கட்டுரைகள்

நுரை மகுடம்!….. எஸ்.ஜெகதீசன்…. ( கனடா )

தண்ணீருக்கும் தேநீருக்கும் அடுத்து உலகெங்கும்; அதிகமாக அருந்தப்படுவது பியராகும்.

உலகில் அதிகம் அருந்தப்படும் மதுபானமும் பியர்தான்.

உலக மொழிகள் அனைத்திலும் பியர் என்ற சொல்லுக்கு நிகரான சொல் இருப்பினும் இப் போதைக்கு பியர் என்ற ஆங்கிலச் சொல்லே மொழி பெயர்க்க விரும்பாத சொல்லாக சுதேசிகளுக்கும் வெறியூட்டுகின்றது.

பியர் என்பற்கு தோப்பி என்ற பதம் தமிழில் இருந்தாலும் எவருக்கும் அதில் போதை ஏறியதாகத் தெரியவில்லை.

ஆவுஸ்திரேலியர்களில் பலர் பியர் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பதிலாக வேறு செல்லப் பெயர்களிலும் கிறங்குவர்.

நியூ சவுத் வேல்ஸ், கன்பேரா, மேற்கு ஆவுஸ்திரேலியா மக்கள் இதை மிடி (Middy) என்று அழைக்கின்றார்கள்.

விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து வாசிகளுக்கு இது பொட் (Pot).

டாஸ்மேனியர்களுக்கு டென் (Ten).

வட பிரதேசத்தவர்களுக்கு ஹான்டில் (Handle).

தெற்கு ஆவுஸ்திரேலியர்களுக்கு ஸ்கூனர் (Schooner).

இவை வெறுமனே பெயர்கள் மட்டுமல்ல. அளவுகளும் கூட!

ஆவுஸ்திரேலியர்களின் பெரு விருப்பம் விக்டோரியா பியர் (Victoria bitter).

VB அடிக்காதவன் VIP அல்ல என்பவர்களும் உண்டு.

VB என்பதை வாந்தி வெடிகுண்டு (Vomit Bomb) என்பவர்களுமுண்டு.

XXXX (நான்கு X) என்றவுடனே உங்களுக்கு பியர் பரிமாறப் படுகிறது எனின் நீங்கள் குயின்ஸ்லாந்தில் உள்ளீர்கள் என்று அர்த்தம்.

ஏனெனில் அங்குள்ளவர் களுக்கு ‘மப்பில்’ பியர் என்ற வார்த்தை வரவே வராது!

ஹெய்னிக்கன் (Heineken) , கார்ல்ஸ்பேக் (Carlsberg) உலகெங்கிலும் , மோல்ஸன் (Molson) , லபாட் ப்ளு (Labatt Blue) கனடாவிலும் , லயன் லாகர்(Lion Larger) இலங்கையிலும் மவுசு பெற்றவை.

அனேகமான பியர் வகை கிளாஸில் ஊற்ற நுரை மேலேழும்.

நுரை கீழிறங்கும் அபூர்வ தயாரிப்புகளும் சில இடங்களில் உண்டு.

மதுப்பிரியர்களுள் பலர் பியரை மோகிப்பதற்கு அதன் மதுசார அளவே காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக 4% முதல் 6% வரை மதுசாரம் பியரில் காணப்படும்.சில வகைகளில் 1% க்கும் கீழாகவும் மிக அரிதாக 20% க்கு அதிகமாகவும் இருப்பதும் உண்டு.

உலகில் மதுசார அடர்த்தி கூடுதலாக உள்ள பியர் ஸாம் அடம்ஸ் MM 11. அமெரிக்க போஸ்டன் தயாரிப்பான இது 24% த்துடன் விற்பனையாகின்றது.

பிரேஸில் தயாரிப்பான 5% மதுசாரமுள்ள பிரம்மா (Brahma) பியர் மிக அதிகமாக உலகெங்கும் விற்கப்படுகின்றது.

பார்லி, கோதுமை, சோளம், நெல் போன்ற தானியங்களிலிருந்து பெறப்படும் மாப்பொருளை நொதிக்க வைத்து பியர் தயாரிக்கப் படுகின்றது.

பியருக்குரிய தனிச்சுவையான ஒருவித கசப்பை வழங்க ஹொப்ஸ் பூக்கள் (Hops flowers) சுவையூட்டிகளாக சேர்க்கப்படுவதுடன் அதன் காப்பு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மூலிகைகள் , பச்சிலைகள் , பழங்கள் போன்றன இப் பூக்கள் கிடைக்காதவிடத்தில் பாவிக்கப்படும்.

ஏனைய மதுபானங்களை விட பியரில் வைட்டமின்கள் , தாதுப் பொருட்கள் , நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் நச்சு ரசாயனப் படிவுகள்

குறைவாகவும் உள்ளதால் உடலுக்;கு உற்சாகமும், எலும்பிற்கு வலுவும் சேர்வதாக ஆய்வுகள் நுரைக்கின்றன.

எனினும் தினமும் பியர் குடிப்பவர்களின் முகம் சோபை இழப்பதும், மோகனாங்க வடிவம் குன்றுவதும், மனம் பாதிப்பதும், மூளை பிசங்குவதும் கசப்பான உண்மையாகும்.

உலகெங்கும் பியர் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

பியர் மௌனத்தை துரத்தும் – மயக்கத்தை மனதில் கோதும் – அண்ட சராசரங்களை அசைக்கும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் கரைபுரளும்.

உற்சாகம் உல்லாசம் ஆரவாரம் அமளிதுமளி அழிச்சாட்டியம் போன்றவற்றால் ஆங்காங்கே திடல்கள்; நிரம்பி வழியும்.

அனேகர் தமக்கு பிடித்தமானதில் மூழ்கி பின் உச்ச போதையில் எழுத்தெண்ணிப் பேசுவர்.

அல்லது நிதானத்திலும் உச்ச ஸ்தாயியில் பாடுவதாக கோவையாக பேசுவர்.

போதை ஏறினால் உடைந்த வார்த்தைகள் உற்சாக வார்த்தை களாகும்.

நிதானம் இழந்தால் பயன்படாத வார்த்தைகள் பயன்படும்.

ஆவுஸ்திரேலியாவின் ஆறு மாகாணங்களிலும் இரண்டு பிரதேசங் களிலும் இத் திருவிழாக்கள் நடை பெறும் இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பல குடிமக்கள் குவிவது வளமை.

பிறிஸ்பேணில் செப்டம்பரில் ஆரம்பமாகும் இத்திருவிழாக்கள் கிடைக்கும் 300 வித்தியாசமான பியர் வகைகளால் போதையூட்டிய படியே பரபரப்புடன் பரந்து விரிந்து மார்ச் மாதத்தில் பேர்த்தில் நிறைவடையும்.

ஆவுஸ்திரேலியாவில் உள்ள எடித்கோவன் பல்கலை கழகம் இளமானி பட்டத்தையும் இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம் பல்கலை கழகம் முது மானி பட்டத்தையும் முறையாக பியர் தயாரித்து குடிப்பவர்களுக்கு…மன்னிக்கவும் படிப்பவர்களுக்கு வழங்குவதில் பிரபலமானவை.

உணவின் பின்பு பியர் என்பது தான் அவர்களுக்கு அங்கு ஆரம்ப அரிவரி அரிச்சுவடாக அமையுமோ? யாரறிவர்!

சதா பியருள் மூழ்கும் பெருங்குடியரை நத்தைகள் (Slugs) எனக் கேலி; செய்வது ஆவுஸ்திரேலியாவில் வாடிக்கை.

தண்டோடு கூடிய சிறு கருங்குவளை மலர்களே பழந்தமிழரின் பியரை ‘ஜில்லிட’ வைத்தன என கம்பர் உண்டாட்டுப் படலத்தில் தொன்மையைத் தெளிவாக்குகின்றார்.

கி.மு.9000 முதலே எகிப்து மெசபடோமியா பபிலோனியா பகுதிகளில் பியர் மயக்கமளித்துள்ளது.

சுமேரிய நாகரீகம் நின்க சி என்ற தெய்வத்தை பியருக்குரியதாக தோத்திரங்களால் அபிஷேகிக்கின்றது.

ஜேர்மனியில் 1040 ம் ஆண்டு முதல் அதாவது சுமார் 1000 வருடங்களாக தொடர்ந்து பியர் தயாரிக்கும் வடிசாலை இன்று வரை பிரபலமாகத் திகழ்கின்றது.

வயகரா கலந்த பியர் ஒன்று 2011 ம் ஆண்டு இளவரசர் வில்லியம்ஸின் திருமண நாளன்று எழுக வில்லி எனும் பெயரில் இரட்டை அர்த்தம் தொனிக்க லண்டனில் சந்தைப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரியாவில் பியர் தடாகங்களில் நீந்தும் வசதி சில ஹோட்டல் களில் வெறிக்குட்டிகளை மிதப்பில் ஆழ்த்துகின்றது.

செக் குடியரசில் சேடாவார் என்ற ஆடம்பர பயணியர் விடுதி உண்டு.

அங்குள்ள குளிக்கும் தொட்டி உட்பட எந்தக் குழாயை திருகினாலும் பியர் வருமாறு வடிவமைக்கப்பட்டு;ள்ளது.

உலகிலேயே ஆகக்கூடியதாக பெல்ஜியத்தில் 400 வகையான பியர் தயாரிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் ஒரு மில்லியன் வெற்று பியர் போத்தில்களால் உருவாக்கப்பட்ட பௌத்த ஆலயத்தை காணலாம்.

சீனாவில் இதர பொருட்களை போன்று ஷொப்பிங் பைகளிலும் பியரை வாங்க முடியும்.

ஜப்பானில் பிரைல் எழுத்துகளுடன் பியர் விற்கப்படுவது சட்டமாகும்.

நல்ல தரமான பியரை முகர்ந்தால் பழங்களின் வாசனையும் இரசாயனப் பொருட்கள் கலந்தவற்றில் பூக்களின் வாசனையும் வரும் என்று சொல்வார்கள்.

கவனம்! மூக்கால குடிக்கிறான் என்றோ மூக்கு முட்டக் குடிக்கிறான் என்றோ பார்ப்பவர்கள் சொல்லி விடப் போகின்றார்கள்.

பியரின் அடர்த்தியை கரைத்து அதனை நீர்த்துப் போக வைத்து சுவையைக் கெடுக்கும் என்பதால் அதில் ஐஸ் கட்டிகளை சேர்ப்பதில்லை.

மது பானங்களை உறைய வைப்பதற்கு – 114 பாகை செல்ஸியஸ் தேவை. வீடுகளில் பாவனையில் உள்ள குளிர் சாதனப் பெட்டிகள் அதிக பட்சமாக – 23 பாகை செல்ஸியஸ் முதல் – 14 பாகை செல்ஸியஸ் வரையில் மட்டுமே குளிரூட்ட முடியும்

பியர் போத்தல் நிமிர்ந்து நின்றால் நல்ல சகுனமாம். சரிந்திருப்பின் வாழ்வும் சரியுமாம்.

வெற்று மது கிண்ணங்களை பார்த்து மனதில் நிரம்பும் பயம் செனோசிலிகாபோபியா (Cenosillicaphobia) ஆகும்.

பியர் போத்தல் தத்துவம் (Beer Bottle Principle) என்று ஆங்கில பிரபல சொலவடை ஒன்று உண்டு.

ஆரம்பம் ஆர்ப்பரிக்கும். பின்பு அடங்கிவிடும் என்பது இதன் கருத்து.

நன்கு குலுக்கி விட்டுத் திறக்கப்படும் பியர்ப் போத்தல் பொங்கி வழியும்.

ஓரிரு விநாடிகளில் எல்லாம் வடிந்து அடங்கிவிடும்.

அது போலத்தான் சிலர்.

அசத்தலோடு தொடங்கி ஆரவாரம் இன்றி அமைதியாகி விடுவர்.

குடியாதவர்களையும் சொக்க வைக்கும் பியர் கிண்ணங்களின் நுரைமகுடம்.

குடிப்பவர்களுக்கோ சொர்க்கத்தின் சொர்க்கம்!

பியர் போத்தலைத் திறக்க வெளிவரும் கரியமில வாயுவே அதன் நுரை மகுடத்திற்கு காரணம்.

‘பியர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கொரோனா வழுக்கி விழுந்தது’ என புதிதாக பத்திரிகையாளர் ஆனவர் யாராவது தலைப்பு செய்தி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மெக்ஸிக்கன் தயாரிப்பான கொரோனா பியர் விற்பனையில் சரிந்ததற்கு அதன் பெயர் தோற்றுவித்த பயம் காரணமாயிற்று.

இரத்தத்தை அழுதது போல கண்கள் சிவக்க பியர் குடிப்பவர்களின் சர்வ தேச தினமாக ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி; வெறியுடன் பருகப்படுகின்றது.

குடித்தவர்கள் வெட்கப்படுதை அனுபவிக்கும் நாளாக அடுத்த (Hangover) நாள் நெடி சிந்துகிறது!

அகராதிக்கும் அப்பாற்பட்ட ஆறேழு சொற்களால் வாய்கொப்புளிக்கும் ‘பியர் வெறிக்குட்டியர்’ தேசிய தினம், செப்டம்பர் 28.

தாயக கிராமங்களுக்கும் இத்தினங்கள் பரவும்;பொழுது அசிங்கமான வார்த்தைகள் அபரிமிதமாக ஒழுங்கைகள் முழுக்க ஒலமிடும்;!

உலகில் ஆண்டு தோறும் 133 பில்லியன் லீட்டர் பியர் பருகப்படு கின்றது.

சீனா , அமெரிக்கா , ஜேர்மனி , ரஷ்யா , இங்கிலாந்து , பிரேஸில் , கனடா , நெதர்லாந்து , ஆவுஸ்திரேலியா, ஜப்பான் , மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் அதிகமான பியரைக் குடித்து உலகிற்கு ‘சியேர்ஸ்’ சொல்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button