உதவிடலாம் வாருங்கள்!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
பார்வை தனை இழந்தவர்கள்
பல பேர்கள் இருக்கின்றார்
பார்வையுடன் இருப்பவர் நாம்
பல வழியில் உதவிடலாம் !
கல்வி தனைக் காணாமல்
கணக்கற்றோர் நாட்டில் உள்ளார்
கற்று நிற்கும் நாமவர்க்கு
கற்று நிற்க உதவிடலாம் !
அன்னை தந்தை தெரியாது
அலமந்து நிற் பார்க்கு
ஆதரவுக் கரங் கொடுத்து
அர வணைத்து உதவிடலாம் !
ஓலைக் குடிசை தனில்
ஒழுக்கு வீட்டில் வாழ்பவர்க்கு
ஒழுங்கான வாழ்வு வர
உள்ள மதால் உதவிடலாம் !
நீர் கூடக் கிடைக்காமல்
நிம்மதியைத் தொலைத்து நிற்கும்
ஊரெல்லாம் தின மெண்ணி
உணர்வு கொண்டு உதவிடலாம் !
மருத்துவ வசதி இன்றி
மனம் நொந்து நிற்பார்க்கு
மருத்துவத் துறை இருப்பார்
மன உவந்து உதவிடலாம் !
ஏமாற்றிப் பிழைத்து நிற்பார்
இருள் வலைக்குள் புகுந்தவர்கள்
இன்னல் இன்றி வெளியில்வர
இயன்ற வரை உதவிடலாம் !
மூடத் தனம் என்னும்
மூட்டைக் குள் சிக்குண்டார்
முடிச்சு அவிழ்ந்து வருவதற்கு
முழு மூச்சாய் உதவிடலாம் !
அன்பு தனைக் காணாமல்
அநேகர் இங்கு இருக்கின்றார்
அவரிடத்து நாம் சென்று
அன்பு காட்டி உதவிடலாம் !