ஒரேயொரு வரி
—————————————————————————
பாலா….
அட்டைப் பட அதிதியாய் உன்னை
எழுதியபோது ,
ஒரேயொரு வரி எஞ்சி இருந்தது.
அதனை நான் எழுதிக் கொள்கிறேன்
‘ நேற்றிரவு நீ எம்மிடமிருந்து
விடை பெற்றதாய் ‘
மா பா. சி
மல்லிகையுடான தொடர்பின் காரணமாகப் பரிச்சயமாக்கிக் கொண்ட உறவு.
எனது வாசிப்பு பயணத்தில் உள்வாங்கிக் கொண்ட படைப்பாளி.
மல்லிகை ஜீவா அவர்கள் கொழும்பு வந்த காலத் தொடக்கம் அவருக்குப் பெரும் உதவியாக இருந்தவர்.
கே.பொன்னுத்துரை ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன்போன்றவர்களுடன் இணைந்து இயங்கியவர்.
எந்தவொரு இலக்கியக் கூட்டத்தில் ஆற அமர்ந்து அக்கூட்டங்களைப் பற்றிச் செய்திகள் எழுதியவர் அல்ல அவர். அக்கூட்டங்களைப் பற்றிய அறிக்கைகளை இலக்கிய ஆவணங்களை மா.பா.சி கேட்டவை தலைப்பில் தினக்குரல் பத்திரிக்கையில் எழுதியவர்.
அந்த ஆவணங்கள் இரண்டு பெரும் நூல்களாக வெளிவரவேண்டிய தேவையின் இருக்க முதல் நூல் கலாநிதி ந. ரவீந்திரன் போன்ற நண்பர்களின் முயற்சியினால் வந்தது. அவரது மறைவுக்குப் பின் இரண்டாவது ஆவணத் தொகுப்பு நூல் உருவம் பெற காத்திருக்கிறது.
அவரது இப்படியும் ஒருவன் என்ற முதலாவது தொகுப்பை மல்லிகை வெளியிட்டது.
பொதுவாக இலக்கியப்புரவலர் ஹாஸிம் உமரின் புரவலர் புத்தகப் பூங்கா இதுவரை புத்தகம் போடாதவர்களின் முதல் புத்தகத்தைப் போடுவது என்ற கொள்கை கொண்டது. ஆனால் மா.பா.சி கனதியையும் புரிந்து கொண்டு அவரது குறுநாவல்களின் தொகுப்பான தழும்பு எனும் நூலைத் தனது 38 வது வெளியீடாக வெளியிட்டது. அந்த நூலே தேசியச் சாகித்திய மண்டலப் பரிசையும் fairway’ யின் இறுதிச்சுற்றுக்கான விருதினைப் பெற்றது.
அத்தோடு லண்டன் இலக்கிய நிறுவனமும் இலங்கை இலக்கிய நிறுவனமும் இணைந்து நடத்தும் இலக்கிய விழாவில் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
மா.பா.சி ஒர் எழுதுவினைஞராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சில பணி புரிந்து அந்தக் கால அனுபவங்களை மல்லிகை “ ஓரு வானம்பாடியின்….எனும் தலைப்பில் ஒரு தொடரினை எழுதினார். ஒலிப்பரப்பாளர்களை பற்றி ஒலிப்பாளர்கள் எழுதி ஆவணங்களை நாம் அறிவோம். ஆனால் ஒரு எழுதுவினைஞரின் பார்வையில் ஒலிப்பாளர்களைப் பற்றிய ஆவணம் என்ற வகையில் முக்கியமானது. ஆனால் கணிசமான வர்களின் கவனத்திற்கு அந்த ஆவணம் உட்படாதது ஒரு குறை.
இனி மா.பா சிக்கு ஆற்ற வேண்டிய அஞ்சலி மா. பா.சிகேட்டவை எனும் நாலின் இரண்டாம் வெளிக்கொணர்வது. இரண்டாவது அவர் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணியை மறக்காமல் இருப்பதுதான்.
மா.பா.சிக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.
பிற்குறிப்பு—மா.பா.சியின் மறைவுக்கான குறிப்பு எழுதும் பொழுது கொடூரக் கொரோனா சூழலில் நோய் உற்றவர்களைச் சுகம் விசாரிக்கப் போக முடியாமல் இருப்பதும். மறைந்தவர்களுக்கு நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தப் போக முடியாமல் இருப்பது பெரும் அவலம். அதுவே இந்த யுகத்தில் புதிய நோய் கூறாக
நமக்குள் வளர்ந்து விடுமோ என்ற அச்சம் எனக்குள்.
முற்போக்கு சிந்தனையாளர்
மா.பா. சி. பாலா மறைவு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மா . பா . சி பாலா அவர்களின் மறைவு என் மனதிலும் சில அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறவில்லை . மல்லிகை சஞ்சிகையை அறிந்த காலத்திலிருந்தே அவரை நானும் அறிந்திருந்தேன். கலை, இலக்கியம் , சமூகம் , அரசியல் என எல்லா கோணங்களிலும் நேர் கொண்ட சிந்தனையை அவர் கொண்டிருந்ததனை அவருடன் அளவளாவிய பல சந்தர்ப் பங்களில் நான் உணர்ந்தி ருக்கிறேன்.
அவர் தினக்குரலில் ஒவ்வொரு வாரமும் எழுதிய இலக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு மிகுந்த நடுநிலையானதாகவே இருந்தது . அவர் கூட்டங்களில் பேசும் எந்த ஒரு பேச்சாளருக்கும் அநீதி விளைத்து விடக்கூடாது என்ற நேர்மை உணர்வுடன் அவர்களது பேச்சை தொகுப்பதில் கவனம் செலுத்தியவர். எனது மொழிபெயர்ப்பு நாவலான கசந்த கோப்பி நாவலின் வெளியீட்டு விழா தொகுப்பையும் தினக்குரலில் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
அவருடன் நெருக்கமாக பழகியது நான் “விஜய் ” சிறுவர் பத்திரிக்கையில் பிரதம ஆசிரியராக செயற்பட்ட போது அப் பத்திரிக்கையின் புரூப் ரீடராக அவரை நான் இணைத்துக்கொண்ட போதுதான். அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய காலத்தில் அவர் வெறுமனே ஒரு ப்ரூஃப் ரீடர் ஆக மாத்திரமே பங்களிப்பு செய்யவில்லை . எனக்கு ஒரு நல்ல ஆலோசகராகவும் அவர் இருந்தார் . விஜய் பத்திரிக்கை வெற்றி பெறுவதற்கு அவரும் ஒரு காரணகர்த்தாவாக இருந்தார்.
ஒரு மனிதநேய பண்பாளருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்….
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் மா.பா.சி அவர்கள் காலமானார்….
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் அமரர் திரு மா.பாலசிங்கம் அவர்கள் தனது 81வது வயதில் நேற்று இரவு 31102020 காலமானார். இவரை மாபா.சி என்றால் எழுத்தாளர் உலகிற்கு தெரியும் .அரச உயர் அதிகாரியாக பணியாற்றிய பாலசிங்கம் எழுத்துத்துறையில் முன்னோடியாக இருந்தவர். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் நிர்வாக அலுவலகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தினக்குரல் பத்திரிகையில் அவர் தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைகள் “மா.பா.சி கேட்டவை” என்ற தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. இதனைவிட பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார்.
அன்னாருக்கு தேச தமிழ் செய்திகள் ஊடகமும் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கின்றது.
மா. பா. சி. அவர்களின் மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலக்கிய அரங்க நிகழ்வுகள் காற்றோடு கரைந்து மறைந்து விடாமல் பதிவாக தொடர்ந்து வழங்கி வந்தவர். “மா. பா. சி. கேட்டவை” என ஒரு நூலாக சிலவற்றை வெளிப்படுத்தி இருந்தோம் என்ற திருப்தி உள்ளது. விடுபட்ட ஏனையவை யும் வெளிவர வேண்டும்.
அவருடனான செயற்பாடுகள் சார்ந்த நினைவுகள் அழியாது நீடிக்கும்! விடை தருவது இன்று அவசியம் என ஆகிவிட்டது. உங்களது தடம் இங்கு நீடிக்கும்!!
மூத்த எழுத்தாளர் – நண்பர் மா.பா.சி.
(31 – 10 – 2020) இரவு கொழும்பில் காலமான செய்தி கவலையளிக்கிறது. அவருக்கு வயது 81.
முற்போக்குச் சிந்தனையாளரான மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் யாழ்ப்பாண நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
கொழும்பில் நீண்ட காலமாக வசித்து வந்தார்.
எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.
சிறுகதை – குறுநாவல் – நாவல் – கட்டுரைகள் எனப் படைப்புகளை வரவாக்கியுள்ளார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘இப்படியும் ஒருவன்’ மல்லிகைப் பந்தல் வெளியீடாக 2002 -ல் வெளிவந்தது.
அடுத்த சிறுகதைத் தொகுதியான ‘எதிர்க்காற்று’
2008 -ல் வெளியாகியது.
கொழும்பில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களுக்குத் தவறாது சமூகமளித்து அந்நிகழ்வுகளைத் தொகுத்து எழுதித் ‘ தினக்குரல்’ பத்திரிகைக்கு அனுப்பிவைப்பார்.
பத்திரிகையில் அத்தொகுப்பு முழுப்பக்கத்தில் அழகாகப் பிரசுரமாகும்.
பத்திரிகை வாசகர்கள் – இலக்கிய ஆர்வலர்கள் எங்கிருப்பினும் அத்தொகுப்பினை வாசிப்பதின்மூலம் கூட்ட நிகழ்வினை முழுமையாக அறிந்து திருப்திகொள்வர்.
மா. பா. சி.யின் இப்பணி எழுத்துலகில் – வாசகர் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எனது நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகள் (இலக்கிய மாலை) யாவற்றையும் அவர் தொகுத்துத் தினக்குரலில் வெளிவரச் செய்தமை மனதில் நிற்கிறது.
அவர் எழுதிய தொகுப்புகள் பலவும் நூலாக்கப்பட்டு “மா. பா. சி. கேட்டவை – தினக்குரல் பதிவுகள்” என்ற பெயரில் 2016 -ல் (488 + 26 பக்கங்கள்) வெளியிடப்பட்டது.
பழகுவதற்கு இனிய நண்பர் மா. பா. சி. எங்கள் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்..!
– வி. ரி. இளங்கோவன்.
அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.
ஈழத்தின் மூத்த எமுத்தாளரும் எனது தாய் மாமனும் ஆகிய மா.பா.சி என்று அழைக்கப்படும் மாரிமுத்து பாலசிங்கம் அவர்கள் தனது 81வது வயதில் 31-10-2020 அன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்திக்கு அக்கினிக்குஞ்சு இணையத்தள குழுமத்தின் பிராத்தனைகள்…. யாழ்.எஸ்.பாஸ்கர்.