கவிதைகள்
ஆல முண்ட ஆண்டவனே அவர் அவலம் போக்கிவிடு!…. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
வளர்ந்துவந்த நாடாக வரைபடத்தில் இடம் பிடித்து
மருத்துவத்தில் பலகண்டு வானுயர வாழ்த்துப்பெற்ற
பாரதத்தின் நிலை காண பதைபதைப்பு வருகிறது
பாதையெலாம் ஓலமிடும்மக்கள் துயர் பெருகிறது !
அலையிரண்டின் எழுச்சியதால் அவலங்கள் பெருகிநின்று
அல்லல்படும் மக்களினை ஆரணைக்க வருவாரோ
ஆக்கிசனை தேடிமக்கள் அலைந் தலைந்து ஓடுகிறார்
அல்லலுறும் மக்கள்தமை ஆர்காக்க வருவாரோ !
பராமரிக்கும் மருத்துவர்கள் பரிதவித்து நிற்கின்றார்
பாலருந்தும் பாலகரும் மருந்தின்றி தவிக்கின்றார்
அம்புலன்சு கொண்டுவரும் அவஸ்த்தைப்படும் பலபேரும்
ஆர்வருவார் எனவேங்கி அதற்குள்ளே மாழுகிறார் !
பராமரிக்க வழியின்றி படுக்கும்நிலை பாதையிலே
பதைபதைத்து துடிதுடித்து பாதையெலாம் மரணங்கள்
கூடவந்த உறவுகளை பாதையிலே போட்டுவிட்டு
ஓலமிடும் மக்கள்குரல் உலகமெலாம் கேட்கிறதே !
கொண்டுவந்த உறவுகளை கொள்ளைகொண்ட சூழலிலே
தன்னிலமை தனைஇழந்து தவிக்கின்றார் மக்களிப்போ !
கூட்டிவந்த உறவுகளை வாட்டமுறும் மனத்துடனே
நாட்டமின்றி தீயிட்டு நகரகங்கண்டு தவிக்கின்றார் !
ஓலம்மிடும் மக்களுக்கு உற்றதுணை வரவேண்டும்
ஆலமுண்ட ஆண்டவனே அவர்பக்கம் பார்த்துவிடு
பேதலித்து நிற்கின்றார் பெருந்துயரம் அகல்வதற்கு
ஆதரவாய் ஆண்டவனே அவர்பக்கம் வந்திடுவாய் !
கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா