Featureஇலக்கியச்சோலை

“ இலக்கியப்பணி, அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது “…. முருகபூபதியுடன் நேர்காணல்!… உரையாடல் : ஜீவா சதாசிவம்.

இலக்கியப்பணி, அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது “

“ முகநூலினால் இழந்த நட்புகள் பற்றிய சுயவிமர்சனம் தேவை “

எழுத்தாளர் முருகபூபதியுடன் நேர்காணல்

உரையாடல் : ஜீவா சதாசிவம்

 

முருகபூபதி, இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்.

படைப்பிலக்கியவாதி. பத்திரிகையாளர்.

தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளர்கள் – அறிஞர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், தொ.மு. சிதம்பர ரகுநாதன் ஆகியோரின் உறவு முறையில் அவர்களின் பேரன் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

1987 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகரில் வசிக்கிறார்.

1972 இல் ‘கனவுகள் ஆயிரம்’ என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1974 இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை தேசிய சாகித்திய விருது 1975 இல் கிடைத்தது.

இலங்கையின் பிரபல நாளேடான வீரகேசரிப் பத்திரிகையில் 1977 முதல் பணிபுரியத் தொடங்கினார். 1985 இல் ரஷ்யா- மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணியாற்றியவர்.1982 இல் இலங்கையில் பாரதி நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது, அதன் அமைப்புக்குழுவில் இயங்கியவர்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். சிறுகதை, நாவல் , கட்டுரை, நேர்காணல் , பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், விமர்சனம், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் இதுவரையில் 25 நூல்கள் எழுதியுள்ளார்.

இவற்றில் பறவைகள் நாவலுக்கு 2003 இல் இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2021 ) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (2004 – 2021 ) ஆகியவற்றின் ஸ்தாபக உறுப்பினருமான முருகபூபதி இன்று வரையில் இந்த அமைப்புகளின் பணிகளிலும் இணைந்தவாறு இலக்கியப்பிரதிகள் எழுதிவருகிறார்.

கனடா பதிவுகள் இணையத்தளத்தில் – முருகபூபதி பக்கம் என்ற இணைப்பில், முருகபூபதியின் 200 இற்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, வாசகர் முற்றம், எழுத்தும் வாழ்க்கையும், பாரதி தரிசனம் முதலான தொடர்களை ஊடகங்களில் எழுதிவருகிறார்.

முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

முருகபூபதியின் சிறுகதைகள், கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகளை, இலங்கை பேராதனை பல்லைக்கழக மாணவி ஒருவரும் தமிழ்நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் தமது MPhil பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் மல்லிகை, ஞானம், படிகள் முதலான இலக்கிய இதழ்களும் ஜெர்மனி மண் இலக்கிய இதழும் முருகபூபதியின் இலக்கிய, ஊடக, சமூகப்பணிகளை பாராட்டி அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளன.அவுஸ்திரேலியா தினத்தின்போது 2002 ஆம் ஆண்டில் விக்ரோரியா மாநிலத்தில் சிறந்த பிரஜைக்கான விருதும், 2013 ஆம் ஆண்டில் விக்ரோரியா மாநில அரசின் பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருதும் பெற்றுள்ளார்.

முருகபூபதியுடனான இந்த நேர்காணல் மின்னஞ்சல் – தொலைபேசி ஊடாகப் பெறப்பட்டு பதிவானது.

இலக்கியப்பணி, அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது

கேள்வி: எழுத்து, இணையம், உரையாடல் என ஓயாத உங்களது இலக்கியப் பணி குறித்து ?

முருகபூபதி : எனது பாடசாலைக் கல்வி நிறைவு பெற்றதும், நான் தேர்ந்தெடுத்த தொழில் ஊடகம் சார்ந்ததுதான். முதலில் எனது பூர்வீக ஊர் நீர்கொழும்பு பிரதேசத்தில் , வீரகேசரி பத்திரிகையின் நிருபரானேன். அப்போது 1972 ஆம் ஆண்டு. அதே ஆண்டுதான் எனது முதலாவது சிறுகதை ( கனவுகள் ஆயிரம் ) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மல்லிகை இதழில் பதிவேற்றம் கண்டது.

ஒரே காலப்பகுதியில் இலக்கியப் பிரதியாளனாகவும் பத்திரிகைச் செய்தியாளனாகவும் வளர்ந்தேன்.

அதனால் எழுத்தே எனக்கு சோறுபோடும் தொழிலானது. செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா..? வீரகேசரியில் முதலில் ஒப்பு நோக்காளராகவும் பின்னர் உதவி ஆசிரியராகவும் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் வரையில் பணியாற்றினேன்.

எனவே எனக்குத் தெரிந்த தொழில் எழுத்தாகிவிட்டது. புலம்பெயர்ந்த வாழ்வில் அந்தத் தொழிலை மாத்திரம் நம்பியிருக்காமல், பிற துறைகளில் எனக்காகவும் குடும்பத்திற்காகவும் பணியாற்றினேன்.

1951 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு, தற்போது எழுபது வயதாகிறது.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றிருப்பதனால், இங்கு தொழில் துறையிலிருந்து இளைப்பாறிய பின்னர் ஓய்வூதியம் வருகிறது. நான் ஆழமாக நேசித்த தொழில் எழுத்து. அதனால் இங்கு வந்தபின்னரும் தொடர்ந்து எழுதிவருகின்றேன்.

இலங்கை இதழ்கள் மற்றும் புகலிட இதழ்கள், இணைய இதழ்கள் ஆகியனவற்றில் எழுதிக்கொண்டிருக்கின்றேன். எனது எழுத்துலக வாழ்க்கை பற்றி – எழுத்தும் வாழ்க்கையும் என்ற தொடரை தற்போது எழுதிவருகின்றேன். இதுவரையில் 67 அங்கங்கள் வெளிவந்துவிட்டன.

எழுத்தே வாழ்க்கையாகிவிட்டது. சமகால தொற்றின் தீவிரத்தினால் முழு உலகமும் முடங்கியது. நானும் வீட்டில் முடங்கியிருந்தவாறு மெய்நிகர் நிகழ்ச்சிகளில் முடிந்த வரையில் இணைந்து வருகின்றேன்.

உலகத்தில் முதலில் சூரியன் உதிக்கும் நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. சில மெய்நிகர் சந்திப்புகள் எமக்கு நடு இரவு கடந்தும் நடக்கின்றன. அன்றைய நாட்கள் எனக்கு பெரும்பாலும் சிவன்ராத்திரிதான்.

ஆர்வத்துடன் இணைந்துகொள்கின்றேன்.

ஒரே வேளையில் சில நிகழ்ச்சிகள் வரும்போது எதனைத் தெரிவு செய்வது, எதனைத் தவிர்ப்பது என்ற திணறலும் வருகின்றது.

கேள்வி : தட்டச்சு தலைமுறையில் வளர்ந்த நீங்கள் மெய்நிகர் உலகில் உங்களை இணைத்துக் கொண்டுள்ள விதம் குறித்து ?

முருகபூபதி: இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியிலும், புலம்பெயர்ந்த பின்னரும் கணினி எமக்கு வரப்பிரசாதமாகும் வரையில் கையால் எழுதி கடித உறையில் வைத்து அஞ்சல் முத்திரை ஒட்டி அனுப்பிக்கொண்டிருந்தோம்.

காலம் மாறிவிட்டது. இது டிஜிட்டல் யுகம். அதன் மற்றும் ஒரு பாய்ச்சல் இந்த மெய்நிகர் இணைய வழி. இதனை சமகால கொரோனோ தந்த வரப்பிரசாதம் எனக்கொள்ளலாம்.

அதற்கேற்ப என்னை தகவமைத்துக்கொண்டு வருகின்றேன். அவ்வளவுதான்.

கேள்வி: முகநூலில் நீங்கள் இல்லையே ! காரணம் ஏதும் உண்டா ?

முருகபூபதி : எழுத்துலக வாழ்வினால் எனக்கு உலகெங்கும் நண்பர்கள் ஏராளம். அதனால் தொடர்பாடல்களை ஆரோக்கியமாக பேணிக்கொண்டு எனது பயணத்தை தொடருகின்றேன்.

எனது பல நண்பர்கள், இந்த முகநூலினால் தத்தமது நட்பை இழந்திருப்பதையும் அறிந்து வருந்துகின்றேன். முகநூல் தொடர்பாடலுக்கு மிகச்சிறந்த சாதனம்தான். ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், அதனை துஷ்பிரயோகம் செய்தமையால் , நான் அறிந்த பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. நண்பர்கள் மத்தியில் பிளவுகள் தோன்றியுள்ளன.

முகநூலில் தங்கள் நேரத்தை செலவிடுபவர்கள், ஒரு சில நிமிடங்கள் பொறுமையாக தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும்.

ஒரு வருட காலத்தில் தாங்கள் எத்தனை நண்பர்களை இந்த முகநூலினால் இழந்தோம்..? ஏன் இழந்தோம்..? அதற்கான அடிப்படைக்காரணம் என்ன..? என்பது பற்றி ஆராய்ந்தார்களானால், நான் ஏன் இந்த முகநூல் அலைப்பறைக்குள் சிக்கவில்லை என்பது புரியும் !

முகநூல் சமூகத்திற்கு தந்திருக்கவேண்டிய நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பது எனது அவதானம்.

கேள்வி: தகவல் களஞ்சியம் போன்ற உங்களது எழுத்துக்களுக்காக ஆவணங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்களா ? அல்லது ஞாபக சக்தியா ?

முருகபூபதி: பலரும் எனது தொடர்ச்சியான எழுத்தூழியத்தை அவதானித்துவிட்டு கேட்கும் கேள்வியைத்தான் நீங்களும் கேட்கிறீர்கள்.

எனக்கு பாடசாலைப் பருவத்தில் சரித்திர பாடம் மிகவும் விருப்பத்திற்குரியது. சரித்திர பாட பரீட்சையில் நூறுக்கு நூறு புள்ளிகளும் வாங்கியிருக்கின்றேன்.

தொடர்ந்தும் அந்தத்துறையில் தேர்ச்சிபெற்றிருந்தால், எனது கதை வேறுவிதமாக அமைந்திருக்கும். எனது ஊடகத்துறை வாழ்க்கை தேடல் மிக்கது. ஒரு செய்தியை எழுதும்போது அதன் உண்மைத்தன்மை மிக மிக அவசியம் என்பது ஊடகவியலாளரான தங்களுக்கும் நன்கு தெரியும்.

நான் வீரகேசரியில் துணை ஆசிரியராக பணியாற்றிய காலம் போர்மேகங்கள் சூழ்ந்திருந்தது. போர்க்கால செய்திகளை எழுதும்போது கத்தியின் மேல் நடப்பது போன்றிருக்கும். நாம் இரண்டு தரப்புகளுக்கும் மத்தியிலிருந்து – ஏன் சிக்குண்டு எனவும் சொல்லலாம் – செய்திகளை எழுதினோம். அதற்கு நினைவாற்றலும் முக்கியம்.

எனக்கு இயல்பாகவே நினைவாற்றல் சற்று அதிகம்தான். மூன்று வயதில் நடந்த சம்பவத்தையும் துல்லியமாகச்சொல்ல முடியும். சிலவேளை எனது அம்மா, எனது குழந்தைப்பருவத்தில் பருகத்தந்த வல்லாரைச்சாறுதான் அதற்கு காரணமோ தெரியாது.

வரலாறு சார்ந்த செய்திகளை படைப்புகளை எழுதும்போது, முன்னர் நடந்தவற்றை நினைவுபடுத்தவேண்டிய தேவை இருக்கிறது. அவசியம் நேரும் பட்சத்தில் உசாத்துணைக்காக ஏனையோர் பதிவுசெய்த ஆவணங்களையும் படிப்பேன். அத்துடன் கணினியின் உதவியுடன் பல தகவல்களையும் எனது எழுத்துக்கு ஆதாரமாக்கிக்கொள்வேன். தெரியாத விடயங்களை தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதும் உண்டு.

கேள்வி: அவுஸ்திரேலியாவில் தமிழ் இலக்கிய முயற்சிகள், உங்களது வகிபாகம் குறித்து ?

முருகபூபதி: உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் உலகில் எந்தத் திக்கிற்கு சென்று வாழ நேர்ந்தாலும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள் என்பது பொதுவான விதி. விதிப்பயனால் புலம்பெயர்ந்தேன். ஆனால், புலன் பெயராமல், நான் ஆழமாக நேசித்த கலை, இலக்கியத்துறை சார்ந்த விடயங்களில் ஈடுபட்டேன்.

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதி சமாந்தரங்கள் நூல்தான் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் நூல். அந்த நூலின் வெளியீட்டு விழாதான் இங்கு முதலாவது இலக்கிய விழா. இங்கு புலம்பெயர்ந்து வந்த ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ்.

பொன்னுத்துரைக்கும் ( எஸ்.பொ. ) அதுதான் இங்கே முதல் விழா.

இந்த விழா நான் இங்கு புலம்பெயர்ந்து வந்து இரண்டு வருடகாலத்தில் நடந்தது. அந்த ஆண்டு 1989. விழா நடந்த திகதி ஜூன் 25. விழா நடந்த இடம்: மெல்பன் வை. டபிள்யூ. சீ. ஏ. மண்டபம்.

அந்தவிழா, மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்தது. எமது மாநிலத்தைச்சேர்ந்த சில தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றினர். பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதன் அதற்குத் தலைமை தாங்கினார்.

அந்த விழா பற்றி இங்கு வாழ்ந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணி வீரகேசரி வாரவெளியீட்டில் விரிவான கட்டுரையும் எழுதினார்.

மற்றும் ஒரு இலக்கிய சகோதரி திருமதி ரேணுகா தனஸ்கந்தாவும் , எழுத்தாளர்கள் பொன்னுத்துரையும் செங்கை ஆழியானும் சமாந்தரங்கள் கதைத்தொகுதி பற்றி வீரகேசரி, திசை மற்றும் மல்லிகை இதழ்களில் விமர்சனம் எழுதினர்.

அத்துடன் குறிப்பிட்ட நூலில் இடம்பெற்ற புதர்க்காடுகளில் ( வீரகேசரியில் வெளிவந்தது ) என்ற சிறுகதையை ரேணுகா தனஸ்கந்தா, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு The Island பத்திரிகையில் எமது மூத்த இலக்கிய திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரனால் வெளியிடப்பட்டது.

அந்த விழாவில்தான் எஸ். பொன்னுத்துரை முதல் முதலில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தி, அதனை பேசுபொருளாக்கினார்.

இந்தப்பின்னணிகளிலிருந்து புகலிடத்தில் நான் வளர்ந்தமையால், பின்னாளில் அவுஸ்திரேலியாவில் ஏனைய கலை , இலக்கியவாதிகளையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் இணைத்துக்கொண்டு தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை 2001 இல் முன்னெடுத்தேன்.

அந்த இயக்கத்தின் ஆரம்ப கால விழாக்களில் இலங்கையிலிருந்து வெளிவந்த மல்லிகை மற்றும் தற்போதும் தொடர்ந்து வெளியாகும் ஞானம், ஜீவநதி ஆகியனவற்றின் அவுஸ்திரேலிய சிறப்பிதழ்களையும் வெளியிட்டோம்.

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தின் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற

அமைப்பினையும் உருவாக்கி தங்கு தடையின்றி இயங்கிவருகின்றோம். இந்த அமைப்பு விக்ரோரியா மாநில அரசில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவை பற்றியெல்லாம் மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழி பன்னாட்டு கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் என்ற எனது உரையில் விரிவாகப் பேசியிருக்கின்றேன்.

எமது சங்கத்தின் இணையத்தளமான பூமாரங்கில் அந்த உரை பதிவேற்றம் கண்டுள்ளது.

கேள்வி: இலங்கையில் தற்சமயம் முன்னெடுக்கப்படும் இலக்கிய செயற்பாடுகள் குறித்த உங்களது அவதானிப்புகள்- அபிப்பிராயங்கள் ?

முருகபூபதி: சமகால இலக்கிய செயற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. எனினும் நம்மவர்கள் கடக்கவேண்டிய தூரம் இன்னும் அதிகம். தற்போது, இலங்கையில் ஊடகக் கற்கை நெறி நடைமுறையிலிருக்கிறது. முன்னர் இந்த நிலை இல்லை. இது வரவேற்கத்தக்க மாற்றம். அதன் விளைவாக நிறைய தமிழ் ஊடகங்கள் வெளிவருகின்றன. ஆனால், எத்தனை வாசகர்கள் பெருகியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

புதிய நூல்கள் வெளிவருகின்றன. ஆனால், அவை பற்றிய உரையாடல் நூல் வெளியீட்டுடன் நின்றுவிடுகிறது. நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

நூல் வெளியிட்டு நிகழ்ச்சிகள் சமகால நெருக்கடியில் மெய் நிகர் ஊடாக நடக்கும் பட்சத்தில், முடிந்தவரையில் இளம் தலைமுறையினரை, பல்கலைக்கழக மாணவர்களை, ஆசிரியப்பயிற்சிக் கலாசாலை மாணவர்களை இணைத்துக்கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் நூல்கள் மற்றும் சிறுகதைகள், தொடர்கதைகள், இலக்கிய விமர்சனங்கள் குறித்து பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி, உயர்தரக்கல்லூரி மட்டத்தில் வாசிப்பு அனுபவப் பகிர்வுகளை பேராசிரியர்கள், கலாநிதிகளான விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ்ப்பாட ஆசிரியர்கள் மாணவர் மத்தியில் நடத்தவேண்டும்.

மாணவர்கள் மாதம் ஒரு தடவை எத்தனை கலை, இலக்கிய நூல்களை படித்தார்கள்..? என்பதைப்பற்றியாவது அறிவதற்கு அவர்கள்

முயற்சிக்கவேண்டும். பாடசாலை, பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் தூசு படிந்திருக்கும் நூல்களை தட்டி எடுத்து படிக்கச்செய்தல் வேண்டும்.

எழுத்தாளர்களும் தம்மை முன்னிலைப்படுத்துவதை விட்டு விட்டு, வாசகர்களை உருவாக்குதல் வேண்டும். எத்தனை நூல்கள் எழுதினோம் ..? என்பது முக்கியமல்ல, எத்தனை வாசகர்களை உருவாக்கினோம் – வளர்த்தோம் என்பதும் முக்கியமானது.

தமிழ் இலக்கியப்பணி , அஞ்சலோட்டத்திற்கு ஒப்பானது. இனிவரவிருக்கும் இளம் தலைமுறையினரையும் இணைத்துக்கொண்டு முன்னே செல்லவேண்டும்.

( நன்றி: இலங்கை தமிழ் முரசு )

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.