கவிதைகள்

மரமாக உதவுகிறேன் மரத்துவிட்டார் மனிதரெலாம்!…… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

காய் கொடுப்பேன் 
கனி கொடுப்பேன்
கண்ணுறங்கத் துணையாவேன்
வேர் கொடுப்பேன்
இலை கொடுப்பேன்
விதம்விதமாய் உதவிடுவேன்
 
நோயகற்றும் மருந்தாவேன்
நுடங்காமல் கைகொடுப்பேன்
யாரென்னைத் தொட்டாலும்
நானமைதி யாயிருப்பேன்
மரமென்று பெயர்சூட்டி
மனிதரெமைப் பார்க்கின்றார்  !
 
மதலையைத் தாலாட்ட
மகிழ்வாகத் தொட்டிலாவேன்
மண்மீது நடைபழக
வண்டியாய் ஆகிடுவேன்
மண்ணாளும் மன்னருக்கு
பல்லாக்காய் நானிருப்பேன்
 
மாடிமனை மண்குடிசை
அத்தனையும் நானிருப்பேன்
நாடிடுவார் தேவையினை
நானீய்ந்து நின்றிடுவேன் 
ஊன்றுகோலாய் இருந்தாலும்
உரைத்திடுவார் மரமென்றே  !
 
திட்டிடுவார் சினந்திடுவார்
என்பெயரைக் குறிவைத்து
வெட்டிடுவார் பயனடைவார்
விறகாக்கி எரித்திடுவார்
வாய்மூடி மெளனியாய்
நானிருப்பேன் என்பாட்டில் ! 
 
என்நிழலை நாடிடுவார்
எனையழிக்க நினைத்தாலும்
அவராசை நிறைவேற
அமைதியாய் ஆகிடுவேன்
மரமாக உதவுகிறேன்
மரத்துவிட்டார் மனிதரெலாம் !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *