இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களில் பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் முக்கியமானவர்களிலொருவர். இலங்கைத் தமிழ்ப்பகுதிகளின் ஊர்ப்பெயர்கள் பற்றிய இவரது ஆய்வு நூல்கள், நாட்டார் இசை, பாடல்கள் பற்றிய நூல்கள், ஒப்பனைக்கலை மற்றும் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றிய ‘கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூல் போன்ற இவரது ஆய்வு நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
இவரது ‘கனடாவில் இலங்கைத்தமிழரின் வாழ்வும், வரலாறும்’ என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலைகள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அண்மையில் என்னுடன் அலைபேசியில் உரையாடியபோது தெரிவித்தார். அத்துடன் அந்நூல் வெளியானபோது அது பற்றிய குறிப்பொன்றினை ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதியிருந்தேன். அதில் அந்நூலில் விடுபட்ட சில விடயங்கள் பற்றியும் , அந்நூலிலுள்ள என் படைப்புகள் பற்றிய தகவல்கள் பற்றிய மேலதிக விளக்கங்களையும் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை நினைவில் வைத்திருந்து தற்போது வெளியாகும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அவற்றையும் உள்வாங்கியுள்ளதாகவும் அண்மைய உரையாடலின்போது பேராசிரியர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஆய்வாளர் ஒருவரின் முக்கிய இயல்புகளிலொன்று தொடர்ச்சியாகத் தனது ஆய்வு பற்றிய தகவல்களைத் தேடிக்கொண்டிருப்பது. அத்தகவல்களின் உண்மைத்தன்மையறிந்து ஆய்வு நூல்களின் புதிய பதிப்புகளில் அவற்றை உள்வாங்கி ஆய்வுகளை மேலும் செழுமைப்படுத்துவது. இந்தப்பண்பு பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களிடத்தில் நிறையவே உள்ளன. இவரைப்போல் தொடர்ந்தும் தன் ஆய்வுகள் பற்றிய புதிய தகல்வகளைத் தேடிக்கொண்டிருக்கும் இன்னுமொருவர் பேராசிரியர் நா.சுப்ரமணியன் அவர்கள்.
பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களின் நூல்கள் சிலவற்றை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அவற்றுக்கான இணைய இணைப்பு: https://www.noolaham.org/…/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81….
பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களின் கனடாத் தமிழர் வரலாறு பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் பெரு வெற்றி அடைந்திட எனது
வாழ்த்துகள்
. இந்நூல் கனடாத் தமிழர்தம் வரலாறு பற்றி வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் வரலாற்று ஆவணச்சிறப்பு மிக்க நூலாக இருக்கப்போகின்றது.