கட்டுரைகள்
இலங்கையை சீனா சோதிக்குமா?… ஜனகன்.
பூகோள அரசியலில் இன்று சீனா தாய்வான் முரண்பாடுகள் இரு துருவ முரண்பாடுகளாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சீன ரஷ்ய அணி ஒரு பக்கம் அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மறுபக்கத்தில் நிலையெடுத்து நிற்கின்றன. நடைபெற்று முடிந்த காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிலும் துருவ நிலையை தெளிவாக காணக்கூடியதாக இருந்தது. தாய்வானின் இறைமைக்காக அமெரிக்கா எந்த நிலைக்கு சென்றும் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் மிக அண்மையில் குறிப்பிட்டிருந்தார். தென்சீனக்கடல் தொடர்பான சர்ச்சைகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் சீன அமெரிக்க நேர் எதிர் ராணுவ நிலையெடுப்புகள் மூன்றாம் உலக மகாயுத்தம் தோன்றுமா என்ற அச்ச நிலை தோற்றம் பெற்று வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மூலோபாய திடீர் மாற்றம் சீன இலங்கை உறவு நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் உருவாகுவதற்கு முன்பும் உருவாக்கிய பின்பும் சீன தேசத்துடனான உறவு நிலை உச்சத்திலும் அமெரிக்க மேற்குலக விரோதநிலை அளவுக்கு அதிகமான நிலையிலும் வளர்ந்து வந்தது. அண்மைக் காலமாக இலங்கை பொருளாதாரம் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வீழ்ந்து போய்க் கொண்டிருந்த சூழ்நிலையில் இலங்கை ஆட்சியாளர் திடீரென மேற்குலகம் சார்ந்த மூலோபாய செயற்பாடுகளை ஆரம்பிக்க தொடங்கியிருந்தனர். இதன் பிரதான விடயமாக புதிய நிதி அமைச்சராக பசில் ராஜபக்சவின் நியமனம் அமைந்திருந்தது. இந்த மாற்றம் தொடர்பாக பொது ஜன பெரமுனவுக்குள் ஏற்பட்ட எதிர்ப்புகள் தொடர்பாக அரசாங்கம் கவலை கொள்ளாத நிலை காணப்பட்டது.
இன்றும் அந்த நிலை தொடர்கிறது. வழமைபோல் மிகத் தூரத்தில் நின்ற இந்தியா இலங்கையின் பிரதான விருந்தாளியாக மாறியது. இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜயம், இந்திய ராணுவத் தளபதியின் பிரசன்னம், அதானி குழுமத்தின் வரவு என பல மாற்றங்கள் நடந்தேறின. இத்தகைய கால கட்டத்தில் சீன நிறுவனத்தின் இயற்கை சேதன பசளையை தரமற்றது என இலங்கை நிராகரிக்க இலங்கை, சீன முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தது. தமது இயற்கை பசளையை எப்படியாவது இலங்கையில் இறக்கி விட வேண்டும் என்ற சீன தேசத்தின் முயற்சிகள் கைகூடாத நிலையில் சீனா தனது பங்கிற்கு இலங்கையின் மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இடம் பெற வைத்தது. இது இலங்கை- சீனா முரண் நிலையின் வெளிப்படையான விவகாரமாக இன்று மாறியுள்ளது.
மேலும் இலங்கைக்கான சீனத் தூதுவர் அண்மையில் அமெரிக்க பிரித்தானிய அவுஸ்திரேலிய கூட்டை பற்றியும் ஆசியப் பிராந்தியத்தில் அணு ஆயுத அபாய நிலை தொடர்பாகவும் , தென்சீன கடலில் அமெரிக்க அணு ஆயுத கப்பல் விபத்துக்குள்ளாகிய விடயம் பற்றியும் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இவை யாவும் மறைமுகமாக இலங்கையை எச்சரிக்கை செய்வது போல் அமைந்திருந்தது. இலங்கையின் பேரினவாத தளம் இந்திய அமெரிக்க மேற்குலக விரோத கருத்தியலில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும் தளமாக உள்ளது.
இது தொழிற்சங்க மட்டத்திலும் அதிக செல்வாக்கை செலுத்தும் விடயமாக உள்ளது . இலங்கை துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க இலங்கை முடிவு எடுத்தபோது பேரினவாத தளத்தின் மேற்கூறப்பட்ட சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஓரணியாக அந்த விடயத்தை எதிர்த்ததும் நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த ஆட்சியாளர் உடனடியாக முடிவை மாற்றியமையும் சகலரும் அறிந்த உண்மையாகும்.
மேற்படி துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என இலங்கையின் ஆட்சியாளர் எடுத்த முடிவின் போது இலங்கை மூலோபாயத்தில் ஓட்டை விழத் தொடங்கியிருந்தது. என்னதான் சீன சார்பு நிலையில் இலங்கையின் பேரினவாத தளம் இறுகிப்போய்யிருந்தாலும் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ச நடைமுறையில் அமெரிக்காவுடனான உறவு நிலையை தொடர வேண்டிய நிலையில் அவர்களது பின்புலம் காணப்படுகிறது. எனவே எதிர்வரும் காலத்தில் அமெரிக்க இந்திய சார்பு நிலையும் சீன சார்பு நிலையும் இரு அணியாக மோதுகின்ற நிலை இலங்கையில் ஏற்படப் போகின்றது.
இவை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க பொது ஜன பெரமுனவை சார்ந்த பதினொரு பங்காளிக் கட்சிகள் வெளியே வந்து வெளிப்படையாக ஒரு கூட்டத்தை நடத்தியிருப்பதுடன் ஊடகங்களுக்கும் தமது பக்க நியாயத்தை தெளிவுபடுத்தியுள்ளனர். இது தொடர்பாக பொது ஜன பெரமுனவின் கோத்தபாய, பசில் ராஜபக்ச சார்பினர் பதினொரு பங்காளி கட்சியினரை திட்டி தீர்த்து வருகின்றனர். வேண்டுமென்றால் பொது ஜன பெரமுனவில் இருந்து வெளியேறுங்கள் என சவாலும் விட்டுள்ளனர். பொது ஜன பெரமுனவின் செயலாளர் சாகல காரியவசம் பொது ஜன பெரமுன பிரதான தலைவர்களுடன் பிரதமர் அலரி மாளிகையை நடத்திய கலந்துரையாடலில் முரண்பாடான விடயங்கள் தொடர்பாக மௌனம் காத்து விட்டு தற்போது வெளியே வந்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என தனது விளக்கத்தை ஊடகங்களுக்கு தெளிவு நடத்தியுள்ளார்.
1977 காலப்பகுதியில் புத்தளத்தில் ” வொய்ஸ் ஒப் அமெரிக்கா ” என்ற நிறுவனத்திற்கு பல ஏக்கர் நிலத்தை அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதியான ஜெ.ஆர்.ஜெயவர்த்தன வழங்க முடிவு எடுத்தபோது இந்திய-இலங்கை முரண்நிலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய காலகட்டத்தில் இந்திய சோவியத் உறவு உச்ச நிலையில் இருந்தது. பாகிஸ்தானுக்கு அளவுக்கு அதிகமான அளவில் அமெரிக்க உதவி வந்ததால் அமெரிக்காவுடனான உறவு நிலையில் இந்திய எதிர்ப்பு அதிகம் காணப்பட்டது. எனவே தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்திய தத்தெடுத்து ஜெ.ஆர்க்கு பாடம் புகட்ட பல வழிகளில் முயன்று வந்தது. இறுதியாக இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவான போது இந்தியா அமைதி அடைந்தது. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மூலோபாயங்கள் இந்திய சார்பாக அமைந்து வந்ததும் அதை ஜெ.ஆர் அமெரிக்க சார்பு நிலைக்கு மாற்ற முனைந்த போது அதிக விலையை இலங்கை மக்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்றும்கூட இந்திய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இலங்கை பயணிக்க முற்பட்டதால் இலங்கை பொருளாதாரம் உட்பட பல தளங்கள் நிலை தடுமாறும் நிலை ஏற்பட்டது. எனவே இலங்கை ஆட்சியாளர் என்னதான் இதயபூர்வமான உறவு நிலையை சீனாவுடன் கொண்டிருக்க விரும்பியிருந்தாலும் நடைமுறை காரணிகளால் அதில் இருந்து சற்று விலகி நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சீன தேசத்தின் கோபம் வெளிப்படையாக இலங்கை மீது திரும்பியுள்ளது. அதன் வெளிப்பாடே மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது. அமெரிக்க மேற்குலக இந்திய சார்பு நிலையை இலங்கை பேண முற்பட்டால் அதற்கான சில வீட்டு பாடங்களை செய்து காட்ட வேண்டிய நிலை இலங்கைக்கு நிச்சயம் ஏற்படும்.
அது தேசிய இனப்பிரச்சினை, மனித உரிமை விடயங்கள் , பொருளாதார முறைமை தொடர்பான மாற்றங்கள் பல நிலைகளில் மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். எனவே பேரினவாத தளத்தை திசை திருப்புவதற்காக தற்போது ஒரு நாடு ஒரு சட்டமென்ற செயலணிக்கு கலகொட ஞானசார தேரரின் நியமனம் இடம் பெற்றிருக்கலாம். தனிச்சிங்கள நலன்களுக்காக தென்னிலங்கையில் 70 விகிதத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்ற இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் மேடைகளில் எல்லாம் அமெரிக்க விரோத மேற்குலக விரோத இந்திய விரோத கருத்தியலை நாடு முழுவதும் தூவி விட்டு நிர்ப்பந்தம் காரணமாக தமது மூலோபாயத்தை மாற்ற முற்படும் போது ஏற்படப்போகும் பிரளயத்துக்கு யார் பொறுப்பு கூறுவது.
பொது ஜன பெரமுனவின் 5 ஆவது தேசிய மாநாடு கொழும்பு தாமரை தடாகத்தில் நடந்தேறியுள்ளது. பசில் ராஜபக்சவை முன்னிலைப்படுத்துவதற்காக இது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பொது ஜன பெரமுனவின் பதினொரு பங்காளிக் கட்சித் தலைவர்களில் விமல் வீரவன்சவை தவிர ஏனையவர்கள் கலந்து கொண்டிருந்தனர். மாநாட்டின் இறுதியில் பொது ஜன பெரமுனவின் கொள்கைக்கு விசுவாசம் தெரிவிக்கும் உறுதிமொழியையும் சகலரும் வழங்கியிருந்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்திருந்ததுடன் பதினொரு பங்காளி அமைப்பினரையும் ஆதரித்து கருத்துக்களை முன்வைத்திருந்தார். இத்தகைய போக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள அரச விரோத போக்கை கையாள்வதற்கான தந்திரமா ? அல்லது பொது ஜன பெரமுனயில் புகையும் பிரச்சினைகளுக்கு தலைமை தாங்கி அடுத்த கட்டத்தில் தலைமை ஏற்க எடுக்கப்பட்ட தீர்மானமா என்பது தொடர்பான சந்தேகங்கள் நிலவுகின்றன.
இலங்கையின் பேரினவாத தளத்தின் வரலாறு முழுவதும் பாரம்பரிய இடதுசாரிகள் அவர்களைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இந்திய விரோத போராட்டங்களிலும் அமெரிக்க விரோத போராட்டங்களும் உணர்ச்சி மேலிட பங்கு கொள்வதும் சீன விரோத போராட்டங்களில் இவர்கள் கண்டும் காணாமல் போலிருப்பது நிதர்சன உண்மையாகும். இந்தப் போக்கு ஐக்கிய மக்கள் சக்தியிலும் மேலோட்டமாக காணப்படுகிறது. எனவே எதிர்வரும் காலங்களில் இத்தகைய முரண்பாடுகளான சூழ்நிலையில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.