முகநூல்
என் பொன்னு!….. Ilampirai M A Rahman.
இன்று 29/11/2014 அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உங்கள் இறுதி யாத்திரையைப் பார்த்த போது என் நினைவோட்டங்களின் இனிமை நிறைந்த மணம் வீசும் பூக்களின் இதழ்கள் சிலவற்றை இங்கு உதிர்க்கின்றேன்.
ஈழத்து நவீன இலக்கியத்தின் பொற்காலம் 1960-70 ஆண்டுகள் ஆகும். இதில் நம் பங்கு முழுமையானது. இப்பணி நிறைவேறி, புதிய சந்ததிகளும் காலுன்றி இன்று வீர நடை போடுவதில், உங்கள் எழுத்து ஆற்றல் மட்டுமல்ல, பேச்சு ஆற்றலும் பெரும் பங்கு வகித்ததை யாராலும் மறுக்க இயலாது.
54 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நவம்பர் மாதத்தில் தான் நம் நட்பு துவங்கியது. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, மட்டகளப்பில் இருந்து கொழும்பு வந்திருந்தீர்கள் உங்கள் எழுத்தின் மீது காதல் கொண்டு இருந்த ‘இலக்கிய ரசிகர் குழு’ நண்பர்கள் நட்பும் அன்பும் தொடர்ந்தது. உங்கள் மூத்த மகன் அநுரவின் முதலாவது பிறந்த நாளுக்கு செல்ல விடாமல் அன்பு மழை பொழிந்தோம்.
அக்காலகட்டத்தில், ஈழத்து இலக்கிய உலகை முற்போக்கு இலக்கியவாதிகள் ஆக்கிரமித்து இருந்தார்கள். அவர்கள் தங்களை மார்க்சிய சிந்தனையாளர் என பிரகடனப்படுத்தி இருந்தனர். அவர்கள் உங்களையும் உங்கள் எழுத்துகளையும் இழித்தும் பழித்தும் விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அந்தத் தவறான போக்கை எதிர்த்த இலக்கிய ரசிகர் குழு, (நான், ஆர்.கனகரத்தினம் மற்றும் சிலர்) உங்களை நேரில் கண்டு விளக்கம் பெற்ற பின், உங்கள் விளக்கங்களையும் நியாயங்களையும் உணர்ந்து, உங்களுடன் இணைந்து இயக்கம் கண்டோம். இப்படித்தான் அரை நுற்றாண்டுக்குமுன்னர் ஈழத்தில் புதிய சுயமான இலக்கியப்போக்கு உருவானது. இதை உருவாக்க நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. கொலை மிரட்டல்களுக்கு கூட ஆளானோம். இந்த இனிய நினைவுகளில் கசப்பான நிகழ்வுகளை இங்கு தவிர்க்கின்றேன்.
பத்திரிகைகளின் ஆதிக்கம் அவர்களிடம் இருந்தது
* எங்கள் கருத்தைப் பிரகடனப் படுத்த நாங்கள் “இளம்பிறை” மாசிகையை ஆரம்பித்தோம்.
நூல்கள் வெளியிடுவதும் அவர்கள் வசம் இருந்தது. தங்கள் குழுவைச் சார்ந்தவர்களின் ஆக்கங்களை (தகுதியற்றவையாயினும்) இந்தியாவில் பதிப்பித்து வெளியிட்டனர். முற்றிலும் அதில் யாழ்ப்பாண எழுத்தாளர்களின் ஆக்கங்களே பிரசுரமாயின.
*முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து “அரசு வெளியீடு” எனும் நிறுவனத்தை துவங்கினோம். அதன் மூலம் வெளியான நூல்களே இலங்கையில் சாகித்திய மண்டலப் பரிசுகள் பெற வழி வகுத்தன.
இரு மாநாடுகள்
ஈழத்து எழுத்தாளர்கள் அனைவரையும் இணைத்து 1963’ல் “தமிழ் விழா” எடுத்தோம். முதல் மாநாடு மட்டகளப்பில் மூன்று தினங்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் மாநாடு திருகோணமலை மூதூரில் மறு ஆண்டு நிகழ்ந்தது. இந்த இரு மாநாட்டு பணிகளையும் எஸ்.பொ. முன்னின்று நடத்தி முடித்தார். இதில் மலை நாட்டு எழுத்தாளர்களை முதன்முறையாக எஸ்.பொ பங்கு பெற வைத்தார்.
எமது பணிகள் படிப்படியாக அங்கீகரிக்கப்பட்டன. பத்திரிகைகள் – வானொலி மற்றும் அரசு அமைப்புகள் எங்கள் வசமாயின.
நற்பணி ஆற்றுவதில் எஸ்.பொ தளபதியாய்த் திகழ்ந்தார். நற்போக்கு இலக்கியம் உருவாகியது. இவ்வாறாக 14 ஆண்டுகள் நாங்கள் ஆற்றிய பனி விருட்சமாக வியாபித்து நிற்கின்றது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் நாம் ஆற்றிய பணி இமயமாக உயர்ந்து நிற்பதைப்பார்த்து மகிழும் போது அதை நிர்மாணித்த முதல்வனின் மறைவு மனதை வருத்துகிறது. நிறைவாக செய்தார், வென்றார், சென்றார். தமிழ் உலகம் என்றும் அவர் நினைவை மறவாது போற்றும்.