வாய்க்கு ஒரு கொழுக்கட்டை, வாக்காளர்களுக்கு அவல்!…. அவதானி.
வீட்டிலே குழந்தை அழுது அடம்பிடித்து அழுதாள் என்ன செய்வார்கள்..? அதன் வாயில் சுவைப்பதற்கு ஏதாகிலும் வைத்து சமாதானப்படுத்தி, அதன் அமளியை அடக்குவார்கள். அல்லது கட்டுப்படுத்துவார்கள்.
வீடுகளில்தான் இப்படி என்றால் நாடுகளிலும் இதே நாடகம் வேறு ஒரு வழியில் அரங்கேறிவிடும். கீழைத்தேய நாடுகளில் இந்தக்காட்சியை ஏற்கனவே கண்டிருப்பீர்கள்.
ஒரு காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆரை கடுமையாக விமர்சனம் செய்துவந்தவர்தான் கவியரசு கண்ணதாசன். எம். ஜி. ஆர், திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராகவும் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கும்போது தலைவர் கலைஞர் கருணாநிதியிடம் கணக்குக்கேட்டார்.
தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்தார். அவரை தொடர்ந்தும் உள்ளே வைத்திருப்பதா..? வெளியேற்றுவதா..? என்று திணறிய கருணாநிதி, கண்ணதாசனிடம் ஆலோசனை கேட்டார்.
அதற்கு கண்ணதாசன் , “ வெளியே விடாதே. உள்ளே வைத்து அடி “ என்றார். அதன் அர்த்தம் வன்முறை அல்ல. “ ஆளை உள்ளேவைத்து அடக்கிவை “ என்பதுதான்.
ஆனால், கருணாநிதி, வெளியே மக்கள் திலகத்திற்கு இருக்கும் செல்வாக்கை கணிக்கத் தெரியாமல், கட்சியிலிருந்து நீக்கினார்.
அதுவரையில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த திலகம் ஒரு சில வருடங்களிலேயே தமிழக முதல்வரானார்.
திலகத்தை தொடர்ந்தும் விமர்சித்து வந்தவரும், கழகத்தின் உள்ளே வைத்து அடிக்குமாறும் சொன்னவரான கண்ணதாசன், அதன் பிறகும் சும்மா இருக்கவில்லை.
“ எம். ஜி. ஆரின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அவரது திரைப்படம் போன்று நூறுநாட்கள் மாத்திரமே ஓடும் “ என்றும் சொன்னார்.
ஆனால், இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியும்தானே..?
தான் முதல்வரானதன் பின்னரும் கண்ணதாசன் சும்மா இருக்கமாட்டார். ஏதாவது இடக்கு முடக்காக எழுதியும் பேசியும்
தனக்கு அபகீர்த்தி இழைப்பார் என்பதை தீர்க்கதரிசனமாக தெரிந்துகொண்ட எம். ஜி. ஆர், தாமதிக்காமல், கண்ணதாசனுக்கு தமிழ் நாடு ஆஸ்தான கவிஞர் பதவியையும் கொடுத்து கார், அலுவலகம் என்று வசதிகளும் செய்துகொடுத்தார்.
கண்ணதாசனும் , எம். ஜி. ஆர் விடயத்தில் அதன்பின்னர் மூச்சுக்காட்டவில்லை.
இந்த பழைய செய்திகள்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. அண்மையில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ , “ ஒரே நாடு ஒரே சட்டம் “ என்ற செயலணிக்கு பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரரை தலைவராக நியமித்திருப்பதுதான் அந்த பழைய நினைவுகள் எழுவதற்கு காரணம்.
குறிப்பிட்ட இந்தத் தேரரின் நியமனத்திற்கு அரசின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் பெருகிவருகின்றன. முதலில் இந்த செயலணியில் தமிழர்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் தமிழர் தரப்பிலிருந்து எழுந்தது.
இவ்வாறு எதிர்வினைகள் வரும் என்பது இலங்கை அதிபருக்கு தெரியாதா..? தெரியும். நிச்சயமாகத் தெரியும் !
இந்த அரசை பதவியேற்றுவதற்காக வெளிநாடுகள் எங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்ட சட்ட அறிஞர் அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக எம். பி.யாக பதவியேற்று நீதியமைச்சருமானார்.
தற்போது, ஜனாதிபதியின் இந்த எதேச்சதிகார தீர்மானத்தையடுத்து, தனது பதவியையும் துறப்பதற்கு தயராகியுள்ளார் என்ற செய்தி இந்தப்பதிவு எழுதும்போது கசிந்துள்ளது.
இனி இந்த அரசை பதவியில் அமர்த்திய வாக்காளர்களும் தேசிய சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகளும் இந்த விவகாரத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஊடகங்களுக்கும் நல்லதோர் செய்திவேட்டைதான்.
கலகொட அத்தே ஞானசார தேரர், ஏற்கனவே சில குற்றச்செயல்களினால் நீதிமன்றில் தோன்றியவர். நடு இரவில் விரும்பத்தகாதவகையில் வாகனம் செலுத்திச்சென்ற குற்றத்தின் கீழ் பொலிஸாரால் கைதானவர்.
பெளத்த துறவிகள், மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் வாயால் மென்று உணவு உண்ணாமல் புலன் அடக்கம் செய்யவேண்டியவர்கள்.
அத்துடன் மாலை ஆறுமணிக்கு மேல் வெளிநடமாட்டங்களையும் முற்றாகத் தவிர்க்கவேண்டியவர்கள். அவர்கள் முற்றுந்துறந்த முனிவர்கள் போன்று வாழ்ந்து மக்களுக்கு தர்ம உபதேசம் செய்யவேண்டியவர்கள்.
ஆனால், 1959 ஆண்டு செப்டெம்பர் மாதம் அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா, ஒரு பௌத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இலங்கையில் நிலைமை வேறுவிதமாக மாறியது.
விகாரைகளில் தங்கியிருந்து சமயப்பணி மேற்கொள்ள வேண்டிய பௌத்த துறவிகளை பண்டாரநாயக்காதான் அரசியலுக்கு அழைத்தார்.
அதன் பலனை அவர் சில வருடங்களிலேயே அனுபவித்து பரலோகம் சென்றார்.
சமகால கொரோனோ பெருந்தொற்றினால் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக வீதிகளில் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய ஒரு பௌத்த பிக்குவை வலையூடகங்களில் பார்த்தோம்.
அதற்கு முன்னர், பொதுபலசேனாவின் சார்பில் யாரை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புவது என்ற விவகாரத்தில் அதன் பிரதிநிதிகளான பெளத்த பிக்குகள் தரப்பில் நடந்த பிரச்சினைகளைக்கண்டு மக்களே வெட்கித் தலைகுனிந்தனர்.
கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததன்பேரிலும் விமர்சனத்திற்குள்ளானர்.
அத்துடன் இந்த அரசையும் அவ்வப்போது கடும் வார்த்தைகளினால் விமர்சித்து வந்தவர். அத்தகைய ஒருவரின் வாயைப்பூட்டுவதற்காக “ ஒரு நாடு ஒரு சட்டம் “ என்ற செயலணிக்கு அவரை தலைவராக நியமித்திருப்பதன் பின்னணி குறித்து யோசிக்கும் போது, வீட்டில் அழுத்து அடம்பிடிக்கும் குழந்தைக்கு வாயில் எதனையாவது வைத்து அடக்கும் செயலுக்குத்தான் இதனையும் ஒப்பிடவேண்டியிருக்கிறது.
அரசை அதிகாரத்திற்கு அனுப்பிய வாக்காள பெருமக்கள் இந்தப்பிரச்சினை குறித்து அவல் மெல்லுவது போன்று எஞ்சிய சில காலத்துக்கு மென்றுகொண்டிருக்கவேண்டியதுதான்.
பெருந்தொற்று நெருக்கடி, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவேண்டுமானால், நாட்டின் அதிபரும் அவரது அரசின் பிரதிநிதிகளும் இவ்வாறு அதிரடியாக கவனத்தை திசை திருப்பும் கைங்கரியங்களை தொடர்வார்கள்.
இதில் இருகோடு தத்துவமும் அடங்கியிருக்கிறது. புரிந்தவர்களுக்கு புரியும்.
ஒரு நீளமான கோட்டை சிறிதாக்கவேண்டுமா..? அதன் அருகில் அதனைவிட நீளமான கோட்டை கீறிவிடுங்கள்.
தற்போது இந்த ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அறிவித்தலின் பின்னணியில் விலைவாசி உயர்வு மறைந்துவிடும்.
பிரச்சினை கொடுத்து வந்தவருக்கு கொழுக்கட்டை,, வாக்காளர்கள் மெல்லுவதற்கு அவல்.
—0—