முகநூல்
கதிரவெளி தந்த காயங்கள்!… டாக். து. வரதராஜா.
‘விழுந்து வெடிக்கும் எறிகணைகளின் சத்தம்,
மரண ஓலங்களையும் தாண்டி காதுகளை செவிடாக்கிக்கொண்டிருந்தது.உயிரிழந்த தன் குழந்தையை காப்பாற்றும் படி கெஞ்சிக்கொண்டிருந்தாள் அந்தத்தாய்.
நெஞ்சில் வழிந்தோடிய குருதியோடு உறங்குவதுபோல
இறந்து கிடந்தது அந்த சிறு குழந்தை அவள் மடியில்.
இறந்தவர்களை நினைத்து அழுகின்ற ஓலத்திலும்,
காயமடைந்தவர்கள் வலியால் முனகும் ஓலத்தோடும், காயமடைந்தவர்களை கொண்டுவந்து இறக்கும் வாகனங்களின் சத்தமும் வாகரை வைத்தியசாலையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிக்கொண்டிருந்தது.
வளமையாகவே 200 கு மேற்படட வெளிநோயாளர்கள்,
மகப்பேறுக்கு வந்தவர்கள், இராணுவத்தின் விமானம் மற்றும்
எறிகணை வீச்சுக்களால் காயமடைந்தவர்கள் என நிரம்பி வழியும் வைத்தியசாலையில் நான் தனி ஒருவனாக 24 மணித்தியாலமும் ஓய்வின்றி தவித்துக்கொண்டிருக்கும் வழமையான நாட்களையும் தாண்டி, வைத்தியசாலை எங்கும் குருதியால் நனைந்துகொண்டிருக்கிறது.
அவ்வப்போது வரும் குண்டு வீச்சு விமானத்தின் அச்சம் தரும் இரைச்சலும், எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தமும் இன்று வழமையைவிட அதிகமாகவே அனைவரையும் அச்சம் கொள்ள வைத்துக்கொண்டிருந்தது. தங்கள் உடல்கள் எங்கும் குருதி வழிய வழிய வலியோடு துடித்துக்கொண்டிருந்த அப்பாவி மக்களால் நிரம்பிக்கொண்டிருந்தது வாகரை வைத்தியசாலை.
ஆம் இன்று, கதிரவெளியில், மூதூர் மற்றும் சம்பூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்- தங்கியிருந்த பாடசாலையை, இலங்கை அரச படைகள் ஆர்டிலரி மற்றும் மல்டி வரல் மூலம் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர்.
மருந்துகள் தடுப்பாடு, வைத்தியசாலையும் தாக்கப்படலாம் என்கின்ற அச்சம், சத்திரசிகிற்சை வசதியின்மை என்பது மட்டுமல்லாமல், காயமடைந்தவர்களை/தீவிர சிகிற்சை பெறவேண்டிய நோயாளர்களை மேலதிக சிகிற்சைக்கு மட்டக்கிளப்பிற்கு அனுப்பமுடியாதபடி, வீதியையும் மூடி எம்மக்களை கொன்றுகுவித்துக்கொண்டிருந்தது இலங்கை இராணுவம்.
யாரை முதலில் பார்ப்பது, யாருக்கு முதலில் சிகிற்சை செய்வது எவ்வாறு இவ்வளவு பேருக்கும் நான் தனியே சிகிற்சை செய்வது என்று செய்வதறியாது கையறு நிலையில் இருந்தேன் நான்.
ஓலங்கள் கேட்டு ஓடி வந்தனர் விடுதலைப்புலிகளின் வைத்தியர்கள். தங்களுடைய காயமடைந்த போராளிகளுக்கு சிகிற்சை செய்வதற்க்கு ஒருசிலரை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மக்களுக்காய் வந்து நின்றனர். அவர்களின் கைகள் அங்கே அவலங்களை குறைத்துக்கொண்டிருந்தது. மருத்துவத்துறை பொறுப்பாளர் திரு. புனிதன், டாக். ஜோன்சன், டாக்.அமுதன், டாக். வண்ணன் மற்றும் மாவீரர் டாக்.காந்தன் அவர்களெல்லாம் சாத்திரசிகிரற்சைகளை செய்தவண்ணமே இருந்தார்கள்.
***
ஒரு ஏழேட்டு வயதான ஒரு சிறுமியின் அருகினில் அவளின் ஒரு பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சகோதரி ‘ என்ர தங்கைச்சிய பாருங்க. தலையில காயம்’ என்று கூறினாள் . செல் தாக்குதலின் அதிர்ச்சி, பயம், கவலை,பாசம் , ஏக்கம், இவை அனைத்துமே ஏதும் அறியாத அந்த சிறுமியின் முகத்தில் தெரிந்தது.அவளது கைகளில் தங்கையின் இரத்தம், காய்ந்தும் காயாமலும். காயமடைந்த அவளின் தங்கையைப்பார்த்தேன். தலையின் வலப்பக்கத்தை துளைத்த செல் துண்டு இடப்பக்கத்தையும் துளைத்து சென்று விட்ட்து. மூளையின் சிறு பகுதி வெளியில் வந்திருந்தது. ஆனால் இன்னும் உயிரோடு ஊசலாடிக்கொண்டிருந்தது அவளின் உடல். அவளின் வலி போக்க மருந்து கொடுத்தேன்.(இன்னும் கொஞ்ச நேரத்தில் இறக்கப்போகிறாள் என்று எண்ணிக்கொண்டு அடுத்த காயமடைந்தவரை பார்க்கச்சென்றேன்). மூளையின் தாக்கத்தால் அவளுக்கு வலிப்பு ஏற்படத்தொடங்கியது. என் தங்கையை வந்து பாருங்கள், அவளின்’ கை கால் எல்லாம் ஏதோ மாதிரி இழுக்கிறாள்’ என்று கூறினாள் அவளின் அக்கா. அவளால் அழ முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள். ஆனால் அவள் கண்களில் மட்டும் கண்ணீர் துளிகள். என்னால் அவளுக்கு எதுவுமே கூறமுடியவில்லை. உன் அப்பா அம்மா எங்கே என்று கேட்ட்டேன் . இன்னும் அதிகமாக அவளின் கண்ணீர் பெருகியது. அவங்க செத்திற்ராங்க என்றாள். வார்த்தைகளுக்கு இடையே தன் வாயை கைகளால் பொத்திக்கொண்டாள்.
தன் தாய் தந்தையரை இழந்துவிட்டு,
தன் தங்கையையேனும் காப்பாற்ற துடிக்கும்
அந்த பிஞ்சு மனதிடம் -நான் எப்படி சொல்வேன்
உன் தங்கையும் இறந்து விடப்போகின்றாள் என்று….
டாக். து. வரதராஜா