Featureமுகநூல்

பத்மஸ்ரீ விருது கிடைத்தது கூட அறியாத ஒரு அறியாமையாளர்!..

கூடையில் ஆரஞ்சுப்பழம் கூவிக்கூவி விற்கும் ஏழை ஹஜப்பா..ஆனால் புண்ணியம் கோடிக்கு
சொந்தக்காரர்!
2020-ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு முதல் நாள். அன்று சனிக்கிழமை. அழுக்கேறிய உடைகளுடன் ரேஷன் கடை வரிசையில் பொருட்கள் வாங்க சோர்வோடு நின்று கொண்டிருந்தார் ஹரேகலா ஹஜப்பா. கூட்டம் நிறைய இருந்தது. 35 கிலோ ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு அவர் தன்னுடைய ஆரஞ்சுப் பழ வியாபாரத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது அவரது செல்போன் சிணுங்கியது. இந்த வேளையில் நம்மை அழைப்பது யார் என்று புரியாமல் செல்போனை எடுத்து, “யார் பேசுறீங்க?” என்று கேட்டார்.அதில் ஒலித்த குரல் ஹிந்தியில் இருந்தது.யார் எங்கிருந்து பேசுகிறார்கள் என்று புரியாமல், பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை அழைத்துத் தன்னுடைய செல்போனைக் கொடுத்து “யார் பேசுவது என்று புரியவில்லை. தயவு செய்து கேட்டுச் சொல்லுங்கள்”என்றார் ஹஜப்பா
ஆட்டோ டிரைவருக்கும் ஹிந்தி தெரியாது. எனவே அவராலும் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அதில் பத்மஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஆட்டோ டிரைவர் உணர்ந்து, “இதில் ஏதோ பத்மஸ்ரீ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமே எனக்குப் புரிகிறது. வேறு ஏதும் புரியவில்லை” என்று சொல்லி செல்போனை திரும்ப ஹஜப்பாவிடம் கொடுத்துவிட்டார்.
மாலையில் ஆரஞ்சுப் பழ வியாபாரத்தை சீக்கிரமே முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிய ஹஜப்பாவை எதிர்பார்த்து உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார்.”கை கொடுங்க. உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிருக்கறதா டெல்லியிலிருந்து செய்தி வந்திருக்கிறது..

வாழ்த்துகள்

” என்றார் அவர், ஹஜப்பாவின் வலது கையைப்பிடித்துக் குலுக்கியபடி.

யார் இந்த ஹஜப்பா? ஏழ்மை தாண்டவம் ஆடும் குடிசை வீட்டில் குடியிருக்கும்இவர் செய்த சாதனை என்ன? இவருக்கு எதற்காக அறிவிக்கப்பட்டது பத்மஸ்ரீ விருது?
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த கைகளில்ஆரஞ்சுப் பழக்கூடை ஏந்தி தெருத் தெருவாகக் கூவி விற்கும் வியாபாரிதான் ஹரேகலா ஹஜப்பா. இவர் நியூ படப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூடமே இல்லாத இந்தக் கிராமத்தில் உள்ள ஏழைக்குழந்தைகள் படிப்புக்காக 1999-இல் முதன் முதலாக ஆரம்பப் பள்ளி ஒன்றை மசூதியில் ஆரம்பித்தார். இந்தப் பள்ளியில் முதலில் 28 மாணவர்கள் படித்தார்கள். பின்னர் தனது சொற்ப வருமானத்தில் இருந்து சிறிது சிறிதாகப் பணம் சேர்த்தும் கடன் வாங்கியும் பள்ளிக்கான நிலத்தை கிராமத்தில் வாங்கினார்.2000-ஆமாவது ஆண்டில் அவர் இதற்காக முதலீடு செய்தது வெறும் ரூபாய் 5000 மட்டுமே.
தான் ஆரஞ்சு வியாபாரம் செய்து தினசரி சம்பாதித்த பணத்தைக் கொண்டும், அரசிடமிருந்தும், கிராமத்தில் இருந்த நன்கொடையாளர்களிடம் இ‌ருந்தும் வந்த பணத்தின் மூலமும் வாங்கிய இடத்தில் ஒரு பள்ளியைக் கட்டினார். இன்று அரசாங்கப் பள்ளியாகத் திகழ்கிறது இது. இதில் தற்போது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கிறார்கள். மிகச்சிறந்த உயர்நிலைப் பள்ளியாகச் செயல்பட்டுவருகிறது.
இந்தப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஹஜப்பாவுக்கு எப்படி வந்தது? அதற்குப் பின்னே ஒரு சுவாரஸ்யக் கதை இருக்கிறது.ஹஜப்பா பள்ளி சென்று படிக்காதவர்.ஒருமுறை இவர் ஆரஞ்சுப் பழக் கூடையைச் சுமந்து வியாபாரத்துக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அன்று பார்த்து போணியாகவில்லை.மனம் தளர்ந்து கூவிக்கூவி “ஆரஞ்சு ஆரஞ்சு” என்று வீதி வீதியாக வலம் வந்தார்.வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி அவரை நோக்கி வந்தார்கள். மனமகிழ்ச்சியோடு எப்படியும் இன்று போணியாகி விடும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் ஆரஞ்சுப் பழங்களை நீட்டியிருக்கிறார். அவர்கள் “ஒரு கிலோ பழங்களின் விலை என்ன?” என்று ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்கள். இவருக்கு துளு தவிர வேறு மொழி தெரியாததால், பதில் சொல்ல முடியவில்லை.
அந்தத் தம்பதி இவரிடம் பழங்கள் வாங்காமலேயே சென்றுவிட்டனர். ஏமாற்றமடைந்த ஹஜப்பா ‘படிப்பறிவு இல்லாததால் தானே அவர்களிடம் தன்னால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்த நிலைமை இந்தக் கிராமத்தில் இருக்கும் எந்த மனிதருக்கும் இனி வரக்கூடாது’ என்று எண்ணியவர், கிராமத்துப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கும் முடிவுக்கு அன்றே வந்திருக்கிறார்.
இடத்தை வாங்கி பள்ளி ஆரம்பித்ததோடு தன் கடமை முடிந்து விட்டது என்று எண்ணவில்லை ஹஜப்பா. இன்றும் பழ வியாபாரம் தவிர இதர நேரங்களில் பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்கத் தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்தத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசுவது என வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை குழந்தைகளின் கல்விக்காகவே செலவிட்டு வருகிறார் ஹஜப்பா.
ஹஜப்பாவின் தொடர் முயற்சியாலேயே அதிகாரிகளின் கவனம் இந்தப் பள்ளிமீது விழத் தொடங்கியிருக்கிறது. 60 வயதைக் கடந்தபோதும் பள்ளியின் மீது மிகுந்த அக்கறைகொண்டு, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்பட்டுவருகிறார் ஹஜப்பா.
பத்மஸ்ரீ விருது குறித்துப் பேசிய ஹஜப்பா, “கடந்த 2014-ஆம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம்தான் மத்திய அரசிடம் எனது பெயரை விருதுக்குப் பரிந்துரைத்தார். அதன்பிறகு, நான் அதை மறந்துவிட்டேன். இப்போது, விருது எனக்குக் கிடைத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த நான், இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கல்வி அளிப்பதுதான் என்னுடைய கனவு. இதற்காகத் தொடர்ந்து காலம்பூரா உழைப்பேன்.
எனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்தப் பள்ளிக்காகவே செலவிடுவேன். இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அரசாங்கம் அதை நிறைவேற்றும் என நம்புகிறேன். அப்போதுதான் மாணவர்கள் கல்வியை மேலும் தொடர்வார்கள்” என்று கூறினார்.
பள்ளியிலுள்ள வகுப்பறைகளுக்கு இந்தியாவின் சாதனையாளர்களான சுவாமி விவேகானந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராணி அப்பாக்கா, கல்பனா சாவ்லா ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு சி.என்.என் ஐ.பி.என் ஊடகத்தின் `ரியல் ஹீரோ’ என்ற விருதை பெற்றார். கர்நாடகா அரசின் ராஜ்யோத்சவா விருதையும் 2013-ஆம் ஆண்டு பெற்றுள்ளார். தற்போது, நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் பத்மஶ்ரீ விருதை வென்று, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ -என்றான் பாரதி.அதைச் செய்து வரும் ஹஜப்பா போன்றோர் பணம் கோடி இல்லாதவர்களாக இருக்கலாம்…
புண்ணியம் கோடி சேர்த்துக் கொண்டே இருக்கிறார்களே, அது போதாதா?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.