கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம்!…. [ சுவை பதினைந்து ] …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கூரையானது.குடையானது. வேலியானது. விளைநிலத்திற்குப் பசளையும் ஆகியது பனை ஓலை.பல நிலைகளில் பயனாகியிருந்த பனை ஓலை – தன்னளவில் மட்டுமே நின்றுவிடாமல் – தன்னைத் தாங்கி நின்ற மட்டையினையும் காட்டி , அதனையும் எடுத்து உங்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற் போல பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி – பனை மட்டையினை வழங்கிவிட்டு பனை ஓலை ஒதுங்கிக் கொண்டது.
பனை மட்டை என்றதும் அதனைச் சாதாரணமாக எண்ணி விடக் கூடாது. பனை என் றாலே பயன் என்பதுதான் அர்த்தமாகும்.அந்த நிலையில் பனை மட்டையும் அர்த்தம் பொதிந்ததாகத்தானே அமையும். பனையில் ஓலையினைத் தாங்கி இருப்பது பனை மட்டை. ஓலை வெட்டும் பொழுது ஓலையுடன் பனை மட்டையும் சேர்ந்தே வந்துவிடும். வீடு வேயவும் , பல பொருட்களைச் செய்யவும் பனை ஓலையினை வெட்டிய பின்னர் – பநை மட்டை மட்டும் தனியே விடப் பட்டிருக்கும்.தன்னுடன் இணைந்து வளர்ந்து இருந்து வந்த ஓலை – அதனை விட்டு விட்டுப் போய்விட்டதே என்னும் ஏக்கம் பனை மட்டை க்கு இருந்தாலும் அது – அதனைக் காட்டிக் கொள்ளாமல் தன்னால் என்ன முடியுமோ அதனைக் கொடுத்து ஆறுதல் அடைந்தே இருக்கும்.ஓலையினின்றும் அகற்றப்பட்ட மட்டை – ஓலமிடுவதேயில்லை. உதவும் வரை உதவிக்கொண்டே இருக்கும். இதற்கும் காரணம் அது பனையினின்றும் வந்த ஒரு அங்கம் அல்லவா ! கொடுக்கும் குணத்தை நிறையவே கொண்டிருக்கும் பனையின் மட்டைக்கும் அந்தக் குணம் அமைந்துதானே இருக்கும்!
ஓலை நீக்கப்பட்ட பனை மட்டைகள் காயவிடப்பட்ட பின்னர் அவை வேலி அடைக்கப் பயன்படுத்தப்படுகிறது. வீட்டின் கூரைகளில் வரிச்சுகளாகவும் பனை மட்டை பயனாகி நிற்கிறது. பனை ஓலைக் கூரை வீடுகளில் – பனை மட்டையின் உபயோயகம் நிறையவே காணப்படும்.களிமண்ணைக்கொண்டு அரைக் குந்தாக அமைத்து – அதன் மேல் , கருக்கு நீக்கிய பனை மட்டைகளை அளவாக வெட்டி யெடுத்து – பனைமட்டைச் சுவர் அமைப்பது மிகவும் அழகாக இருக்கும். வீட்டில் பல இடங்களில் இப்படியான அமைப்பினைப் பார்த் தவர்களுக்கும், அப்படியான வீட்டில் வாழ்ந்தவர்களுக்கும் அதன் நிலை நன்றாகவே மன தில் பதிந்திருக்கும். பனை ஓலை கூரையாய் அமைய அதனைத் தாங்கிய மட்டை – அந்தக் கூரையின் கீழ் குட்டிச் சுவராய் இருந்து தன்னுடன் இணைந்திருந்த பனை ஓலை யினைப் பார்த்தபடியே இருக்கும். இரண்டுக்கும் இடையே எப்படி உறவும் நட்பும் தொடர் கிறது பாருங்கள் !
கிராமப் புறங்களிலே வீட்டில் மட்டுமல்ல – சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகள், என் பவற்றிலும் பனை மட்டையினாலாகிய அரைக்குந்து அடைப்பு அழகினைக் காண லாம். அங்கும் சுற்றிவர மண்ணினாலாகிய அரைக்குந்து இருக்கும். அந்த மண்சுவர் முக்கால் பங்காய் அல்லது அரைப்பங்காய் அமைந்திருக்கும்.களிமண் சுவரின் மேற் பகுதியை மறை த்து சனசமூக நிலையங்களின், வாசிகசாலைகளின் பாதுகாப்புக் கவச மாய் கருக்குச் சீவப்பட்ட காய்ந்த பனை மட்டைகளே வந்து நிற்கும்,அந்தப் பனை மட்டைகளை அடுக்காக இணைப்பதே கண்ணுக்கு நல்ல காட்சியாய் அமைந்திருக் கும்.வாசிகசாலையின் , சனசமூக நிலையத்தின் முன் பெரும்பாலும் அழகான வேம்பும் வளர்ந்திருக்கும். வாசிகசாலை யின் உள்ளே அமர்ந்து பத்திரிகைகளை வாசிக்கும் பொழுது – பனை மட்டையின் இடை வெளியினால் உள்ளே வரும் காற்று இதமாகவே இருக்கும். வேம்பில் பட்டுவரும் காற்று மேலும் வாசிக்கவே ஊக்கப்படுத்தும். பத்திரி கைகளை வாசிக்கும் வாசிகசாலைகள் பனை மட்டையினைக் கொண்டு அமைக்கப்ப ட்டது போன்று – மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூட வகுப்பறைகளும் பனை மட்டை யினால் அமைக்கப் பட்டிருந்தமையும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.தமிழ்நாட்டில் இவ்வாறான பனைமட்டை வகுப்பறைகளில் மாணவர்கள் படித்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
பனை மட்டைகளைக் கொண்டு வீட்டுக்கு படலை அமைக்கப்படுகிறது. வாசசிக சாலை, சனசமூக நிலையங்களின் கதவாயும் பனைமட்டைப் படலைகள் அமைந்தும் இருப் பதுண்டு. பனை மட்டை வேலி. அந்த வேலியில் வளவுக்கு உள்ளேவர – பனை மட்டைப் படலை ! எல்லாமே பனை மயமாகவே இருந்த காலமும் இருந்திருக்கிறது. பனை மட்டையிலிருந்து உரித்து எடுக்கப்படும் நாரே வேலி அடைக்கவும், படலை கட்டவும், வீடு வேயவும் ,கயிறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. தென்னந்தும்பாலா கிய கயிற்றினைப் பயன்படுத்தாமமேலேயே – பனைமட்டை நாரினைக் கயிறாகப் பயன்படுத்தியதைக் கருத்திருத்த வேண்டும்.
பனை ஓலையினைப் பிடித்து வைத்திருக்கும் பனை மட்டையின் அடிப்பகுதி கவடுபோல் இருக்கும். இந்தப் பகுதிதான் பனையினை இறுக்கமாய் பிடித்திருக்கும் முக்கிய பகுதி யாகும்.ஒலைகளும் மட்டைகளும் பனையுடன் இணைந்து இருப்பதற்கு உறுதுணையே இந்தக் கவடுபோன்ற பகுதிதான். இதற்குக் கங்குமட்டை என்றும், பத்தல் என்றும் பெயர் அமைந்திருக்கிறது.யாழ்ப்பாணத்தில் கங்குமட்டை என்பது இந்தியாவில் பத்தல் என்று பெயராய் மாறியிருக்கிறது.பெயர் மாறினாலும் அதன் பயன்பாட்டில் மட்டும் எந்தவித மாற்றமுமே இல்லை எனலாம்.
கற்பகதருவான பனையானது வளரும் பருவத்தில் வடலி என்று பெயர் பெறுகிறது. வடலியாய் இருக்கும் பொழுதே அதன் வள்ளல் தன்மை ஆரம்பமாகியே விடுவதைக் காணலாம்.நிலவடலி என்று பெயர் பெறுகின்ற ஆரம்பக் காலத்தில் அதன் ஓலைகள் மயிலின் தோகைபோன்று அழகாக இருக்கும். அந்த ஒலைகளை மட்டையுடன் எடுத்து அழகான விசிறிகள் செய்யப்படுகின்றன. ஓலையுடன் இளம் மட்டையின் இங்கே இணை வது குறிப்பிடத்தக்கதாகும்.அடுத்த படிமுறையில் வடலியில் உள்ள மட்டை களில் கருக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது.வடலியானது வளர்ந்து வரும்பொழுது வரும் நிலையே கங்கு வடலிப்பருவம். கங்குப்பகுதிதான் மிகவும் முக்கியமானது. அந்தப் பகுதி சிறந்த மூலப் பொருளினை வழங்கும் பகுதியாய் அமைந்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிராமவாசிகள் கங்கு மட்டைகளை வெட்டிக் காலுக்குச் செருப்பாக அணிந்து கொண்டார்களாம்.. மேல் வாருக்குப் பனை நார் அகணியைப் பொருத்திக் கொண்டார்கள். இதை அணிந்து கொண்டு செல்லும்பொழுது காலுக்கு மிருதுவாக இருப்பதுடன் மிகவும் மென்மை யாகவும் இருந்ததாம். அடிப்பகுதி அதிகமாகத் தேய்ந்துவிட்டால் வேறு இரண்டு கங்கு மட்டைகளை வெட் டிக் கால் செருப்புகளை செய்து கொள்வர். இவ்வாறு மட்டைச் செருப்பை அணிந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதை போடும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது – ஓர் வெள்ளையர் அந்தச் பாதை வழியே சென்ற பொழுது- கிராமவாசிகள் அணிந்திருக்கும் கால் செருப்பைப் பார்த்து வியந்தார். இந்தச் செருப்பு – தோலுக்குப் பதிலாக எப்படி உதவு கிறது என்று கவனித்தார். மட்டைச் செருப்பைப் புரட்டிப் பார்க்கும் பொழுது செருப்பின் அடிப்பகுதி தேய்ந்து இருந்தது. ஆனால் இடையிலே உள்ள கம்பி போன்ற தும்பு தேயாமல் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடனே இந்தக் கம்பி போன்ற தும்பை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு ஆராய் ந்ததும் இது துடப்பம் (பிரஷ்) செய்வதற்குப் பொருத்தமான மூலப்பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தும்பு வளைந்தாலும் தானே நிமிர்ந்து கொள்ளும் விறைப்புத் தன்மையும், நீர் பட்டாலும் பாதிக்கப்படாத குணமும், வெப்பம், மின்சா ரம் போன்றவற்றால் பாதிக்கப்படாத பண்புகளும் விரைவில் தேயாத கடின மான உறுதித்தன்மையும் பெற்றிருந்ததை அங்கு ஆராய்ந்தவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று அறியமுடிகிறது.கங்குமட்டையின் மகத்துவமும் , அதிலிருந்து கிடைக்கும் தும்பின் மகத்துவமும் இங்கிலாந்து வரை செல்லும் அளவுக்கு இருந்திருக்கிறது என்பது பெருமையாய் இருக்கிறதல்லவா !
கங்குமட்டைகளின் பொருளாராதார முக்கியத்துவம் என்ன தெரியுமா ? அதுதான் அதிலிருந்து எடுக்கப்படுகின்ற ” தும்பாகும் ” தென்னை மட்டையில் இருந்துதானே தும்பு எடுக்கப்படுகிறது.அது என்ன பனந்தும்பு ! ஆச்சரியமாய் இருக்கிறதா ! ஆச்சரியம் அல்ல , உண்மைதான் . பனந்தும்பானது மூன்று வகையில் இருக்கிறது. கறுப்பு, நடுத்தரம், வெள்ளை என்பனவாகும்.வடலிப் பனைகளின் கங்குமட்டைகள் கறுப்புத் தும்பைத் தரு கின்றன.முற்றிய பனைகளில் இருந்து கிடைக்கும் தும்பு வெள்ளை நிறமாய் இருக்கும். இடையில் இருப்பதுதான் நடுத்தரமாகும்.இரும்புக் கம்பிபோல உறுதியாயும் உருண் டையாயும் இருக்கும்.எளிதில் முறிந்து விடாது இருக்கும். வளைந்து நிமிரும் தன்மை உடையது.பளபளப்பாய் இருக்கும். வெப்பத்தாலோ , ஈரத்தாலோ பாதிக்கப்படாத தன்மை உள்ளது. இந்தக் கறுப்புப் பனந்தும்பில் மின்சாரங் கூடப் பாய்ந்துவிடாது.அதே வேளை கறையானோ செல்லோ இத்தும்பை அரிக்கவும் மாட்டாது என்பதும் கவனத்துக்குரிய தாகும்.அதே வேளை அமிலத்தினாலோ , காரத்தினாலே இத்தும்பு பாதிப்புக்கு உட்பட மாட்டாது. வெள்ளைத் தும்பு வயது முற்றிய பனைகளின் கங்குமட்டைகளில் இருந்துதான் கிடைக்கிறது.கறுப்புத்தும்பு போன்றதன்று. இது மிகவும் மென்மையாய் இருக்கும். கறுப்புத் தும்பின் வலிமை இதில் இருக்காது.இதன் எடையும் குறைவாகவே இருக்கும்.இந்தத் தும்பில் சதைப் பற்று ஒட்டியபடியே இருக்கும். மிருதுவான தூரிகைவகைகள் செய்வதற்கு உகந்ததாய் அமையும்.வெள்ளைத் தும்பில் ஐம்பத்து ஐந்து பகுதியும் கறுப்புத்தும்பில் நாற்பத்து ஐந்து பகுதிகளும் கொண்டதாய் அமைந் திருப்பதுதான் நடுத்தரத்தும்பாகும். வன்மையும், மென்மையும் கலந்த கலவையாய் இருப்பதுதான் இந்தத்தும்பின் சிறப்பு எனலாம்.
கங்குமட்டையினைச் சாதரணமாகவே நாங்கள் பார்ப்பது வழக்க மாகிவிட்டது கங்கு மட்டை என்றவுடன் அடுப்பெரிப்பதுதான் முன்வந்து நிற்கும்.வென்னீர் வைக்க பெரும் பாலும் கங்குமட்டையினையே பயன்படுத்துவோம். கங்குமட்டைகளை மழையில்லாக் காலங்களில் சேமித்து மழைக்காலங்களில் அடுப்புக்கு விறகாகப் பயன்படுத்தியதை பல ரும் மறந்திருக்க மாட்டார்கள்.பனந்தோப்புகள் நிறைந்த இடங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோருக்குக் கங்குமட்டை என்றால் மிகவும் பெரியவிருப்பமாய் இருக்கும். ஏனெ ன்றால் சமைக்கும் பணிக்குக் கைகொடுத்து நிற்கும் எரிபொருள் அதுதானே ! நகரத்தாருக்குக் கங்குமட்டைபற்றி அவ்வளவு தெரியமாட்டாது.
மடலில் இரண்டு கங்குமடைகள் அதாவது பத்தல் இருக்கும்.ஒரு பத்தலின் நீளம் ஏறத் தாள பத்து அங்குலத்திலிருந்து இருபத்து ஆறு அங்குலம் வரை இருக்கும். ஒன்பது தொடக்கம் பத்து அங்குலம் வரையில் அகலம் அமைந்திருக்கும்.இப்படி அமைந்திருக்கும் இந்த இரண்டு பத்தல்களிலிருந்தும் தும்பினை எடுத்துக் கொள்ளலாம். பத்தல் என்று அழைக்கப்படும் கங்குமட்டை உட்பகுதி பளபளப்பாக மென்மையான தோல் போலக் காணப்படும்.மேற்பகுதி சற்றுக் கடினமான உறையினைக் கொண்டதாக இருக்கும்.இந்த கங்கு மட்டையின் தும்பு நீளவாட்டில் படர்ந்திருக்கும்.இந்தத் தும்பினது குறுக்கு வாட்டில் நுண் மையான தோல்போன்ற மென்மையான தும்பு அழுத்த மாய் பின்னப்பட்டிருக்கும். விஞ்ஞானப் பரிசோதனைக் கூடத்துக்குள் கூட்டி வந்துவிட்டேன் என்று எண்ணுகிறீர்களா ! கங்குமட்டைக்குள் பொதிந்திருக்கும் இரகசியங்களைத்தான் தொட்டுக் காட்டுகிறேன். நெடுக்காயும் குறுக்காயும் காணப்படும் தும்புகள் உறுதியாகப் படிந்திருக்க சோறு என்னும் சதைப்பற்றுத் துணையாக பரவியே இருக்கும்.இந்தச் சோறு உறுதியாகிவிட்டால் தும்பு எடுப்பதென்பது கடினமாகியே விடும். கங்குமட்டையானது காய்ந்தால் இந்த நிலை ஏற்ப ட்டுவிடும். அதனால் கங்குமட்டையானது காய்ந்து போவதற்கு முன்பாகவேதான் தும்பை எடுக்கப் பதமாய் இருக்கும் என்பது முக்கியமாகும்.கங்குமட்டையின் அடிப்பகுதியில் இரு க்கும் சோற்றுப் பகுதியானது ஈரப்பசையினையும் அதிகம் கொண்டே இருக்கும். பனையு டன் இணைந்திருக்கும் கங்குமட்டையின் நுனிப் பகுதி மெல்லிய தாகவே காணப்படும். ஆனால் கங்குமட்டையின் அடிப்பகுயோ உறுதியானதாயும் திரட்சியானதாயும் இருக்கும் என்பது நோக்கத்தக்கது.கங்குமட்டையின் அடிப்பகுதியில் காணப்படும் தும்பினதும் கனம் சற்று அதிகமாய் அமைந்திருக்கும்.ஆனால் நுனிப்பகுதியில் இருக்கும் தும்பானது கனவள வில் சற்றுக் குறைவாகவே அமைந்திருக்கும்.
பனந்தும்பினது உற்பத்தி பல காலங்களாய் இடம் பெற்று வருகிறது என்பது மனமிருத்த வேண்டியதாகும்.ஆயிரத்து எண்ணூறாம் ஆண் டுக் காலத்திலேயே பனந்தும்பு எடுப்பது தொடங்கி விட்டது என்பதும் நோக்கத்தக்கது.கங்கு மட்டைகள் தான் பனந்தும்புக்கு அவசி யம் என்பதால் – வடலிகளை மனம் போன போக்கில் வெட்டிப் பயன்படுத்தத் தொடங்கிய காரணத்தால் – வடலிகளின் வளர்ச்சியில் தடை யேற்படு ம் நிலை ஏற்படலாயிற்று. இதனால் அக்காலத்தில் இருந்த அரசாங்கம் வடலிகளைக் கண்டபடி வெட்டுவதற்கே சட்டம் போட் டது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அரசாங்கமே தலையிடும் அளவுக்கு பனந்தும்பு உற்பத்தி முக்கியத்துவம் பெற்றதாய் இருந்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்க தேயாகும்.
இலங்கையில் வருடம் முழுவதும் கங்குமட்டை வெட்டுவது நடை பெற்ற படியேதான் இருக்கிறது.இந்தியாவில் இலங்கை போன்று கங்குமட்டை வெட்ட மாட்டார்கள். இரண்டு வருடத்துக்கு ஒரு முறைதான் இங்கு கங்குமட்டை வெட்டப்படுகிறது. அதா வது மாசிமாதம் தொடக்கம் வைகாசிமாதம் வரையான காலப்பகுதி அல்லது சித்திரை மாதம் தொடக்கம் ஆவணைமாதம் வரையான காலப்பகுதியேயாகும்.இப்படி வெட்டுவ தனால் பனையின் வளர்ச்சியில் பாதிப்பு வருவதில்லை.