கட்டுரைகள்

ஆளுமையும் நிருவாகமும் மொழியில் தங்கியிருப்பதா..? அவதானி.

நினைவாற்றல் மிகச்சிறந்த நண்பன். மாணவர்களுக்கு நல்ல நினைவாற்றல் இருந்தால்தான் நன்கு படிப்பார்கள். அவர்களுக்கு மாத்திரமல்ல கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அது அவசியம் வேண்டும்.

ஆனால், அந்த மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி, தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் பெற்ற பிரஜைகளாகிவிட்ட பின்னர், அவர்களுக்கு நினைவாற்றல் இருக்கலாகாது என்று நினைப்பவர்கள்தான் அரசியல்வாதிகள்.

கட்சி விட்டு கட்சி தாவும் தலைவர்களும் , புதிய கட்சி தொடங்கி தலைவர்களாகிவிடுபவர்களும் கூட நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள விரும்புவதில்லை.

சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் தொகுதிகளிலிருந்து 12 தமிழ்த்தேசிய பற்றாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானதாகவும் , ஆனால், தற்போது அந்த தேசியப்பற்றாளர்கள் குறைந்து எண்ணிக்கை ஆறாகிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

குறிப்பிட்ட 35 வருடங்களுக்கு முன்னர் “ உந்த கண்டறியாத ஜனநாயக அகிம்சை அரசியல் எமக்கு சரிவராது, சிங்களவருக்கு பாடம் கற்பிக்கவேண்டும். “ எனச்சொல்லிக்கொண்டு வடக்கில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் எத்தனை ?

இந்தப்பத்தியில் இடம்பெற்றிருக்கும் இயக்கங்களின் பெயர்ப்பட்டியலை பார்க்கவும்.

முப்பத்தியைந்து வருடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை தற்போது தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுடன் நடமாடிக்கொண்டிருக்கிறது.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரண்டு வருடங்களுக்குப்பின்னர், வடக்கில் தற்போது எத்தனை கட்சிகள்?

எண்ணிக்கொள்ளுங்கள்:

ஆனந்தசங்கரிக்கு ஒரு கட்சி.

சம்பந்தனுக்கு ஒரு கட்சி.

விக்னேஸ்வரனுக்கு ஒரு கட்சி.

கஜேந்திரகுமாருக்கு ஒரு கட்சி.

சிவாஜிலிங்கத்திற்கு ஒரு கட்சி.

அனந்தி சசிதரனுக்கு ஒரு கட்சி.

டக்ளஸுக்கு ஒரு கட்சி.

அங்கஜனுக்கு ஒரு கட்சி.

வரதராஜப்பெருமாளுக்கு ஒரு கட்சி.

முருகேசு சந்திரகுமாருக்கு ஒரு கட்சி.

தருமலிங்கம் சித்தார்த்தனுக்கு ஒரு கட்சி.

செல்வம் அடைக்கலநாதனுக்கு ஒரு கட்சி.

சுரேஷ் பிரேமசந்திரனுக்கு ஒரு கட்சி.

இவை தவிர, சில தமிழ் சுயேட்சைக்குழுக்கள்.

இவர்கள் அனைவரதும் கட்சிகளும் கடந்த தேர்தலில் ஒரு சின்னத்திலோ அல்லது வேறு வேறு சின்னங்களிலோ போட்டியிட்டன.

அன்று ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் இருபத்திற்கும் மேல். இன்று ஜனநாயகம் பேசும் கட்சிகள் பத்திற்கும் மேல் !

மேதகு அவர்கள் போர்க்காலத்திலேயே தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கிக்கொடுத்தார். அவர் இருக்கும்வரையில் கூட்டமைப்பிலிருந்தார்கள். அவருக்காக அல்ல, அவரிடமிருந்த ஆயுதத்திற்காக என்பதும் நகைமுரண். அவர் களத்தைவிட்டு மறைந்த பின்னர், கூட்டமைப்பு கூடிக்கலையும் கூத்தமைப்பாகிவிட்டது.

ஆனால், மக்கள் இவற்றையெல்லாம் – கடந்த காலத்தையெல்லாம் எளிதில் மறந்துவிடுவார்கள் என்ற தைரியத்தில் இந்தத் தலைவர்கள் இருக்கும் வரையில் மக்களால் எதுவும் செய்துவிடமுடியாது.

பன்னிரண்டாக இருந்த ஆசனங்களின் எண்ணிக்கை ஆறாகக்குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு யார் காரணம்..? யார் பொறுப்பு ..?

தமிழ் மக்களா, அல்லது சிங்களப் பெரும்பான்மையின் இனவாதமா..?

கடந்த 35 வருடங்களுக்கு முன்னரே ஈழத்தமிழ் மக்களின் வெளிநாடுகளுக்கான புலப்பெயர்வு தொடங்கிவிட்டது. கனடாவில் மாத்திரம் மூன்று இலட்சத்திற்கு மேல் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை தமிழர் தரப்பு இழந்திருந்தாலும், தேய்ந்து கட்டெறும்பானதற்கு அவர்களை குறை கூறமுடியாது.

அவர்கள் கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உட்பட சில அய்ரோப்பிய நாடுகளில் வாழ்ந்து அந்தந்த நாட்டின் மொழியை கற்றும் பேசியும் மூன்றாவது தலைமுறையையும் கண்டுவிட்டார்கள்.

அத்துடன் தேமதுரத்தமிழ் ஓசையை உலகெங்கும் பரப்பியும் வருகிறார்கள்.

சரி, இதுபோகட்டும். அண்மையில் ஒரே சமயத்தில் இரண்டு செய்திகளை வடக்கிலிருந்து அறிய முடிந்தது.

ஒன்று: யாழ்ப்பாணத்திற்கு பிரதம செயலாளராக சிங்கள குடிமகன் ஒருவர் ( திரு. சமன் பந்துல சேன ) நியமனமாகியிருக்கிறார். அதனை கண்டித்து தமிழ்த்தேசிய தலைவர்கள் தரப்பு அறிக்கை விடுகிறது. அத்துடன் விரைவில் யாழ். அரச அதிபராகவும் சிங்களவரே வரப்போகிறார் என்று ஆரூடமும் கூறுகிறது.

இரண்டு: வடக்கில் ஒரு பிரதேசத்தில் வீடற்ற ஒரு ஏழைக்குடும்பத்திற்கு இராணுவத்தினர் புதிய வீடு ஒன்றைக்கட்டிக்கொடுத்து, இந்து சமய ஆசாரப்படி அந்தக்குடும்பம் குடிமனை புகுவிழா நடத்துவதற்கும் ஆதரவு வழங்கியிருக்கிறது.

ஆனால், இந்தசெயலை அங்கு எந்தவொரு தமிழ்த்தலைவரும் கண்டிக்கவில்லை. கண்டும் காணாதது போன்று நகர்ந்துவிட்டனர்.

இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவி ரயில் வந்தபோதும் அந்த நிகழ்வையும் வடபகுதியில் தமிழ்த்தேசியம் பேசும் தமிழ்த்தலைவர்கள் புறக்கணித்தனர்.

இவற்றையெல்லாம் அவர்கள் வடக்கின் தமிழர்களுக்கு அதாவது தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நினைவாற்றல் இல்லை என நம்பிக்கொண்டு நடத்தும் அன்றாடக்கூத்து என்றுதான் நாம் அவதானிப்பதா..?

பல வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்திற்கு திரு. லயனல் பெர்னாண்டோ என்பவர் அரசாங்க அதிபராக வந்தபோது, அவரது சேவையை மக்கள் ஒன்று திரண்டு கொண்டாடினர். அவர் கலை, இலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்தமையால், தென்னிலங்கையிலிருந்து சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களை வடக்கிற்கு அழைத்துவந்து, அங்கிருந்த இந்தத்

துறைகளைச்சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடவும், கருத்தரங்குகள் நடத்துவதற்கும் வழிகோலினார்.

அவரது தயார் சுகவீனமுற்ற மறைந்தபோது, எங்கள் மண்ணிலேயே அவரை அடக்கம் செய்யுங்கள் எனச்சொன்ன யாழ்ப்பாணம் மக்கள் பல நாட்கள் வெள்ளை – கறுப்புக்கொடியுடன் வீதியெங்கும் துக்கம் அனுட்டித்தனர்.

லயனல் பெர்ணான்டோவுக்கு முன்னர் 1968 காலப்பகுதியில் யாழ். அரச அதிபராக பணியாற்றிய வேர்ணன் அபயசேகரா என்பவர், மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயபிரவேசப் போராட்டம் வந்தபோது, அடிநிலை மக்களுக்காக வாதாடியதுடன் இரண்டு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தவும் பாடுபட்டார்.

அவர் ஏற்கனவே கிழக்கிலும் தமிழ்ப்பிரதேசங்களில் அரச அதிபராக பணியாற்றி மக்களின் மனங்களில் இடம்பெற்றவர்.

இந்த வேர்ணன் அபயசேகரா சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து இங்குள்ள தமிழ்மக்களுக்காக ஒரு தமிழ் வானெலி நிகழ்ச்சியையும் உருவாக்கித்தந்துள்ளார்.

அவர் அன்று இட்ட அத்திவாரத்தினால், தற்போது பல தமிழ் வானொலிகள் அந்த நாட்டில் இயங்குகின்றன.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கும் புதிய செயலாளர் திரு. சமன் பந்துல சேன மக்களுடன் பணியாற்றுவதற்கு மொழி இடையூறாக இருக்காது என்று உறுதிமொழி தருகிறார்.

ஏற்கனவே வவுனியாவில் பணியாற்றியிருப்பவர்.

இந்தப்பின்னணிகளுடன் வடக்கின் ஒரு தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர், “ இலங்கை அரசு தமிழ் மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, சிங்களவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்துகிறது “ என்று வேறு சொல்கிறார்.

தமிழ்மக்களின் ஒற்றுமையை குலைத்தவர்கள் யார்..? கடந்த தேர்தல்காலத்தை திரும்பிப்பாருங்கள். எத்தனை தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். எத்தனைபேர் முன்பிருந்த தங்கள் ஆசனத்தை இழந்தார்கள்..? என்பது புரியும்.

நினைவாற்றல் இருந்தால் யாவும் புலப்படும்.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *