முகநூல்
இறப்பு வரும் நேரத்தில் வரட்டும், அதனை நாமாக தேடிச்செல்ல வேண்டாமே?
. தற்கொலை செய்ய நினைப்பவன் கோழை, வாழ்வில் உச்சத்தை தொடநினைப்பவன் வீரன். நீ எதுவாக ஆகவிரும்புகிறாயோ அது உன் கையில்……… இனி விடயத்துக்குள் செல்வோம் …….
தற்கொலை என்பது நம் சமூகத்தில் தினநிகழ்வாக மாறிவிட்டது. ஒரு மாணவர்/இளைஞர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், அதற்கான காரணங்களில் மிக முக்கிய பங்கு பெற்றோர்களுடையது. காரணம் பெற்றோர்களின் வளர்ப்பில் மிக பெரிய பிழை இருப்பதாக அர்த்தம்.
Dr.APJ.அப்துல்கலாம் அவர்கள். ஒரு மனிதன் மாமனிதனாக உயர்வதற்கு பெற்றோர்களின் பங்கு எத்தகையது மற்றும் தோல்வி அடையும்போது அதை எதிர்கொள்வது எப்படி மற்றும் உயர்ந்த இடத்திற்கு ஒருவர் சென்றபின்பும் தன் தனி இயல்புடன் இருப்பதன் முக்கியத்துவம் இவற்றை அப்துல்கலாம் வாழ்வில் நடந்த மூன்று நிகழ்வுகள் மூலம் விளக்க வேண்டுமென்று நினைக்கின்றேன்……..
நிகழ்வு 1 :
இந்த நிகழ்வை அப்துல்கலாம் அவர்களே குறிப்பிடுகிறார் “ ஒரு நாள் இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய என் தாய் உணவு சமைத்து கொண்டிருந்தார்கள். குடும்பத்தை சமாளிப்பதற்காக என் தாயும் வேலைக்கு சென்றார். என் தந்தை சாப்பிட அமர்ந்த போது கருகிய ரொட்டியை பரிமாறினார் என் தாய். ஆனால் என் தந்தை கருகியதை பொருட்படுத்தாமல் ரொட்டியை சாப்பிட்டார். ரொட்டி கருகி விட்டதை சொல்லி வருத்தப்பட்டார் என் தாய், அதற்கு என் தந்தை “எனக்கு கருகிய ரொட்டி தான் ரொம்ப பிடிக்கும்” என்று கூறிவிட்டு சாப்பிட்டு முடித்தார். இரவு தூங்கும் முன்பு தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்றுவிட்டு, தயக்கத்துடன் கேட்டேன் “அப்பா உங்களுக்கு உண்மையில் கருகிய ரொட்டிதான் பிடிக்குமா?”. சற்று நேரம் மௌனமாக இருந்த என் தந்தை கூறினார் “மகனே உன் அம்மா தினமும் வேலைக்கும் சென்று கொண்டு, நமக்கு பணிவிடையும் செய்கிறார். ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தபோவதில்லை. ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும். நான் ஒன்றும் உயர்ந்த மனிதன் அல்ல -.ஆனால் அதற்கு முயற்சிக்கிறேன்”. இந்த வரிகள் என் மனதில் ஆழ பதிந்தது. அதை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தேன். ஆம் – “ஒரு கருகிய ரொட்டி யாரையும் காயப்படுத்தபோவதில்லை. ஆனால் கடும் வார்த்தைகள் ஒருவர் மனதை காயப்படுத்தும்”.
அப்துல்கலாம் அவர்கள் சிறுவனாக 5ம் வகுப்பு படிக்கும்பொழுது அவரின் ஆசிரியர் விமான இயக்கத்தின் செயல்பாட்டை பறவைகளின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டு பாடம் நடத்தியது, அப்துல்கலாம் அவர்களுக்கு ஒரு விமானியாக வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. அந்த சிறு வயது முதல் விமானியாக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் தன்னை தயார் செய்துகொண்டார். 1956ம் ஆண்டு தன்னுடைய 25வது வயதில் Indian Air Force நடத்தும் விமானிகளுக்கான தேர்வில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரத்திலிருந்து டேராடூன் செல்கிறார். 8 விமானிகளுக்கான தேர்விற்கு 150கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். தேர்வின் முடிவில் 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த 9வது நபர் அப்துல்கலாம். மருத்துவ மற்றும் உடல் தகுதி தேர்வில் முதல் 8நபர்களில் யாரேனும் தோல்வியடைந்தால், அந்த 9வது நபர் விமானியாக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் உடல் தகுதி தேர்வில் யாரும் தோல்வியடையாததால், 9வது நபரான அப்துல்கலாம் அந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்.
எதிர்காலத்தை பற்றிய மிகுந்த கவலை மற்றும் குழப்பத்துடன் டேராடூனிலிருந்து ராமேஸ்வரத்திற்கு திரும்புகிறார். வரும் வழியில் ரிஷிகேஷ் என்ற இடத்தை அடைகிறார். அங்கே தெள்ள தெளிவாக ஓடும் புனித கங்கையில் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. கங்கையில் குளிக்கிறார், கங்கை ஆற்றை ஒட்டியுள்ள மலையின் உச்சியில் ஒரு ஆசிரமம் இருப்பதை காண்கிறார். குளித்து முடித்து அந்த ஆசிரமத்திற்கு செல்கிறார். சுவாமி சிவானந்தர் ஆசிரமம் அது. சுவாமி சிவானந்தர் சொற்பொழிவு நடந்துகொண்டிருக்க, கடைசி வரிசையில் அமர்கிறார் அப்துல்காலம். சொற்பொழிவு முடிந்தவுடன் சிவானந்தர் அப்துல்கலாமை அழைத்து “உன் கவலைக்கான காரணம் என்ன?” என்று வினவுகிறார். “பல வருட கனவு நிறைவேறாமல் போனது என்று நடந்ததை கூறுகிறார்” அப்துல்கலாம். அதை கேட்ட சிவானந்தர் பகவத்கீதையில் 11வது அத்யாயத்தை அப்துல்கலாமிற்கு வாசித்துக்காட்டுகிறார், அதன்பின் சிவானந்தர் கூறுகிறார் “Defeat the defeatist tendency – தோல்வியுற்ற போக்கை தோற்கடி. நீ துன்பத்திற்கு துன்பம் கொடு – யாரால் துன்பத்திற்கு துன்பம் கொடுக்க முடிகிறதோ, அவரே வலிமையான உள்ளம் கொண்டவர். அவரால்தான் வாழ்வில் வெற்றியடைய முடியும்”. இந்த வரிகள் தன் வாழ்க்கையின் அடித்தளமாக அமைந்ததாக பின்னாட்களில் அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.
2002 ம் ஆண்டு அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது ஜனாதிபதி ஆனார். முதல் நாள் ஜனாதிபதி அறைக்கு செல்லும் போது பணியாளர்களில் ஒருவர் அப்துல்கலாம் அவர்களின் ஷு-வை கலட்ட முற்பட்டார். அவரை தடுத்து “நீங்கள் ஏன் என் ஷூ-வை கலட்டுகிறீர்கள்?” என்றார். அதற்கு அவர் “ஐயா இது பல ஆண்டுகளாக இருக்கும் சம்பிரதாயம். ஜனாதிபதி அவர்களின் ஷூ-வை கலட்டி சுத்தம் செய்வது தான் என் வேலை. என்னை அதற்கான தான் நியமித்திருக்கிறார்கள்” என்றார். உடனே அப்துல்கலாம் கூறினார் “என் ஷூ-வை நான் கலட்டி கொள்கிறேன். உங்களுக்கு இனி இங்கு வேலை இல்லை”. அதற்கு அந்த பணியாளர் கூறினார் “ ஐயா இன்றுதான் உங்களுக்கு முதல் நாள். முதல் நாளிலேயே என் பணியை இல்லாமல் செய்வது நியாயமா!”. சிரித்துக்கொண்டே அப்துல்கலாம் பதிலளித்தார் “சரி. பணி நீக்கம் இல்லை. வேறொரு பணிக்கு மாற்றுகிறேன். இனி தோட்டங்களை கவனித்துக்கொள்”. ஜனாதிபதியாக உயர்ந்தாலும் சம்பிரதாயங்களுக்காக தன் தனி இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக தன் எண்ணங்களை கொண்டு சம்பிரதாயங்களை உடைத்தார்.
மேற்கண்ட மூன்று நிகழ்வுகளும் உணர்த்துவது இரண்டு விஷயங்களை…..
1.ஒரு மனிதன் இந்த உலகிலிருந்து உயந்த எண்ணங்களை பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுக்கவேண்டிய முதல் நபர் பெற்றோர்கள் தான்.
2. Butterfly Effect என்று ஒரு கோட்பாடு கூறுவார்கள். அதாவது சிறு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு, உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏற்படும் சூறாவளிக்கு காரணமாக இருக்கலாம் என்று. இது உலக இயக்கத்திற்கும் பொருந்தும், நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுக்கும் பொருந்தும். சற்று சிந்தித்து பார்ப்போம், ஒருவேளை அப்துல்கலாம் அந்த தேர்வில் தேர்ச்சியடைந்து விமானியாக தேர்வாகியிருந்தால், தற்போது அவர் அடைந்திருக்கும் உயரத்தை அவரால் அடைந்திருக்க முடியாது. அன்று அவர் குறிக்கோள் நிறைவேறவில்லை, ஆனால் இன்று அதைவிட மிக உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்.
நம்முடைய முழுமுயற்சிக்கு பின்பும் நம்முடைய குறிகோள் நிறைவேறவில்லை எனில், இந்த உலகம்/பிரபஞ்சம் அதைவிட முக்கிய கடமையை நமக்கு வைத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
“அன்புக்குரிய நண்பர்களே! பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் வாழும் வாழ்க்கை நமக்கும் அடுத்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்”
நன்றி
பா.டெனிஸ்.