கவிதைகள்

கணக்கில்லையோ எம்முயிரும்?…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

சிவ சிவ என்று கூப்பாடு போட்டழைத்தும்
சிவனோ சூலமோ வந்து காக்கவில்லை
பெருமாளே பெருமாளே என கதறினோம்
பெருமாளும் சக்கரமும் காக்க வரவில்லை

வேல்வேல் வெற்றிவேலென அழைத்தோம்
வேலவன் வரவில்லை வேலும் வரவில்லை
ராமா ராமாவென ராமனை அழைத்தோம்
ராமானும் வரவில்லை அம்பும் வரவில்லை

எத்தனையோ தெய்வங்கள் உளரென்பர்
அத்தனை பேரும் நாங்கள் அழைத்தபோது
எங்கு சென்று மறைந்தீரென சொல்வீரோ
தாங்கமுடியா துன்பத்தில் தவிக்கவிட்டீரே

சிலைகளாய் நீங்கள் நின்றிருந்ததாலே
கருவறை விட்டு ஓடி வரமுடியலையோ
வரமுடியா உங்களை கூவியழைத்தோம்
வருவீரென எண்ணி ஏமாந்து போனோம்

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவீர்களென                     
இயம்பினரே மிக உயர்வாகவும் இங்கே
உண்மையென அதவும் ஆகவில்லையே
ஒருவரும் எங்களை காக்கவில்லையே

வெவ்வேறு யுகத்தில் வாழ்ந்துமுடித்ததால்
எங்களைக் காப்பாற்ற வரவில்லையோ
மறைந்தோரை மருவி அழைத்தது குற்றமா
மரித்தோர் போலிருந்தால் மாட்சிமை ஏது

இவ்யுகத்தில் யாரும் தோன்றமாட்டீரோ
எங்களைக் காப்பாற்ற வரவும் மாட்டீரோ
கலிகாலம் முடியும்வரைதொடர்கதையா
கணக்கில்லையா எம்முயிரும் கடவுளரே?

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

One Comment

  1. கனவேது நனவேது
    மெய்யேது பொய்யேது
    காலமேது நேரமேது
    ஜனனமேது மரணமேது

    நித்திரையில் கண்டால் கனவென்பின்பீரோ? – முடிவிலா நித்திரையைக் காண்பது ஏதென்பீர்?

    தொட்டுணர்வு கொள்வதனை மெய்யென்பீரோ? – தொட்டும் உணர்வற்றுக் கிடப்பதனை ஏதென்பீர்?

    சூரியோதய அஸ்தமனம் காலமென்பீரோ? – சூரியன் உதிக்காது மறைந்து விட்டால் என்னவென்பீர்?

    சதைகுருதி பெற்றுவிட்டால் ஜனனமென்பீரோ? – சதைகுருதி இயக்கமற்று கிடப்பதனை என்னவென்பீர்?

    மெய்மையில்
    வாழ்வதும் கனவு சாவதும் கனவு
    இருப்பதும் கனவு இறப்பதும் கனவு
    காலங்கள் கனவு நேரமும் கனவு
    அறிவுகூட கனவு அறிவிலாரும் கனவு

    பூமியைத் தின்று உடலத்தை வளர்த்து பூமிக்கே கொடுக்கும் சக்கரமே வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *