‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார்.
அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன.
குறித்த உரையைத் தொடர்ந்த கலந்துரையாடலில், பங்கேற்றிருந்த முதலாம் தலைமுறையினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். இந்தக் கலந்துரையாடலில், இரண்டு முக்கியமான விடயங்களை அவதானிக்க முடிந்தது.
முதலாவது, புலம்பெயர் சமூகத்தில் எங்களது மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையே, இட்டு நிரப்ப முடியாத மிக நீண்ட இடைவெளி உள்ளது.
இரண்டாவது, போர் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளவோ, தங்கள் செயல்கள் குறித்த சுயவிமர்சனத்தை மேற்கொள்ளவோ, ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தயாராக இல்லை. இந்தப் பின்புலத்திலேயே, சில அடிப்படையான விடயங்களை இக்கட்டுரை பேச விழைகின்றது.
காலங்கள் மாறிவிட்டன; ஆனால், துன்பகரமான உண்மை யாதெனில், 1980களிலும் 1990களிலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பலருக்கு, இலங்கை வரலாறு, அவர்கள் புலம்பெயர்ந்த காலத்துடன் உறைந்துவிட்டது. அவர்கள், தாங்கள் புலம்பெயர்ந்த காலத்து, இலங்கைச் சூழலின் சட்டகத்துக்குள்ளேயே, இலங்கை இனமுரண்பாட்டை நோக்குகிறார்கள்; இன்றைய இலங்கையையும் நோக்குகிறார்கள். அவர்களது தீர்வுகளும் ஆலோசனைகளும் இதன்பாற்பட்டவை. காலாவதியாகிப் போன சிந்தனைகளை, கோர்வையாக இவர்கள் முன்வைக்கிறார்கள்.
அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது போன்ற கருத்துகள், இந்தக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.
இவை, காலாவதியாகிப் போன சிந்தனைகள் ஆகும். இவற்றை நாம், பரிதாபத்துடன் ஒதுக்கியபடி, அப்பால் நகரலாம். ஆனால், இந்தச் சிந்தனைகளின் தோற்றுவாய் யாதென்று நோக்கின், அது இலங்கையின் இனத்துவ வரலாற்றில் ஆழப் பதிந்துள்ளது.
நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையகத் தமிழ் என நான்கு தேசிய இனங்களும் பறங்கியர், மலாயர், வேடர் ஆகிய சிறுபான்மைச் சமூகங்களும் இருந்து வருகின்றன. அதன் மூலம், இந்நாடு பல்லினத் தேசியங்களின் நாடாகவே இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் ஏற்க மறுத்தாலும், வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்து நிற்கிறது.
பிரித்தானிய கொலனித்துவம், பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்திய நிலையில், அத்தகைய கொலனித்துவத்தைப் பாதம் தாங்கி நின்றவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மேட்டுக்குடி உயர் வர்க்கத்தினர்.
இவர்கள், வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு அடிமைச் சேவை செய்து வந்ததைப் பெருமையாகவும் அந்தஸ்தாகவும் கருதிக் கொண்டதுடன், பெரும் சொத்துச் சுகங்களையும் பெற்றுக் கொண்டனர். அதேவேளை, தமது வர்க்க சாதிய நிலைகளுக்கு ஊடாக, தத்தமது சொந்த இன, மொழி, மத மக்களை அடக்கி, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தியும் வந்தனர்.
மக்களைப் பிரித்து, ஒருவரோடு ஒருவர் இணைய விடாது வைத்திருந்ததன் மூலம், தமது சொத்து சுகங்களைப் பேணிப் பாதுகாத்தனர். இதுவே எங்கள் வரலாறு. இந்த வரலாற்றின் தொடர்ச்சியே, தமிழ் மக்களிடம் ஆழமாக விதைக்கப்பட்ட சாதிய, பிரதேச, மத வேறுபாடுகள். இதன் விளைபொருட்களே, இன்று வெளிப்படும் புலம்பெயர்ந்தோரின் சிந்தனைகள் ஆகும்.
இலங்கையில் சிங்களப் பேரினவாதம், பழைய சிங்கள மன்னர்களது மரபு வழி பற்றி அழுத்தம் தெரிவித்துப் பேசுவதும், தமிழ்த் தேசியவாதம் யாழ்ப்பாண இராச்சியம், நாகர்களின் ஆட்சி, வன்னி இராச்சியம் முதலான மன்னர்கள் போன்றோரிலிருந்து, தமது தேசிய வரலாற்றைக் கட்டியெழுப்புவதும் நிலவுடைமைச் சிந்தனையுடன் உள்ள தொடர்பின் அடிப்படையிலானவை.
இலங்கையின் தேசியவாதிகள், முதலாளித்துவத்தை நிறுவும் நோக்கில் தேசிய பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புகிற நோக்கில், தேசிய முதலாளித்துவமாக உருவாக்குவதில் தோல்வியடைந்தனர். ஏகாதிபத்தியத்தை அதன் நவகொலனிய வடிவில் எதிர்கொள்ள அவர்களுக்கு இயலவில்லை.
எனவே, தங்களது தோல்வியும் ஏகாதிபத்தியத்துடன் செய்து வந்துள்ள சமரங்களும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதன் விளைவாக, மக்கள் நடுவே எழக் கூடிய எதிர்ப்புணர்வைத் திசை திருப்பப் பேரினவாதம் பயன்படுத்தப்பட்டது.
அவ்வாறே, பேரினவாதத்தின் விளைவாக உருவான குறுந் தேசியவாதமும் தனது மேட்டுக்குடிகளின் நலன் கருதி, ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தவிர்ப்பதுடன் மக்களின் பிரச்சினைகளை முற்றிலும் தேசியவாதக் கண்ணோட்டத்திலேயே அடையாளம் காட்டின.
மேற்கூறியவாறு, தேசிய இனப் பிரச்சினையில் இனப் பகைக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்துவது இரு தரப்புகளுக்கும் தேவைப்பட்டது. அதேபோலப் பண்பாடு, மதம், மொழித் தூய்மை, சாதியம் போன்ற பலவும், மக்கள் மத்தியில் உள்ள ஆதிக்கச் சிந்தனையின் ஒரு முக்கியமான பகுதியாகத் தொடருகின்ற நிலவுடைமைச் சிந்தனையின் மிச்சசொச்சங்கள் ஆகும். அவை சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசியங்களின் மீது, ஆதிக்கம் செலுத்துமாறு கவனித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறான போக்கு, தென்னாசியாவில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாகும். தேசிய இனங்களின் வளர்ச்சியும் அவற்றின் தேசிய அடையாளமும் நிலவுடைமை அடையாளங்களை உதற இயலாமைக்கு, அவற்றின் தலைமைகளது வர்க்க நலன்கள் முக்கியமான காரணமாக அமைகின்றன. இன்றும் அமெரிக்காவையும் மேற்குலகையும் நம்பச் சொல்கிறவர்களின் நிலைப்பாடுகளின் தோற்றுவாய் இதுதான்.
குறித்த கலந்துரையாடலில், தமிழ்ச் சமூகத்தின் உள்முரண்பாடுகள், எவ்வாறு விடுதலைப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தன என்று சான்றுகளுடன் ஆய்வு மாணவி தெரிவித்த கருத்துகள் முக்கியமானவை.
குறிப்பாக, சாதிய ரீதியிலும் பிரதேச ரீதியிலும் அன்றுதொட்டு இன்றுவரை, தமிழ்ச் சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள், பேசப்பட வேண்டியன என்றும் அவை களையப்படாமல், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கான எதிர்வினைகள், ‘வரலாற்றைப் படித்துவிட்டு வாருங்கள்’; ‘தமிழருக்கு நாடில்லை; ‘அதுதான் பிரச்சினை’; ‘அனைத்துக்கும் சிங்களஅரசு தான் காரணம்’ போன்ற திசைகளில் அமைந்தன. இந்த எதிர்வினைகள் காட்டிநிற்கின்ற செய்தி யாதெனில், தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற அகமுரண்பாடுகளைப் பற்றிப் பேசவோ, விமர்சிக்கவோ தயாராக இல்லை என்பதுதான்.
நாம் என்ன தவறிழைத்தோம் என்பதை விட்டுவிட்டு, பழியைப் புறத்தே போடுவதே வழக்கமாகி விட்டது.
ஒரு முக்கியமான கேள்வியை ஒருவர் அக்கலந்துரையாடலில் கேட்டிருந்தார். “பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குசெய்தால், பலநூறு வெளிநாட்டவர்கள் கலந்து கொள்கிறார்களே? ஆனால், நாங்கள் செய்தால் ஏன் வருகிறார்கள் இல்லை’?
இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், பலஸ்தீனியர்கள் ஏனைய நீதிக்கான போராட்டங்களில் பங்குபெறுகிறார்கள்; ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறார்கள்; நீண்ட தொடர்ச்சியான ஊடாட்டங்களின் ஊடு, பல்வேறு களங்களில் தங்களுக்கான ஆதரவுத்தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். போராட்டங்களின் போது அவர்கள், பத்தாவின் பதாகைகளையோ ஹமாஸின் பதாதைகளையோ ஏந்தியிருப்பதில்லை. தங்கள் போராட்டத்தின் தேவையை, அந்தந்த நாட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார்கள்.
நாம் முதலில், எம்மை யாரோடு அடையாளப்படுத்துகிறோம் என்ற முடிவுக்கு வரவேண்டும். அக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட சிலர், தமிழரை இஸ்ரேலியருடன் ஒப்பிட்டனர். நாம் ஒடுக்குமுறையாளர்களோடு எம்மை அடையாளப்படுத்துகிறோமா அல்லது, ஒடுக்கப்படுவோரோடு எம்மை அடையாளப்படுத்துகிறோமா என்ற வினாக்கள், எமது நண்பர்கள் யார் என்ற வினாவுக்கான பதிலைத் தரவல்லது.
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில், ஜனநாயக மறுப்பு முக்கிய பண்பாயுள்ளது என்பதையும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இரண்டாம் தலைமுறையினர் உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினர். இவை, எமது சமூகம் பற்றிய அடுத்த தலைமுறையினர் கொண்டிருக்கின்ற கருத்துகள் என்பதை, நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
புலம்பெயர் சமூகத்தால் எல்லாம் இயலும் என்றதொரு மாயை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களிடையே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மாயை, இன்னும் சில காலத்துக்குத் தொடரும்; அதற்குத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் உள்ள ‘குடுகுடுப்பைக்காரர்கள்’ வழிசெய்வார்கள்.
‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’ வகையறாக்கள், புலம்பெயர் சமூகத்தில் நிறையவே உண்டு. அதனால் தான், தீர்வுகளை உள்ளே தேடாமல், வெளியில் தேடியபடி காலம் கடத்துகிறார்கள்.
‘பாதிக்கப்பட்டோம்’ என்ற குரலோடு, ஒரு தசாப்தத்துக்கு மேல் கடந்தாயிற்று. இன்று சில தசாப்தங்களுக்கு இது பயன்படும். ஏனெனில், இது சிரங்குப் புண் மாதிரி, சொறியச் சொறியச் சுகமாய் இருக்கும். நாம் விரும்பினால், ‘சொறிந்தபடி வானமேறி வைகுண்டம் போகிற நினைப்பில்’ இருக்கலாம்.