால் வெவ்வேறு காலப்பகுதியில் கொல்லப்பட்டனர்.
அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய கறுப்பு நிற டயறி எனது மேசையில் அவர்களை நினைவூட்டிக்கொண்டிருக்கிறது .
அன்று ரேணுகா ஹோட்டலில் உலக சமாதானம் சகோதரத்துவம் , ஆண் – பெண் சமத்துவம் பற்றியெல்லாம் சொன்ன அந்தப்பேராசிரியர் தற்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.
ஆனால், அந்த நேர்காணல் வெளியான வீரகேசரி பத்திரிகை நறுக்கு தற்போதும் எனது வசம் இருக்கிறது.
( தொடரும் )
letchumananm@gmal.com