முகநூல்
சாதி கணக்கெடுக்க தனி ஆணையம் – முதல்வர் அறிவிப்பு. சாதி பலம் ஓட்டு அரசியலுக்கு உதவுமா?
பதில்
அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் ‘ராபர்ட் ஹார்டு கிரேவ்’ டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வந்தார். ஆக்ஸ்போர்டு மாணவர் இவர். அன்றைய முதலமைச்சர் காமராசரைப் பற்றியும் அவரது சமூகப் பின்னணி நாடார் சமூகம் பற்றியும் ஆய்வு செய்துவர, ஃபோர்டு அறக்கட்டளை நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது. அவருக்கு மொழிபெயர்ப்பு உதவியாக இணைந்தார் அரு.சங்கர்.
நாடார் சமூகத்தைச் சார்ந்த காமராசர் முதலமைச்சராக இருக்கையில், அச்சமூகத்தைச் சார்ந்த பலர் திமுக கட்சியில் இருப்பதைத் தெரிந்துகொண்ட ஹார்டுகிரேவ், படிப்பறிவில்லாத நாடார் தொழிலாளியிடம், ‘ நீங்கள் படித்தவரா, திமுக ஏடுகள் படித்ததுண்டா, தன் சாதியைச் சார்ந்த தலைவரான காமராஜரை ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை’ எனக் கேட்டார்.
அதற்கு அந்தத் தொழிலாளி, ‘ தனக்குப் படிக்கத் தெரியாதென்றும், ‘தினத்தந்தி’யை யாராவது படிக்கும்போது கேட்டுள்ளதாகவும் அது தந்த செய்திகளிலிருந்து காமராசரை விடவும் அண்ணா அறிவாளியென்றும் அவரது ஆட்சி வந்தால் காமராசரை விட நல்ல ஆட்சி இருக்குமென்றும் தன் நண்பர்கள் சொல்வதால்தான் நான் அண்ணா கட்சி என்றும் கூறினார்.
அதன்பின் ஹார்டுகிளேவ் தன் பையிலிருந்து ஒரே அளவினதான கருப்பு வெள்ளை நிழற்படங்களை எடுத்தார். அவை காந்தி, நேரு, லால்பகதூர் சாஸ்திரி, காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கென்னடி, ராஜாஜி இவர்களின் படங்கள்.
இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்ட இவர் ஒவ்வொருவரையும் அடையாளம் சொன்னார். ஆனால் அண்ணாவின் படத்தைக் காட்டியபோது அது யாரென்று தனக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார். இரண்டாவது வாய்ப்புக் கொடுத்தபோதும் தான் அதற்கு முன்னால் அவரைப் பார்த்ததே இல்லை என்று அடித்துக் கூறிவிட்டார்.
இதிலிருந்து ஒன்று தெரிய வருகிறது. படித்தவர்களைப் போல பாமர மக்கள் சாதி பார்த்து வாக்களிப்பதில்லை.
அண்டனூர் சுரா.