ஒரு சுதந்திர நாள்! … (சிறுகதை ) ….. தேவராசா முகுந்தன்.
பாயை விட்டெழ அலுப்பாயிருந்தது. முதல்நாள் படித்துவிட்டு வைத்த தாள்கள் காற்றில் பறந்து அறையெங்கும் பரவியிருந்தன.
ஜினதாஸ அங்கிளும் உப்புளும் நேற்றிரவே ஊர்களுக்குப் போய்விட்டனர் போல… பக்கத்து அறைகள் அமைதியாகக் கிடக்கின்றன. இன்று வியாழக்கிழமை, சுதந்திர தின விடுமுறை. இனி அவர்கள் வெள்ளிக்கிழமை ‘லீவெ’டுத்து திங்கட்கிழமை காலையில்தான் மாத்தறையிலிருந்தும் பண்டாரவளையிலிருந்தும்; திரும்புவார்கள். இவர்களால் வாராந்தம் வீடுகளுக்குப் போய்வர முடிகிறதே! சென்ற வார இறுதி விடுமுறையில் ஊர்களுக்குப் போய்த் திங்கட்கிழமை காலையிற்தான் திரும்பியவர்கள், மீண்டும் புதன் மாலையில் ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டனரே!
‘நானூறு ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் பிடியிலிருந்த எம்நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து…..’
முன்னாலுள்ள கந்தசாமியரின் அறையிலுள்ள ‘ரீவி’யில் யாரோ சிலர்; சுதந்திர தினத்தைப் பற்றிக் கலந்துரையாடுவது காற்றில் மிதந்து வருகின்றது.
தலைமாட்டிலிருந்த ‘எலாம்’ மணிக்கூட்டை எட்டியெடுத்து நேரத்தைப் பார்த்தான். எட்டரை ஆகியிருந்தது. சுதந்திர தின வைபவம் ஒன்பது மணிக்குத்தான் ஆரம்பமாகிறது போல…
சுதந்திர தினம், மகளிர் தினம், மே தினம் .. போன்ற தினங்கள் எப்ப வருமென்று காத்திருந்து, பட்டுவேட்டி, சால்வை, பட்டுச் சேலை அணிந்து ‘ரீவி” நிலையத்தின் கமராவின் முன் குந்தியிருந்து, கேட்டுக்கேட்டுப் புளித்துப் போன பழைய தகவல்களைக் கலந்துரையாடுகிறார்களே! இவனுக்கு வெறுப்பாயிருந்தது.
முகத்தைக் கழுவிக் கொண்டு வர ‘எலெக்றிக் கேற்ற’லில் தண்ணீர் கொதித்திருந்தது. ‘பிளேன் ரீ’யைத் தயாரித்துக் குடித்தவன், முதல்நாள் வாங்கி வைத்திருந்த பாணில் துண்டொன்றை எடுத்து வாழைப்பழத்துடன் சாப்பிடத் தொடங்கினான். பாண் சுவையற்று ‘சப்’பென்றிருந்தது. பாணை எடுத்து மூடி வைத்தான். வெளிக்கிட்டுப் போய் லக்ஷ்மி பவனில்
சாப்பிட்டு தினக்குரலையும் வாங்கி வந்தால் நல்லது போலப்பட்டது. இப்போது போனால் மதிய உணவு தயாராயிராது. பதினொரு மணிபோலப் போனால் மத்தியானச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு வரலாம். வீணாய் வெளிக்கிட்டு அலைய வேண்டியதில்லை.
கந்தசாமியரின் அறைக்கதவு பூட்டப்படும் சத்தம் கேட்கிறது. மனுசன் சாப்பிடவோ பேப்பர் வாங்கவோ வெளியால் போகிறார் போல…….
‘அங்கிள் எனக்கொரு தினக்குரல் வாங்கித் தாறீங்களா’ என்று கேட்டு காசைக் கொடுப்பமா? வேண்டாம்! இந்த அறைக்கு இவன் வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது. ஒருநாட்கூட முகங்கொடுத்துக் கதைக்காத இந்த மனுசனுடன் கேவலம் ஒரு பேப்பருக்காய்க் கதைப்பதா!
இவனுக்கு முன்பு இதே அறையில் தங்கியிருந்த முல்லைத்தீவு இளைஞனொருவனுடன் கந்தசாமியர் நட்பாயிருந்தாராம். சனி, ஞாயிறுகளில் இருவரும் ஒன்றாய்ச் சமைத்துச் சாப்பிடுவார்களாம். அவன் அடிக்கடி கந்தசாமியரின் அறையிலிருந்து ‘ரீவி’கூடப் பார்ப்பானாம். புறக்கோட்டையில் சுற்றிவளைப்பொன்றில் அவனைக் கைதுசெய்தபோது, அவன் தனக்குப் பழக்கமானவர்களின் பெயர்களில் கந்தசாமியரின் பெயரையும் சொல்லப்போக, படையினர் கந்தசாமியரை இரண்டு நாட்களாய்த் தடுத்து வைத்திருந்தவர்களாம். அந்த இளைஞன் இப்போது பூஸா தடுப்பு முகாமில் இருக்கிறானாம். அடைபட்டு இரண்டு நாள் உள்ளுக்கிருந்த கந்தசாமியர் சிலநாட்களாய் அந்த இளைஞனை ஏசித் திரிந்தாராம். அவருக்கிப்போ தமிழ் இளைஞர்களுடன் கதைக்கக்கூட விருப்பமில்லாது போயிற்றாம். கந்தசாமியர் கடைசி மகளின் சாமத்திய வீட்டுக்காய் ஊர் போவதாக ஜினதாஸ அங்கிளிடமும் உப்புளிடமும் சொல்லிவிட்டுப் போன ஓருநாள் மாலையில், இவனுடைய அறையிலிருந்து ‘பியர்’ அருந்தியபடி ஜினதாஸ அங்கிளும் உப்புளும் இவற்றைச் சொன்னார்கள்.
இவனின் பெற்றோர் சகோதரங்கள் தற்போது வன்னியில் வாழும் தகவல் கந்தசாமியருக்குத் தெரிந்திருக்குமோ? தெரிந்தால்தான் என்ன?
இரண்டு நாட்களுக்கு முன்பு இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தெஹிவளைப் பகுதியைச் சுற்றி வளைத்து வீடுகளில் தேடுதல் நடத்தினார்கள். அப்போது இவனையும் தங்களுடன் கூட்டிப்போக ஆயத்தப்படுத்த, ஜினதாஸ அங்கிளும் உப்புளும்தான் அவர்களுடன் கதைத்து இவனை விடுவித்தார்கள்.
கந்தசாமியர் தனது அலுவலக அடையாள அட்டையைக்காட்டி ‘மம ரஜயே நிலதாரி’ என்று அவர்களுக்குச் சொன்னார். அரச உத்தியோகத்தர் என்றால் என்ன தனியார்துறை உத்தியோகத்தர் என்றால் என்ன, படையினருக்கு எல்லோரும் தமிழர்கள்தானே! கந்தசாமியர் இவனை விடுவிக்கச் சொல்லியிருந்தால் அவரையும் இவனுடன் சேர்த்துக் கூட்டிப் போயிருப்பார்களோ?
அறைக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடக்க அலுப்பாயிருந்தது. அறையினுள் ஒரே வெக்கையாயுமிருந்தது. இவனுக்கு வியர்த்தொழுகிற்று. இவன் பகல் நேரங்களில் இந்த அறையில் இருப்பது அபூர்வம். தினமும் காலை ஏழு, ஏழரைக்கே பல்கலைக்கழகம் செல்வதற்காய் பஸ் ஏறிவிடுவான். காலையும் மதியமும் சாப்பாட்டை கன்ரீனிலேயே பார்த்துக்கொள்வான். மாலையில் ஓரிரண்டு வீடுகளில் ‘பேர்சனல் கிளாஸ்’ செய்து, லக்ஷ்மி பவனில் சாப்பிட்டு அறைக்குத் திரும்ப, கந்தசாமியரின் அறையிலிருந்து ‘பிபிஸி’ தமிழோசை முழங்கும். சனி, ஞாயிறுகளில் கூட இவன் அதிகம் அறையில் இருப்பதில்லை. ‘பேர்சனல் கிளாஸ்’களுடன் பொழுதுபோய்விடும்.
இராணுவ அணிவகுப்பு ஆரம்பமாகிவிட்டது போல…கந்தசாமியரின் அறையிலிருந்து ‘பாண்ட்’ இசை காற்றில் தவழ்ந்து வருகின்றது. கூடவே எதையோ தாளிக்கும் மணமும் வருகின்றது. கந்தசாமியர் இன்றைக்குச் சமைக்கிறார் போல. ‘தம்பி உமக்குச் சாப்பாடு எப்படி’யென்று கேட்டாரென்றால் எப்படியிருக்கும்? ஆனால் அவர் கேட்க மாட்டார். ‘முன்பு ஒரு தமிழ் இளைஞனுடன் தொடர்பு வைத்துப்பட்ட உபத்திரவம் போதாதா?’ என நினைப்பார்.
கந்தசாமியரின் சொந்த ஊர் மானிப்பாய். பரீட்சைகள் திணைக்களத்தில் பணிபுரிகிறார். அவருக்கு நான்கு பெண்பிள்ளைகள். வருடத்தில் ஒருதடவை மட்டுந்தான் அவர் ஊர்ப்பக்கம் போய் வருகிறார். வடபகுதிக்கான தரைவழிப்பாதை மூடப்பட்டுள்ள இக்காலத்தில் விமானத்தில்தான் ஊருக்குப் போய்வர வேண்டும். விமானத்தில் போய்வரும் பணத்திற்கு பிள்ளைகளுக்கு நகைநட்டுச் செய்து போடலாமென்று கருதுகிறார். ஜினதாஸ அங்கிள் இவற்றை இவனுக்கொருநாள் சொல்லியிருந்தார்.
கந்தசாமியரை நினைக்கப் பாவமாயிருக்கிறது. ஓரே நாட்டுக்குள் வாழும் மனைவி பிள்ளைகளை வருடத்தில் ஒரு தடவை மட்டும் தான் சந்திக்கிறாரே மனுசன்!
கந்தசாமியருக்காய்ப் பரிதாபப்படும் தன்னை நினைக்கவும் இவனுக்குச் சிரிப்பாயிருந்தது. இவன் வீட்டை விட்டு பல்கலைக்கழகத்தில் பயிலவென கொழும்புக்கு வந்து மூன்று வருடங்கள் உருண்டோடி விட்டன. ஒரு தரம் கூடப் பெற்றோர் சகோதரங்களைச் சென்று சந்திக்க முடியவில்வை. யாழ்ப்பாணத்தில் அவர்களிருந்தால் ஒருமாதிரி ‘கிளியரன்ஸ்’ எடுத்து விமானத்தில் சென்று அவர்களைப் பார்த்து வந்திருக்கலாம். ஆனால் வன்னிக்கென்றால் ‘கிளியரன்ஸ்’ எடுக்க விண்ணப்பித்தவுடனேயே சந்தேகத்தில் வந்து பிடித்துக்கொண்டுபோய் அடைத்தது வைப்பார்களோ! விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாய் மூடப்பட்டுக் கிடந்தது. அக்காலங்களில் இவன் பல்கலைக்கழகத்திற்கும் போக முடியாமல், வன்னிக்குப் போய் பெற்றோர் சகோதரங்களைச் சந்திக்கவும் இயலாமல் வீணே காலத்தைக் கழித்தான்
“அன்பான இலங்கை வாழ் மக்களே, இன்று எமது நாட்டின் சரித்திரத்தில் முக்கியமான நாள்…” ஜனாதிபதியின் சுதந்திரதின உரையை யாரோ மொழிபெயர்த்துக் கூறுவது இவனது அறைக்குள் வந்து விழுகின்றது.
அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டியிருந்த ஒப்படையினை எடுத்து விடையளிக்க முயற்சித்தான். முதலாம் வினாவை வாசித்து, வரிப்படத்தை வரைந்த இவன், அதில் விசைகளைக் குறித்தான். விதிகளைப் பயன்படுத்தி இலகுவாய்ச் சமன்பாடுகளைப் பெறக்கூடியதாயிருந்தது. ஆனால் அவற்றைச் சுருக்கி விடை காணுவது சிரமமாயிருந்தது. எழுந்து பாயை விரித்துப்படுத்தான்.
கந்தசாமியரிடம் தினக்குரலுக்குச் சொல்லிவிட்டிருந்தால் இப்போது வாசித்துக் கொண்டிருக்கலாம். போனால் போகின்றது என்று நினைத்து அவரின் பேப்பரை இரவல் வாங்கி வாசிப்போமா? சீ! அதில் என்னதான் பெரிதாய் இருக்கப் போகின்றது! ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித்தலைவர் ஆகியோரின் சுதந்திரதின வாழ்த்துச் செய்திகள். வெள்ளவத்தையில் சுற்றிவளைப்பு- நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் கைது. கொட்டாஞ்சேனைக் சுற்றிவளைப்பில் கைதானோரில் 38 பேர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு. கொழும்பில் பொலிஸ் பதிவு நடைமுறையில் மாற்றம் என்பன முதற்பக்கத்தில் இருக்கப் போகின்றன. சுதந்திரமும் தமிழ் மக்களும் என ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டிருக்கலாம். உள்ளே இலங்கையின் தேசியக் கொடியின் வரலாறு, என்ற தலைப்பில் தேசியக் கொடியில் சிறுபான்மையினத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவமளிக்கப்படவில்லையென யாராவது
கட்டுரையெழுதியிருக்கலாம்
‘ஜம்பரை’யும் ரீ-ஷேட்டையும் அணிந்து கொண்டு ஒழுங்கையால் காலி வீதியை நோக்கி நடக்கையில் வெய்யில் சுட்டெரித்தது. காலி வீதியின் இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இராணுவ வீரர்கள் சுமார் பத்து மீற்றர் தூரத்துக்கொருவராய் பரந்திருந்தனர். வீதியில் சன நடமாட்டம் வெகுவாய்க் குறைந்திருந்தது. இவனுக்குப் பயமாயிருந்தது. சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் இவ்வீதியால் தான் திரும்புவார்கள் போல…
“ஹொஹெத யன்னே” இவன் நடக்கையில் இராணுவ வீரனொருவன் கேட்டான். இவனுக்குத் திக்கென்றது.
“மம கடையட்ட யன்னே” குரல் தடுமாறுவது போலிருந்தது. உச்சரிப்பை வைத்து இவன் தமிழனென்பதைக் கண்டு பிடித்து விட்டானோ!
“ ஐசி தென்ட”
அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொலிஸ் பதிவுத் துண்டு, பல்கலைக்கழகப் பதிவுப் புத்தகம் என்பவற்றைப் புரட்டிப் புரட்டி பார்த்து விசாரித்த இராணுவ வீரன் என்ன நினைத்தானோ, இவனைப் போக அனுமதித்தான். தப்பியது போதும் போல இருந்தது. தமிழன் என்பதற்காய் நடுவீதியில் வெய்யிலில் மறித்து விசாரிக்கிறானே!
லக்ஷ்மி பவன் மூடப்பட்டுக் கிடந்தது. பக்கத்து ‘ஹாட்வெயார் ஸ்ரோர்’சில் வேலை செய்யும் றியாஸ் இவனைக் கண்டு ஓடிவந்து முதல் நாளிரவு பொலிஸ் பதிவைப் புதுப்பிக்காத காரணத்தால் லக்ஷ்மி பவனில் வேலை செய்யும் இளைஞர்களைப் பிடித்துக்கொண்டுபோய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக துயரத்துடன் சொன்னான்.
சங்கர், ரவி, விஜயன், சரவணன்..என்று லக்ஷ்மி பவனில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை இவனறிவான். இரண்டு வருடங்களுக்கு மேலாய் இவர்கள்தானே இவனுக்கு இரவுணவு பரிமாறுகிறார்கள். வெறும் கடமைக்காய் உணவைப் பரிமாறாமல் நட்பாய், அன்பாய்ப் பரிமாறும் அவர்களை இவனுக்குப் பிடிக்கும். இவர்களை எப்போது விடுவிப்பார்கள்? இனி இவர்கள் வருடக் கணக்காய் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாட நேருமோ! ஒரே நாட்டில் வாழும் தமிழர்களை மட்டும் பதிவு செய்யும் பொலிஸ் நடைமுறையை நினைக்க வெறுப்பாயிருந்தது.
பெரிய தேசியக் கொடியொன்றை முன்னால் பறக்கவிட்டபடி கல்கிசைப் பக்கமாய் சென்ற பஸ் ஒன்றினுள் இளைஞர், யுவதிகள் சிங்களப் பொப்பிசைப் பாடலொன்றை பாடியபடி நடனமாடிக் கொண்டிருந்தனர். விடுமுறையை அனுபவிக்க எங்கோ சுற்றுலா செல்கிறார்கள் போல…
இனிச் சாப்பாட்டுக்காய் கடைகளுக்கு அலைந்து தேவையில்லாமல் கைதாகிறதை விட, காலையில் சாப்பிட்டு மிச்சம் வைத்த பாணைச் சாப்பிடுவது நல்லதென எண்ணியவனாய் அறையை நோக்கி நடந்தான்.
“சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் இணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்குமுரியது.”என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதாய் கந்தசாமியரின் ‘ரீவி’யில் ஒலித்த செய்தியறிக்கை இவனின் காதுகளில் விழுந்தது!