இருமை!…. ( சிறுகதை )….. கே.எஸ்.சிவகுமாரன்.
ராமலிங்கமும் மனோராணியும் பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே ஒருவரை ஒருவர் வெறுத்து வந்தனர். இல்லை. அது வெறுப்பா அல்லது வெறுப்பு போன்ற நடிப்பா என்று உடனேயே அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் ராமலிங்கத்தின் குறிப்புப் புத்தகத்தில், மனோராணி பற்றி இப்படியும் எழுதப்பட்டிருந்து:
“ஒ நீ ஒரு தன்னியல்பான இளம் பிடிதான். ஆனந்தமயிலோ? உனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாது, குறுநகை இழையோட, மலர்வதனம் அமைவு கொள, நிதமும் கடாட்சம் தரும் அதே தோற்றத்தில், பயிர்ப்பு கொண்டு உறைந்திருக்கின்றாய், பாரம்பரியமாகத் தமிழணங்கு என்றால் உன்போலவே இருப்பாளோ? மானசீக வடிப்பின் பிம்பமோ நீ உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தத் தமிழ்ப்பண்பாடு அடக்கம், மடமை, பயிர்ப்பு போன்ற பத்தாம் பசலி மரபுகளில் எனக்கு நம்பிக்கையில்லை”
ராமலிங்கம் படாடோபத்தையும் ஆடம்பரத்தையும் விரும்பியவன். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் காதலித்துத்தான் திருமணஞ் செய்து கொண்டனர். அது வாலிப மருட்சிக் காதலா? மேனியழகுக் காதலா? பரிசு, பணப்பற்று நிமித்தம் எழுந்த காதலா? உள்ளமும் உள்ளமும் கலந்த காதலா? வடதுருவமும், தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்த காதலா? எதிர்மறைகளின் நிறைவான காதலா? (Attraction of the opposities)
கோலாகலமாகப் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரிலேயே மணம் முடித்தனர்.
இருவரும் பட்டதாரிகள். இருவரும் ஒரே சமுதாய அந்தஸ்திலுள்ளவர்கள். இருவரும் பணக்காரர்கள். இருவரும் நற்குடிப்பிறப்பாளர்கள்.
தாம்பத்திய வாழ்வு இனித்தது. எல்லையிலா இன்பத்தில் இருவரும் திளைத்து இருந்தனர்.
ஒரு வருடம் சிட்டெனவே பறந்தது.
இல்லறவாழ்வு நிதமும் இன்பமயமாகவே இருந்தால் சுவைக்குமா? இருக்கத் தான் முடியுமா?
பிளவு
சலிப்பு ஏற்படத்தான் செய்தது. ஊடல் வந்து விளையாடியது. மகப் பேற்றினால் மீண்டும் உள்ளம் நெகிழ்ந்தது. சுகதுக்கம் சுழல் சக்கரம். இயற்கை சாமான்யத் தம்பதிகளுக்கும் அவர்களுக்கும்
வேற்றுமையேயில்லை. வயது முதிர்ந்தது. உணர்ச்சி பெருகியது. அறிவு விரிந்தது. ஏழெட்டு வருடங்கள் மாய்ந்தன.
ஆனால்,
தாம் எதிர்பார்த்தது கிட்டவில்லையே என்று இருவருக்கும் அடிமனதில் ஒரு குறை. வெளிச்சொல்லாத வெளிக்காட்டாத வெளிப்படுத்த முடியாத ஒரு குறை.
ஏதோ ஒரு தவறுதல் திருமணம் என்ற விபத்தில் ஏற்பட்டுவிட்டதென்ற உணர்வு இருவருக்கும். தாம் அவசரப்பட்டு மணஞ்செய்து கொண்டதாக நம்பினர். ஆனாலும் பெரிய குறைபாடுகளை ஒருவரிடத்தில் ஒருவர் கற்பித்துக்கொள்ளக் கூட அவர்களால் முடியவில்லை. சம்சார வாழ்வில் உள்ளமும் உடலும் பரிபூரண சுகம்பெற்றாலும் அக்குறைதான் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
அன்றொரு நாளிரவு ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது,
“ஒருவனுக்கொருத்தி அல்லது ஒருத்திக்கொருவன் என்ற சமுதாயக் கட்டுப்பாட்டைத் தகர்த்தெறிய வேண்டும். மனோ” என்று விபரீதமாக ராமலிங்கம் தன் மனைவியிடம் கூறினான்.
காலதேவனின் வேகத்தை தடுத்துப் பிடித்துக்கொள்ள யாரால்தான் முடியும்? அது துரித வேகத்தில் மனிதனின் ஆசாபாசங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் அமுக்கி வைத்தாலும் இடையிடையே மேலெழுந்து குட்டை குழப்பத்தான் செய்கின்றன. மனோராணியைக் கட்டிக்கொண்ட தினால் ராமலிங்கத்துக்கு ஏற்பட்ட குறைபாட்டுணர்வு நாளுக்குநாள் அவன் உள்ளத்துள்ளே உருக்கொண்டு வடிவம்பெற்று வருவதை மனோ ராணி அவதானிக்கத் தவறவில்லை.
பகட்டான பெண்களைக் கண்டு காரியாலய காரிகைகளைக்கண்டு! இதமாகத் தனது மனதறிந்து பழகும் பெண்களைக் கண்டு எழிலான நங்கையரைக் கண்டு அவன் மனம் பேதலித்தான். பல்வேறு மலர்கள் மீது தாவ விரும்பினான்.
பல பெண்களுடன் சரளமாகப் பழக வேண்டிய வேலை அவனுக்கு. ஒரு விளம்பர ஸ்தாபனத்தில் அவனுக்குப் பெரிய நிர்வாக வேலை. அதே ஸ்தாபனத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வேலை செய்கிறாள் மனோராணி.
அதனாற்றான் டொறினும், லலிதாவும் அந்நியோன்னியமாக அவனுடன் பழகும் போது மனோராணிக்குப் புல்லரிக்கின்றது.
வெளியுலக நடப்பிலும், உள்ளத்துணர்விலும், தனக்கும் அவளுக்கும் இணக்கமுண்டென்றுதான் நம்பினாலும், உள்ளத்தினுள்ளேயுள்ள
உணர்வில், மனப்பாங்கில் தாமிருவரும் ஒருமைப்பாடுடையவர்கள் அல்லர் என்பது அவனுக்குப் புலனாகின்றது. இது அவன் நிலை.
அன்று நடந்த சப்பர் டான்ஸ் களியாட்டத்தில் டொறின் என்ற சக ஊழியாளுடன், அவன் குடிவெறியில் ஆடிய ஆட்டம் மிகமிக அருவருக்கத் தக்கதாயிருந்தது. அந்தப் பெண்ணும் மது மயக்கத்தில் அவனைத்தழுவி ஒடிந்து ஒடிந்து படர்ந்து படர்ந்து ஆடினாள்.
மனோராணிக்கும் ‘டான்ஸ் ஆட வேண்டும் போலிருந்தது. அவளுக்கும் மனித உணர்வில் எழும் எண்ண அலைகள் எழுந்தன.
ஆனால் அவளது ஒருமையைக் காட்டிக் கொள்ளவில்லை.
அவள் தனது உணர்வை, குறைபாட்டுணர்ச்சியை, பீறிட்டெழும் எண்ணங்களை, கற்பனைகளை அடக்கி ஒடுக்கி நசுக்க முனைந்தாள்.
“என்னுடன் ஆடவருவீர்களா?” என்று விநயமாக ஓர் இளம் வாலிபன் மனோராணியிடம் வந்து கேட்டான். அமைதியாக மென்மையாக அவன் அவளிடம் வந்து கேட்பது அவளுக்குப் பிடித்தது. அழகாகவும் உடுத்திருந்த அவனிடத்தில் ஓர் அடக்கமான கம்பீரமும், உயர் குடிப்பிறப்புக் களையுமிருக்கின்றது என்று அவள் கண்டு கொண்டாள். “மன்னிக்க வேண்டும். எனக்கு ஆடத்தெரியாது” என்று ஆங்கிலத்தில் ஒரு பொய்யைச் சொன்னாள். வாலிபனுக்கு தெரியும், அவள் மேனாட்டு நடனம் கற்று வருவது!
“பரவாயில்லை. எனக்குத் தெரியும். தாங்கள் தமிழ் பெண்ணென்று” என்று கூறி முறுவலித்தான் வந்தவன். அவளும் சிரித்தாள். பின் தலை கவிழ்ந்து கொண்டாள். அவ்வாலிபனும் அவளைவிட்டு வேறிடம் சென்றான்.
டொறினுடன் ஆடி முடிந்ததும், லலிதாவை அவன் தொற்றிக் கொண்டான். டொறினும் அவ்வாலிபனும் ஜோடிகளாக நின்று ஆடினர். வாத்திய இசையில் இலத்தின் அமெரிக்க மெட்டுகள் சுருதிமீட்டின.
என்னதான் மனித இயல்பு கொண்டிருந்தாலும், என்னதான் நாகரிகப் பூச்சில் மனதைப் பறிகொடுத்தாலும், மனோராணி தமிழணங்குதானே?
பெண்ணே புதிர் என்பார்!
ஆனால் தமிழ்ப் பெண்தான் புதிராகத் தோன்றுகிறாள். அவள் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை.
பண்டுதொட்டுக் கட்டிப்பிடித்து காத்துவரும் பண்பு கொண்ட இனத்தில் பிறந்தவள் அல்லவா? தமிழ்ப் பெண்ணின் இலக்கணமே நாணங்கலந்த மடமைதானே?
அடக்கமும், பணிவும், மடமைபோல் நடிப்பும், பயிர்ப்பும், வெகுளித் தனமும் மென்மையுந்தானே, தமிழ்ப பெண்ணுக்கு அணிகலன்கள் என்று, ராமலிங்கம் எண்ணிக் கொண்டான்.
மனோராணி அவனிடம் முன்போலவே பழகினாள். அவளிடம் சிறிதேனும் வெறுப்பின் சாயை கூடவில்லையே!
“செயற்கைத் தளைகளால் தனது ‘ஒருமையைத் தடைப்படுத்திக் கொண்டாள் போலும், வெளியுலக நடப்பில் ஒருவிதமாகவும் அகத்தில் வேறுவிதமாகவும் அவள் நடந்தும், எண்ணியும் வருகின்றவளோ? அதற்கு நான் என்ன செய்யமுடியும்? எனது இயல்பின்படிதானே நான் நடக்க வேண்டும்” என்று ராமலிங்கம் தேற்றிக் கொண்டான்.
தன் குடும்பத்தையே மறந்து தன் இயல்பையே நிசமென நம்பித் தன் மனம் போனவாக்கில், பிழையான வழிகளில் சென்றான் இராமலிங்கம்.
ஆனால், மனோராணி கண்ணகிபோல் வாழாயிருக்கவில்லை.
தமிழ்ப் பெண்மையின் பணிவினைச் சாதகமாக வைத்துக்கொண்டு, ‘ஒருமை வாழ்வுடைய ஆண்மை, தன் மனம் போனவாக்கில் நடந்தாலும், மனோராணி என்ற இரட்டை வாழ்வுடைய தமிழ்ப்பெண், இராமலிங்கம் என்ற தன் கணவனைத் தக்க இடங்களில் இலாடம் போட்டு இழுக்கத் தவறவில்லை.
இராமலிங்கம் தீ என்றால் மனோராணி தண்ணீர். ஆனால் பூகம்ப உத்வேகத்திற்குப் பசுமையான சாந்தி, சமன்செய்ய முடியுமோ? தோல்விதான்.
தோல்வியின் எல்லை சக்தியின் வேகம். பெண்மை குமுறி எழுந்தது. மனோராணியும் தனது குறைபாட்டுணர்ச்சியை நீக்குமுகமாக, நடிக்க முயன்றாள். பெண் அலை மோதினால்? ஏகபோக உரிமையை இயல்பாகவே கொண்டாட விரும்பும் ஆண் அலை பொறாமை கொண்டது.
“அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்னொரு தமிழ் இளைஞனும், அவளும் அடிக்கடி பேசுவதற்கு என்ன இருக்கும்? மனோ! நீ என்னை உதாசீனம் செய்கிறாயா? அந்தப் பையனுடன் சரசமாகப் பழகுவது நீதானா? தமிழ்ப் பெண்ணின் இலக்கணம் என்ற பெட்டகம் போல விளங்கிய நீயா என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அந்தச் சிறுவனுடன் சல்லாபஞ் செய்கின்றாய்?” என்று ராமலிங்கம் தன்னுள் கேட்டுக் கொண்டான்.
“டொறினும் லலிதாவும் என்னுடன் வந்து பேசினாலும் சிரித்தாலும், முகம் கனன்று கோபித்து வெருட்சியடையும் நீயா, இப்பொழுது அவர்கள் விளையாடும் பொழுது ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறாய். நீ – கள்ளி’
“நான் ஆண். நீ. பெண் அல்லவோ? நான் கெட்டால் நீயும் கெடலாமோ? நீ என் மனைவியடி மனைவி”
“ஓ! மனோ! மன்னித்துவிடு. உன்னைப் பிழையான வழியிற் போக விடமாட்டேன்” என்று வெகுண்டெழுந்தான் ராமலிங்கம்.
பெண்மை தன் தளைகளைத் தளர்த்தியது போல நடித்ததும், ஆண்மை பணியத் தொடங்கியது. உணர்ச்சியை ஒதுக்கிச் சிந்தனையை மேலெழுப்பிப் பார்த்ததில், தன் அமானுஷ்ய எண்ணங்களின் கீழ்த்தரப்போக்கை, இனங்கண்டு கொண்டது.
தூய்மை உளத்தூய்மை பண்புத் தூய்மை பொறுப்புணர்ச்சி: இராமலிங்கம் மாறியேவிட்டான். அவனிடமிருந்த ‘ஒருமை’ மாறிவிட்டது. அவனும் இருமை வாழ்வுடையோனானான். நீச எண்ணங்களைப் புதைத்துவிட்ட தோற்றம் ஒன்று! தூய எண்ணங்களை வளர்க்கும் தோற்றம் ஒன்று.
ஆனால்!
ஒரே நிலையில் இருவர் உள்ளமும் ஒரே தன்மை வாய்ந்தால் அல்லவா பூரண இன்பம். இராமலிங்கம் உளத்தூய்மை பெற, மனோராணியிடம் புதைந்திருந்த நீச எண்ணங்கள் மேலெழும்பின.
நடிப்பே யதார்த்தமானால்?
செயற்கையாகக் கட்டி வளர்த்த தமிழ்ப்பண்பு – கற்பு என்ற வேலிகள் அவளது ‘ஒருமையில் இருந்து எழுந்த எண்ணங்களை நீறுநீறாகப் பொசுக்கின. ஆனாலும், சிறுசிறு பொறிகளிலிருந்து, மின்மினி வீச்சில் அவை உருப்பெற்றன.
மனோராணிக்குப் போராட்டம் ‘ஒருமைக்கும் இருமைக்கும் இடையே போராட்டம்.
மைந்தனைத் தொடர்ந்து, மகள் ஒன்று பூத்தாள். வித்து பார்த்தது! கல்வி வழிகாட்டியது! பண்பு ஒளிவீசியது! தாயைப் போலப் பிள்ளை என்ற வடுச்சொல் வேண்டுமா?
போராட்டத்திற்கு ஒரு முடிவு! பிரச்சினைக்கு ஒரு விடிவு! மனோராணி குடும்பப் பெண்ணானாள். அவள் மீண்டும் இருமை பெற்றாள்.
காலம் என்ற மருந்து எந்தச் சீழ் சிரங்கையும் குணமாக்கமாட்டாதோ?
(தினகரன் வாரமஞ்சரி 24-09-1962)