கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்…12…. சங்கர சுப்பிரமணியன்.

காவிரி உற்பத்தி ஆனதிலிருந்து தமிழ் நாட்டில் பாய்கிறது. கல்லணை கட்டி கழனியை செழிக்கவைத்தான் தமிழன். இந்தியா விடுதலையடைந்து இரு கட்சிகள்ஆண்டும் இருண்டு போன காவிரிப் பிரச்சனைக்கு விடிவில்லை. தமிழரின் உயிரான மொழியை இழந்து சுயமரியாதையாய் தோளில் கிடக்கும் துண்டை இறக்கி இடுப்பில் கட்டி காலில் இருக்கும் செருப்பை எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு தரையில் விழுந்து தவழும்வரை செல்லாவிட்டாலும் முதுகை சற்றே முன்னோக்கி வளைத்தால் போதும் இழந்தவைகள் யாவும் இன்றே கிடைக்கும்.தமிழ் தேசியம் ஏன் அவசியம் என்பதற்கு பல காரணங்களுக்கிடையே சிறப்பான காரணத்தை பார்ப்போம். பலர் தலைகீழாக நின்று பார்த்தும் பல சூழ்ச்சிகள் செய்தும் உண்மை என்ற நெருப்பை எத்தனையே வகையில் மூடிப்பார்த்தும் அவற்றை எல்லாம் நெருப்பு எரித்து அழித்து விட்டது. வேறு வழியின்றி உலகநாடுகள் எல்லாம் தமிழ்தான் மூத்தமொழி என்று அங்கீகரித்ததோடு அதைப் பிரகடனப்படுத்தவும் செய்துவிட்டார்கள். இந்த உலகப்பதிவை இனி நீக்குவது கடினம். உலகம் அழி ந்தால்தான் உண்டு.ஒருவேளை தமிழ்மொழி தமிழ் இனம் பற்றி பேசாமலிருப்பது தான் சரியோ? அதற்கும் ஒருவர் கைவசம் விளக்கத்தை தயாராக வைத்திருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நம் மன்னார்குடி மாடசாமி அண்ணாச்சிதான். அவருடைய கருத்தையும் கேட்டுவிட்டு வருவோம். உலகிற்கே வாழும்முறையை போதிக்கிறதே திருக்குறள், அதில் தமிழ், தமிழர் என்று எங்காவது ஒரு சொல் வருகிறதா? என்கிறார்.மேலும் நாங்கள் எல்லாம் பரந்த நோக்கில்நடக்கிறோம். நீங்கள்தான் தமிழர், தமிழ்மொழி என்று பேசிக்கொண்டு திரிகிறீர்கள். போய் பிழப்பை பாருங்கள் கருத்து கந்தசாமி மாதிரி கருத்தை சொல்லாதீர்கள். வேறு வேலையிருந்தால்பாருங்கள் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இதையெல்லாம் நாம் நன்றாக உணரவேண்டும். நாம் சாதி, மதம், நாடு கடந்து தமிழ் தேசிய இனமாக நம்மை உணர வேண்டும். உலக நாடுகள் நம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணரவைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இதற்கு நாடுகடந்து எல்லா நாட்டிலும் வாழும் தமிழ் தேசிய இனமும் இணையவேண்டும். தமிழினத்தை ஆளவரும் இனம் இனிமேலாவது தமிழினமாக இருக்க வேண்டும். அப்படி வரும் தமிழர் தமிழுணர்வு மிக்கவராகவும் பட்டம், பதவி மற்றும் பணத்துக்காக தமிழினத்தை மீண்டும் பலிக்கடா ஆக்க கனவிலும் எண்ணாத தமிழராக இருக்கவேண்டும்.ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவன் வாழும் நிலத்தை சுடுகாடாக்கி விடவேண்டும். அல்லது அந்த இடத்தின் இன அடையாளத்தை அழித்து விடவேண்டும். தமிழ்நாட்டின் இயற்கை வளமான மேற்கு தொடர்ச்சி மலையைத் தகர்த்து வளங்களை கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.சான்றாக தமிழரின் சம்பந்தப்பட்ட எந்தப்பிரச்சனை என்றாலும் அதை மறு ஆய்வு செய்யவேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட நிலப்பரப்பில் உள்ளோர் அதிக அளவில் பங்கு கொள்ளவேண்டும். சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஒரு கூட்டத்தில்பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் அதனால் வரும் சாதக பாதகங்களை அனுபவிக்கப் போகிறவர்களின் பங்களிப்பு எத்தனை விழுக்காடு என்பதெல்லாம் தெரியவில்லை. எல்லாவற்றையும் விடுங்கள் நான் பொதுவில் நின்று பேசுகிறேன் தமிழருக்காக குரல் எழுப்பும் கட்சியின் பங்களிப்பு கூட இல்லையே?கேரளாவின் வளங்களை அவர்கள் பாதுகாத்தபடியே தமிழ்நாட்டில் தடையின்றி மலைகளை உடைத்து கற்களை அனுப்பவேண்டும் என்று அந்த மாநில முதலமைச்சரே கோரிக்கை வைத்துள்ளார். இது எப்படி இருக்கு?தமிழ் நாட்டில் ஒரு பகுதியில் வட இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தியுள்ளார்கள். இப்போது அவர்கள் விருப்பம்போல அப்பகுதியில் வாழ அப்பகுதியை தனி மாநிலமாக பிரிக்க முற்பட்டு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் மக்களும் காட்டிய எதிர்ப்பைக் கண்டதும் அந்த முயற்சி கைவிடப்பட்டது.இந்த நிலை தமிழ் தேசியம் மலர்ந்தால் தமிழினம் தன்னை விளிம்பு நிலையிலிருந்து கட்டாயமாக மீட்டெடுக்கும். இந்நிலை ஏற்படாவிட்டால் உலகம் முழுக்க பன்னிரெண்டாயிரம் கோடி தமிழர் இருந்தாலும் நாம் நாதியற்றவர்களாகத்தான் இருப்போம். ஐம்பது மக்களே கொண்ட ஒரு இனத்துக்கும் எழுநூறு மக்கள் கொண்ட இனத்துக்கும் தனி நாடென்ற அங்கீகாரம் உலக அரங்கில் கிடைத்திருக்கிறது.அப்படியிருக்க உலகம் முழுக்க பன்னிரெண்டு கோடிக்கும் அதிகமாக எண்ணிக்ககையை கொண்ட தமிழினம் தனக்கென ஒரு நாடு இன்றி அடிமைப்பட்டே கிடைக்கிறது. இந்த நிலையில் நான் பெரியவன் நீ பெரியவன் நான் மேல் சாதி நீ கீழ்சாதி நான் பிறக்கும் போதே கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தான் என்று சொல்வது மாதிரி இந்த சாதியில் பிறந்து இங்கு வாழ்கிறேன் என்ற வறட்டுக் கௌரவம் வேறு.இந்த கௌரவமெல்லாம் எத்தனை நாள்? நம்மை ஒருவன் கொத்தடிமைபோல் வைத்திருக்கிறானே என்ற நினைப்பு இல்லாமலும் ஒரு கூட்டம் சோறு கிடைத்த இடம் சொர்க்கம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகிறது.தமிழினம் உலகின் மூத்த இனம் தமிழ்மொழி உலகின் மூத்தமொழி என்ற உண்மையை வரலாற்று ஆய்வாளர்கள் உலகறிய முன்னெடுத்து வைத்தனர். இந்தவரலாற்று ஆய்வாளர் எடுத்துரைத்த உண்மையை ஏற்றுக்கொள்ள சிலரால் முடிவதில்லை. அதை எப்படியாவது அழித்துவிட முடியாதா என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறார்கள். முடியாதபோது விரக்தியின் விளிம்புக்கே சென்று விடுகிறார்கள்.மக்கள் நாடு விட்டு நாடு செல்வதும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வது இயல்பு. பிழைப்புக்காக இடம் பெயர்வதில் தப்பில்லை. அது இயற்கையாக நிகழ்வது. உலகின் பல பாகங்களில் இருந்து பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலங்களில் வந்து போகின்றன. அப்படி வரும் பறவைகளுக்கு அங்கு ஒரு குறிப்பிட்ட காலம்மட்டுமே வாழமுடிகிறது. அதன்பின் அங்குள்ள தட்பவெப்ப நிலை அவைகளுக்கு ஒத்து வராததால் திரும்பவும் வந்த இடத்துக்கே சென்றுவிடுகின்றன.ஒருவேளை அப்பறவைகளுக்கு பிடித்தபடி அங்கு தட்பவெப்பநிலை நிலவுமேயானால் அப்பறவைகள் அங்கேயே தங்கியிருக்கும். எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்காக புலம்பெயர்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நாடுகளில் இருந்து மிகவும் வசதிமிக்க நாடுகளுக்கு மனிதர்கள் புலம் பெயர்வது வசதியான மற்றும் ஆடம்பர வாழ்வுக்கு மட்டுமே. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்க போன்ற நாடுகளில் இருந்து கென்யா, எத்தியோப்பியா போன்றநாடுகளுக்கு குடியேறுவார்களா?அதுவே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என்று ஏன் குடியேறுகிறார்கள். ஆதலால் இயற்கையாக குடியேறுவதில் தவறில்லை. ஆனால் குடியேற்றப்பட்டால் அது தவறு. சோழப்பேரரசு எழுச்சியுற்ற போது இந்தியா கடந்து கடாரம்வரை சென்றார்கள். தமிழர் அங்கு ஏன் குடியேறவில்லை. அல்லது ஏன் குடியேற்றப் படவில்லை.அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று தமிழர் அப்போது சொந்தநாட்டிலே வளமாக வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் மற்ற இடங்களை வென்று அவ்விடங்கள் தம் வசம் வந்தபின்னும் அங்கு குடியேற விரும்பவில்லை. தமது வீரத்தைக்காட்டவே போர் புரிந்து நாடுகளைக் கைப்பற்றினர் என்பது புலனாகிறது.இன்னொரு காரணம் தமிழர்களின் பிறர் நிலத்தை ஆக்கிரமிக்கும் குணமில்லா உயர்பண்பாகவும் இருக்கலாம்.ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட ஆங்கிலக் குடியேற்றம் எதையும் நிகழத்தவில்லை. நிர்வாகம் செய்யவே பல குடும்பத்தினர் இங்கு வந்தார்கள். வந்த இடத்தில் இனக்கலப்பு ஏற்பட்டு அவ்வினம் மட்டுமே இங்கிருக்கிறார்களே அன்றி ஆங்கிலேயர்கள் யாரும் இங்கிருந்தது இல்லை எனலாம்.ஆனால் தமிழ் நாட்டில் படையடுத்து வென்ற விஜய நகர பேரரசு காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் இங்குள்ள வளங்களைப் பார்த்ததும் தெலுங்கர்கள் குடியேறினார்கள். குடியமர்த்தப் பட்டார்கள். அதுபோல சரபோஜி மன்னர்காலத்திலும் மராத்தியர்கள் குடியேறினார்கள். இந்த குடியேற்றமும் குடியமர்த்தலும் நிகழ்ந்திராவிட்டால் தமிழ்நாட்டிலுள்ள காவிரியாற்றங்கரையில் தியாகராயருக்கு உற்சவமும் தெலுங்கு கீர்த்தனைகளும் அரங்கேறுமா?-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.