பல காரணங்களுடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தீபாவளி்.
அகத்தில் விளக்கு எரிந்தால் புறத்தில் வெளிச்சம் பரவும் என்பது நம்பிக்கை.
பொறாமை அகங்காரம் அகம்பாவம் தலைக்கனம் போன்ற மன இருட்டு்கள் எரிந்து இதயத்தில் ஒளி ஏறும் என்பது தத்துவம்.
ஆவளி எனின் வரிசை என்பது அர்த்தம்.
ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு தீபாவளி கொண்டாடும் தெய்வம் என்ற தனித்துவம் உண்டு.தீபாவளியன்று அதிகாலை எண்ணெய் காப்பிட்டு மஞ்சனம் கண்டு பட்டாடைகள் தரித்து மலர் அலங்காரங்களுடன் அரள வைத்து அருள் புரிவது – திவ்வியம்.
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது என்ற கேள்விக்கு இரண்டு பிரதம கதைகள் கற்பனையில் கலக்கின்றன.
வராக அவதார மூலம் பூமாதேவிக்கு மகனான நரகாசுரன் – கடும் தவ வர பலனால் பிரமதேவரிடம் நிபந்தனையுடன் சாகாவரம் பெற்றதாகவும் அவனின் அத்துமீறிய அட்டூழியத்தால் கிருஷ்ணரின் சக்ராயுதம் அவனை சங்கரித்ததாகவும் இதன் ஒழிவில் ஒளிவீச எண்ணிய அவன் அந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விளக்கேற்றி வழிபட்டு பட்டாடைஅணிந்து பட்சணங்கள் சுவைத்து பட்டாசு கொளுத்தி் அனைவரும் கொண்டாட வேண்டினான் என்பது முதலாவது கதை.
ராவண வதம் முடிந்து அயோத்திக்கு ராமர் மீண்ட வேளை நகரவாசிகள் ஏராளமான விளக்குகள ஏற்றிவைத்து சீதாராமரை தரிசித்து மகிழ சீதாபிராட்டி அரண்மனை முழுதும் வரிசையாக தீபங்களை ஏற்றி ஒளி வீசச்செய்த நாள் என்பது இன்னொரு கதை.
இந்தக்கதைகள் பிடிக்காதவர்கள் பின்வரும் 14 நாட்களில் ஒன்றுதான் தீபாவளி என ஒளிமயமாக்கிக்கொள்கின்றார்கள்.
பார்வதிதேவி கேதாரகௌரி விரதத்தைப் பூர்த்தி செய்து – அர்த்தநாரீஸ்வர் ஆகிய நாள் மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்ட நாள் துர்காதேவி மகிஷாசுரனை வதம் செய்த நாள் லட்சுமி பூஜைக்குரிய நாள் குபேர பூஜைக்குரிய நாள் நரகாசுரனை வதம் செய்ய கிருஷ்ண பரமாத்மா புறப்பட்ட பொழுது பாணசுரன் தலைமையில் அசுரர்கள் லட்சுமியை கவர முற்பட தீபச்சுடரில் லட்சுமி ஐக்கியமான நாள் ராவணனை வதம் செய்த நாள் சமணர்களின் ஆதார குருவான வர்த்தமான மகாவீரர் முத்தி அடைந்த
நாள் ஜஹாங்கீரின் சிறையிலிருந்து ராஜபுத்திரர் 52 பேருடன் ஆறாவது குருவான கோவிந்தசிங் தீரத்துடன் தப்பியதற்காக பொற்கோவிலை வர்ண விளக்குகளால் அலங்கரித்து வரவேற்ற நாள் சத்ரபதி சிவாஜி எதிரிகளிடமிருந்து கோட்டையை கைப்பற்றிய நாள் உஜ்ஜயினி மன்னரான விக்கிரமாதித்தன் பகைவர்களான ஷாகாஸை வென்று முடி சூட்டிக் கொண்ட நாள் சாம்ராட் அசோகன் தனது திக்விஜயத்தை முடித்த நாள் மாபலி முடி சூடிய நாள் ஆதிசங்கரர் ஞானபீடங்களை நிறுவிய நாள்.
– மகிழ்வுடன் ஒளிர்வது அவரவர் வாழ்வு!
விளக்கு விழாக்கள் தீபாவளிக்கு நிகராக இதர சமூகங்களிலுமுண்டு. தாய்லாந்தவர்கள் Lam Kriyongh என்ற பெயருடன் கொண்டாடுகின்றனர்.
வாழையிலையில் மெழுகுவர்த்தியும் ஊதுவத்தியும் ஏற்றி நாணயங்களுடன் நீிரில் மிதக்க விடும் சம்பிரதாயம் தவிர ஏனைய அனைத்தும் எமது தீபாவளிக்கு ஒத்தவை.
ஜப்பானியர்கள் Toro nagashi என்ற பெயரில் விளக்குகள் ஏற்றி கொண்டாடுவர்.முன்னோர்கள் அத்தினத்தில் ஆசி வழங்குவார்கள் என்பதும் அவர்களை வரவேற்கவே விளக்குகள் என்பதும் அவர்களது ஐதீகம்.
சீனர்கள் வீடுகளுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் வளம் பெருகட்டும்இலாபம் அதிகரிக்கட்டும் நன்றாக வாழ் போன்ற வாசகங்களால் சுவர்களை அலங்கரித்து விளக்குகளை வரிசையாக ஏற்றிவைத்து வழிபடும் Yuanxiao Festival என பெயர்பெற்ற விழாவை தீபாவளி போல் கருதலாம்.
உலகின் ஒரே ஒரு இந்து சம்ராஜ்ஜியமான நேபாளத்தில் மிகவும் சிறப்பான பண்டிகை தீபாவளியாகும்.
Thikar என்ற பெயரில் ஐந்து நாட்கள் விளக்குகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவர்.
முதலாவது நாள் காகத்துக்கும் இரண்டாம் நாள் நாய்க்கும் மூன்றாம் நாள் பசுவுக்கும் நான்காம் நாள் எருமைக்கும் விசேட வழிபாடு செய்து வியக்கவைப்பார்கள்.
தீபாவளித் திருநாளுக்கு சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் சிறப்பும் உள்ளது.
சிவனுக்கு உகந்த மாதசிவராத்திரி கிருஷ்ண பட்ச சதுர்த்தியிலேயே மாதந்தோறும் வரும்.அதே கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் ஐப்பசி மாதமொன்றில் கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்தார்.
இந்தியாதான் தீபாவளியின் தாய்நாடு எனினும் அதன் கோலாகலம் இலங்கை இந்தியா நேபாளம் மியன்மார் தாய்லாந்து மலேஷியா சிங்கப்பூர் இந்தோனேஷியா சீனா ஜப்பான் அவுஸ்திரேலியா நியூஸிலாந்து பிஜி கயானா சூரிநாம் அமெரிக்கா கனடா இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மனி சுவிஸ்லாந்து டென்மார்க் நோர்வே சுவீடன் இத்தாலி கென்யா தன்ஸானியா தென் ஆபிரிக்கா மொரிஷியஸ் என உலகம் முழுவதும் விசாலமாய் விரிவடைந்து எத்திக்கும் தித்திக்கின்றது.
இந்து சமண சீக்கிய பௌத்த சிந்தி மக்கள் கனடாவில் தீபாவளி பண்டிகையை வருடா வருடம் கொண்டாடுகின்றனர்.
தீபாவளி தினம் இலங்கை இந்தியா நேபாளம் மியன்மார் மலேஷியா சிங்கப்பூர் பிஜி ஆகியநாடுகளில் அரச விடுமுறையாகும்.
தீபாவளிக்கென விசேட நாணயமும் தபால் தலையும் வெளியிட்ட மகிமை கனடாவிற்கு உண்டு.
தீபாவளிக்கு முதன் முதல் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் என்பது மனசெங்கும் மிச்சமில்லாது ஒட்டிக்கொள்கின்றது!
கனடாவில் இவ்வருடம் நவம்பர் பதின்மூன்றாம் திகதி் தீபாவளி.- இனிக்க இனிக்க வாழ்த்துக்கள்.