முகநூல்

யாழ்ப்பாண பல்கலைக் கழக விவகாரம்!…

விதைத்தவர்கள் களையை அறுவடை செய்ய முயலுகின்றார்கள்…..
இலங்கையின் உயர் கல்வியிற்காக கண்டி(பெரதெனியா) அல்லது கொழும்பிற்கு செல்ல வேண்டும் என்றிருந்த கால கட்டம் இருந்தது. அங்கு சென்று கல்வி கற்பது என்பது சமூகத்தில் ஒரு மதிப்பு மிக்க அடையாளமாக பார்க்கப்பட்ட காலம் அது.
சிங்கள் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் செயற்பட்ட இந்த பல்கலைக் கழகங்களுக்கு செல்லல் என்பது ஒரு புதிய அனுபவத்தை தமிழ் பேசும் மக்களுக்கு கொடுத்திருந்த நிலமைகள். ஏன் கிராமத்து சிங்கள மாணவர்களுக்கும் அப்படியே.
இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த 1970 களின் முற் கூற்றில் இலங்கையில் இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்புடன் உருவான ஒரு அரசின் ‘முற்போக்கான” செயற்பாடாக உருவானதே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
ஆரம்பத்தில் வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணக் கல்லூரியையும், திருநெல்வேலியில் அமைந்திருந்து பரமேஸ்வரா கல்லூரியையும் இணைத்து ஒரு உயர்கல்வி நிறுவனமாக முழுமை பெற்ற பல்கலைக்கழகமாக இல்லாமல் இலங்கைப் பல்கலைக் கழகம் யாழ் வளாகம் என்ற வகையிற்குள் உருவானதுதான் இன்று முழுமை பெற்றிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகும்.
இந்தப் பல்கலைக் கழக உருவாக்கத்திற்கு அன்றை பிரதான அரசியல் ஓட்டத்தில் இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனது கடும் எதிர்பை தெரிவித்திருந்து. அது மட்டும் அல்லாது அன்றைய இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரக்கநாயக்காவின் திறப்பு விழா நிகழ்வை பகிஷ்கரித்தும் இருந்தது.
இந்த பிரதான அரசியல் ஓட்டதின் கருத்தியலை தமிழ் கூறும் நல்லுலகில் புத்ஜீவிகள் என்று கூறியவர்களும் ஏற்றுக் கொண்டுதான் இருந்தனர். இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டும் இதற்கான நியாதாதிகங்களை முன்வைத்து பல்கலைக் கழக உருவாக்கத்தை வரவேற்றிருந்தனர்.
ஆனால் பதவி என்று வந்ததும் யாழ்ப்பாண வளாகத்தின் முதலாவது தலைவராக நியமனம் பெற்ற பேராசிரியர் கைலாசபதியை தூக்கி எறிந்து விட்டு தமது கட்சி உறுப்பினரை அமர்த்தினர். அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் தீவிர ஆதரவாளர் சு. வித்தியானந்தனை பேராசிரியர் கைலாசபதியை மீறி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரி ஐக்கிய முன்னணி தெரிவுசெய்தது. தற்போதைய உபவேந்தர் சற்குணராசாவின் தெரிவு அறிவிக்கப்பட்ட போது எனக்கு அந்த பழைய நினைவலைகள் மனதில் வந்து போகாமல் இல்லை.
முழுமையாக இல்லாவிட்டாலும் அன்றை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில்; இடதுசாரிகள் அங்கம் வகிப்பது போன்ற அரசால் நியமிக்கப்பட்ட நியமனத்திற்கும் இன்றைய பொது ஜன பெரமுனவில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ஆட்சியிலும் ஒரே மாதிரியான நிகழ்வுகளே நடைபெற்றதாகவே பார்க்க முடிகின்றது.
இவ்விரு துணை வேந்தர்களும் அடிப்படையில் அந்தந்த காலத்து பிரதான நீரோட்டத்தில் குறும் தமிழ்த் தேசியவாதத்தின் பிரதிநிதிகள்தான். இந்த அடிப்படையில் ஏற்பட்ட தெரிவுகளின் தவறுகளை நாம் அறுவடை செய்தாக வேண்டிய நிலமைகள் தற்போது.
ஆனால் ஒரு முக்கிய விடயம் இன்று முழுமையாக மாறுபடுகின்றது. யாழ்பாணப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களான 1970 தொடக்கம் 1985 வரை பேராசிரியர் வித்தியானந்தனுடன் சேர்ந்து அந்த பல்கலைக் கழகத்தில் கைலாசபதி, இந்திரபாலா, சிவத்தம்பி ரொனி போன்ற இடதுசாரி சிந்தனை ஆளுமைகள், தர்மரத்தினம் சண்முகதாசன் போன்றவரகள் சித்தாந்த ரீதியிலும், துறைசார் நிபுணத்துவ ரீதியிலும் அங்கு அங்கம் வகித்திருந்தைமையினால் தனி ஒரு வித்தியானந்தன் தனது பிற்போக்கு சித்தாந்தங்களை அதிகம் பல்கலைக் கழக நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இந்த பேராசியர்களால் வளர்க்கப்பட்ட மாணவர்கள் பலரும் முற்போக்கான சிந்தனையாளர்காளக செயற்பாட்டாளர்களாக காணப்பட்டனர. அது மாணவர்கள் நிர்வாகத்தின் இடையே ஒரு சுமூகமான உறவுகளைப் பேணுவதில் வெற்றியைக் கண்டு வந்திருக்கின்றது. இது தமிழ் சமூகத்திற்கு மட்டும் அல்ல முழு இலங்கையிற்கும் முன் மாதிரியான செயற்பாட்டை யாழ் பல்கலைக் கழகம் கொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருந்தது.
இதன் வெளிப்பாடே 1977 ம் ஆண்டு வரை யாழ்ப்பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற சிங்கள மாணவர்கள் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தினால் தமது ஊர்களுக்கு திரும்ப முன்பு பல்கலைக் கழகத்திற்கு வைத்து சில வெளியாட்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்து அனுராதபுரம் வரை சேர்ந்து சென்று அனுப்பி வைத்த நிகழ்வுகள் நடைபெறக் காரணமாக இருந்தன.
ஏன் இந்த பீடிகை என்று பலரும் எண்ணலாம். தற்போது பல்கலைக் கழகத்தில் நடைபெறும் வேண்டத்தகாத நிகழ்வுகளுக்கு ஒரு வாலாற்றுக் காரணம் உண்டு என்பதை எடுத்தியம்பவே இந்த நீண்ட வரலாற்று பதிவை செய்ய முற்பட்டேன்.
இதனப் புரிந்து கொண்டால் தான் தமிழ் மக்களின் முக்கியமான அடையாளமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் எதிர்காலத்தில் ஒரு வெற்றிகரமான சமூகத்தை கட்டியமைக்கும் தனக்கான பங்கை ஆற்ற முடியும் என்று திடமாக நம்புகின்றேன்.
பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தில் கணிசமான தாக்கத்தை பன்முகப்படுதப்பட்ட தன்மையினை வழங்கி வந்திருக்கின்றது இந்தப் பல்கலைக் கழகம்.
ஆயிரம் ஆயிரம் போராட்டத் தளங்களையும் களங்களையும் கண்டிருந்தாலும் மாணவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே இடைஞ்சல்கள் ஏற்படுத்தாத ஒரு ஆளுமயை மட்டும் இந்த வெளி அரசியல் பல்கலைக் கழகத்திற்குள் செய்து வந்தது.
மாணவர்களும் இந்த சமநிலையை பேணுவதில் புத்தி சாதுர்சியத்துடன் செயற்பட்டனர். இதற்கான ஜனநாயக இடவெளிகளும் அப்போது இருந்தது.
எப்போது யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்திற்குள் வெளி அரசியல் ஆயுதக் கழஞ்சியமாக, ஒன்றைத் தலமையாக உட்புக வெளிகிட்டதோ…. அது வெளியிலும் ஒற்றைத் தலமையாக பரிணாமம் அடைந்ததோ அன்றே இந்த நிர்வாகத்திற்கு இடைஞ்சல் தரும் மாணவர் நிர்வாக உறவுகள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டது. அதன் தூறல்கள் இன்றுவரை வடிவங்கள் மாறினாலும் தொடர்கின்றது.
இதன் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை இதனை பலர் மௌனமாக ஆதரித்தும், சிலர் பகிரங்கமாக ஆதிரித்தும் என நிர்வாகத்தில் உள்ளவர்கள் செயற்பட ஆரம்பித்தனர். இந்த ஆதரவுகள் மருத்துவ பீட விரிவுரையாளர் ரஜனி திரணகமவின் படுகொலைக்குக் கூட கண்டனம் தெரிவிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்து.
ஆக நிர்வாகம் மாணவர் இடையேயான உறவு பண்பாட்டு ரீதியில் பேசித் தீர்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்தது. இதற்கான பொறுப்பை நிர்வாகம் மட்டும் அல்ல புற நிலையில் இருந்து ஒற்றைத் தலமையை உருவாக்கிய சிந்தனையாளர்களும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட சூழலில்… கொல்லப்படலாம் என்ற அச்சுறுத்தல்தல் விலகிய சூழலிலும் பதவிகளை தக்க வைக்கும் தோடருதலில் ஒற்றகைத் தலமையாக தம்மைக் காட்டிக் கொண்ட தரப்பினரை மட்டும் ஆதரித்தல் என்ற போக்கை பலரும் கடைப்பிடிக்க முயன்றனர் தற்போதும் முயல்கின்றனர்.
இதுவே வணக்க நிகழ்வுகள் என்பது தனி மனித சுதந்திரம் ஆனால் பலரும் பல் வேறு கருத்துடையவர்களும் உள்ள பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் இவற்றை ஒரு பொது நிகழ்வாக செய்வது நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தியலை வலியுறுத்த முடியாமல் ஆதரித்தும்… கண்டும் காணாமலும் இருந்த நிலை இன்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் ஆகி நிற்கின்றது.
இதற்குள் அறிமுகப்படுதல் புதிய பழைய மாணவர்கள் என்பது நிலப்பிரபுவத்தின் எச்சங்களின் வடிவாக மாறி நிலமைகளும் ஒரு வகை ஆண் மேலாகதிக்க வக்கிரங்களை வெளிப்படுத்த பயன்படுத்திய நிகழ்வாகவும் மாற்றப்பட்டு அதுவும் இதற்குள் இணைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் வலிந்த மரணங்கள் வரை விரிவடைந்தும் உள்ளது.
நியாயங்களை கேட்டு குரல் எழுப்பிய மாணவர்களின் குரல் வளை 1985 ல் இருந்து நசுக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டது உண்ணாவிரதம் இருந்து தம் அளவில் ஈழ விடுதலைப் போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தவர்களை கடத்தியது பின்பு அவர்கள் மாணவர்கள் நிலையில் இருந்து முழுப் போராளிகளாக மாற்றப்பட்டது என்று வரிந்து சென்றுள்ளது.
இறுதியாக தமது வரிவுரையாளரின் கொலை இதனைத் தொடர்ந்து பல விரிவுரையாளர்களின் தலைமறைவு ஏன் இராணுவ முகாம் ஒன்றினுள் எனது கடைசிப் பாடத்தை பல்கலைக் கழக வாழ்வு முடிந்து 8 வருடங்களுக்கு பின்பு எடுத்த நிலமை என்று இருந்த போதும் இந்த மௌனங்கள் இன்று பதவி கிடைத்ததும் பதவியை காப்பாற்றி கடமையையும் செய்ய வேண்டும் என்ற ‘உளசுத்தி”யுடன் புறப்பட்டாலும் முடியாது என்றிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அப்போ என்ன செய்யலாம் முதலில் மாணவர்கள் மத்தியில் பண்பாட்டு ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் இதற்கு பனமுகப்படுதப்பட்ட கருத்தியலை உருவாக்கும் தளமாக பல்கலைக கழகம் மாற அனுமதிக்கப்பட வேண்டும். கல்வி நிர்வாகம் இதற்கு அப்பால் ஏனைய அரசியல் பெரும் போக்கு நிகழ்வுகளை பல்கலைக் கழகத்திற்குள் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும்.
இலங்கை அரசைப் பொறுத்தவரை யாழ்ப்பல்கலைக கழகத்தில் நிலவும் குழப்பகரமான நிலமைகளை ரசிக்கவே செய்யும். அரசுடன் நல் உறவில் இருப்பவர்கள் மேற்கூறிய பன்முகத் தன்மையை பல்கலைக கழகத்தில் விரிவுரையாளர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்குரிய தலமை தெரிவை செய்வதில் தோற்று விட்டார்கள் என்பதே என் பார்வை.
இதனை பல்கலைக் கழக தலமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றிய ஆய்வின் அடிப்படையிலேயே சொல்கின்றேன். வேணும் என்றால் புள்ளிகள் அடிப்படையில் சிலர் தலைமைப் பொறுப்பிற்கான தெரிவு ஓட்டத்தில் பின்னலை பெற்றிருக்கலாம். பெரும் போக்கிற்கு ஆதரவு தெரிவிப்பது பதிவிகளை தக்க வைத்து சலுகைகளை பெறலாம் என்ற வகையில் ஆதரவுப் புள்ளி அதிகம் கிடைப்பவர்தான் சரியான சிறந்த தெரிவு என்பது ஏற்புடையது அல்ல.
மாறாக இந்த சமூகத்தை தூக்கி நிறுத்தக் கூடிய பன்முகத் தன்மையுடைய கற்கையாளர்கள் தலமை பல்கலைக கழக ஆசிரியர் பீடத்தில் ஏற்பட வேண்டும. ;1980 களில் ஆரம்பித்து 2010 வரையிலான உழுத்துப் போன கற்கையாளர்களில் பலர் தம்மை மாற்ற முடியாத ‘திருநீற்று”ப் பட்டையாளர்களாகவே இருக்கின்றனர்.
இனிவரும் கொஞ்சக்காலம் அப்படியே இருந்து ஓய்விற்கு செல்லவே விரும்புவர் அவர்கள். இவர்களிடம் ஏட்டுக்கல்வி பட்டத்திற்கு அப்பால் அதிம் எதிர்பார்க்க முடியாது.
நாம் மேற்கூறிய சிந்தனை விதைப்பை செய்யும் புதிய இரத்தப் பாய்ச்சலை செய்தாக வேண்டும் அப்போது 30 வருடங்களாக மௌனம் காத்த சில கற்கையாளர்களாக முன்னிலைக்கு வரலாம். இவர்களையும் இணைத்துக் கொண்டே பயணத்தை நாம் ஆரம்பிக் வேண்டும்.
இதுவே யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இன்றை மாணவர்கள் நிர்வாகத்திற்கிடையான வேண்டாத நிகழ்வுகளை இணக்கமான சரியான நிகழ்வுகளாக மாற்றியமைக்க உதவும். இதற்கு சற்றுக் காலம் எடுக்கலாம். ஆனால் நாம் ஆரம்பித்துத்தான் ஆக வேண்டும்.
எனவேதான் கூறுகின்றோம் களை விதைத்தவர்கள் களையை அறுவடை செய்ய முயலுகின்றார்கள்….. என்று. நாம் விதை விதைத்து களையறுத்து அறுவடை செய்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.