முகிழ்த்தது முத்து

உள்ளங்கால் புல் அழுகை!…. ( சிறுகதை ) …. ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா.

”மை நேம் ஸ் ரோசி, வட்ஸ் யுவர் நேம்?”, எனக் கேட்டு விட்டு என்னைப் பார்க்கிறா, மஞ்சள் நிறத் தலைமயிரும் நீலக்கண்ணும் உள்ள அந்தப் பெண்.

எனக்கு அவவைப் பாத்த போது எங்கடை ரீச்சர் மிசிஸ் யோன் ஸ்கூலுக்கு ஒரு நாள் வராமல் நிண்ட போது வந்த அந்தச் சப்பிளை ரீச்சர் தான் ஞாபகத்துக்கு வந்தது. அந்த ரீச்சரின் குரல் மாதிரி அவவின்ரை குரலும் கடுகடுப்பாக இருந்தது. அந்தச் சப்பிளை ரீச்சரை எனக்குப் பிடிக்கவேயில்லை. அம்மாவுக்கு அதைப் பற்றிச் சொல்லி அலுத்துக் கொண்ட போது, ‘சரி நாளைக்கு உங்கடை ரீச்சர் வந்திடுவா’ எண்டு சமாதானம் சொன்னா. ஆனால் அந்தச் சப்பிளை ரீச்சர் தொடர்ந்து ஐஞ்சு நாளா வந்ததாலை எனக்கு ஸ்கூலுக்குப் போறதிலை விருப்பமில்லாமல் போய் அம்மாவோடை சண்டை கூட பிடித்திருக்கிறன். அந்தச் சப்பிளை ரீச்சருக்கு எங்கடை ரீச்சர் மாதிரி அமைதியாய்க் கதைக்கத் தெரியாது. அது மட்டுமில்லை மற்றவையிலை எந்த நேரமும் பிழை பிடிக்கிறது தான் அவவின்ரை வேலை.

நான் ஒண்டும் பேசாமல் நிற்கிறதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணே தொடர்கிறா, ”ஓ, யூ ஆர் நொட் ரெடி ரு ரோக் ரு மீ யெற், தற்ஸ் ஒகே.”

“திஸ் ஸ் அபர்ணா, அபர்ணா திஸ் ஸ் ரோசி. சீ வில் ரேக் கேய்ர் ஒவ் யூ அன்ரில் திங்ஸ் கெற் செற்றில்ட்”, என்கிறா என்னை ரோசியிடம் கூட்டிக் கொண்டுவந்த டயானா. எனக்கு அவை சொல்லுற எதுவுமே, விளங்கேல்லை, அவை ஏன் நடக்குது எண்டும் சரியாய்த் தெரியேல்லை.

பிறகு டயானா என்னை அந்த வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போறா. அங்கை என்னிலும் பாக்க வயது கூடிய ரண்டு பிள்ளைகள் மேசையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தினம்.

“அபர்ணா, வுட் யூ லைக் ரு ஈற் சம் திங் ரூ?”, எனக் கேட்ட ரோசிக்கு டயானா, “யேஸ், சீ டிடின்ற் ஹாவ் கேர் டின்னர் யேற்,” என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்து ”ஜொயின் வித் தேம்”, என்கிறா.

நான் ரொபேட் போல அசைந்து போய் சாப்பாட்டுக்குப் பக்கத்திலை இருந்தாலும் பசி கொஞ்சமும் வரேல்லை. மக்கரோனி அண்ட் சீஸ் எனக்குப்

பிடிக்கிறதும் இல்லை. அம்மா இடியப்பத்தை குழைச்சு போட்டு தீத்த அதைச் சாப்பிட்டுத் தான் எனக்குப் பழக்கம்.

சாப்பாட்டு மேசையில் இருந்து நான் அழுவதைப் பாத்ததும் மற்ற இரண்டு பிள்ளையளும் தாங்கள் கதைத்ததை நிறுத்திப்போட்டு என்னைப் பரிதாபமாகப் பாத்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து ரோசி, ’ஓகே, கம் அண்ட் சிற் வித் மீ’ என என்னைக் கூப்பிட்டா.

அதன் பின்னர் டயானாவும் ரோசியும் தமக்குள் கதைத்த படி ஏதோ படிவங்கள் எல்லாம் நிரப்பிக் கொண்டார்கள். பின் டயானா வெளியேற, “அபர்ணா, இற் ஸ் ஓல்மோஸ்ற் ரைம் ரு கோ ரு பெட்” எனச் சொல்லி என்னைக் கூட்டி கொண்டு வந்து ஒரு அறையில் படுக்க விட்டுப் போய் விட்டா ரோசி.

அம்மாவின்ரை சூட்டிலை அம்மாவோடை படுக்கிறதிலை சுகம் கண்ட எனக்கு அந்த அறை ஏதோ ஒரு ஜெயில் மாதிரி இருந்தது. அம்மாவுக்கெண்டு ஒரு தனிப்பட்ட வாசம் இருக்குது. “அம்மா, யூ சிமல்ஸ் சோ குட்” என அடிக்கடி அவவுக்குச் சொல்லி இறுகக் கட்டிக் கொள்வேன் நான். இப்ப அம்மாவின்ரை சூடுமில்லை, மணமுமில்லை. எல்லாமே வெறுமையாய்க் கிடக்குது. நான் இங்கை, பேபி யாற்ரை வீட்டிலையோ தெரியாது. பேபியையும் என்னையும் சேத்துப் பாக்க ரோசியாலை முடியாது எண்டு தான் என்னை மட்டும் இங்கை கூட்டி வாறதாக டயானா இங்கை வரும் போது சொன்னா.

இனி பேபியோடை விளையாடவும் ஏலாது, அபர்ணாக் குட்டி பேபிக்கு பவுடர் எடுத்துக் கொண்டு வா, பேபி அழுகுது, பேபியோடை போய் விளையாடு எண்டெல்லாம் அம்மா சொல்றுறதைக் கேட்கவும் முடியாது. எத்தனை நாளைக்கு இப்படியிருக்கப் போறன், எப்ப அம்மா கதைக்கிறதைக் கேட்கப் போறன், அம்மா என்னைக் கட்டிப்பிடித்து என்ரை கண்ணீரைத் துடைத்து விடப் போறா, தலையணையைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழுகிறன்.

அப்பாவுக்கு கோவம் வந்தால் அவர் அம்மாவை எப்பவும் தான் அடிக்கிறவர். ஆனால் கடைசியாக அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்த போது மட்டும் எப்படிப் பொலிஸ் வந்தது எண்டு எனக்கு விளங்கேல்லை. அப்பாவின்ரை சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் கூப்பிட்டது எண்டு அம்மா செல்றரிலை சொன்னா.

அப்பா அடிச்சாலும் அம்மா என்னைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு தான் அழுவா. இப்ப தனிய இருந்து என்ன செய்கிறாவோ தெரியாது. பேபியோடை

இனி நான் எப்ப விளையாடுறது எண்டெல்லாம் ஒண்டுமே எனக்கு விளங்கேல்லை. பேபிக்கு தனக்கு என்ன பிடிக்கும் எண்டு சொல்லவு தெரியாது, பாவம் பேபி.

பொலிஸ் வந்து எங்களைக் கொண்டு போய் செல்றரிலை விடேக்கை எங்கடை வீட்டிலை இருக்காட்டிலும் பரவாயில்லை, அம்மாவோடை இருந்தால் காணும் எண்டு தான் நான் நினைச்சன். இப்ப அம்மாவுக்கு வருத்தமாம், ஏதோ டிப்பிரசனாம், அதாலை அவவாலை எங்களைப் பாக்க ஏலாது எண்டு எங்களை அவவிட்டையிருந்து பிரிச்சுப் போட்டினம்.

எங்களுக்கு எங்கடை அம்மா வேணும் எண்டு நாங்கள் எவ்வளவு அழுதாலும் அவைக்கு விளங்குது இல்லை. எனக்கு என்ன செய்கிறது எண்டு தெரியேல்லை. யாரிட்டை நான் போய்க் கதைக்கலாம். அம்மாவும் தன்னாலை எங்களைப் பாக்க ஏலும் எண்டு சொல்லிச் சொல்லி அழுதா. ஆனால் அவை கேட்கேல்லை.

அம்மாவுக்கு சுகம் வந்தாப் போலை தான் எங்களை அவவிட்டை விடுகிறது பற்றி யோசிக்கலாமாம். அம்மா தனக்கு என்ன வருத்தம் எண்டாலும் ஒருநாள் கூட எங்கடை வேலை செய்யாமல் விட்டதில்லை. உடுப்புத் தோய்க்கிறது, சாப்பாடு சமைக்கிறது, சாப்பாடு தாறது, ஸ்கூலுக்குக் கூட்டிக் கொண்டு போறது எண்டு எங்களுக்கு எல்லாம் அவ தான் இவ்வளவு நாளும் செய்தவ.

இப்ப அப்பாவை பொலிஸ் பிடிச்சாப் போலை என்ணண்டு அவவுக்கு அப்படி பெரிய வருத்தம் வந்தது எண்டு எனக்குத் தெரியேல்லை. இருந்தாலும் தான் எல்லாம் செய்வன் எண்டு தானே அம்மா சொன்னவ, அம்மா செய்ய மாட்டா எண்டு இவைக்கு என்ணண்டு தெரியும்? அம்மாட்டை போகோணும் மாரியிருக்குது, இனி இவை எப்ப என்னைக் கூட்டிக் கொண்டு போவினம்? ஒரே குழப்பமாயிருக்குது, யாரிட்டை நான் கேட்கிறது?

இனி வேறை ஸ்கூலுக்குத்தான் போகவும் வேணுமாம், மிசிஸ் யோனையும் இனிக் காண ஏலாது. புது ரீச்சர் சப்பிளை ரீச்சர் மாதிரி இருப்பாவோ அல்லது மிசிஸ் யோன் மாதிரி நல்ல ரீச்சரா இருப்பாவோ, ஆருக்குத் தெரியும்?. என்ன இருந்தால் தான் என்ன, என்ரை அம்மாவே இல்லையாம், இனி எந்த ரீச்சர் வந்தென்ன?

ரோசியும் என்னிலை பிழை கண்டு கத்துவாவோ என்னவோ. அவ என்ரை அம்மா இல்லைத் தானே, அவவுக்கு நான் ஏதேனும் பிழையாய்ச் செய்தால்

கோவம் வரும், பிறகு என்ன செய்வா? இதெல்லாம் அப்பாவாலை தான் வந்தது. எல்லாம் அவற்ரை பிழை தான்.

அம்மாவுக்குப் பைத்தியம் எண்டு சொல்லிச்சொல்லி சண்டை பிடிக்கிறது தான் அவருக்கு வேலை. அண்டைக்கும் அம்மா பேபியோடை சாய்ஞ்சாடம்மா பாடிக்கொண்டு இருக்கைக்கே வீடு குப்பையாய்க் கிடக்குது எண்டு அவர் கத்தினார். அம்மா தன்னாலை எல்லாம் தனியச் செய்ய ஏலாது எண்டு சொன்னது அவருக்கு பிடிக்கேல்லை. தான் வேலைக்குப் போறன், அம்மா வீட்டிலை சும்மா இருந்து கொண்டு சட்டம் கதைக்கிறா எண்டு அவவின்ரை தலைமயிரைப் பிடித்து இழுத்து அவவின்ரை தலையை சுவரிலை மோதி அடிச்சார். அதைப் பாத்து நானும் பேபியும் வீரிட்டதாலை தான் பக்கத்து வீட்டுக்கு கேட்டிருக்குதாக்கும்.

அவை அப்படி பொலிசைக் கூப்பிட்டுக் குழப்பாட்டில் அப்பாவின்ரை கோபம் மாற எப்பவும் போல திரும்ப அம்மா அப்பாவோடை கதைச்சிருப்பா. அப்பா கோவமாய் இல்லாத நேரங்களிலை அம்மா அவரோடை சிரிச்சுக் கதைப்பா. அதைப் பாக்க எனக்கு சரியான சந்தோஷமாயிருக்கும். சண்டை பிடிக்காமல் எந்த நேரமும் அப்பாவும் அம்மாவும் இப்படிச் சந்தோஷமாக இருக்க வேணும் எண்டு நான் பல தடவைகள் ஆசைப்பட்டிருக்கிறன்.

இப்ப நான் என்ன செய்யலாம், எப்படி அம்மாட்டை திரும்பப் போகலாம்? நான் சரியான குழப்படி செய்தன் எண்டால் ரோசி என்ன செய்வா, தன்னாலை ஏலாது எண்டு அம்மாவிட்டைக் கொண்டு போய் விட்டாலும் விடுவா தானே? அப்படித் தான் ஒருக்காச் செய்து பாக்க வேணும்.

நாளைக்கு ஏதாவது சாமனை உடைக்க வேணும், பெலத்துக் கத்த வேணும், இருக்கிற மற்றப் பிள்ளைகளோடை சண்டை பிடிக்க வேணும். எப்படியாவது அவை என்னை அம்மாவிட்டை கொண்டு போக வழி பாக்க வேணும். நினைச்சுக் கொண்டு ஈரமாய்ப் போன தலையணையை இறுகக் கட்டிக்கொள்கிறேன் நான்.

Loading

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.