இளவாலை எஸ்.ஜெகதீசன்!… ( படைப்பாளி ) … கனடா.
ஜெகதீசன், சுப்பிரமணியம் யாழ்ப்பாணம், இளவாலையில் பிறந்த எழுத்தாளர். 1990 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். இளவாலை புனித என்றியரசர் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு அலெக்ஸாண்டிரா கல்லூரி போன்ற பாடசாலைகளில் கல்வி பயின்றார். மேலும் இலண்டன் கணக்கியல் கல்லூரி, இலண்டன் பத்திரிகைத்துறை கலாசாலை போன்ற இடங்களிலும் பயின்றார். கனடாவில் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இளவாலை எஸ்.ஜெகதீசன்,பொதிகை எஸ்.ஜெகதீசன்,பாஞ்சாலன் போன்ற பல புனை பெயர்களில் அறியப்படும் இவர் யாழ் ஈழநாட்டில் உதவி ஆசிரியராகவும், யாழ் சஞ்சீவி,லண்டனில் லண்டன் முரசு ஆகியவற்றில் இணை ஆசிரியராகவும், நோர்வேயில் கதிரவன், கனடாவில் பொதிகை ஆகியவற்றின் ஆசிரியராகவும் திகழ்ந்தவராவார். ஈழநாடு (கனடா), தமிழர் தகவல் (கனடா),புதினம் (இங்கிலாந்து),வெற்றி மணி (ஜேர்மனி ), அக்கினிக்குஞ்சு (ஆஸ்திரேலியா),தினக்குரல் (இலங்கை) ஆகிய அச்சு ஊடகங்களிலும், கீதவாணி, கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் போன்ற கனடிய காற்றலை ஊடகங்களிலும் இவரது ஆக்கங்கள் வந்துள்ளன. 1979ஆம் ஆண்டு ‘அர்த்தங்கள் ஆயிரம்’ என்ற பெயரில் இவர் சந்தித்த பிரமுகர்களின் பேட்டிக் கட்டுரைகளும், 1980ஆம் ஆண்டு ‘பிராயச்சித்தம்’ என்ற பெயரில் 10 சிறுகதைகளும், 1993ஆம் ஆண்டு ‘கவிநாயகர் கந்தவனம்’ என்ற சரிதையும் 2020 ஆம் ஆண்டு தகவலில் தெரிந்தவை என்ற கட்டுரைகளின் தொகுப்பும் இதுவரை நூலுருவாகி வெளிவந்துள்ளன.